கெடிலநதிக்கரை நாகரீகம்

kedilam

இனிய ஜெயம்

முன்பே சிலவருடங்களாக உங்களை [பொது ஒரு ரூபாய் நாணய தொலைபேசி]  தொலைபேசி வழியே அறிந்திருந்தாலும் உங்களை முதன்முதலாக பார்த்தது இரண்டாயிரத்து எட்டு சிதம்பரம் நாட்யாஞ்சலி விழாவில்தான் .

அதன் பிறகும் முக்கியமான ஒன்று உண்டு. சொன்னால் நம்ப மாட்டீர்கள்  அதன் பிறகு உங்களை இரண்டாம் முறை சந்தித்தது இரண்டாயிரத்து பத்து ஊட்டி காவிய முகாமில்தான்.  இடையே இரண்டு வருடங்கள். வெறும் தொலைபேசி உரையாடல். கடித உரையாடல். எனக்கு நீங்கள் முதன் முதலாக கடிதம் எழுதி இருக்கிறீர்கள் என்பதே, அங்கே முகாம் வந்த பிறகே அறிந்தேன் .

முகாம் முடிந்து திரும்பி , ப்ரௌசிங் செண்டர் சென்று ,[அதன் பின் இரண்டு வருடம் கழிந்தே இனைய பயன்பாடு என் கையருகே வருகிறது] அரை மணி நேரத்துக்கு இருபது ரூபாய் என தந்து அரை மணி நேரம் உங்கள் தளத்தில் ,[அந்த மைய ஊழியரை விட்டு தேடி ] ஒரு இணை மனம் கடிதத்தை பிரிண்ட் அவுட் எடுத்தேன் .

இரவெல்லாம் பரவசம் மீதூர , விடியும் வரை அதை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருந்தேன் .உங்களின் முதல் கடிதம் .அதில் நீங்கள் கேட்டிருந்த, என்னை வாசிக்க சொல்லி ,குறிப்பிட்டுருந்த நூல்  கெடிலக்கரை நாகரிகம் .

ஆசிரியர் பெயர் தெரியாது ,பதிப்பகம் தெரியாது ,பதிப்பான ஆண்டு தெரியாது . பெயரை மட்டுமே கொண்டு தேடலை துவங்கினேன் .   ஏதேதோ இடர்கள் . இதை வாசித்திருக்கிறேன் என்று சொன்ன எந்த நபரும் இதன் ஆசிரியர் குறித்தோ இந்த நூலின் உள்ளடக்க தனித்தன்மை குறித்தோ ஒரு வார்த்தை சொன்னதில்லை . ஒருவர் ஆசிரியர் பெயர் நினைவில் இல்லை ,ஆனால் தலைப்பு கெடில நதிக்கரை நாகரீகம் மக்களும் பண்பாடும் ,நீ தேடும் தலைப்பு தவறு என்று சொல்லி மட்டுறுத்தி வழி காட்டினார் . சரி அந்த நூலையும் சேர்த்து தேடுவோம் என முடிவு செய்து இரண்டு நூல்களையும் தேடினேன் .

புதுவை ,கடலூர் ,விழுப்புரம் என சுற்றி சுற்றி யாரை கேட்டாலும் இதை படித்திருக்கிறேன் என்று சொல்வார்கள் [இல்லை என சொன்னால்  மண்டை பின்னால் சுழலும் ஒளி வட்டம் ஒளி குன்றி , வேகம் இழந்து விடும் இல்லையா] .  கேட்கும் போதெல்லாம் பொறாமை பொங்கும் .ஒருவரும் இதை எழுதியவர் இன்னார் எனும் பெயரை கூட இதுவரை தெரிவித்ததில்லை .

தீவிரமா அல்லது தீவிரம் இன்மையா  என வகை பிரிக்க இயலா மன நிலையில் ,எனது அன்றாடங்களில் ஒன்று என  தேடுதலும் இருந்தது .  அவ்வப்போது அதிகாலை கனவுகளில் இந்த நூலை கண்டெடுத்து உங்களிடம் கொடுத்து பாராட்டு பெறுவேன் . விழித்தபின் அதிகாலை கனவு நிச்சயம் பலிக்கும் என எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்

பழைய புத்தக கடைகள் இன்று உருமாறி விட்டன .இன்றெல்லாம் இப்படி ஒரு தேடுதலை பழைய புத்தக கடைகளில் மேற்கொள்ளுவது  எந்த பலனையும் அளிக்காது .

நண்பர்கள் தெரிந்தவர்கள் எல்லோர் வசமும் அவர்கள் எதையேனும் தேடும் போது இந்த பெயரையும் சேர்த்து தேட சொல்வேன் .  கடலூர் சுற்றி உள்ள எந்த நூல் குறித்து வாசிக்கும்போதும் நூல் அடைவில் கெடிலக்கரை நாகரீகம் எனும் பெயர் தட்டுப்படுமா என தேடுவேன் .

சித்தாமூர் சென்று தேடியதில் ,ஜைன திருமேனிகள் எனும் நல்ல நூல் ஒன்று கிடைத்தது .ரோஜா முத்தையா நூலகத்தில் பெயரை நூல் அடைவில் அகர வரிசை தலைப்பில்   பார்த்தேன் [அதிலும் எழுதியவர் பெயர் இல்லை ] .அந்த புத்தக மலையில்  சலித்து சலித்து சோர்ந்தேன் .

நடுவீரப்பட்டு நூலகர் உதவி செய்ய ,கழித்து கட்டப்படும் நூலக புத்தக நிகழ்வில் , புகுந்து ஏலத்துக்கு எடுக்கப்படும் பழைய நூலக நூல்கள் [கிலோ இரண்டு ரூபாய் ] பொதியில் கிடந்தது உழன்று இருக்கிறேன் .

நண்பர்கள் கடலூர் சிறகுகள் என ஒரு குழுமம் வைத்திருக்கிறார்கள் அதன் வழியே அக்கால முதியவர்கள் கொண்டு தேடினேன் .  ஒருவர் [பாய் ] சண்முக சுந்தரனார் பெயரும் பதிப்பகமும் சொன்னார் . அவரிடமும் நூல் இல்லை .

திருநெல்வேலி சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம் .  தஞ்சை சரஸ்வதி மகால் சுவடிகள் மற்றும் நூல் பாதுகாப்பு   செய்யும் பணியில் உள்ளனர் அங்கே இருக்கலாம் என தகவல் அளிக்க ,மடியில் பிள்ளையை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடிய கதையாக ,நமது கண் முன்னே ,அரசு பாதுகாப்பில்,பல ஆண்டு யார் கையும் படாமல் போட்டோ காப்பியாக,நாட்டுடமை செய்யப்பட்ட அந்த  ,கெடிலக்கரை நாகரீகம் ,அகராதிக் கலை  இரண்டு நூலும் கிடந்தது . வாழ்க கணினி யுகம் .வளர்க சைபர் வெளி .

இது எதுவும் இப்போது எனக்கு ஒருபொருட்டாகவே தெரியவில்லை . ஆம் இது ஒரு விஷயமே இல்லை   இன்னும் தீவிரமும் ,சரியான இலக்கிலும் தேடி இருந்தால் முன்பே இந்த நூலை அடைந்திருப்பேன் .  தாமதத்துக்கு மன்னிப்பு கேட்கவே தோன்றுகிறது .இதில் என் பணி ஏதும் இல்லை . உங்கள் வசமிருக்கும் சரஸ்வதி கேட்டாள் .கிடைத்து விட்டது . என்ன ஒன்று என்னை விட ,நுண்ணுர்வும் சுறுசுறுப்பும் ,தீவிரமும் கொண்ட ஒருவனிடம் அவள் கேட்டிருக்கலாம் : )

இரண்டு வருடங்கள் முன்பு கடலூர் முகநூல் குழுமம் வழியே ,சுந்தர சன்முகநாரை தெரிந்த கடலூர் முதுநகரில் முன்பு வாழ்ந்த முகமதிய பெரியவர் [அவரிடமும் நூல் இல்லை ] இந்த நூலின் ஆசிரியர் பெயரை ,பதிப்பக பெயரை தெரிவித்தார் . சர்வ வல்லமை கொண்ட சைபர் வெளிக்கு நன்றி .  கடலூரை சேர்ந்த எந்த மனித மூளைக்கும் தேவைப்படாத அறிய நூல் ஒன்றினை இதுவரை காப்பாற்றி வைத்தமைக்காக .   முடிவுக்கு வந்தது தேடல் .

http://tamildigitallibrary.in/book-search.php?tag=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.

சுந்தர சன்முகனாரின் அனைத்து நூல்களும் இந்த சுட்டியில் . இவரது முக்கியமான மற்றொரு நூல் தமிழ் அகராதிக்கலை .

அட்டைப்படத்தை சொடுக்கினால் புத்தகத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம் . பரவசம் இன்னும் எஞ்சி உள்ளதால் நூலை இன்னும் முழுதாக வாசிக்கவில்லை .முன்னுரையில் வாசிக்க சோம்பல் கொண்ட ஆட்கள் மத்தியில் அறுநூறு பக்க ஆய்வு நூலை எழுதி இருக்கிறேன் .இது என்னவாகும் என பேராசிரியர் தனது பீதியை பதிவு செய்திருக்கிறார் .

என்ன ஆகும் ஜெயமோகன் போன்ற ஒரு எழுத்தாளர் அதை வாசிப்பார் .சீனு போன்ற சற்றே சமத்து குறைத்த வாசகர் அதை தேடி கண்டு பிடிப்பார் : )

கடலூர் சீனு

Susa

சுந்தர சண்முகனார்

கடலூர் அருகிலுள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் சிற்றூரில், 1922ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி பிறந்தவர். பெற்றோர் இட்ட பெயர் சண்முகம். தன் தந்தையாரின் பெயரான சுந்தரம் என்பதைத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு சுந்தர சண்முகம் ஆனார்.

இவருடைய ஆழ்ந்த தமிழ்ப் புலமைக்கு அடித்தளம் இட்டது திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடாலயம் ஆகும். இவர் 5ஆம் பட்டத்து அடிகளின் மாணாக்கராவார். ஞானியார் அடிகளாரின் அறிவுரையின் பேரில் திருவையாறு அரசர் கல்லூரியில் தன்னுடைய 14வது வயதில் வித்துவான் படிப்பில் சேர்ந்தார். பிறகு, மயிலம் சிவஞான பாலைய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் 1940ஆம் ஆண்டு அதாவது, தன்னுடைய 18வது வயதில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அப்பணியை விடுத்துப் புதுச்சேரி வந்தார். 1947இல் தன்னுடைய ஷட்டகர் (சகலர்) – புரவலர் சிங்கார குமரேச முதலியார் உதவியுடன் “பைந்தமிழ்ப் பதிப்பகம்” ஒன்றைத் தொடங்கி, “வீடும் விளக்கும்” என்னும் தன்னுடைய முதல் நூலை வெளியிட்டார். 1947இல் ஏற்பட்ட அந்த எழுத்து விளக்கு, 1997ஆம் ஆண்டு வரைத் தொடர்ந்து எரிந்துகொண்டு இருந்தது.

1948 – 58ஆம் ஆண்டுகளில் திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் என்னும் மாதம் இருமுறை வெளிவரும் திருக்குறள் ஆய்வு இதழ்களை நடத்தித் தமிழகம் முழுவதும் அறிமுகமானார். 1948இல் பாவேந்தரால் மதிப்புரை வழங்கப்பட்ட “தனித்தமிழ்க் கிளர்ச்சி” என்னும் அம்மானை நூலை எழுதி வெளியிட்டார்.

பின்னர், 1949ஆம் ஆண்டு முதல் 1958ஆம் ஆண்டு வரை புதுச்சேரி பெத்தி செமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1958 முதல் 1980 வரை புதுச்சேரி அரசினர் பயிற்சி மையத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றியபோது “திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக்கழகம்” என்னும் அமைப்பை நிறுவி, யாப்பதிகார வகுப்பும், திருக்குறள் வகுப்பும் நடத்தினார். அவ்வமைப்பில் நூற்றுக்கு மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்றனர்.

இவர், பல அறிஞர் பெருமக்களுடன் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தார். பாவேந்தருடன் மிகவும் நெருங்கிப் பழகிய இவர், அவரோடு இணைந்து “பல ஆண்டுகள்” என்னும் நூலை எழுதியுள்ளார்.

1980ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, நூல்கள் எழுதும் பணியைத் தொடர்ந்தார். 1985க்குள் தமிழ் அகராதிக்கலை, கெடிலக்கரை நாகரிகம், தமிழ் இலத்தீன் பாலம், தமிழ் நூல் தொகுப்புக்கலை முதலிய உன்னத நூல்களை எழுதி வெளியிட்டுத் தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் பேசப்படுபவராக உயர்ந்தார். மேற்கூறிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு முன்னோடி நூல்களாகும்.

இவருடைய புலமைக்குப் பரிசாக தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் இவருக்குப் பல்கலைக்கழகத் தொகுப்பியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் பதவியை வழங்கினார். 1982ஆம் ஆண்டு இப்பணியில் சேர்ந்தவர், உடல்நலக் குறைவு காரணமாக 1983இல் பணியிலிருந்து விலகினார்.

சுந்தர சண்முகனார் 69 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் கவிதை நூல்கள் 8, காப்பியங்கள் 2, முழு உரை நூல்கள் 7 (திருக்குறள் தெளிவுரை, நாலடியார் நயவுரை, திருமுருகாற்றுப்படை தெளிவுரை, இனியவை நாற்பது இனியவுரை, நன்நெறி நயவுரை, முதுமொழிக் காஞ்சி உரை மற்றும் நல்வழி உரை), உரைநடை நூல்கள் 52 (துறைவாரியான) ஆகும்.

பல்துறைகளிலும் நூல்கள் எழுதிய இவரின் சான்றாண்மையைப் போற்றி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இவருக்குத் “தமிழ்ப் பேரவைச் செம்மல்” என்னும் பட்டத்தை (17.10.1991) வழங்கிச் சிறப்பித்தது. மேலும், தங்கள் கல்விக் குழுவின் வாழ்நாள் உறுப்பினராகவும் இவரை நியமித்தது.

“அகாரதிக்கலை” எழுதி அழியாப் புகழ் பெற்றவர் என்னும் சிறப்பை இவருக்குப் பெற்றுத்தந்த “தமிழ் அகராதிக் கலை” என்னும் இவருடைய நூலின் முதல் பதிப்பு 1965இல் வெளிவந்தது. இந்நூலுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. இதே ஆண்டுதான் இவரின் “பணக்காரர் ஆகும் வழி” என்னும் நூலுக்கும் மத்திய அரசு பரிசு கிடைத்தது.

இவர் பெற்ற விருதுகளில் தலையாயது தமிழக அரசு 15.1.1991இல் வழங்கிய “திருக்குறள்” விருதாகும். அடுத்து எம்.ஏ.சி. அறக்கட்டளை விருது. இவர் பெற்ற பட்டங்களிலேயே இவர் மிகவும் விரும்பிய பட்டம் இவருடைய குரு பீடமான ஞானியார் மடாலயம் வழங்கிய “ஆராய்ச்சி அறிஞர்” என்ற பட்டம்தான். இவருடைய ஆறு நூல்களுக்குத் தமிழக மற்றும் மந்திய அரசுகள் பரிசுகள் வழங்கியுள்ளன. பல நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

“உடன் பிறந்தே கொல்லும் நோய்” என்று கூறுவது இவர் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது. 1946ஆம் ஆண்டிலிருந்து மூளைக்கட்டி (பிரைன் டியூமர்) நோயுடன் போராடிப் போராடி வெற்றி கண்டு வந்த இவரை, 1997ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி இந்நோய் இறுதியாக வென்றது.

“தனக்கு மரணமே இல்லை” என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். உண்மைதான்! இறவாப் புகழ்பெற்ற தன்னுடைய நூல்கள் மூலம் தமிழ் உள்ளளவும் இவர் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

இவருடைய நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. சுந்தர சண்முகனார் நினைவாக இவருடைய மாணாக்கர்கள் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, மாதந்தோறும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர் என்பதே இவர் வாழ்ந்து கொண்டிருப்பதற்குச் சான்று!

பேராசிரியர் சு.ச.அறவணன்

நன்றி:- தினமணி

சுந்தர சண்முகனார் விக்கி 

அன்புள்ள சீனு

நான் கல்லூரியில் படிக்கையில் வாசித்த நூல் இது. ஒரு சிறு ஆற்றின் கரையிலுள்ள பண்பாட்டை கற்காலம் முதல் நிகழ்காலம் வரை நுட்பமாகச் சொல்லிச்சென்ற அந்நூல் ஒரு புனைவைப்போல என்னைக் கவர்ந்தது. என் ஊரின் நதிக்கரை வாழ்க்கையை அப்படி விரித்தெழுதவேண்டும் என்ற ஆசை எழுந்தது

ஆனால் நீங்கள் சொன்னதுபோல அந்நூலை பிறர் எவரும் பேசி நான் கேட்டதே இல்லை. நடுத்தரமான புனைவுகள் கூட காலத்தில் நின்றுவிடும் தமிழ்ச்சூழலில் இப்படி ஒரு நூல் ஆய்வு என்பதனாலேயே அறியப்படாதுபோவது வருந்தத் தக்கது. நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். இதை எவரேனும் நூலாக வெளியிட்டால் நல்லது

ஆனால் சுந்தர சண்முகனாரின் நூல் ஏன் கவனிக்கப்படவில்லை என்பதை ஆராயவேண்டும். அவர் தமிழியக்க அறிஞர். பின்னர் திராவிட இயக்க ஆதரவாளர். அக்காரணத்தால் சிற்றிதழ் சார்ந்த அறிவுலகில் அவர் வாசிக்கப்படவே இல்லை. இன்னமும் அவர் பொருட்படுத்தப்படவில்லை. சிற்றிதழ்ச்சூழலில் தமிழியக்கத்தை கூர்ந்து வாசித்து தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருந்த மிகமிகச்சில எழுத்தாளர்களில் நானும் ஒருவன்

தமிழியக்கமும் திராவிட இயக்கமும் சுந்தர சண்முகனாருக்கு இருப்பிடம் அளித்தன. ஆனால் காலப்போக்கில் இவ்விரு  இயக்கங்களும் திரிந்து அறிவியக்கமெனும் நிலையை இழந்தன. இன்று அவர்களே அவர்களின் அறிஞர்களை வாசிப்பதில்லை, பேசுவதில்லை. அவர்கள் இன்று அரசியல் அதிகாரத்தை மட்டுமே வழிபடுகிறார்கள். ஆகவே சுந்தர சண்முகனார் போன்றவர்கள் வெறும் பெயர்களாகிவிட்டனர்

ஆனால் சிற்றிதழ் இயக்கம் அதன் சென்றகால கூட்டுப்புழுத்தன்மையிலிருந்து இன்று வெளிவந்து அனைத்துக்குரல்களும் ஒலிக்கும் களமாக ஆகியிருக்கிறது. தமிழியக்க, திராவிட இயக்க அறிஞர்கள் மீது அறிவார்ந்த ஆர்வம் உருவாகவேண்டும். அவர்கள் செய்துகொண்டிருக்கும் பொத்தாம்பொதுவான மரபுவழக்குச் சொற்களை தவிர்த்து  கறாரான விமர்சன நோக்குள்ள ஏற்பும் மறுப்பும் நிகழவேண்டும்

ஜெ

முந்தைய கட்டுரைநதிக்கரை இலக்கியவட்டம்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-48