மூட்டை

suve

ஜெ

சமீபத்தில் வல்லினம் பேட்டியில் சு.வேணுகோபால் இப்படிச் சொல்லியிருந்தார்.

கூந்தப்பனை’ குறுநாவலில், ‘முதுகில் மூட்டையைத் தூக்கிக்கொண்டு வந்தான்’ என்று எழுதியிருந்தேன். மூடை என்பதுதான் சரி. மூட்டை என்பது தவறு. இதுகூட தெரியாத இவன் என்ன எழுத்தாளன். எனவே இது மோசமான நாவல் என்று விமர்சனம் செய்திருந்தார் அருமை நண்பர்.

மூட்டை என்பது சரியா அல்லது மூடையா? இதைவைத்து ஒரு விமர்சனம் முன்வைப்பது எப்படி சரியாக இருக்கும்?

எஸ்.ரமேஷ்

***

அன்புள்ள ரமேஷ்,

ஒரு சூழலின் மொத்த அறிவியக்கத்தையும் மழுங்கடிப்பது அழகியல் சார்ந்த, கருத்துநிலைகள்  சார்ந்த விவாதங்கள் அனைத்தையும் தவிர்த்து இப்படி வெற்றுச் சொல்லாராய்ச்சி செய்வதுதான். நான் இதை கூடுமானவரை தவிர்க்கவே செய்வேன். இப்போதுகூட சொல்லாராய்ச்சியாக இதைச் சொல்லவில்லை, இந்தப் போக்கு எப்படி அறிவுச்செயல்பாடல்ல என்று சொல்லவே இதை எழுதுகிறேன்

மொழி என்பது நாசெவி உறவாடலால் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது. அதில் நிலைபெற்றுவிட்ட அனைத்தையும் உள்ளிழுத்து இலக்கணம் வகுத்தபடியே வாழும் மொழிகள் முன்னகர்கின்றன. ஆங்கில இலக்கணம் எப்படி மாறிக்கொண்டே இருக்கின்றன என்று பாருங்கள். நிலையான இலக்கணச்சட்டகம் மொழிக்கு இருக்கவேண்டுமென்பது ஒரு தேங்கிப்போன பார்வை

இலக்கியவாதி மக்கள்மொழியிலிருந்தே சொற்களை எடுத்துக்கொள்வான். அரிதாக ஒலியமைவுக்கேற்பவோ தன் உள்ளத்தமைந்த கருத்தமைவுக்கேற்பவோ அவன் சொற்களை மாற்றிக்கொள்வதுமுண்டு. அவன் எப்படிச் சொற்களைப் பயன்படுத்துகிறான் என்று ஆராயத்தான் மொழியியலாளர் முயலவேண்டும், அதுவே உலகமெங்குமுள்ள வழக்கம். அவன் எப்படி எழுதவேண்டும் என்று சொல்லும் மடமை இங்கன்றி எங்குமில்லை.

இங்கே இந்தவகையில் சொல்பொறுக்குபவர்களுக்கு மொழியின் மரபோ, அதன் நெறியோ தெரியுமா என்றால் தெரியாது என்பதே மறுமொழி. குறைந்தபட்சம் அகரமுதலி அறிவாவது உண்டா என்றால் அதுவும் மட்டு.

இந்த மூட்டை எனும் சொல்லையே பார்ப்போம். அன்றாட நாளிதழ்களை மட்டுமே வைத்து பேசவரும் மடத்தனமே அம்மறுப்பில் வெளிப்படுகிறது

இப்படிச் சொற்கள் சார்ந்த பேச்சு எழும்போது முதலில் முதன்மையான அகரமுதலிளைப் பார்க்கவேண்டும். எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பேரரகராதி மூட்டை என்ற சொல்லுக்கே பொருள் அளிக்கிறது. மூட்டைதூக்கி உட்பட அதிலிருந்து எழும் சொற்களுக்கு பொருள் அளிக்கிறது. மூட்டை என்றால் பொதி, பொருட்களைச் சேர்த்துக்கட்டுவது, பொய் என பொருள் அளிக்கப்பட்டுள்ளது.

மூடை என்ற சொல் பேரககராதியில் இல்லை. அது பேச்சுவழக்கிலிருந்து செய்திகளுக்குச் சென்று புகழடைந்த சொல். உடனே அது பிழை என்று பொருளா? இல்லை, அது மக்கள் பேசுவதனாலேயே பொருள் உடையதாகிவிடுகிறது

இரண்டாவதாக சொல்லாய்வுகளில் பார்க்கவேண்டியது வேர்ச்சொல்லை. மூட்டுதல் என்றால் சேர்த்துத் தைத்தல், இணைத்துக் கட்டுதல் என்றுபொருள். மூட்டப்பட்டது மூட்டை.

இவ்வாறாக சொற்களைப் பொருள்கொள்ளலாம். ஆனால் இலக்கண ஆராய்ச்சி எவ்வகையிலும் ஓர் அறிவுச்செயல்பாடு அல்ல.

ஜெ

எஸ்.வையாபுரிப்பிள்ளை

முந்தைய கட்டுரைசெல்வராணியின் பயணம்
அடுத்த கட்டுரைஅஷ்டவக்ரகீதை வெளியீடு