மாவோயிசம் கடிதங்கள்

சந்திர குகவின் Makers of Modern India படித்து கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் உங்களது கட்டுரை மேலும் நல்ல சிந்தனைகளை துண்டுவதாக உள்ளது.

நேருவின் பொருளாதரம் சார்ந்த கடிதங்கள் அவருக்கு இருந்த சோசியலிச ஆர்வத்தையும் ஜனநாயகத்தின் மேல் அவருக்கு இருந்த நம்பிகையும் காட்டுவதாக உள்ளது. அவர் ஜனநாயகத்தின் மேல் ஒரு சோசியலிச குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டார். அவருடைய letters to chief ministers இல் அவர் இதையே முதல்வர்களுக்கு வலியுறுத்துகிறார்.

ஆனால் இந்தியாவில் முதலாளித்துவம் அடைத்த வெற்றியை சோசியலிசம் அடையவில்லை என்றே இன்றைய நிலமை எண்ணவைக்கிறது. இந்திய சுதந்திர காலகட்டத்தில் நேருவின் பங்கு மகத்தானது ஆனால் அடுத்து வந்த தலைமுறைகளால் அந்த வளர்ச்சியை கொடுக்கமுடியவில்லை அந்த நிலயில் மன்மோகன் சிங்கின் முதலாளித்துவக் கொள்கை நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்று உள்ளது. உங்கள் கட்டுரைகள் (மார்க்சிசம் இன்று தேவையா? மற்றும் மாவோயிச வன்முறை) இதையே இன்னும் விரிவாக அலசியாராய்கிறது. இந்தியாவில் அல்லது ஜனநாயக நாட்டில் முதலாளித்துவமே சாத்தியம் என்றே எண்ணுகிறேன்.

பார்த்திபன்

அன்புள்ள பார்த்திபன்

சோஷலிசம் என்பது ஒரு வகை இலட்சியவாதம். அது முழுமையாக நடைமுறையாவது எப்படி சாத்தியம் எனத் தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு கனவு இருப்பது கண்டிப்பாக மக்கள்நல அரசுகளை உருவாக்கும். அரசு மகக்ளுக்கான நலப்பணிகளை செய்வதற்கான கோட்பாட்டு ரீதியான விளக்கத்தை சோஷலிசமே அளிக்க முடியும். சோஷலிசத்தை அரசே எல்லாவற்றையும் செய்வது என்று புரிந்துகொள்ளாமல் சேவை செய்யும் அரசு என்று புரிந்துகொண்டால் பிரச்சினை இல்லை

ஜெ

********************************

எந்த நிறுவனமும், துவக்கப் பட்ட கணம் முதலே அழுகத் தொடங்குகிறது என்று ஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருக்கிறார். அது கோட்பாட்டின் சிக்கல் அல்ல. அதைச் சொல்ல நிறுவப்பட்ட நிறுவனத்தை நடத்தும் மனிதர்களுக்குள் நடக்கும் power struggle ஆல் வருவது. நாம் பார்க்கும் எல்லா நிறுவனங்களுக்கும் இது நடந்திருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, விருபாக்‌ஷி என்றழைக்கப் பட்ட மலை வாழை, ஒரு வைரஸ் தாக்குதலால் அழிந்து போக இருந்தது. வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கிடையாது. அப்போது மிக புத்திசாலித்தனமான ஒரு யோசனை அதைக் காப்பாற்றியது. முழு வாழை மரமே வைரஸினால் தாக்குண்டிருந்தாலும், அதன் நுனியில், புதிதாய்ப் பிறந்த செல்களைத் தாக்க சிறிது காலம் பிடிக்கும். அதற்குள், அந்நுனியில் இருக்கும் செல்களை வெட்டியெடுத்து, tiisue culture மூலம் அவற்றை மீண்டும் உருவாக்கி அவற்றைக் காத்தனர்.

சிந்தனைத் தளத்தின் உச்சியில் இருந்து முன்னோக்கி நகர்த்தப் படும் எண்ணங்களே மனிதனை மேம்படுத்தி எடுத்துச் செல்லக் கூடியவை. உங்கள் சிந்தனைகள் இப்பிரச்சினையில் மிகப் புதிதாய் இருக்கின்றன. மரபின் பாதகமான பங்களிப்பைக் கண நேரம் கூட யோசிக்காமல், வெட்டியெறிய வேண்டிய காலம் இது. பழக்கத்தின் பாசியில் (நன்றி: சு.ரா) வழுக்கிக் கொண்டிருக்கும் எல்லா மரபியர்களையுமே உதறி முன் செல்வதே வாழும் வழி.

ஒரு வியாபாரியாய், இந்திய ஊரக வளர்ச்சியையும், அதன் நுகர் வணிகத்தின் பிரமாண்ட வளர்ச்சியையும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது முகேஷ் அம்பானியின் ஓட்டுக்கு இருக்கும் அதே மதிப்பு, ஒரு குக்கிராமத்தில் இருக்கும் மனிதனுக்கும் இருக்கும் விந்தையினால் விளைந்தது என்பதையும் அறிவேன். NREGA என்னும் திட்டம், அந்தக் குடிமகனின் வாக்குக்கு இருக்கும் மதிப்பு. வாழ்க மக்களாட்சி!

அன்புடன்

பாலா

பாலா

என்னுடையது ஒரு கட்டுமானச் சிந்தனை அல்ல. நான் எதையும் உருவாக்கி நிறுத்த முனையவில்லை. இருவகையான மாயையான தரப்புகள் நம்மிடையே உள்ளன. ஒன்று இலட்சியவாதத் தலைவர்களால் நடத்தப்படும் ஒரு இலட்சியவாத அரசு பற்றியது. இன்னொன்று புரட்சிகர அரசு பற்றியது. இரண்டு மாயைகளுக்கும் நடுவே நின்று அப்பட்டமான யதார்த்தத்தை முடிந்தவரை சொல்ல முயல்கிறேன்

ஜெ

*********************************

திரு.ஜெ அவர்களுக்கு வணக்கங்கள்,

தங்களின் விரிவான விளக்கம் கண்டேன். அதன் அடிப்படயில் என் கருத்தை பகிர்ந்துகொள்ளவே இவ்வறிமுகம்.

முதலில் உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தங்களின் கூற்று அனைத்தும் 100 சதவீதம் உண்மையே. இதில் மறுப்பு கூறவியலாது. நான் சிங்கப்பூரிலிருக்கும் பொழுது ஆந்திர நக்சலைட்டுகளைக் குறித்து கேள்விப்பட்டேன். அவ்வியக்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்ல கல்வித்திறன் உள்ளவர்களென்றும் சமுதாய (அரசியல்) அவலங்களின் காரணமாகவே அவ்வாறு மாறியதாகக் கூறுகின்றனர். அதற்காக அவர்கள் செயல்கள் அனைத்தையும் ஆதரிக்கவில்லை. நம்மில் ஒற்றுமையிலாத காரணத்திலால் தான் அவர்களின் இந்த மறைமுகத்தாக்குதல் எனத்தோன்றுகிறது. வெள்ளைக்காரர்களை எதிர்த்து போராடிய நம் முன்னோர்களுக்கிருந்த வீர, தீரத்தில் ஒரு பகுதிபோலும் நம்மிடையே இல்லாதது தான் காரணம். வீதிக்கு பல அரசியல், ஜாதி, மத பேதம்,எதிர்கால சந்ததியைக் குறித்து ஒரு அக்கறையில்லாப்போக்கு இவை அனைத்துமே காரணம். எதிர் கால சந்ததியென்று கூறும்பொழுது நாம் நம் பிள்ளைகளுக்குக் கல்வி, பொருளாதாரம் என்ற சிந்தனைமட்டும் போறா. இவை அனைத்தையும் பதுகாக்க நாம் வசிக்கும் இடம் தூய்மையாகயிருக்கவேண்டும்.அப்பொழுதுதான் கற்றகல்வியை விரிவாக்கவும், சேமித்த பொருளாதாரத்தைச் சிக்கனமாகவும் செலவழி்க்கவியலும். திரு.மன்மோகன் ஒருமுறை இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு இவ்வளவு என்று ஒரு தொகை உலக வ்ங்கியில் கடன் பட்டுள்ளோம் என்ற பொழுது திருச்சியை சேர்ந்த ஒருவர் தன் தொகையை காசோலையாக அனுப்பிவிட்டு இனி உலகவ்ங்கியில் கட்ன் வாங்கும் முன்பும், வாங்கிய தொகையை செலவு செய்த முறையையும் தெரிவிக்குமாறு எழுதியனுப்பியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எத்தனைப் பேருக்கு இச்சிந்தனையுள்ளது. வருடத்தில் ஒரு முறை வரும் தீபாவளி,கிருஸ்மஸ், முகரம் போல் அனைத்தையும் மறக்கும் மனப்பக்குவம் நம்மிடத்திலுள்ளது. இதற்கு உதாரணம் ஹர்ஷத் மேத்தா, போர்பஸ், கொடை நாடு, தற்பொழுது ஸ்பெக்ட்ரம்….??!! இதை நினைக்கும்பொழுது, ஒரு கோட்டை வரைந்து அதை அழிக்காமல் (அருகில் ஒரு பெரிய கோட்டை வரைந்து) சிறிதாக்கும் யுக்திதான் மனதில் தோன்றுகிறது. ஊழல் செய்தவர் மரணத்திற்கு பிறகு கூட வழக்கு நிலுவையில் (ஒரு வேளை அவர் மரணத்தின்பொழுது த்ன்னுடன் எடுத்துச்சென்றுவிட்டதால்)உள்ளது. பிறகு தண்டனை யாருக்கு? தண்டனை ஒரு பக்கம், பணம் எங்கே? வழிப்பறியாகயிருந்தால் (புகார் கொடுப்பவர் பெரும்புள்ளியாகயிருந்தால்) உடனடித்தீர்வு. இவையனைத்தையும் சரிசெய்ய நான் சமூக சேவகனில்லை என் குடும்பப் பிரச்சனைகளே அதிகமென்றால். ஆம் இதுவும் குடும்பப் பிரச்சனைத்தான். நாம் வ்ருங்கால சந்ததியின் கல்வி மற்றும் பொருளாதார சிக்கலை தீர்க்க முயற்சிக்கிறோம். அவற்றை வைத்துக்கொண்டு அச்சந்ததியினர் வாழப்போவது இந்தியாவா இங்கிலாந்தா? இதற்கு வீதிவரைக் கூட வரவேண்டாம் தேர்தல் என்று வரும்பொழுது மேற்குறிப்பிட்ட அரசியல், ஜாதி, மத வர்ணம் பூசாமல் சோற்றுக்கட்சியாக (வறுமையொழிப்பு) செயல்பட்டால் போதும். தற்கால விஞஞன வளர்ச்சியில் குறைந்தபட்ச இம்முயற்சி கூட எடுக்காவிட்டால் நாம் அறிவிலிகள் தான்.

நான் ஐக்கிய அரபு நாடான துபாயிலிருந்து சுமார் 150 கி மீ தொலைவில் Fujairah-என்னுமிடத்தில் பணியாற்றுகிறேன். மாதம்தோறும் வீட்டிற்கு பணம் அனுப்பும் பொழுது வங்கியில் அதன் மதிப்பு கூடினால் மிகவும் வ்ருந்துவோம். இதோ அதன் விளக்கம். அதாவது UAE-ல் (United Arab Emirates) ஒரு திர்ஹாம்ஸின் (நம் ஊர் ரூபாய் போன்று) மதிப்பு 12.40 ரூபாய் நாற்பது காசானது 12 ரூபாயாக மாறினால் இந்தியராகிய நாங்கள் (இந்தியா வள்ர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக) மகிழ்ச்சியடையவேண்டும். ஆனால் வருத்தம் தான் காரணம் எங்களுக்குத்தெரியும் அங்கு தக்காளியிலிருந்து ஒன்றின் விலயும் வீழ்ச்சியடையப்போவதில்லை. மாறாக இமயத்தையெட்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை(ஒரு பாரல்)$165 டாலரிலிருந்து $35 டாலராக வீழ்ச்சியடந்தபொழுது நம் நாட்டில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் விலயிறக்கம் செய்யப்பட்டது. அதன் பிறகு எத்தனை விலையேற்றம். தற்பொழுதுள்ள நிலவரம் செய்தியில் வாசிக்கவில்லை. எப்படியென்றாலும் பாரல் $165 டாலர் இருக்காது. இராமர் பிள்ளையைக் கூட ஓரம் கட்டியது இதனால் தான். நம்முடைய தேவை 60 சதவீதம் 40 சதவீதம் நம்மிடமேயுள்ளது. அதை ரிலையன்சுக்கு தாரை வார்த்துவிட்டதாக கேள்வி. அதை அவர்கள் சர்வதேச விலைகே விற்பதாகக் கேள்வி. இவர்கள் குடும்ப ஒற்றுமைக்கு அரசியல் சமரசம் வேறு. நமக்கு பக்கத்து வீட்டுக்காரர் கூட வரமாட்டார் நம் ஒற்றுமை அப்படி. தொலத்தொடர்பில் (phone) அவர்களுக்கு நன்றி. மத்திய கஜானாவை நிறைக்கும் ஒரு செயலை குறைசொல்வது தேசக்குற்றம். இராம்ர் பிள்ளையின் உற்பத்தி முறையை சர்வதேசத்தில் ஆய்வு செய்து சான்றிதழை வழங்கிவிட்டதாக கேள்வி. பாவம் அவரா மத்திய கஜானா பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப்போகிறார். ஒரு பத்திரிக்கையில் வாசித்தேன் உலக பெரும்பான்மையான நாடுகளில் எண்ணையின் (பெட்ரோல்,டீசல்) விலை நம் நாட்டைக்காட்டிலும் குறைவு. ஆம் பாக்கிஸ்தானில்கூட ஒரு வேலை தீவிரவாதிகளின் எதிர்பாலிருக்கலாம்..!! ஊருக்கு தேர்தல் அட்டையை வழங்கிவிட்டு போலியை வைதுக்கொண்டு கள்ளவோட்டை ஆதரிக்கும் தேச (அரசியல் வாதிகள்) பக்தர்கள்தானே! அரசியலில் கொள்ளையடிப்பதற்கு ஒரு Phd பட்டம் கொடுத்தால் இரு திராவிடக்கட்சிகளுக்கும் முதலிடமே. திரவிடம் கற்றுத்தந்த கலையல்லவா? மக்களையும் பாராட்டவேண்டும் கர்மவீரர் திரு.காமராஜரையே தோற்கடித்த தலைமுறையல்லவா? மரபணு உறவோடு,உயிரோடு ஒட்டியது. இன்னும் சொல்லித்தீராது என் வேதனை……..

எதுவாயினும் இன்னும் திரு. காமராஜரின் வாரிசுகள் இருக்கின்றனர் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும், பெருமிதமும் பொங்குகிறது. நன்றி திரு.ஜெயமோகன் அவர்களுக்கு காரணம் இத்தளத்தில் என் மனக்குமுறல் வெளியானதில் ஒரு பாரம் குறைந்தது. வாசிப்போரின் சிந்தனையில் பதிந்தால் நானும் ஒரு சுதந்திரப் போராட்டக்காரனே.

பாஸ்கரன்.

அன்புள்ள பாஸ்கரன்,

நான் சர்வாதிகாரம் நிகழும் நாடுகளில் ஒரு விஷயத்தை கவனித்திருக்கிறேன். அங்கே அரசியல் முழுமையாகவே அரசுக்கு விடப்பட்டிருக்கும். மக்கள் ஆர்வமே காட்டுவதில்லை. மாறாக இந்தியாவில் சாமனியனுக்கும் அரசியல் உள்ளது. இந்த அரசியலார்வமே ஜனநாயகத்தின் அடிப்படை

ஜெ

********************************

அன்புள்ள ஜெ,

முதலாளித்துவம், உபரி போன்ற சொற்களுக்கு நீங்கள் அளிக்கும்
விளக்கத்தை மறுக்கிறேன். இவ்வளர்ச்சி தார்மீகத்திற்க்கு,
பண்பாட்டிற்க்கு எதிரானது என்ற வாதத்தையும் ஏற்க்க முடியவில்லை.சாதிய கட்டமைப்பு, பெண்ணடிமை, நிலப்பிரவுத்தவ மதிப்பீடுகள் போன்றவை கடுமையாக வலுவிலந்தது இந்த ‘முதலாளித்துவ’ அமைப்பு இங்கு ஓரளவு உருவான பிறகுதான் ! ’பண்பாட்டை’ எப்படி இந்த வளர்ச்சி ’அழிக்கிறது’ என்று சொல்லுங்களேன் ?

ஊழல் இல்லாமல், நேர்மையாக, வெளிப்படையாக 1991க்கு
பின் தான் தொழில் செய்ய முடிகிறது. இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி போன்ற தொழில் முனைவோர்களை இப்போதுதான் உருவாக வழி பிறந்துள்ளது. லைவ்சென்ஸ் ராஜ்ஜியம் என்ற ‘சோசியலிச பொருளாதார’ கொள்கைகளை பின்பற்றிய ஆண்டுகளில் தான் தொழில்துறையில்
ஊழல் மிக அதிகம் இருந்தது. இன்று ஊழல் அரசின் சேவைகளில்,
அரசு வாங்கும் பண்டங்களில் / சேவைகளில் தான் மிக மிக அதிகம்
உள்ளது. இதற்கான் வித்து லைசென்ஸ் ராஜ்ஜிய காலகட்டங்களில்
தான் விதைக்கப்பட்டது. இதை பற்றிய எமது பழைய பதிவு :

http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html
நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

உபரி என்ற சொல் பற்றி : மார்க்சிய கோணம் மறுக்கப்பட்டு வெகு
காலமாகிவிட்டது. அதாவது தொழிலாளர்களின் உழைப்பின் ‘உபரிதான்’ லாபமாகி, முதலீடாக ஆகிறது. அந்த உபரிக்கு மூலம் 100 சதம் தொழிலாளர்களின் உழைப்பு மட்டும் தான் என்ற வாதம். தொழில்முனைவோர்களின் உழைப்பு, ஊக்கம், organising and managing skills and drive : இவை தான் 100 சதவீத காரணம் என்பதே சரி. இல்லாவிட்டால் மார்க்சின் கணிப்புபடி, ’உலகில் நிகர உபரி மதிப்பு படிப்படியாக குறைந்து,தொழிலாளர்களின் வாழ்க்கை தரமும் அதே விகிதத்தில் மோசமாகி, business cycles progressive ஆக மோசமாகி, இறுதியில் முதலாளித்துவம் தானே implode ஆகி அழியும்’ ; ஆனால் நடந்தது நேர் எதிர். மார்க்ஸ் கண்ட அய்ரொப்பிய தொழிலாளர்களின் இன்றைய நிலை கடந்த 150 ஆண்டுகளில் மிக மிக நல்ல மாற்றத்தை அடைந்து, மிக அருமையான வாழ்க்கை
தரத்தை அடைந்துவிட்டார்கள். (மார்க்சியர்கள் யாரும் இந்த அடிப்படை விசயத்தை பற்றி விவாதிக்க மறுக்கிறார்கள் !!)

ஃபின்லாந் போன்ற ஸ்காண்டினேவிய நாடுகளில் ஊழல் மிக மிக குறைவு. காரணம் லிபரல் ஜனநாயகம் மற்றும் சுதந்திர பொருளாதாரக் கொள்கைகள். (Welfare state என்பது ஒரு அங்கம் தான்). எந்த நாட்டில் அரசு, மிக அதிக அளவில்
பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரங்களை (over centralization of economic and political power) பெறுகிறதோ, அங்குதான் ஊழலும், அதிகார துஸ்பிரயோகமும்,
தேக்க நிலைகளும் அதிகமாகும் என்பதே வரலாறு. இவை பற்றி சில முக்கிய
பதிவுகள் :

India state “biggest culprit” for rampant corruption: leading think tank
http://www.thehindu.com/news/international/article937947.ece

the relevant report from Heritage Foundation :

Corruption In India: People Or The State?
http://blog.heritage.org/?p=47741

http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html

கடிதம் நீள்கிறது. மற்றவை பிறகு.

அன்புடன்
கே.ஆர்.அதியமான்
சென்னை – 96

அன்புள்ள அதியமான்

நீங்கள் என்ன சொல்வீர்கள் என நன்றாகவே அறிவேன். உறுதியான ஒரு வலதுசாரித்தரப்பை எடுக்கிறீர்கள். நான் அப்படி ஒரு தரப்பாக நிற்க தயங்குகிறேன்.

உங்கள் கடிதத்தில் இரு விஷயங்களை மட்டும் எதிர்கொள்கிறேன் இப்போதைக்கு. நான் உபரி என்று சொல்வது மார்க்ஸிய அரசியல் விளக்கிய கோணத்தில் அல்ல. பொதுவான மார்க்ஸியப் பொருளியல் விளக்கம் தான் அது

ஒரு சமூகத்தில் உள்ள அரசு , பண்பாடு போன்ற மேல்கட்டுமானங்கள் அதன் அன்றாட பொருளியல் தேவைகளுக்கு உபரியாக அச்சமுக்கத்தில் புழங்கும் செல்வத்தை தொகுப்பதன் மூலம் உருவாகின்றன என்பதே மார்க்ஸிய விளக்கம். அதாவது உற்பத்தி – சமூக நுகர்வு = உபரி. அது சமூக ஆய்வுக்கு மிக உதவியான ஒரு கோணமே.

ஒரு சமூகத்தில் ஆடம்பரமான ஒரு மன்னர் இருந்தால், மாபெரும் ராணுவம் இருந்தால் அந்த சமூகத்தின் உற்பத்திஅதற்கேற்ப உபரியை உருவாக்குகிறது என்று பொருள்.நான் சொல்வது அதையே

அந்த உபரியை முழுக்கமுழுக்க தொழிலாளர் [உழைப்பு] மட்டுமே உருவாக்குகிறது, அதில் நிலம்,முதலீடு, நிர்வாகம் ஆகியவற்றுக்கு பங்கே இல்லை என்பதே மார்க்ஸிய அரசியல். அதை நான் ஏற்கவில்லை என்பது கட்டுரையிலேயே உள்ளது.

ஃபின்லாந்து ஊழலற்ற நாடு என்றீர்கள். குடிமைச்சமூகம் கறாராக இருக்கையில் அன்றாட ஊழல் இருக்காது. நலத்திட்டங்களில் ஊழல் இருக்காது. அவற்றை ‘உழலற்ற’ நாடுகள் என அவையே சொல்லிக்கொள்ளும் அறிக்கைகளை நீங்கள் நம்புகிறீர்கள்

ஆனால் முதலாளித்துவ அரசின் மையத்தில் ஊழல் இருந்தே தீரும். ஃபின்லாந்த், ஐஸ்லாந்து முதலிய நாடுகளின் இன்றைய கடும் பொருளியல் சிக்கல் எப்படி வந்தது என கொஞ்சம் இணையத்தில் பாருங்கள். ஆட்சியாளர்கள் பலவகை ‘கவர்ச்சிகளுக்கு’ உட்பட்டு தேசத்தின் செல்வத்தை ஒட்டுமொத்தமாக கொண்டுசென்று அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்தமையால். சாலை போடுவதில் சுரண்டும் நம்மூர் அரசியல்வாதிகள் எவ்வளவோமேல்

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா கடிதம்
அடுத்த கட்டுரைஇரவு, முன்னுரை