உள அழுத்தம் -கடிதங்கள்

srikala-prabhakar

அஞ்சலி ஸ்ரீகலா பிரபாகர்

 

அன்புள்ள ஜெ

 

உள அழுத்தம் பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கும் அந்தப்பிரச்சினை இருந்தது. நான் மனதத்துவ மருத்துவனும்கூட. இன்றைக்கு அது ஒரு பெரிய நோயாக படர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு பல காரணங்கள். முக்கியமான காரணம் நீங்கள் சொல்வதுபோல வெற்றியை அடைந்தே ஆகவேண்டும் என்ற சமூகக் கட்டாயம். வெற்றி என தானே ஓர் இலக்கை உருவாக்கிக்கொண்டிருப்பது.

 

வெற்றி எல்லாருக்கும் வந்துவிடாது. வெற்றியால் மட்டும் மகிழ்ச்சி கிடையாது. சந்தோசமாக இருப்பதுதான் முக்கியம். மற்றவர்களை விட மேலே இருப்பதோ நினைத்ததை சாதிப்பதோ அல்ல. ஆகவே பெரும்பாலானவர்கள் சோர்வில் இருக்கிறார்கள். எவரிடம் பேசினாலும் அவர் ஆகவேண்டிய இடங்கள் எப்படியெல்லாம் தவறிவிட்டன என்றுதான் பேசுகிறார்கள்

 

இன்னொன்றும் ஓய்வொழிவில்லா வேலை. அந்தளவுக்கு வேலை செய்யக்கூடாது. செய்தால் இணையாக வேறு விஷயங்களில் மனதைச் செலுத்தி ரிலாக்ஸ் செய்யவேண்டும். ஓய்வுநேரத்திலும் வேலைசெய்துகொண்டிருக்கக்கூடாது. பலவேலைகள் செய்யலாம். ஆனால் ஒருவேலையாவது உற்சாகமானதாக இருக்கவேண்டும்

 

அப்புறம் தூங்காமலிருப்பது. தூக்கத்தின் சைக்கிள் இல்லாமலாவது. இயற்கையான தூக்கம் இருந்தாலே பாதிப்பிரச்சினை தீர்ந்துவிடும். உளச்சோர்வு ஒரு நோய். அதை சிகிச்சை செய்துதான் தீர்க்கவேண்டும் என்று நமக்குத்தெரிந்திருக்கவேண்டும்

 

ராம்நாத்

 

 

 

இனிய ஜெயம்

 

 

ஏதோ நிலையின்மை , கடலூர் சுற்றி உள்ள சிறிய சிறிய  கோவில்களை தேடிச்சென்று பார்த்து கொண்டிருக்கிறேன் .  முன்பே பார்த்ததுதான் எனினும் அப்பர் பிறந்த வீடு என கருதப்பெறும்  ,திருவாமூர் எனும் கிராமத்தில் , கோவிலாக மாற்றம் கண்டிருக்கும் அப்பரின் வீடு சென்று பார்த்தேன் .அப்பர் காலம் முதல் ,அடி வேரில் இருந்து மீண்டும் மீண்டும் துளிர்க்கும் களர் வாகை எனும் அவரது வீட்டு மரம் ஸ்தல விருட்சமாக அங்கே இருக்கிறது .

 

 

எங்கெங்கோ திரிந்து கொண்டு இருக்கிறேன் .வந்து இப்போதுதான் இணையம் திறந்து பார்த்தேன் .உங்கள் தோழி ஸ்ரீ கலா  அவர்களின் மறைவு செய்தி .  நிறைய உறக்க மாத்திரைகள் விழுங்கி மரணம் .   இன்று முப்பத்தி ஐந்து டிகிரி வெயில் அடித்தது என்று நவிலும் அறிக்கை போல எந்த உணர்ச்சியும் கலவாத சொற்றொடர் . ஒரு கணம் என் மதிப்புக்குரிய தோழி ,அவள் அனுபவித்து கடந்த கணங்கள் நினைவில் எழுந்து , ஏனையறியாது கண்ணீர் துளிர்த்தது .

 

 

// உள அழுத்தம் கொண்டிருந்தார். தற்கொலை எண்ணம் எப்போதுமிருந்தது என சொன்னதுண்டு. நாட்கணக்கில் பேசவே முடியாத நிலை ஏற்படும் என்றும், தொலைபேசியை எடுக்கத்தோன்றாது என்றும் சொன்னார்.//

 

இந்த நிலையை அப்படியே என் தோழி அனுபவித்து இருக்கிறார் .நல்லூழ் கடந்து வந்து விட்டார் .

 

மற்றொரு தோழி .  அவரது தனி வாழ்வின்சிக்கல்களால் உள அழுத்தம் மிகுந்து பதினைந்து ஆண்டுகள் துயில் ஊக்கிகளின் பிடியில் இருந்தார் .  ஒருநாள் இரவு  . மாத்திரையை கையில் வைத்தபடி தனக்குத்தானே என உத்தரவு இட்டுக் கொண்டார் .இனி என்ன வேண்டுமானாலும் நிகழட்டும் .மாத்திரைகளை மட்டும் இனி தொடவே மாட்டேன் .   அன்று துவங்கி  வாசிப்பு போராட்டம் வழியே ,அதிலிருந்து  வெளியேறி தனது விடுதலையை தக்க வைத்துக் கொண்டார் .

 

அந்த களர் வாகை மரத்தின் இலைக்கு மிக வித்யாசமான சுவை உண்டு .ஒரு இலையைக் கிள்ளி எச்சில் பொங்க சுவைத்தால் . ஏழு சுவைகளிலும்  ஒரு கிள்ளு நாவில் எழும் .  அந்த இலையிலேயே உள்ள சுவை என ஒருவர் சொன்னார் .தாவரவியல் மாணவர் ஒருவர் ,அந்த இலையில் எழும் ரசாயனம் எச்சில் உடன் கலந்து , அந்த ரசாயனம் எழுப்பும் சுவை மயக்கு அது என்றார் .

 

எது எவ்வாறாகிலும் முதல் முதலாக அந்த இலையை சுவைத்து நாவில் ஒவ்வொரு சுவையியலும் ஒரு கிள்ளு அனுபவிப்பது . தனி அனுபவம் .  ஒரு கிள்ளுதான் உவர்க்கயில் குமட்டிக்கொண்டு வரும் .ஒரு கிள்ளுதான் காரம் எழுகையில் ,நாவில் பழுக்க சுடும் குண்டூசி ஒன்றால் குத்தியது போல காரம் . புளிப்பு கசப்பு .  இறுதியாக எஞ்சுவது நா நுனியில் ஒரு துளி தேனின் தித்திப்பு .

 

விதி வேறென்ன சொல்ல .இந்த வாழ்வை இன்னும் கொஞ்சம் அவர் நம்பி இருக்கலாம் .தன்னை இன்னும் கொஞ்சம் அதிகமாக நேசித்திருக்கலாம் .ஸ்ரீகலா சுவைத்த இந்த வாழ்வு என்ற, இந்த அறிய இலையை கசப்பில் நிறுத்தி இருக்காமல்   இன்னும் கொஞ்சம் சுவைத்திருக்கலாம்  தேன் துளி வரை .

 

 

கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரைசெய்தி -கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைமீறலும் ஓங்குதலும்