நாஞ்சிலுக்கு சாகித்ய அகாடமி விருது

ஆ.மாதவன் விருதுவிழா முடிந்து பேசிப்பேசிபேசிக் களைத்து விடிகாலையில் தூங்கி ஏழுமணிக்கு எழுந்து கோரல் அப்பார்மெண்டில் இருக்கும்போது வசந்தகுமார் செய்தியனுப்பியிருந்தார் – சூடியபூ சூடற்க சிறுகதை தொகுதிக்காக நாஞ்சில்நாடனுக்கு சாகித்ய அக்காதமி விருது வழங்கப் படுகிறது. உற்சாகமாக அவரைக் கூப்பிட்டேன். முந்தையநாள் அவரது பேச்சை நினைவு கூர்ந்தபோது சிரிப்பை அடக்க முடியவில்லை.

‘வாங்கணுமா வேணாமான்னு ஒரே கொழப்பமா இருக்கு’ என்றார் நாஞ்சில். ‘வாங்கலாம் சார்…அப்றம் நல்ல ரைட்டர்ஸ் வாங்கமாட்டேங்கிறாங்க…அதான் , அப்டீன்னு ஒரு நியாயம் கெளம்பி வரும்’ என்றேன்.

மதியம் வரை அதிகாரபூர்வ செய்திக்காகக் காத்திருந்தோம். காலையில் சுரேஷ் மற்றும் நண்பர்கள் வந்தார்கள். கோவையில் தியாகு புத்தக நிலையம் என்ற வாடகை நூலகம் இருக்கிறது. இலக்கியம் பொழுது போக்கு எல்லாவற்றுக்கும் உரிய தமிழ் ஆங்கில நூல்களின் பெரும்தொகுப்பு. அனேகமாக இலக்கிய நூல்கள் அனைத்துமே உள்ளன. நண்பர் தியாகு நடத்துகிறார்.

தியாகு கடைக்கு நண்பர்களுடன் சென்றேன். அங்கே ஒரு இருபது நண்பர்கள் கூட பேச ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட ஒரு இலக்கியக் கூட்டம். நான் புனத்தில் குஞ்ஞப்துல்லா, சக்கரியா கதைகளைப்பற்றி பேசினேன். பின்னர் அன்னபூர்ணா சென்று சாப்பிட்டோம். அப்போது செய்தி உறுதி என்ற தகவல் வந்தது. நேராக நாஞ்சில் நாடன் வீட்டுக்கு கிளம்பினோம்.

மூன்று கார்களிலாக சென்றிறங்கினோம். இறங்கும்போது ‘புதினப்பேரரசு, சிறுகதைச் சக்ரவர்த்தி, விமர்சன வித்தகர்,குணக்குன்று கும்பமுனி நாஞ்சில்நாடன் வாழ்க ‘ என்று கூவி தமிழ்மரபை நிலைநாட்டலாமே என்றேன். ’இது கொங்குநாடு சார்’ என்று சொல்லி விட்டார்கள்.

நாஞ்சில் உற்சாகமே உருவாக இருந்தார். அவர் பொதுவாக எழுத்தாளர்கள் இருப்பதுபோல தனிமை விரும்பி அல்ல. உறவுகளும் நட்புகளும் அவருக்கு மிகமிக முக்கியம். நண்பர்கள் கூப்பிடக்கூப்பிட முகம் மலர்ந்தபடியே சென்றது. சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தார். அவரது மனைவியும் மனநிறைவுடன் இருந்தார். நாஞ்சில் நாடனுக்காக வலைப்பதிவு நடத்தும் நண்பர் சுல்தான் கூப்பிட்டார். ‘அவரை விட எனக்குத்தான் சந்தோஷம் சார்’ என்றார்.

மாலை ஐந்து மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பினோம். ஒவ்வொருவரும் நாஞ்சில்நாடனைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்.

நாஞ்சில் நாடனுக்கு அவரது தம்பியின் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.

நாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா

நாஞ்சில் 60 நிறைவு: நூல் வெளியீட்டுவிழா

நாஞ்சில் நாடனின் கும்பமுனி

நாஞ்சில்,கடிதங்கள்.

நாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது

நஞ்சில்நாடன் பேட்டி

நாஞ்சில்நாடன் பேட்டி 2

ஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை

நாஞ்சில் கடிதங்கள்

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் 1

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)”

தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் 3

தாடகை
மலையடிவாரத்தில் ஒருவர் 4

தாடகை மலை அடிவாரத்தில் ஒருவர்5

முந்தைய கட்டுரைகடிதங்கள் இணைப்புகள்
அடுத்த கட்டுரைராஜமார்த்தாண்டன் விருது