மாதவையா -கடிதங்கள்

mada

கல்வியும் காதலும்

அன்புள்ள ஜெ

மாதவையா பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. பல ஆய்வுநூல்கள் பல பகுதிகளாகச் சொல்லாத  செய்திகளை ஒரு நாவல் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது. உதாரணமாக நீதித்துறை ஊழல்களைப்பற்றி பத்மாவதிசரித்திரம் சொல்லும் செய்திகள் ஆச்சரியம் வரவழைப்பவை. சாதிச்சண்டையும் ஊழலும் நிறைந்ததாகவே அன்றைய நீதித்துறை இருந்திருக்கிறது. மாதவையா சொல்லும் காலகட்டம் 1850கள் என்னும்போது பிரிட்டிஷ் நீதி அப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்பதை நினைவுகொள்ளவேண்டும். நீதிபதிகள் தீர்ப்புக்கு ரேட் பேசுவது, கலெக்ஷன் ஏஜெண்ட் வைத்திருப்பது எல்லாமே அன்று இருந்திருக்கிறது

கல்வியால் மேன்மையுறலாம் என்று சொல்லும் நாவல் பத்மாவதிசரித்திரம். கமலாம்பாள் சரித்திரத்திலுள்ள நுட்பமான சில மனோவியல்பகுதிகள் அதில் இல்லை

ராஜசேகர்

***

அன்புள்ள ஜெமோ,

கல்வியும் காதலும் பதிவு வாசித்தேன். மாதவய்யா நினைவு வந்தது. எனது இளங்கலை தமிழ் பகுதியில் ஒரு பாடம் மாதவைய்யா வாழ்வும் படைப்பும். அந்த காலத்திலேயே அவ்வளவு யோசித்திருக்கிறார், முதலில் மத மாற்றம் சரி என எண்ணுகிறார் பிறகு அவரே தவறு என்று உணர்ந்து சமய சீர் திருத்த கருத்துக்களோடு கதை நாவல் எழுதுகிறார். நான் அவர் எழுத்துக்களை சுருக்கமாகவே படித்தேன். ஆனாலும் இன்றுவரை பெயரை மறக்கவில்லை. என்னைப்போல யோசித்திருக்கிறார் என்ற எண்ணம் தான் காரணம். எனது சிந்தனை போக்கு சரி என்று எண்ணத்துவங்கியதும் அதிலிருந்துதான். இறுதி காலத்தில் மூளை நரம்பு வெடித்து மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது இறந்ததாக படித்த போது மனது கனத்தது. நானும் தலை வலிக்கும்படியான அதீத சிந்தனைக்கு எனை உட்படுத்துவதை குறைத்துக் கொண்டேன். பிறகு B.sc Psychologyயில் Abnormal behavior என்றொரு பாடம் படித்த பிறகு நான் ஒரு கட்டுக்குள் வந்தேன்.

ஒவ்வொரு எழுத்தாளனும் யாருக்கோ என்றோ பயன் படுகிறான். ஒரு சிலர் மட்டுமே வாழும்காலத்தில் கொஞ்சமேனும் மனநிறைவு பெறுகிறார்கள்.

எனக்கு காதல் வந்ததும் கல்வியால் தான். அது ஒரு தனிக்கதை.

தங்கள் பதிவுக்கு நன்றி.

அன்புடன்

பகவதி

***

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-39
அடுத்த கட்டுரைஅறிவியல் சிம்பனி