பகுதி ஒன்பது: சொல்
இளைய யாதவரின் குடில்வாயிலை வந்தடைந்த தௌம்யரும் கர்க்கரும் அதர்வ வேதியரான சண்டகௌசிகரும் அவர்களுடன் வந்த வேதியர்களும் ஒருகணம் தயங்கி நின்றனர். கர்க்கர் “அவர் உள்ளே இருக்கிறார்” என்றார். தௌம்யர் “ஆம், அதை உணர்கிறேன்” என்றபின் படியில் ஏறி கதவை தட்டினார். மூன்றாம் முறை தட்டுவதற்குள் கதவுப்படல் திறந்தது. இருளுருவாக இளைய யாதவர் அங்கே நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் குடிலில் தண்டிலிருந்த அகல்விளக்கின் ஒளி காற்றில் மிகக் குறுகி எரிந்தது. அவர் தலையிலணிந்த மயிற்பீலி மட்டும் துலங்கித் தெரிந்தது.
கர்க்கர் “யாதவரே, உம்மைப் பார்க்க வந்துள்ளோம்” என்றார். இளைய யாதவர் தௌம்யரையும் பிறரையும் நோக்கியபின் “திரண்டு வந்திருக்கிறீர்கள்” என்றார். தௌம்யர் “இன்று மாலை சற்றுமுன்னர்தான் வேதமுனிவரான கர்க்கர் என்னைப் பார்க்க வந்தார். உங்களைப் பார்க்கவேண்டுமென முடிவெடுத்தோம். உடனே கிளம்பிவிட்டோம்” என்றார். “வருக அந்தணர்களே, இச்சிறுகுடில் உங்களால் மங்கலம் கொள்க!” என்றார் இளைய யாதவர். கைகூப்பி “இது கானகக் குடிலாதலால் முறைமைகள் எதையும் செய்ய இயல்வதில்லை. ஆனால் தர்ப்பையில் அனலோன் என உங்கள் நாவிலுறையும் வேதம் இங்கு வந்தமையால் இக்குடில் வேள்விச்சாலையென்றாகிறது” என்றார்.
கர்க்கர் “எங்கள் நல்லூழால் இங்கு இத்தருணத்தில் உங்களை சந்திக்கும் பேறுகொண்டோம்” என்றார். ஆனால் அவர்கள் அனைவருமே குழம்பிப்போயிருந்தனர். விழிகளால் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். கர்க்கர் உள்ளே செல்வோம் என கைகாட்ட தௌம்யர் ஆம் என தலையசைத்தார். அந்தணர் விழியிமைக்காமல் கீழிருந்து மேல் மேலிருந்து கீழ் என இளைய யாதவரை நோக்கிக்கொண்டிருந்தார்கள். “வருக!” என இளைய யாதவர் மீண்டும் கைகூப்பி அவர்களை அழைத்தார்.
உள்ளே சென்று குடிலின் சிற்றறையை முழுமையாக நிறைத்து அவர்கள் அமைந்தனர். கர்க்கரும் தௌம்யரும் முன்னால் அமர மாணவர்கள் பின்னால் நின்றனர். இடம் கிடைக்காதவர்கள் கீற்றுச்சுவரில் சாய்ந்து நின்றனர். இளைய யாதவர் சுடரை சற்று தூண்டி ஒரு சிறிய பலகையால் காற்று படாமல் ஆக்கியதும் சுடர் நிலைகொண்டது. அவர் இருளில் இருந்து எழுவதுபோல் முழுவுருக்கொண்டார். கர்க்கர் திகைப்புடன், பதற்றத்துடன் அவரை நோக்கிக்கொண்டிருந்தார். தௌம்யர் அவர் கால்களில் விழிநட்டிருந்தார். அவர்கள் அனைவருமே பேரச்சத்தில் என நடுக்கு கொண்டிருந்தனர்.
அத்தருணத்தை இயல்பாக்கும்பொருட்டு “கூறுக அந்தணரே, இப்பொழுதில் இங்கே நீங்கள் வந்துசேர்வதற்கு நான் என்ன முற்பேறு கொண்டேன்?” என இளைய யாதவர் முறைமைச்சொல் கொண்டு கேட்டார். அவர்கள் அதை கேட்டதாகத் தோன்றவில்லை. “அந்தணர்களும் வேதியரும் என்னைத் தேடி வந்தமை எனக்கு மகிழ்வளிக்கிறது” என்றார் இளைய யாதவர். திகைப்பு கலைந்து மீண்டுவந்த கர்க்கர் “நீங்கள் இங்குதான் இருக்கிறீர்களா?” என்றார். “ஆம், சில நாட்களாகவே இங்கே தனிமையில் இருக்கிறேன். நீராடுவதற்கன்றி இக்குடிலறைவிட்டு செல்வதில்லை” என்றார் இளைய யாதவர்.
“ஆம், அவ்வாறுதான் சொன்னார்கள்” என்றார் கர்க்கர். தௌம்யர் “ஆனால்…” என்றபின் “இங்கே தாங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்றார். “நூல்நவில்தல். எண்ணமோட்டுதல். அதைவிட கனவிலாழ்தல்” என்றார் இளைய யாதவர். “என்ன கனவுகள்?” என்று கர்க்கர் கேட்டார். “கனவுகளை சொல்லிநிறைக்க முடியுமா? இந்தக் ககனமெல்லாம் என் கனவே” என்றார் இளைய யாதவர். கர்க்கர் மெய்ப்புகொண்டார். நெஞ்சில் கைவைத்து “அக்கனவில் நீங்கள் யார்?” என்று கேட்டார்.
“யாதவன், கோகுலத்துச் சிறுவன், தேவகிக்கும் யசோதைக்கும் குழவி. வசுதேவனுக்கும் நந்தனுக்கும் மைந்தன். சாந்தீபனியின் மாணவன். துவாரகையின் அரசன். தனியன். யோகி” என்றார் இளைய யாதவர். “அங்கே கணமொரு வடிவெடுக்கலாகும். வடிவங்களின் எல்லைகளைக் கடத்தலும் இயலும்.” தௌம்யர் “ஆம், இவற்றுக்கு அப்பால். யாதவரே, இவற்றுக்கு அப்பால் நீங்கள் உங்கள் கனவில் யார்?” என்றார். “அதை எப்படி சொல்வேன்? நானே அனைவரும். பாண்டவரும் கௌரவரும் நானே. பீஷ்மரும் சிகண்டியும் நானே. திரௌபதியும் குந்தியும் அனைத்துப் பெண்களும் நானே. என் தோற்றங்களுக்கு முடிவேயில்லை” என்றார் இளைய யாதவர்.
“யாதவரே, நாங்கள் எதை கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதில் எங்களுக்கே தெளிவில்லை. எங்கள் உள்ளம் நிலையழிந்திருக்கிறது” என்று தௌம்யர் சொன்னார். கைகளைத் தூக்கி சொல் சொல்லெனத் திரண்டு “யாதவரே, உங்கள் முழுமை என்ன?” என்றார். இளைய யாதவர் சிரித்து “எவருடைய முழுமையும் ஒன்றே, அது நான்!” என்றார். “அருகமைவுநூல்களில் இருந்து எழுந்த நுண்சொல் அது, தௌம்யரே. நானே பிரம்மம்.” கர்க்கர் பெருமூச்சுடன் “எங்களிடம் விளையாடுகிறீர்களா?” என்றார். “ஆம்” என்றார் இளைய யாதவர் அவர் விழிகளை நோக்கி. அவர் பதறி விலகிக்கொண்டு “நான் என்ன கேட்கிறேன் என்று தெரியவில்லை. யாதவரே, நீங்கள் எதன் மானுட வடிவம்?” என்றார். “பிரம்மத்தின்” என்றார் இளைய யாதவர்.
இமைக்காத அந்நோக்கை கண்டு உளம் அதிர தோள்களை குறுக்கிக்கொண்ட தௌம்யர் “இது ஒரு கனவா? இது எங்கே நிகழ்ந்துகொண்டிருக்கிறது?” என்றார். பின்னர் “சித்தமயக்கம்… வேறெதைக்கொண்டும் இதை சொல்லிவிட முடியாது. கர்க்க முனிவரே, என்னால் இங்கே இனி இருக்க இயலாது” என்றார்.
கர்க்கர் சொற்களை திரட்டிக்கொண்டு “நாங்கள் நேரடியாகவே நிகழ்ந்ததை சொல்லிவிடுகிறோம், யாதவரே” என்றார். “நாங்கள் எதிர்பார்த்து வந்தது நீங்கள் இங்கே இப்படி இருப்பதைத்தான். ஆனால் அதைக் கண்டதும் உள்ளத்தில் அனைத்தும் கலைந்து பறக்கத் தொடங்கிவிட்டன. ஏனென்றால் நாங்கள் உங்களை பிறிதொரு வடிவில் கண்டோம்.”
இளைய யாதவர் “எங்கே?” என்றார். தௌம்யர் “இப்போது உபப்பிலாவ்யத்தில் பாண்டவர்களின் தரப்பில் போர்வெற்றியின்பொருட்டு ரிஷபமேதப் பெருவேள்வி நிகழ்ந்துகொண்டிருக்கிறது என அறிந்திருப்பீர்கள். அதை நிகழ்த்தும் கலிங்கத்து அதர்வ வேதியரான சண்டகௌசிகர் இவர்” என்றார். சண்டகௌசிகர் கைகூப்பி வணங்கி “நான் வரும்போது தாங்கள் கானேகிவிட்டதாக சொன்னார்கள். காணும் நல்லூழ் இப்போதே வாய்த்தது” என்றார். “என் நல்லூழ்” என இளைய யாதவர் கைகூப்பினார்.
“சுக்ல யஜுர்வேதியனான நான் அந்த வேள்வியில் நேரடியாக கலந்துகொள்ளவில்லை. ஆனால் அதற்குரிய அனைத்தையும் ஒருக்கி உதவினேன். பூதசத்ரவேள்வி முடிந்ததும் என் தலைமையில் அனைத்து மங்கலங்களும் பொலிவதற்காக பத்மவேள்வி ஒன்றை செய்வதாக திட்டம். அதற்கான ஒருக்கங்களையும் பார்த்துவந்தேன். இன்று மாலை வேதமுனிவரான கர்க்கர் வந்திருப்பதை அமைச்சர் சுரேசர் வந்து சொன்னதும் ஓடிச்சென்றேன். அரண்மனை முற்றத்தில் முனிவரை சந்தித்து அடிபணிந்து வரவேற்றேன். முன்னறிவிப்பின்றி முனிவர் வந்ததனால் வியந்திருந்தேன். அவர் எவருமறியாமல் நகர்நுழைந்தது ஏன் என்று குழப்பம் கொண்டிருந்தேன்” என்று தௌம்யர் சொன்னார்.
“அரசர் தன் தம்பியருடன் வேள்விச்சாலையில் இருப்பதை சொன்னேன். சௌனகர் அரண்மனைப் பொறுப்பிலிருந்தார். திருஷ்டத்யும்னர் படைப்பொறுப்பை ஏற்றிருந்தார். முனிவரை உள்ளே அழைத்துச்சென்று அமரச்செய்வதற்குள் இருவருக்கும் செய்தியறிவித்தேன். அவர்கள் விரைந்து வந்து வணங்கி முனிவரை அவைக்கு கொண்டுசென்றனர். அங்கே முறைமைகள் நிகழ்ந்தபோது முனிவர் நிலையழிந்தவராக இருப்பதை கண்டேன். அனைத்துச் சடங்குகளும் முடிந்ததும் நான் அவருடன் தனித்திருக்கையில் அவர் வேள்விக்காக வந்தாரா என உசாவினேன். அவ்வாறென்றால் வேள்விச்சாலைக்கு அவரை அழைத்துச்செல்வதாக சொன்னேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.”
“அவர் பதற்றம் கொண்டிருப்பதை கண்டேன். முனிவரே, தாங்கள் வந்ததற்கு ஏதேனும் குறிப்பான நோக்கமுண்டா என்றேன். இளைய யாதவர் எங்கிருக்கிறார் என்றார். நீங்கள் கானேகியிருப்பதை சொன்னேன். அவர் இப்போரை நிறுத்தும்படி ஆணையிடவில்லையா, இவ்வேள்விகளுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று முனிவர் கேட்டார். என்னால் அவர் சொல்வதற்கு மறுமொழி சொல்ல இயலவில்லை. நான் அவரைப் பார்க்கவே வந்தேன் என்றார் முனிவர்.”
“ஆம், உங்களைப் பார்ப்பதற்காக மட்டுமே” என்று கர்க்கர் சொன்னார். இளைய யாதவர் “சொல்க, முனிவரே!” என்றார். “யாதவரே, நான் நேற்றுமுன்னாள் விந்தையானதோர் காட்சியை கண்டேன். அஸ்வினிதேவர்களை முதன்மைத்தெய்வமாகக் கொண்டு வேள்வி இயற்றுபவன் நான் என அறிந்திருப்பீர்கள். அன்று வேள்வியிறுதியில் அனலில் அனைத்து தேவர்களுக்குமென வேதமோதி அவியிட்டபோது அனலில் ஒரு கை தோன்றி அவியை பெற்றுக்கொண்டது. அந்தக் கையை முன்னரே கண்டிருக்கிறேன் என உள்ளம் சொன்னது. எங்கு எங்கு என எண்ணிக் குழம்பினேன். நிலையழிந்து இரவெல்லாம் அமர்ந்திருந்தேன்.”
என் மாணவனாகிய கர்க்க த்விதீயன் வந்து “ஆசிரியரே, தங்கள் துயர் என்ன? நாங்கள் ஏதேனும் பிழை இயற்றினோமா?” என உசாவினான். அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தேன். அவனருகே நின்றிருந்த கர்க்க சாந்தன் தயங்கி ஏதோ சொல்ல நாவெடுப்பதையும் த்விதீயன் விழிகளால் அவனை விலக்குவதையும் கண்டேன். “என்ன?” என்றேன். அவன் தயங்கி விழிதாழ்த்தினான். “சொல்!” என கேட்டேன். அவன் அப்போதும் மறுமொழி சொல்லவில்லை. கையை ஓங்கியபடி உரக்க “சொல், மூடா!” என கூவிக்கொண்டு எழுந்தேன். அவன் பதறிப்போய் அழத்தொடங்கினான்.
த்விதீயன் பதறி என்னை தாழ்ந்து வணங்கி “ஆசிரியரே, அவன் அஞ்சுகிறான் என்றான். நீங்கள் வேதச்சொல் பிழைத்ததை அவன் கேட்டேன் என்கிறான். ஆசிரியர் நாவில் வேதம் பிழைக்காது என்று நான் சொன்னேன். அவன் இல்லை, என் செவிகளால் கேட்டேன் என்றான். சிறுவன், தன்முனைப்பு கொண்டவன். சினம்கொண்டு அவனை தண்டிக்கவேண்டாம்” என்றான். நான் திகைத்து அமர்ந்திருந்தேன். பின்னர் சாந்தனிடம் “சொல், நான் நாப்பிழைத்த அச்சொல் எது?” என்றேன்.
சாந்தன் “நீங்கள் சொன்னது கிருஷ்ண என்னும் சொல்லை. சொல்லவேண்டியிருந்தது அதுவல்ல” என்றான். அக்கணமே அனைத்தையும் உணர்ந்துகொண்டு நான் திடுக்கிட்டு எழுந்து நின்றேன். உடல் நிலையழிய விழப்போனேன். சுவர்பற்றி நின்று “என்ன? என்ன?” என்றேன். அவர்கள் அஞ்சி கைகூப்பி நின்றனர். கையூன்றி நிலத்தில் அமர்ந்தேன். பின்னர் “குடிக்க நீர் கொண்டுவருக!” என்றேன். இளையோன் நீர் கொண்டுவர ஓடினான். “ஆசிரியரே, இளையோன் பிழை செய்திருந்தால்…” என த்விதீயன் தொடங்க “இல்லை, என் நா பிழைத்தது உண்மை” என்றேன். அவன் வெறுமனே கைகூப்பினான்.
“ஆனால் என் சொல்லுக்குரிய தேவன் அனலில் எழுந்தான். அவனை நான் கண்டேன்” என்றேன். அவன் வியப்புடன் “அறியாத் தெய்வம் போலும் அது” என்றான். “அறிந்தவன், தெய்வமென்று துலங்காதவன்” என்றேன். யாதவனே, அது உன் கை. ஐயமே இல்லை. பன்னிரு முறை உன்னை நான் சொல்லவைகளில் கண்டிருக்கிறேன். நீ பேசும் சொற்களுடன் இணைந்தவை என அசையும் உன் கை. தனித்து நோக்கினால் பிறிதொன்றை சுட்டி உரைத்துக்கொண்டிருக்கிறது அது என சாந்தீபனி குருநிலையில் ஒரு சொல்லவையில் ஒருமுறை தோன்றியது. பின்னர் ஏழுமுறை அதை நானே நோக்கி நோக்கி உறுதிசெய்துகொண்டேன்.
உன் சொற்களை செவிகொள்ளாமல், உன் விழிகளை நோக்காமல் கைகளை மட்டும் பார்த்தால் நீ வேறொன்றை சொல்லிக்கொண்டிருக்கிறாய். சொல்லப்படாததும் முழுக்க அறியப்படாததுமான ஒன்றை. அது என்ன என நான் ஒவ்வொரு கைமுத்திரையையும் என் உளவிழிகளுக்குள் திரட்டி எண்ணிக்கொண்டு நாட்களை செலவிட்டிருக்கிறேன். வேதச்சொல்லை விளக்கின சில. வேதச்சொல்லை விலக்கின சில. வேதச்சொல்லை கடந்தன சில. நான் நன்கறிந்த கைகள் அவை. அவற்றையே எண்ணிக்கொண்டிருந்தமையால்தான் என் நாவில் வேதம் புரண்டது. உளமிருத்தி அவியளித்தமையால் நீ தோன்றினாய். ஐயமேயில்லை. அவிகொள்ள வந்தது உன் கைகளே.
அங்கிருந்து நேரடியாக உபப்பிலாவ்யம் வந்தேன். உன்னைப் பார்க்க விழைந்தேன். நீ மானுடனாக இங்கிருக்கிறாய் என்பது என் உளமயக்கு என நம்ப விழைந்தேன். நீ கானகத்தில் இருக்கிறாய் என்று அறிந்ததும் உளம்சோர்ந்தேன். இவர்கள் எனக்களித்த குடிலில் சென்று படுத்துக்கொண்டேன். துயிலில்லாமல் எழுந்தும் மீண்டும் படுத்தும் இரவை கடந்தேன். எழுந்துசென்று முற்றத்தில் நின்று தொலைவில் தெரிந்த வேள்விச்சாலையின் நெருப்பின் செவ்வொளியை நோக்கிக்கொண்டிருந்தேன். ஓர் எண்ணம் எழ நேராக தௌம்யரை சென்று கண்டேன். என்னுடன் வருக என அழைத்துக்கொண்டு வேள்விச்சாலைக்கு சென்றேன்.
அங்கே ரிஷபமேதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. அரசனும் இளையோரும் துயில்கொள்ளச் சென்றிருந்தனர். வேள்விக்காவலனாக பிரதிவிந்தியன் அமர்ந்திருந்தான். சண்டகௌசிகர் அருகிலிருந்த அறையில் துயில்கொண்டிருக்க அவருடைய மாணவர் உக்ரசண்டர் வேள்வியை நடத்திக்கொண்டிருந்தார். நான் அறைக்குள் சென்று சண்டகௌசிகரை எழுப்பினேன். அதர்வ வேள்வியில் “வேண்டிய தேவனை எழுப்பும் வேதச்சொற்கள் உண்டு அல்லவா?” என்றேன். “ஆம், எந்தத் தெய்வமும் மறுக்கவியலா அழைப்புகள் உண்டு” என்றார். “வருக, நான் ஒரு தெய்வத்தை எழுப்பவேண்டும்!” என்றேன்.
“தெய்வங்களை எழுப்புவது நன்றல்ல” என்று சண்டகௌசிகர் சொன்னார். “தெய்வங்கள் எழுவது விண்ணிலிருந்து கங்கை மண்ணில் பெய்வதுபோல. சடைவிரித்த மாமுனிவர்களே அதை தாளமுடியும். நாம் வேண்டும் சொல்லுக்கு அப்பால் அத்தெய்வம் ஒரு அணுவும் எஞ்சக்கூடாது” என்றார். “ஆம், அறிவேன். ஆனால் எனக்கு வேறுவழியில்லை” என்றேன். அவர் எழுந்து என்னுடன் வந்தார். வேள்விச்சாலையில் இங்கிருக்கும் அத்தனை வேதியர்களும் இருந்தனர். நாங்கள் சூழ அமர்ந்து அதர்வவேதம் ஓதி அவியளிக்கலானோம்.
யாதவனே, நான் உன்னை அழைக்க விழைந்தேன். மீண்டும் என் நாவிலெழுந்த சொல்லை தேடியபோது ஓர் ஐயமெழுந்தது. கிருஷ்ண என்பது இம்முறை உன்னை சொல்வதாக எப்படி ஆகும்? அது இருளை குறித்தால்? இன்மை எழுந்து வந்தால்? மேலும் நான் கண்டது என் உளமயக்கென்றிருந்தால்? என்னுடன் நிற்கும் அனைவரும் காண எழவேண்டும். ஆகவே நான் சண்டகௌசிகரிடம் கேட்டேன் “சண்டரே, பருவுடல்கொண்டு நம் விழிக்குத் துலங்க தெய்வமெழுவதற்கான வழி என்ன?” என்று. “அத்தெய்வம் சூடிய மலரையோ அணியையோ அவியிலிட்டு வேள்வி நிகழ்த்த வேண்டும். அதர்வம் அத்தெய்வத்தை ஆணையிட்டு அழைத்துவந்து நிறுத்தும்” என்றார்.
ஒரு வேதியனை அனுப்பி உன் அறையிலிருந்து உனக்குரிய பொருள் எதையேனும் எடுத்துவரும்படி சொன்னேன். அவன் சாத்யகியிடம் சென்று வேள்விக்குத் தேவையெனச் சொல்லி உன் கையிலணிந்திருந்த கணையாழி ஒன்றை கொண்டுவந்தான். வேதமோதி அதை எரியிலிட்டோம். அந்தக் கணையாழிக்குரிய தெய்வம் எழுக என்று கோரினோம். அந்த அதர்வவேதச் சொல் “முழுதுருக் கொள்க! முழுமையும் காட்டுக!” என ஆணையிடுவது.
யாதவனே, எரி பொங்கி மேலெழக் கண்டோம். வேள்விப்பந்தல் எரிந்தது. வானோக்கி பெருகியது பெருந்தழல். நாங்கள் அங்கே கண்டது உன்னை. ஆனால் அது உன் இத்தோற்றம் அல்ல. உன் உடலில் எல்லா தேவர்களையும் கண்டோம். இங்கு ஒன்று பிறிதென வேறுபாடு கொண்டு சூழ்ந்திருக்கும் அனைத்துப் பருப்பொருட்களையும் கண்டோம். தாமரைமலரில் அமர்ந்த பிரம்மனையும் அவன் மைந்தர்களான அனைத்துப் பிரஜாபதிகளையும் அவர்களிலிருந்து எழுந்து உலகாளும் பேரரவுகள் அனைத்தையும் கண்டோம்.
பற்பல தோள்கள். பற்பல வாய்கள். நோக்கப்பெருகும் விழிகள். விரிந்து விரிந்து எல்லைகடந்தமைந்த உடல். முடியும் நடுவும் முடிவுமில்லா வியனுரு. மகுடமும், தண்டும், வலயமும் சூடி, ஒளித்திரளாகி எங்கும் நிறைந்திருந்தாய். வான்தழல்போல், ஞாயிறுபோல் அளவிடற்கரியதாக நின்றிருந்தாய். முதல் முடிவிலி. வரம்பிலா திறல். கணக்கிறந்த தோள்கள். ஞாயிறும் திங்களும் உன் விழிகள். எரிகனல் முகம். ஒளியால் முழுதுலகங்களையும் சுடரச்செய்பவன். நாங்கள் கண்ட அவ்வுரு நீ.
பெருந்தோளனே, பல வாய்களும், பற்பல விழிகளும், எண்ணிலாக் கைகளும், முடிவிலாக் கால்களும், வயிறுகளும், நொறுக்கும் பற்களுமுடைய உன் வெளியுரு கண்டு விண்ணகங்கள் நடுங்குவதைக் கண்டோம். வானங்கள் அனைத்தையும் மேவுவது, திசைதோறும் தழல்வது, பல வண்ணங்களுடையது, திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது. இளையவனே, உன் வடிவத்தைக் கண்டு நாங்கள் அஞ்சி அலறினோம்.
இங்குள்ள அனைத்தும் உன் வாயிலிருந்தும் விழிகளிலிருந்தும் தோன்றின. இங்குள அனைத்தும் உன்னில் சென்றடைந்தன. நீ முடிவிலாப் பசியுடன் உண்பதை கண்டோம். பேரன்னையென கனிந்து பெற்றுப் பெருகுவதையும் கண்டோம். குருதியாடி நின்றிருந்த உன் சிம்மத் தோற்றமே முலைசுரந்த காமதேனுவென்று மாறியதெப்படி என்று அறிந்திலோம்.
அன்னையை மைந்தர் அணைவதுபோல, நதிகள் கடல் நாடுவதுபோல, விட்டில்கள் தழலை நோக்கி செல்வதுபோல நீ அனைத்தையும் கவர்ந்தாய். நதிகளை நாற்புறமும் விரிக்கும் இமையம்போல நீ நின்றிருப்பதையும் கண்டோம். அனைத்தையும் உன்னிலிருந்து விசிறியடிக்கும் விசைமையமென்று துலங்கக் கண்டோம். விண்ணிலங்கும் கதிரவனே உலகமெங்கும் சுடர்கொள்வதுபோல் நீயே இவையனைத்தும் ஆவதையும் கண்டோம்.
விழித்தெழுந்தபோது நாங்கள் எட்டுத் திசைகளிலாக விழுந்துகிடந்தோம். எரிந்தணைந்த வேள்விச்சாலை கரிக்குவியலாகக் கிடந்தது. எழுந்து அமர்ந்து என்ன நிகழ்ந்தது என்று உளம் குவித்தபோது அலறியபடி ஓடி ஒளிந்துகொண்டு உடல்நடுங்கினோம். சிலர் மீண்டும் மயங்கிவிழுந்தனர். சிலர் தங்கள் உடல்களிலும் நிலத்திலும் அடித்துக்கொண்டு கூவியழுதனர். சிலர் நகைத்தனர். சிலர் பித்தெடுத்து நடனமிட்டனர். சிலர் உயிர்மாய்க்க விழைபவர் என எரிநோக்கி ஓட பிறர் அவர்களை பிடித்துத் தடுத்தனர்.
மீண்டும் மீண்டும் நிலைமீண்டு உடனே நிலைகலைந்து பித்துகொண்டு பகலெல்லாம் அங்கிருந்தோம். நான் என்னை நதிநீரில் மூழ்கடித்துக்கொண்டேன். அலைகளே நானென்று ஆனேன். அதன் திசையே எனதென்று கொண்டேன். மெல்ல அடங்கி நிகழ்ந்தது என்னவென்று உணர்ந்தேன். தௌம்யர் தன்னை மண்ணில் புதைத்துக்கொண்டார். அசைவழிந்து முளைத்தெழுந்தவையெல்லாம் தானென்றாகி நிலைகொண்டார். எங்கள் சொற்களால் இவர்களை மீட்டெடுத்தோம். அதன் பின்னரே உன்னைப் பார்க்க இங்கே வந்தோம்.
“யாதவரே, சொல்க! நீங்கள் யார்? இங்கே நிகழ்வதென்ன?” என்று தௌம்யர் கேட்டார். “எவருடைய கைகளின் விளையாட்டுப் பாவைகளாக இருக்கிறோம்? இப்போரில் படைக்கலங்களாகி நாங்கள் எவரை அழிக்கிறோம்? எதை நிலைநாட்டுகிறோம்?” அவரை முந்தியபடி கர்க்கர் கேட்டார் “வேதங்கள் சொல்லும் அருவின் உரு அது எனத் தெளிந்தோம். எங்குமுளதை இங்கென உணரும் அறிவிலிகளா நாங்கள்? விண்ணுக்கு உணவூட்டுகிறோம் என எண்ணி மயங்கும் பேதைகளா? சொல்க! நாங்கள் செய்யும் வேள்விக்கு என்ன பொருள்?”
அங்கிருக்கும் வேதியர் அனைவருமே ஒற்றைமுகம் கொண்டு நிற்பதுபோல் தோன்றினர். குரலெழுந்ததுமே கூர்மைகொண்ட கர்க்கர் “உன் உருவென்று இங்கே வந்திருப்பது எது? நீ யார்?” என ஓங்கிக் கூவினார். எழுந்து இளைய யாதவரை அணுகியபடி விழிநோக்கி கைசுட்டி “நீ விண்ணளந்தோனின் வடிவமென்றால் ஏன் இப்பேரழிவை இங்கு நிகழ்த்துகிறாய்? இச்சிறுமானுடத்திரளை ஆள உன்னால் இயலாதா? இவர்களுக்கு நலம் பயக்க நீ எண்ணவில்லையா? மானுடர்மேல் உனக்கு இரக்கம் இல்லையா? சொல்க! யார் நீ?” என்றார்.
“அது நானே” என்றார் இளைய யாதவர். “கர்க்கரே, அதுவென தன்னை உணரும் அனைவரும் அப்பேருருவை கொள்ளலாகும் என உணர்க!” தௌம்யர் “தத்துவத்தைக் கேட்க நாங்கள் இங்கு வரவில்லை. சிரித்து மழுப்பி எங்களை அனுப்பிவைக்கவும் எண்ணவேண்டாம். சொல்க, நீ யார்? நீயே பரம்பொருளா? அது மானுட உருவெடுத்து மண்ணிலிறங்கி வாழ்விலாடுமென்றால் அந்த வியனுருவுக்கு என்ன பொருள்? அதனால் ஆடப்படும் வாழ்வுக்குதான் என்ன பொருள்?” என்றார்.
மிகச் சரியாக சொல்லமைந்துவிட்டமையால் அவர்கள் அனைவருமே திகைப்பு கொண்டனர். சற்றுநேரம் ஆழ்ந்த அமைதி நிலவியது. பின்னர் கர்க்கர் மெல்ல மீண்டார். “ஆம், நாங்கள் திகைத்து நிலையழிந்ததும் எண்ணி எண்ணி வருந்துவதும் உன் வியனுருவைக் கண்டு அல்ல. அவ்வுண்மை எங்கள் சிறிய வாழ்க்கையை முற்றாக பொருளிழக்கச் செய்வதைக்கண்டு மட்டுமே” என்றார்.
பின்னால் நின்றிருந்த ஓர் இளைய வேதியன் “இளைய யாதவரே, உங்கள் பேருரு என் விழிபெற்ற பேறு. என் உளம் கொண்ட நல்லருள். எனினும் என் மனம் அச்சத்தால் சோர்கிறது. இறையுருவே, எனக்கு உன் முன்னை வடிவத்தை காட்டுக! தேவர்களின் இறைவா, புடவிகளின் உறைவிடமே, எனக்கு அருள் புரிக!” என்றான். தௌம்யர் “ஆம், எளிய வடிவில் எங்களுக்கு உன்னை காட்டி அருள்க! இவ்வியனுரு எங்கள் சொல்லில், சித்தத்தில் அடங்குவதல்ல. வானவிரிவு இன்மழையென மட்டுமே மண்ணை அடையவேண்டும்” என்றார். கர்க்கர் “விடையாகி வருக, எங்கள் உளம்கொள்ளும் விடையாக” என்றார்.
இளைய யாதவர் தன் தலையிலிருந்த பீலியை எடுத்து அவர்கள் முன் வைத்தார். “இதை மட்டுமே நோக்குபவன் என் இனிய வடிவை மட்டுமே காண்கிறான். இதில் விழி நிறுத்துக!” என்றார். அவர்கள் அதை நோக்கினர். அகல்விளக்கின் ஒளியில் அது தழல்போலிருந்தது. மென்மையான குளிர்ந்த தழல். அவர்கள் விழிதூக்கியபோது அனைத்தும் மீண்டுவிட்டிருந்தன. அவர்கள் முன் அமர்ந்திருந்த இளைய யாதவர் “சொல்க அந்தணர்களே, என்னைத் தேடிவந்தது எதன்பொருட்டு?” என்றார்.
அவர்கள் மீண்டுவிட்டிருந்தனர். கர்க்கர் தங்கள் குழுவை ஒருமுறை நோக்கிவிட்டு “யாதவனே, நேற்று முன்னாள் ஒரு சுவடியில் பிரம்மத்தின் பேருருத் தோற்றத்தைப்பற்றிய பராசரரின் விரித்துரைப்பை பயின்றேன். அது கனவில் எழுந்து அச்சுறுத்தும் பேருரு என நின்றது. விழிக்கையில் அக்கனவு முற்றாக நினைவிலிருந்து மறைந்த பின்னரும் அதன் மலைப்பு மட்டும் எஞ்சியிருந்தது. நாங்கள் கற்றறிந்த அனைத்தையும் முற்றாக அது அழித்துவிட்டது. எங்கள் நெறிகள், நோன்புகள், வேள்விச்சடங்குகள், வழிபாடுகள் அனைத்தும் வீணெனக் காட்டியது. அதைக் குறித்து உன்னிடம் கேட்கவே வந்தோம்” என்றார். “ஆம், அதையே உம்மிடம் உசாவ விழைந்தோம்” என்றார் தௌம்யர். “ஆம்” என்றார் சண்டகௌசிகர்.