செய்திதுறத்தல்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்,
கட்டுரையை வாசித்தேன், முற்றிலும் உண்மை. இந்த சமூகம் நம் அனைவரையும் பயன்படுத்தி கொள்ளத்தான் செய்யும். இதிலிருந்து விடுபட முடியாது, ஆனால் சற்று நேரம் இளைப்பாறி விட்டு வரலாம் .வந்துவிட வேண்டும்,
அந்த இளைப்பாறலிலும் சமூகத்துக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும்,இல்லையென்றால் அந்த கொஞ்ச நேரத்திலும் உங்களை கொள்ளையடிக்க சமூகம் தயாராக இருக்கும். மாற்றாக உங்கள் அடையாளத்தை அழித்து கொள்ளும் இடத்தை நோக்கி செல்ல வேண்டும். ( விடுமுறை அதிகம் இரண்டு நாள், திரும்ப வர இயலவில்லையென்றாலும் எதிர்த்து பேசினாலோ உங்கள் இடம் உங்களுக்கு இல்லை).
இன்று அனைத்தும் தேவை என்று அழுத்தி சொல்லுகிறார்கள் அதற்காக தொடர்ந்து உழைத்துகொண்டே இருக்க வேண்டும் என்கிறார்கள், நாம் நம் தேவையை தாண்டி சிந்திக்கவூம் கூடாது,ஆனால் தெரிந்து கொள்ளலாம், அதற்கு உழைக்க நம் அரசியல் கட்சிகள் இருக்கின்றன.
தனி மனிதன் இன்று அமைதியாக இருப்பது மிகவும் கடினம் ஏனேன்றால் இன்று உங்களுக்கா மட்டும் உழைத்தால் போதாது,நீங்கள் தேடிய செல்வத்தை செலவு செய்து கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் எப்போதும் ஏதோ ஒரு தேவையில் இருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் உபயோகமானவர்,நல்லவர். எப்படியென்றால் நீங்கள் அவர்களுக்கு தொடர்ந்து பயனளித்து கொன்டே இருக்கிறீர்கள்.
இந்த பிரச்சினைக்கு நான் தேர்ந்துதெடுத்த பாதை இலக்கியம்.ஆம் இலக்கியத்தில் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன், என் தனிமையை மிகுந்த செலவு செய்து( வரவை துறப்பதும் செலவுதானே) தேர்ந்தெடுத்து கொள்கிறேன். இன்னும் முழுமையாக அல்ல.
அன்புடன்
அழகுவேல்.
அன்புள்ள ஜெ
செய்தி துறத்தல் கட்டுரையை வாசித்தேன். செய்தி தேவையில்லை என்பதைவிட செய்திகள் மீதான அவநம்பிக்கையைத்தான் அதில் கண்டேன். இன்றைக்குச் செய்திகள் அப்படி ஆகிக்கொண்டிருக்கின்றன. நாளிதழ்களில் தகவல்கள் மிகமிகக்குறைவு. நேரில் சென்று எழுதுவது, செய்திகளை ஆராய்ச்சி செய்து எழுதுவதெல்லாம் அனேகமாக தமிழில் இல்லாமலாகிவிட்டது. ஆங்கில ஹிந்து கொஞ்சநாள் முன்பு அப்படி இருந்தது. இன்றைக்கு அதிலும் வெறும் கருத்துக்களையே செய்திபோல எழுதுகிறார்கள்.
செய்திகளில் செய்திகளே இல்லை. தமிழ் ஹிந்து தினமலர் எல்லாம் வெறும் அபிப்பிராயங்களைத்தான் வெளியிடுகின்றன. அபிப்பிராயம் சொல்வது யார் என்று பார்த்தால் சாதாரணமான இதழாளர்கள். எந்த தனிப்பட்ட தகுதியும் இல்லாதவர்கள். இதழில் வேலைசெய்வதனால் இடம் கிடைக்கிறது. உலகிலுள்ள எல்லாவற்றைப்பற்றியும் எழுதித்தள்ளுகிறார்கள். வெளியே இணையத்தில் இதைவிடக்கேவலம். எந்த தரமும் இல்லாமல் எந்த சுயகட்டுப்பாடும் இல்லாமல் தனக்கு பிம்பம் உருவாக்குவதற்காகவே வசைகளையும் வெறுப்பையும் கொட்டுகிறார்கள்.
செய்திகளுக்குப்பின்னால் ஓடுவதை நாம் குறைத்துக்கொண்டாலொழிய உண்மையை அறிந்து வாழமுடியாது. பொய்யில் வாழாமலிருக்க செய்திகளை முழுமையாகவே துறப்பது நல்லதுதான்
செந்தில் பெரியசாமி