அன்பு ஜெ அவர்களுக்கு, வணக்கம்.
ஏப்ரல் 22 ம்தேதியே பிறந்த நாள் வாழ்த்து கூற முடியவில்லையே என (குற்றுணர்வுடன்) நினைத்திருந்தேன். என்னைப்போன்றவர்களுக்கு 26ம் தேதிவரை நீட்டிப்பு கொடுத்தமைக்கு ஒரு நன்றியும், பிறந்த நாளுக்கு ஒரு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிறந்த நாள் கொண்டாடுவதில் எப்பொழுதுமே சின்ன குழப்பம் உண்டு. ஜென்ம நட்சத்திர நாளிலா, ஆங்கில பிறந்த நாள் தேதியிலா என்று. அப்புறம் வைரமுத்து பாணியில் சிந்தித்து, இந்த ஆங்கிலேயர்கள் வராமலேயே இருந்திருந்தால் நாம் எப்படி பிறந்த நாளை கொண்டாடடியிருப்போம் என்று ஒரு ஆறுதல்.
பிறந்த நாள் சிந்தனையோடு வானசாத்திர கணிதமும் வந்து மிரட்டுகிறது. ‘சோதிடம் இகழ்’ என பாரதியைப்போல் ஒரேயடியாக தூக்கி எறிந்துவிட முடியுமா? அல்லது 64 ஆயகலைகளில் ஒன்றென மதிப்பதா? இது அவரவர்களின் நம்பிக்கை மற்றும் அனுபவம் சார்ந்தது என்றாலும், ஆங்கில பிறந்த நாள் தேதி அல்லது நட்சத்திரத்தை வைத்து கணிக்கும் சோதிடத்தை எந்த அளவிற்குக்கொள்ளலாம்?
அன்புடன்,
எம்.எஸ். ராஜேந்திரன்
திருவண்ணாமலை
***
அன்புள்ள ராஜேந்திரன்,
என் அம்மா இருந்தவரை மலையாளமாதம், ஜென்மநட்சத்திரம் அடிப்படையில்தான் பிறந்தநாளைக் கணித்துவந்தார்கள். பிறந்தநாள் வேறு, பிறந்த நட்சத்திரம் வேறு. நாம் தொன்றுதொட்டு கொண்டாடிவந்தது பிறந்த நட்சத்திரத்தைத்தான். பிறந்தநாளை அல்ல. மரபான வானியல் சார்ந்து சோதிடம், பருவம் கணிக்கும் உயர்குடிகளின் வழக்கம் அது.
ஆனால் பிறந்தநாளை எல்லாரும்தான் கொண்டாடினர். நான் சிறுவனாக இருந்தபோது அடித்தளத்தில் இருந்தவர்கள்கூட வேறுவகையில் பிறந்தநாளைக் கொண்டாடினர். மரங்களின் வளர்ச்சியை வைத்து, பருவங்களை வைத்து குழந்தைகளின் பிறவிநாளை கொண்டாடுவதை கண்டிருக்கிறேன்.
எங்களுக்கு பழைமையான சில சடங்குகள் இருந்தன.காலை எழுந்து நீராடி கோயிலுக்குச் சென்று அணியாடைகள் இல்லாமலிருக்கும் தெய்வத்தை வணங்குதல். ஒவ்வொருவருக்கும் ஒருதெய்வம் உண்டு, எனக்கு கிருஷ்ணன். என் அண்ணனுக்கு நாகராஜா. தங்கைக்கு நாகபகவதி. அதன்பின் வந்து புத்தாடை அணிந்து வீட்டுப்பெரியவர்களை காலில் விழுந்து வணங்கி வாழ்த்துபெறுதல். கோயிலில் வழிபாட்டுக்காக சர்க்கரைப்பொங்கல் செய்யக் கொடுத்திருப்பார்கள். அதை பக்கத்துவீடுகளுக்கு கொண்டுபோய் கொடுப்பதுடன் பிறந்தநாள் முடிந்துவிடும்.
ஆனால் அதெல்லாமே குழந்தைக்கு ஐந்து வயதாகும்வரைத்தான். அக்கொண்டாட்டம் பெரும்பாலும் குலதெய்வங்கள், வனதெய்வங்களை பலிகொடுத்து வணங்குவதுதான். மொட்டைபோடுவது, காதுகுத்துவது என அதற்கு பல வடிவங்கள்.
இந்திய வானியல் கணிப்பை சோதிடமாகப் புரிந்துகொள்ளவேண்டியதில்லை. சோதிடர்களே இன்று அதைச் செய்கிறார்கள் என்பதனால் அது சோதிடமல்ல
ஜெ
***