நேற்று ஸ்ரீகலாவின் இறப்புச் செய்தியை ஒட்டி இரவெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவருடைய இறப்பு உள அழுத்தத்தால். இந்தத் தலைமுறையில் உள அழுத்தங்கள் மிகுதியாகிக் கொண்டே இருக்கின்றன. நானறிந்த ஐந்தில் ஒருவர் உள அழுத்ததிற்கான மருந்துக்களை ஏதேனும் ஒரு தருணத்தில் எடுத்துக்கொண்டவர்கள், தொடர்பவர்கள்
பலகாரணங்கள். முதன்மையாக பொறுப்பு. சென்ற நூற்றாண்டில் தனிமனிதன் மேல் இத்தனை பொறுப்பு இல்லை. கூட்டாகவே அவன் உலகைச் சந்தித்தான். குடும்பமாக, குலமாக. தனியாளுமை பெரும்பாலும் அன்று இல்லை. அதன் குறுகல் ஒருபக்கமென்றாலும் அது பொறுப்பை குறைத்தது. தனிமையை இல்லாமலாக்கியது.
முடிவெடுக்கும் பொறுப்பே பொறுப்புகளில் முதன்மையானது. இதைச்சார்ந்து இருத்தலியலாளர் ஏராளமாகப் பேசியிருக்கிறார்கள். நம் வாழ்க்கையை நாமே முடிவெடுத்தல், அதை முன்னெடுத்துச் சென்று வெற்றிபெறுதல் இன்று ஒவ்வொருவருக்கும் கடமையென்றாகிவிட்டிருக்கிறது. அதில் வெற்றிதோல்வி நம் கையில் இல்லை, பல்லாயிரம் சூழல்களைச் சார்ந்தது. அது அளிக்கும் அழுத்தம் சாதாரணமானதல்ல. ஒழுக்கில் மிதந்துசெல்லும் சென்றகால வாழ்க்கைக்காக ஏங்குகிறார்கள்
இன்று ஒவ்வொருவருக்கும் தனியாளுமை உருவாகி வந்துள்ளது. தனிப்பட்ட இலட்சியங்கள், தனிப்பட்ட துறைகள். அதிலுள்ள வெற்றிதோல்வியின் சுமை ஒவ்வொருவரையும் அழுத்துகிறது. அதில் கடும் போட்டி. ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அமர நேரமில்லை. பிந்தினால் அனைத்தையும் இழந்துவிடவேண்டியிருக்கும். ஒருநாளில் 16 மணிநேரம் உழைப்பவர்களை எனக்குத்தெரியும். அப்படி உழைக்கத்தக்க தகுதிகொண்டதா மானுடவாழ்க்கை என்றுதான் தெரியவில்லை.
இத்துடன் உறவுகள் உருவாக்கும் சிக்கல். சென்றகாலங்களில் வலுவான தனியாளுமைகள் பெரும்பாலும் இல்லை. கணவன், மனைவி, மகன்,தந்தை, உடன்பிறந்தார் அனைவருமே வலுவான ‘கதாபாத்திரங்கள்’ அதை இயல்பாக நடிக்கமுடியும். இன்று ஒவ்வொருவரும் தனியாளுமைகள். ஒருவர்போல் பிறரில்லை. ரசனை, அரசியல், வாழ்க்கைநோக்கு எல்லாமே வேறுவேறு. ஒருபக்கம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது கடினமாகிறது, மறுபக்கம் சாதாரணமாக பேசிக்கொள்ளக்கூட நேரமில்லை என்றும் ஆகிறது. அரசியல் கொள்கை மாறுபாடு காரணமாக மணமுறிவுசெய்துகொண்ட ஒரு இணையை எனக்குத்தெரியும். என் பாட்டியிடம் சொன்னால் வாய்பிளந்துவிடுவார்கள்.
இவை அளிக்கும் உளஅழுத்தத்தை எவ்வகையிலும் இன்று தவிர்க்க முடியாது. ஏனென்றால் இது வரலாற்றின் போக்கு. இதில் விலகிநிற்பது இயல்வதே அல்ல. தனிமனித ஆளுமை, மானுடசமத்துவம், ஜனநாயகம், நுகர்வுப்பொருளியல், படைப்பூக்கம் இல்லாத உழைப்பு, மிகையான செய்தித்தொடர்பு, நவீன அறிவியல் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
ஆனால் இவை அனைத்தும் உருவாக்கும் உளஅழுத்ததிற்கு நிகரான ஒன்று, அல்லது ஒரு படி மேலான ஒன்று இன்று செயற்கையாக உருவாக்கப்படுகிறது. எளிதில் தவிர்க்கக்கூடியது அது. ஆனால் நாம் அதை அள்ளி அள்ளி எடுத்துக்கொள்கிறோம். அரசியலால், செய்திகளால் நமக்கு ஊடகங்கள் அளிப்பது அந்த உள அழுத்தம். இன்று ஊடகங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. நாளிதழ்கள் செய்திகளை நூறுமடங்கு பெருக்கி ஒவ்வொருவருக்கும் அளித்தன. 1972ல் என் அப்பாவின் தோழர் டீக்கனார் தினதந்தியைப் பார்த்து “ஏல ஒரு மனியனுக்கு ஒருநாளைக்கு இம்பிடு நூஸ் என்னத்துக்குலே?” என திகைத்ததை நினைவுகூர்கிறேன். தொலைக்காட்சி அதை இருமடங்கு ஆக்கியது. இணையம் மேலும் இருமடங்கு ஆக்கியிருக்கிறது.
செய்திகளுக்கு ஓர் இயங்கியல் உள்ளது. கவனத்தை கவர்ந்தால்தான் அது செய்தி. ஆகவே அது உரக்க ஒலிக்கிறது, சீண்டுகிறது, அறைகூவுகிறது. நம்மை நிலைகுலையச் செய்வதில் செய்திகள் ஒன்றுடனொன்று போட்டியிடுகின்றன. மேலும் மேலும் நம் மீது அம்புகளென தைத்துக்கொண்டே இருக்கின்றன. நம்முள் நஞ்சைச் செலுத்துகின்றன/ எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கும் மானுட விலங்குள்ளம் எதிர்மறைச் செய்திகளை மேலும் கவனிக்கிறது. ஆகவே செய்தி என்றாலே இன்று கெட்டசெய்திதான். கசப்பு, வெறுப்பு, வஞ்சம், வன்மம் துயரம்தான்.
இச்செய்திகள் நம் மீது நாம் சுமக்கவே முடியாத பொறுப்புக்களைச் சுமத்துகின்றன. கற்பழிப்புகளின் மதக்கலவரங்களின் போர்களின் பொறுப்பை நாம் மானசீகமாக ஏற்றுக்கொள்கிறோம். ‘என்ன செய்யப்போகிறோம்” “நமக்கு இதில் பங்கிருக்கிறது’ ‘நமது முகம் இது’ என செய்தி அறிக்கைகள் கூவிக்கொண்டிருக்கின்றன. நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இருந்தாலும் செய்யும்நிலையில் நாம் இல்லை. ஆனாலும் கொதிக்கிறோம் அறைகூவுகிறோம் ஆணையிடுகிறோம் விவாதிக்கிறோம். எரிந்துகொண்டே இருக்கிறோம்.
ஒவ்வொரு செய்தியும் இன்றைய உலகளாவிய விவாதச்சூழலால் பெரிதாக்கப்படுகின்றன. எல்லாத்தரப்பும் அமிலமும் தீயுமாகக் கொந்தளிக்கின்றன. ஆசிஃபா இந்து வழிபாட்டிடத்தில் வன்புணர்வுசெய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டதை எண்ணி நான் நான்குநாட்கள் கொதித்தேன். . கீதா இஸ்லாமிய வழிபாட்டிடத்தில் வன்புணர்வு செய்யப்பட்டபோது மீண்டும். ஆனால் முந்தையதை இந்துத்துவர் ‘விளக்க’ முற்பட்டனர். ஐயங்கள் எழுப்பினர். ‘ஆனால்’களை போட்டனர். இதற்கு இஸ்லாமியர் அதையே செய்கிறார்கள். அன்று கொதித்தவர்கள் மௌனம் சாதிக்கிறார்கள். அன்று மழுப்பியவர்கள் இன்று எகிறுகிறார்கள். எதிலும் அரசியல்தரப்பு மட்டுமே வெளிப்படுகிறது. “என்னால் தூங்கமுடியவில்லை. வேலியம் இல்லாமல் இன்று இரவைக் கடக்கமுடியாது’ என்றார். ஸ்ரீகலாவும் அதைச் சொல்வார் என்று மட்டும் சொன்னேன்.
உண்மையில் அத்தனை ஆழமாக எரிகிறோமா? அதுவுமில்லை. இது ஒரு ஆட்டம். ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு எரிந்தால் நாம் தீவிரமானவர்களாக இருக்கிறோம் என்னும் பிரமை நமக்கு ஏற்படுகிறது. நம் வெறுமைகளை நிரப்புகிறோம் என படுகிறது. ஆனால் இந்த நூற்றாண்டு அளிக்கும் வெறுமையை இப்படி எதிர்மறை உணர்வுகளைக்கொண்டு மட்டும்தான் நிரப்பிக்கொள்ளமுடியுமா என்ன? வேறேதும் இல்லையா?
ஸ்ரீகலா செய்தியாளர். அறவுணர்வுகொண்டவர், அதற்கான களமாக செய்தியைக் கண்டவர். ஆகவே ஒவ்வொருநாளும் கொதிப்பு அதன்பின் கசப்பு அதன்பின் தனிமை என்றே அவர் வாழ்க்கை சென்றது. சமநிலையில் அவரைக் கண்டதே மிக அரிதாகத்தான். நாமனைவரையும் ஊடகம், அதிலிருக்கும் உச்சக்கொந்தளிப்பாளர்கள் அங்கே கொண்டுசென்றுகொண்டிருக்கிறார்கள்.
இன்று ஒரு முடிவை எடுத்தேன். இனி [குறைந்தது ]ஓராண்டுக்காலம் நாளிதழ்களை வாசிக்கமாட்டேன். இணையத்தில் செய்திவாசிப்பதில்லை. எவ்வகையிலும் ‘நாட்டுநடப்புகளை’ தெரிந்துகொள்ளவோ விவாதிக்கவோ போவதில்லை. என்னை குடிமையுணர்வு இல்லாதவன் என்று சொல்லுங்கள். சமூகப்பொறுப்பு அரசியலுணர்வு இல்லாதவன் என்று சொல்லுங்கள். ஆம் என்று சொல்லவே விரும்புகிறேன். இவை இல்லாமல் இருந்துபார்த்தால் என்ன எஞ்சுகிறது என்றுதான் பார்ப்போமே. சமகாலம் என்பது இந்த அரசியல் மட்டும் அல்ல. இன்று வெளியே இளவெயில். நாளை மெலட்டூர் பாகவத மேளா. இவையும் சமகாலம்தான்.
ஜெ