சாம் ஹாரிஸ் -அறிவியலின் மொழிபு

sam_Harris_2016_(cropped)ஜெ அவர்களுக்கு,

அமெரிக்க நரம்பியல் பின்புலம் கொண்ட தத்துவ சிந்தனையாளர் சாம் ஹாரிஸ் உங்களுக்கு எவ்வளவு அறிமுகம் என்று தெரியவில்லை. அறிமுகம் உண்டு என்றால் அவரைப் பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவல். அவருடைய புத்தகம் Waking Up: A Guide to Spirituality Without Religion, நான் கடந்த சில வருடங்களில் மிகவும் ரசித்து வாசித்த புத்தகங்களில் ஒன்று. இந்திய தத்துவம் குறித்தான உங்கள் எழுத்துக்கள் அதை வாசித்த பின் எனக்கு இன்னும் சற்று தெளிய ஆரம்பித்தன.

சமீப காலமாக அவருடைய முக்கியமான பங்களிப்பு  உலகின் மிக சிறந்த சிந்தனையாளர்கள், நிபுணர்கள், விஞ்ஞானிகள் ஆகியவர்களுடன் அவர் தொடர்ந்து நடத்தும் உரையாடல்கள்தான். Waking Up Podcast என்னும் பெயரில் வெளியிடுகிறார். அவருடைய அரசியல் கருத்துக்கள் என்னை அவ்வளவாக ஈர்ப்பது இல்லை. உங்களைப் போலவே அரசியல் சரிகளை உதறி விட்டு எல்லா திசைகளில் இருந்தும் வாங்கி கட்டி கொள்கிறார். Consciousness, Meditation, Artificial Intelligence  மற்றும் அதன் தொடர்புள்ள தலைப்புகளில் உள்ள அவருடைய பேட்டிகள் அனைத்தையும் தங்கள் வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறேன். தார்மீக தத்துவம் குறித்தவையும் சிந்திக்க வைப்பவை.

சில:

Anil Seth – https://samharris.org/podcasts/113-consciousness-and-the-self/

Max Tegmark – https://samharris.org/podcasts/the-future-of-intelligence/

Eliezer Yudkowsky – https://samharris.org/podcasts/116-ai-racing-toward-brink/

Thomas Metzinger – https://samharris.org/podcasts/the-nature-of-consciousness/

Tristan Harris – https://samharris.org/podcasts/what-is-technology-doing-to-us/

அன்புடன்,

சாரதா 

***

அன்புள்ள சாரதா,

இணைப்புகளை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். விரிவான ஆழமான நேர்காணல்கள். இன்றைய தொழில்நுட்பம் அளிக்கும் வசதி இது. உலகிலுள்ள அனைவருடனும் நேரடியாக உரையாடமுடிகிறது

ஆனால் இத்தகைய உரையாடல்களில் எனக்கு ஒரு சிக்கல் உள்ளது. மெய்காண்முறைகள் மாறுபட்டவை. ஒவ்வொன்றின் தர்க்கங்களும் குறியீடுகளும் வேறுவேறு. மாறுபட்ட மொழிபுகள் என்று சொல்லலாம். அறிவியலின் மொழிபு இங்கே மையமாக ஆகிவிட்டிருக்கிறது. மெல்லமெல்ல அதுவே எல்லாம் என பிறரும் ஒத்துக்கொள்ளும் நிலை வந்துவிட்டிருக்கிறது. சமீபத்தில் ஸ்டீவன் ஹாக்கிங்ஸின் மறைவை ஒட்டி எழுதப்பட்டவற்றை வாசித்தபோது அவரை அறிவியலாளர் என்னும் நிலையை விட்டு மெய்ஞானி என்னும் நிலைநோக்கி கொண்டுசென்றுவிட்டார்கள் என தோன்றியது

அறிவியல் சென்ற இருநூறாண்டுகளில் உருவாக்கிய மொழிபு பிரம்மாண்டமானது. அதன் வெற்றிகள் மகத்தானவை. ஆனால் அது மட்டுமே எஞ்சவேண்டியதில்லை. அது மட்டுமே உண்மையென ஆகவேண்டுமென்பதுமில்லை. இலக்கியமும் கலையும் தங்களுக்கான வேறுவகை மொழிபுகள் கொண்டிருக்கலாம். மெய்யியல் முற்றாக வேறொரு மொழிபு கொண்டிருக்கலாம்.

நான் இலக்கியவாதி, மெய்யியலுக்குள் நுழைபவன். எனக்கு அறிவியல் மொழிபு அயலானது. ஒருவகையில் அதற்கு எதிரானவன். அவ்வாறே இருக்கையில்தான் நான் என் பங்களிப்பை ஆற்றமுடியும் என் கருவிகள் வேறு. தர்க்கங்கள் முற்றிலும் வேறு. என் பாதையில் அறிவியல் வழிகள் திசைச்சிக்கலை அளிப்பவை. பொய்யாக வழிநடத்துபவை

பிறிதொரு தருணத்தில் விரிவாக இதை எழுதவேண்டும் என நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரையாருடைய சொத்து- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-45