அன்பு மிக்க ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம். சமீபத்தில் வாட்ஸ் அப் மூலமாக வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகும் தமிழ்ப் புத்தகத்தில் தங்களின் அறம் தொகுதியை சார்ந்த யானை டாக்டரை துணைப் பாடப் பகுதியில் கண்டவுடன் மிகுந்த உவகை அடைந்தேன்.
நம் பாடத்திட்ட வல்லுனர் குழு மிகவும் புதியதாக பாடத்திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர் எனும் உள்ளார்ந்த நம்பிக்கையை இது அளித்தது.
மேலும் அய்யா. முத்துலிங்கம் அவர்களின் ஆறாம் திணை, சி.சு.செல்லப்பா அவர்களின் வாடிவாசல், சுஜாதா அவர்களின் தலைமைச் செயலகம், ஆனந்த ரங்கர் நாட் குறிப்பு ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
சிம்பொனி தமிழர்கள் எனும் தலைப்பில் திரு. இளையராஜா மற்றும் திரு.A.R. ரகுமான் அவர்களைப் பற்றிய ஒரு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.
கவிதைப் பேழை பகுதியில் ஆத்மாநாம் , மீரா போன்றோரின் கவிதைகள் உள்ளன.
இவை என்னுள் மிகுந்த மன நிறைவையும் , மகிழ்வையும் தருகின்றது.
அன்புடன்
தே. குமரன்
தருமபுரி
அன்புள்ள குமரன்
பாடநூலை நானும் பார்த்தேன். உள்ளடக்கம் பரவலான பிரதிநிதித்துவம் உடையதாகவும் நவீனமானதாகவும் உள்ளது. மகிழ்ச்சியடைந்தேன். குறிப்பாக அ.முத்துலிங்கம், சு.வில்வரத்தினம் போன்றவர்கள் பாடத்திட்டத்தில் இடம்பெறுவது மிகப்பெரிய விஷயம். இனி தமிழிலக்கியம், தமிழ்ப்பண்பாடு என்பது உலகளாவிய ஒரே வட்டம்தான் என அது காட்டுகிறது.
யானைடாக்டர் கதையின் சுருக்கம் அதில் இடம்பெற்றுள்ளது. இலக்கிய அறிமுகமாக அமையுமா எனத் தெரியவில்லை. ஆனால் பல லட்சம்பேருக்கு டாக்டர் கே சென்றடைவார். சூழியல் என்னும் களம், அந்த இலட்சியம் அறிமுகமாகும். அதன்பொருட்டு பாடநூல்கழகத்திற்கு நன்றியுடன் இருக்கிறேன்
ஜெ