போகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்

போகன்
போகன்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

போகன் சங்கரின் கவிதைத் தொகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கேரளத்தில் வாழ்ந்தவர் என்பதால் மிகச் சரளமாகத் தனது கவிதைகளின் வழி கேரள வாழ்வையும் நவீன உலகியலையும் பற்றி எழுதுகிறார். அவரைப் பற்றி எனது புளக்கரில் ஒரு தொடர் எழுதுகிறேன். போகனின் கவிதைகள் தங்களுக்கும் நெருக்கமானவை என்பதைத் தங்களது அநேக பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். போகன் கவிதைகள் மீது ஒரு குறிப்பு எழுதுங்கள். நவீன கவிதை வாசிப்பில் அவரது முக்கியத்துவங்கள் பற்றி இருந்தால் நன்றாயிருக்கும்.

போகனின் கவிதைகள் பற்றிய எனது வலைத்தளப் பதிவு.

போகன் சங்கரின் கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள். 01.

சுயாந்தன்

***

img1524130068900-2-1

அன்புள்ள

இலங்கையிலிருந்து எழும் இளம்குரல்களில் நான் முக்கியமாகக் கவனிக்கும் சிலவற்றில் ஒன்று உங்களுடையது. நீங்கள் சொன்னதுபோல இலக்கியத்தின் எவ்வகைமையிலும் தொடர்ந்து பயணம்செய்ய விரும்புபவர்களின் முதன்மைக்கவனம் கவிதையிலேயே இருக்கவேண்டும்

ஒரு மொழியில் மிக அதிகமாகப் பேசப்படவேண்டியது கவிதையைப்பற்றியே. உலகமெங்குமே கவிதைகளைப்பற்றிய இலக்கியவிமர்சனக்குறிப்புகளே மிகுதி. தமிழில் குறைவாகவே கவிதை பற்றி எழுதப்படுகிறது. அவ்வகையில் சமகாலக் கவிஞர்களில் அதிகம் கவனிக்கப்படுபவரான போகன் பற்றிய உங்கள் கட்டுரை முக்கியமானது

உங்கள் கட்டுரை விரிவாகவும் கவிஞரின் அனைத்து உளநிலைகளுடனும் செல்லும் ஆர்வம் கொண்ட வாசிப்பாகவும் உள்ளது. முக்கியமான கட்டுரை. என்னுடைய பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். நான் விமர்சனங்கள் எழுதி நெடுநாளாகிறது. வெண்முரசு முடிந்தபின் பார்ப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைஅஞ்சலி ஸ்ரீகலா பிரபாகர்
அடுத்த கட்டுரைஇலங்கை வாசகர்களும், இலக்கியமும்