யாருடைய சொத்து- கடிதங்கள்

na-pichamurthy1

யாருடைய சொத்து?

அன்புள்ள ஜெ

 

யாருடைய சொத்து ஒரு முக்கியமான கட்டுரை. இலக்கியக்கட்டுரையாக இருந்தாலும் பொதுவான கேள்விகளைக் கேட்டுச்செல்கிறது. விதவைத்திருமணம் மிகப்பெரிய பிரச்சினையாக இங்கே சினிமாவிலும் இருந்திருக்கிறது. ஆச்சரியம் என்னவென்றால் விதவைத்திருமணம் என்ற பிரச்சினையை சினிமா எடுத்துப்பேசியபின்னாடிதான் விதவை திருமணம்செய்துகொண்டாலே தப்பு என்ற எண்ணம்  அடித்தளமக்களிடையே உருவானது. என் சாதியில் மறுமணம் சாதாரணம். என் அம்மாக்கூட மறுமணம் செய்துகொண்டவர்தான். ஆனால் இன்றைக்கு அது கிடையாது. மிகக்குறைவு. அது பெரிய தப்பு என நினைக்கிறார்கள். கொஞ்சம் வளர்ந்த பையன் இருந்தால் பெண்களே திருமணம் செய்துகொள்ள கூச்சப்படும் நிலை உருவாகியிருக்கிறது. பிராமணர்களில் சமூகசீர்திருத்தம் செய்யப்போய் மற்றசாதிகளை பிராமணர்களின் நம்பிக்கை ஆசாரங்களை நோக்கி இழுத்துவிட்டுவிட்டார்கள். இதைப்பற்றி யாராவது ஆராய்ச்சிகள் பண்ணி எழுதலாம்

 

துரை

 

 

அன்புள்ள ஜெ

 

விதவை மறுமணம் குறித்துப் பேசும்போது இரண்டு முக்கியமான திரைப்படங்களை விட்டுவிட்டிர்கள்.. 1) நாயகன் 2) தளபதிநாயகனின் கமல் ஒரு விபச்சாரியை கட்டிக்கொள்கிறார்.. ஆனால், அதை மிக  இயல்பாக மணிரத்னம் காட்டி இருப்பார்.. அதை ஒரு காதலாகத் தான் காட்டியிருப்பார், தியாகமாக அல்ல..

 

அதனிலும் தளபதி ஒரு படி மேல் – ஏனென்றால், அதில் நடித்தது ரஜினி.. ரஜினி அடிவாங்கினால் கூட ரசிகர்கள் பொங்கி எழும் ஒரு காலக்கட்டிடத்தில் ரஜினி திருமணமாகி ஒரு குழந்தையுடன் இருக்கும் பானுப்ரியாவைக் கல்யாணம் செய்து கொள்வார்.. இதிலும் அது தியாகமாகக் காடடப்படாமல், ரஜினியின் குற்ற உணர்வுக்குப் பரிகாரமாகத் தான் காடடப்பட்டிருக்கும்.. இந்தப் படம் வந்தபோது சில ரசிகர்கள் அதை எதிர்த்தனர்.. ஆனாலும் படம் பெருவெற்றி பெற்றது.. பெரிய அளவில் மக்கள் சலனப்படவில்லை..

 

சத்ரியன் தோற்றதற்கு வேறு காரணம் என்று நம்புகிறேன்.. அது பெரிதும் மணிரத்னத்தின் நகலாக இருந்தது – செயற்கையான நகலாக..

 

குறிப்பிட்டு சொல்லவேண்டிய இன்னொரு படம் – அந்த 7 நாடுகள்.. 90களின் இறுதியில் என் கல்லூரி நண்பன் ஒருவன் இந்தப் பட உச்ச காட்சியை பெரிதும் உணர்ச்சிவசப்பட்டு பாராட்டி பேசினான்.. 20 வருடம் கழித்து இந்தக்  காட்சி ஒரு காமெடியாகப் பார்க்கப்படும் என்று அவனிடம் சொன்னேன்.. பார்க்கப்படுகிறதா என்று தெரியவில்லை..

 

நன்றி

ரத்தன்

முந்தைய கட்டுரைடாக்டர் கே,அ.முத்துலிங்கம், சு.வில்வரத்தினம்
அடுத்த கட்டுரைசாம் ஹாரிஸ் -அறிவியலின் மொழிபு