தென்னகத்து விறலியின் கரிய கன்னங்களில் அருகிருந்த விளக்குகளின் ஒளி மின்னியது. அவள் உடல் எண்ணை பூசப்பட்ட கருங்கல் சிலை என மின்னியது. வெண்விழிகளும் வெண்பற்களும் பெரிய வட்ட முகத்தில் மின்னித்தெரிந்தன. சிறிய மூக்கில் அணிந்திருந்த ஏழு வெண்கற்கள் பதிக்கப்பட்ட மூக்குத்தி அம்மின்னொளிகளுடன் இணைந்துகொண்டது. வண்டு முரலுதல்போல கீழ்சுதி நிலையில் நின்றாள். குறுமுழவென எழுந்த குரல் உச்சங்களில் சிறகசைக்காமல் நீந்தும் பருந்தெனச் சுழன்றது. இறகென தழைந்தது.
அவள் உடலில் இருந்து விழிகளை விலக்க இயலவில்லை. அவள் குரல் செவிகளில் ஓயவில்லை. பாட்டை நிறுத்திவிட்டு அவள் நீர் அருந்தியபோதும், ஏட்டுக்கட்டுகளைப் பிரித்து அடுத்த பாடலுக்கான வரிகளை நோக்கியபோதும், பின்னால் அமர்ந்திருந்த அவள் கணவன் குடயாழின் சுதி அமைக்க பொழுது எடுத்துக்கொள்ள அவள் காத்திருந்தபோதும்கூட அவள் குரல் திரௌபதிக்குள் ஒலித்தபடியே இருந்தது. அவளருகே அன்னை அமர்ந்திருந்தாள். பகல் முழுக்க அவைச்செயல்களில் உழன்று களைத்திருந்தமையால் அவள் பெரிய இமைகள் எடைமிகுந்து மெல்ல சரிந்துகொண்டிருந்தன. சேடியரும் அரைத்துயிலில் இருந்தனர். இசைக்கூடத்திற்குள் விறலியும் அவளும் மட்டுமே இருந்தனர் எனத் தோன்றியது.
“மனுவின் மைந்தர் பிரியவிரதர். அவருக்கு அக்னீத்ரன் என்னும் மைந்தர் பிறந்தார். அக்னீத்ரன் பூர்வசித்தியை மணந்து நாபி, கிம்புருஷன், ஹரி, இளாவிரதன், ரம்யகன், ஹிரண்மயன், குரு, பத்ராஸ்வன், கேதுமாலன் எனும் ஒன்பது மைந்தரை பெற்றார். அக்னீத்ரன் வாழ்நாளெல்லாம் வேள்விகளை செய்துகொண்டிருந்தார். நூல்கள் நவிலும் ஒன்பது கொடைவேள்விகளை அவர் நூறுமுறை இயற்றினார். வேள்விகளை பெரிதாக நிகழ்த்துவது ஆணவம். பழுதற நிகழ்த்துவது அர்ப்பணிப்பு. தன்னை முழுதீந்து நிகழ்த்தியமையால், பெற்றது எதையும் கொள்ளாமையால் அக்னீத்ரன் முழுமையான பயன்களை அடைந்தார்.
தவவாழ்வு நிறைவுற்று அவர் விண்ணேகியபோது தன் ஒன்பது மைந்தரையும் அழைத்து அவர்களுக்கு தன் தவச்செல்வத்தை அளிப்பதாகவும், அவர்கள் உகந்த முறையில் அதை மாற்றிக்கொள்ளலாம் என்றும் சொன்னார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர் நெற்றிப்பொட்டில் கைவைத்து தன் தவத்தை அளித்தார். நாபி அச்செல்வத்தை நீண்ட வாழ்நாளாக பெற்றுக்கொண்டார். கிம்புருஷன் அதை அறிவுத்தொகையாக, ஹரி அதை பெருஞ்செல்வமாக, இளாவிரதன் அதை காமமாக, ரம்யகன் அதை மக்கட்பேறாக, ஹிரண்மயன் அரசாக, குரு வெற்றியாக, பத்ராஸ்வன் புகழாக அதை பெற்றுக்கொண்டனர். இறுதி மைந்தனாகிய கேதுமாலன் “எந்தையே, நான் அதை அழகென பெற்றுக்கொள்கிறேன்” என்றான்.
இளமையிலேயே அழகின்மேல் பித்துகொண்டவனாக காடுமலை என அலைந்த அவனைப்பற்றி மூத்தவர்கள் ஏளனம் கொண்டிருந்தனர். கலைகளில், இயற்கையில் அவன் தேடுவதென்ன, மகிழ்வது எதனால் என அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைத்தனர். அவன் தந்தையே அவனை நோக்கி “மைந்தா, நீ கேட்பது என்னவென்று புரிந்திருக்கிறாயா?” என்றார். “ஆம் தந்தையே, எனக்கு அழகன்றி வேறேதும் பெரிதென்று தோன்றவில்லை” என்றான் கேதுமாலன்.
“அழகென ஏதும் இப்புவியில் இல்லை. அது நம் உளம்கொள்ளும் ஒரு நிலைதான். கூழாங்கற்களும் அழகெனத் தோன்றும் தருணங்களும் உண்டு” என்று தந்தை சொன்னார். “அவ்வுளநிலை அமைந்தால் அனைத்தும் அழகே. மைந்தா, அழகென்பது ஒரு செல்வமல்ல. அது காற்றுபோல், நீர்போல், ஒளிபோல் மானுடருக்கு தெய்வங்கள் அளவிலாது வழங்கியது. கணக்கிட முடியாதது. கணக்கிடுதலும் கூடாது. அழகை எவரும் உரிமைகொள்ளக்கூடாது. காற்றை நீரை ஒளியை உரிமைகொள்ளலாகாதென்பதுபோல்.”
“செல்வமென்பது உரிமையாவது, நம்மால் ஆளப்படுவது. செல்வம் அளிக்கும் பேரின்பம் என்பது அதை நாம் உரிமைகொண்டிருகிறோம் என்னும் பெருமிதமே. அழகு தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் உரிமையானது. மானுடர் உடைமைகொள்ளும் செல்வத்தை கேள்” என்று தந்தை அவனிடம் சொன்னார். “செல்வத்தை அடைபவன் அதில் மகிழவேண்டும், திளைக்கலாகாது. பெருமிதம் கொள்ளலாம், ஆணவம் கொள்ளலாகாது. ஒருபோதும் ஒரு செல்வத்தையும் முழுதடைய எண்ணலாகாது. மானுடன் கனவுகாணும் எல்லைகளிலெல்லாம் தெய்வங்கள் நின்றுள்ளன.”
கேதுமாலன் “எனக்கு அழகன்றி அனைத்தும் வீணென்றே தோன்றுகிறது, தந்தையே. அழகிலா வாழ்நாள் வெற்றுக் காலம். அழகிலா செல்வம் வெறும் குப்பை. அழகிலாத அறிவு வெறும் சொற்குவை. அழகிலா காமம் வெறும் உடற்திளைப்பு. அழகிலாத வெற்றி ஆணவமன்றி வேறல்ல. அழகிலா அரசு சிறையே. அழகிலாதபோது மைந்தர் வெற்று உறவுகள் மட்டுமே. அழகிலாதோன் பெறும் புகழ் இளிவரலாகவே எஞ்சும்” என்றான். தந்தை பெருமூச்சுடன் “ஆம், உன் விழைவு அத்தனை வலியதென்றால் நான் செய்வதற்கொன்றுமில்லை” என்றார். தந்தையிடமிருந்து அழகைப்பெற்ற கேதுமாலன் உடன்பிறந்தாரிடம் விடைபெற்றுச் சென்றான்.
ஒவ்வொரு அடிக்கும் அவன் பேரழகுகொண்டவனானான். பொன் மின்னிய உடலுடன், வைரங்கள் என மின்னிய விழிகளுடன், இளங்காலை முகிலென ஒழுகும் அசைவுடன் அவன் ஜம்புதீவென்று அன்று அழைக்கப்பட்ட பாரதப் பெருநிலத்தின் எட்டு நிலங்களைக் கடந்து சென்றான். அவனைக் கண்டதும் தங்களை மறந்து பெண்கள் அவனுடன் சென்றனர். இளமைந்தர் அவனை பித்தர்களெனத் தொடர்ந்தனர். அழகிலாதோர் அவனைக் கண்டதுமே கூசி அஞ்சி ஒளிந்துகொண்டனர். விழிகளை மூடி உடல்சுருட்டி பதுங்கினர். ஆகவே அவன் அழகை மட்டுமே கண்டான். அழகோர் மட்டுமே அவனை கண்டனர். அழகோர் மட்டும் இயலும் ஓர் உலகில் அவன் சென்றுகொண்டிருந்தான்.
அவர்கள் தங்கள் அழகிய பொருட்களை எல்லாம் உடன் எடுத்துக்கொண்டனர். பட்டும், பூண்களும், மலர்களும், கலைப் பொருட்களும் கொண்டு சென்றனர். அழகிய பொருட்களெல்லாம் மானுடர்மேல் ஏறிக்கொண்டு அவனை தொடர்ந்தன என்றனர் கவிஞர். அவர்கள் எட்டு நிலங்களை துறந்து மேதமலையின் மேற்கே ஆளில்லா விரிவென காடு நிறைந்துகிடந்த ஒன்பதாம் நிலத்தை அடைந்தனர். அவர்கள் அங்கே சென்றதும் அது மலர்பெருகிப் பொலிந்தது. பறவைகளின் இன்னிசையும், மலையிழியும் அருவிகளின் ஒளியும், இளமழையின் குளிரும் என அழகு மட்டுமே கொண்ட நிலமென்றாயிற்று. விண்ணில் எப்போதும் பொன்முகில்கள் சூழ வானவில் நின்றது.
கேதுமாலன் அங்கே அமைத்த அரசு கேதுமாலம் என அழைக்கப்பட்டது. அங்கே கேதுமாலபுரி என்னும் பெருநகர் உருவாகியது. கேதுமாலத்தின் புகழ் பரவவே பாரதவர்ஷத்தின் அனைத்துச் சிற்பிகளும், கலைஞர்களும் அங்கே சென்று சேர்ந்தனர். அவர்கள் கூடி அமைத்த மிகச் சிறந்த நகர் என்பதனால் மண்ணில் மானுடர் அமைத்தவற்றிலேயே பேரழகு கொண்டதாக அது உருக்கொண்டது. கவிஞர்களும் இசைஞர்களும் ஆட்டர்களும் அங்கே சென்றமைந்தனர். அழகு சூழ்ந்திருந்தமையால் சொற்களெல்லாம் அழகுகொண்டு கவிதையாயின. அழகிய சொற்களிலிருந்து அழகிய பொருட்கள் உருவாயின. விண்ணிலிருந்து அழகு ஊறிஎழும் சுனை அது என்றனர் கவிஞர்.
அருமணிகள், அழகிய பூண்கள், பொன்னூல் பின்னிய பட்டுகள், சிமிழ்கள், செதுக்கு கலங்கள் என எங்கு எவை அழகென எண்ணப்பட்டனவோ அவையெல்லாம் காலப்போக்கில் அங்கே வந்து சேர்ந்தன. புவியிலுள்ள அழகிய பொருளனைத்தும் கேதுமாலத்திற்கு செல்ல விழைகிறது. தன்னைத் தொடும் கைகளில் ஏறிக்கொண்டு கேதுமாலம் நோக்கிய பயணத்தை தொடங்குகிறது என்று சூதர் பாடினர். அழகுப்பொருட்கள் தங்கள் பல்லாயிரம் வடிவங்களை அங்கே அடைந்தன. கேதுமாலம் அழகு முளைத்துப்பெருகும் நிலமாகியது.
அழகே அங்கே அனைத்துமென்றாகியது. கேதுமாலத்தின் அழகுப்பொருட்களுக்காக பாரதவர்ஷத்தின் அரசர்கள் கருவூலங்களை அள்ளி நிகர்வைத்தனர். அழகுப்பொருள் கொள்ள நாளும் வணிகர்கள் வந்தனர். கேதுமாலத்தில் செல்வம் பெருகியது. செல்வம் அங்கிருந்தோருக்கு நோயிலா வாழ்க்கையை அளித்து நீள்வாழ்வு கொண்டவர்களாக்கியது. அவர்கள் எண்ணியதையெல்லாம் வெற்றியாக்கியது. எட்டு திசையும் புகழ் பரவச்செய்தது. காமம் அங்கே காதலென பெருகியது. மைந்தர்ச் செல்வமாகியது. அறிவு காவியமென்று விரிந்தது. எட்டு செல்வங்களும் அழகென்பதன் மாற்றுருக்களே என கேதுமாலம் காட்டியது.
அழகு தன்னை புகழும் சொற்களை நாடுகிறது. அச்சொற்களை அது உருவாக்குகிறது. புகழ்மொழிகள் மெல்ல ஆணவமென்றாகின்றன. கேதுமாலன் தன் நாட்டின் அழகைக் குறித்த பெருமிதம் கொண்டிருந்தான். அதை சூதரும் புலவரும் ஆணவமாக்கினர். ஆணவம் பிறிதை தாங்கிக்கொள்வதில்லை. பிறிதொன்றிலாமையே அழகின் உச்சம் என கேதுமாலன் எண்ணலானான். நுண்மாறுபாடுகளால் பிறிதுபிறிதெனப் பெருகுவதே அழகின் இயல்பு என்பதை அவன் உணரவில்லை. தன் நாட்டை புவியில் பிறிதொரு நாடு இலாதபடி அழகு முழுமைகொண்டதாக ஆக்கவேண்டும் என்று எண்ணினான். எங்கெல்லாம் அழகென்று எஞ்சியிருக்கிறதோ அதுவெல்லாம் அங்கே வந்தமைய வேண்டுமென விழைந்தான்.
அவன் விழைவை அங்கிருந்தோர் அனைவரும் தலைக்கொண்டனர். ஒவ்வொரு நாளும் கணமும் என கேதுமாலம் அழகுகொண்டபடியே சென்றது. மைந்தர் அழகும் மகளிர் அழகும் மலரழகும் மாளிகை அழகும் நுணுகி நுணுகி உச்சம் சென்றன. பழுதற்ற மணிகளும் மங்காத பொன்னும் இணைந்த அணிகள் மலர்களின் வடிவங்களை மிஞ்சின. முழுமைக்கு ஒரு படி முன்பாக கேதுமாலம் சென்றடைந்தபோது அதை விண்ணவனின் அமராவதி என தேவர்கள் மயங்கினர். அங்கு செல்லவிழைந்த கின்னரரும் கிம்புருடரும் கந்தர்வர்களும் கேதுமாலத்தில் வந்திறங்கினர். அமராவதியின் மீது மட்டுமே கவிந்திருக்கும் வெண்குடை முகில் கேதுமாலத்தின்மேல் எழுந்தது.
சினம்கொண்ட இந்திரன் நாரதரை அழைத்து கேதுமாலனிடம் மானுடருக்குரிய எல்லைகளைக் குறித்து சொல்லும்படி கோரினான். அறிந்திருந்தாலும் ஐயம்கொண்டவர்போல் “முழுமைகொண்டமைதல்தானே மானுடனுக்கு பிரம்மத்தின் ஆணை!” என்று நாரதர் கேட்டார். “அடைதலும் இழத்தலும் கற்றலும் கடத்தலும் என நிகர்கொண்டு இன்மையின் முழுமையை அடைவதே மெய்மையின் வழி. கொண்டு அடைந்து மானுடர் முழுமையை அடையமுடியாது. அவனிடம் சொல்க!” என்றான் இந்திரன்.
நாரதர் ஒரு பொன்வண்டாக மாறி கேதுமாலனின் அறையை அடைந்தார். அங்கிருந்த பொன்வண்டுப் பதுமைகளின் நடுவே அவர் பொருந்தா குறையழகு கொண்டிருந்தார். அவரை நோக்கி முகம்சுளித்த கேதுமாலன் அணுகி நோக்கியபோது தன்னுரு கொண்டு நின்றார். அவனிடம் “அரசே, முழுமைநோக்கிச் செல்லும் வழி இதுவல்ல. போதுமென்று நிறைவுறுக!” என்றார். “என் வழி அழகு. அதை முற்றாக அடைவதொன்றே வாழ்வின் இலக்கு” என்றான் கேதுமாலன்.
“அதை தேவரும் தெய்வங்களும் விரும்புவதில்லை. அவர்களுக்கு விடப்படும் அறைகூவலென்றே கொள்வார்கள்” என்றார் நாரதர். “என் பாதையில் அழிவதும் எனக்கு வீடுபேறே” என்றான் கேதுமாலன். “அரசே, நீ செய்த முதற்பிழை அழகை செல்வமென்று எண்ணியது. அழகு எவருக்கும் உடைமையல்ல. எனவே செல்வமும் அல்ல” என்று நாரதர் சொன்னார். “அழகு பிரம்மத்தின் ஆனந்த வடிவம். பிரம்மம் முழுமை கொண்டதென்பதனால் அதன் ஒவ்வொரு துளியும் முழுமையே. அம்முழுமையில் தன்னை அளித்து ஆழ்வதொன்றே மானுடர் செய்யக்கூடுவது.”
கேதுமாலன் “அழகைக் கண்டபின் எவரும் அப்பாலென்று நிற்பதில்லை. அதை அணுகுவதற்கும் அகலாதிருப்பதற்கும் உரிய வழி அதை அடைதலே. அழகிலாடுவோன் அதை தானென்று கொள்கிறான்” என்றான். “என்மேல் தெய்வங்கள் சினம்கொண்டாலும் அஞ்சமாட்டேன். அழகை அடைந்து, அழகிலாழ்ந்து இருப்பதொன்றே என் வழி.” நாரதர் நெடுநேரம் அவனிடம் சொல்லாடிவிட்டு சலித்து திரும்பிச்சென்றார். இந்திரனிடம் “தேவர்க்கரசே, கேதுமாலன் அழகின் முழுமையை அன்றி எதையும் வேண்டவில்லை” என்றார்.
இந்திரன் பேரழகுகொண்ட வெண்குதிரையாக மாறி கேதுமாலக் காட்டில் நின்றிருந்தான். காட்டில் மலர்நோக்கி உலவிக்கொண்டிருந்த கேதுமாலன் அந்தக் குதிரையை கண்டான். “அதுவே நான் தேடிய குதிரை. பிழையற்றது, முழுமையை அழகெனக் கொண்டது… அதைப் பிடித்து கொண்டுசெல்வோம்” என்று கூவியபடி அதை துரத்தினான். வெண்புரவியின் விரைவு நிகரற்றதாக இருந்தது. நூறு கால்களால் ஓடுவதென அது காற்றில் கடுகியது. துரத்திச்சென்ற ஒவ்வொருவராக அமைய கேதுமாலன் மட்டும் சலிக்காமல் அதை தொடர்ந்து சென்றான்.
ஒரு சுனையின் கரையில் பரி களைத்துப்போய் மூக்கிலிருந்து ஆவியும், வாயிலிருந்து நுரையும் எழ நின்று உடல்சிலிர்த்தது. அதை அணுகிய கேதுமாலன் தன் கையிலிருந்த வடத்தைச் சுழற்றி எறிந்து அதை பிடிக்க முயன்றபோது “நில்!” என்றது. “நான் மண்ணுலகின் புரவி அல்ல, தேவர்களுக்குரியவன். என்னை மானுடர் பேண முடியாது” என்றது. “தேவர்க்குரியதானாலும் அழகுதிகைந்த எதுவும் எனக்குரியதே” என்றான் கேதுமாலன்.
“உன் கொட்டிலில் ஆயிரம் அழகுக் குதிரைகள் உள்ளன. இன்னுமொன்று சேர்ந்தால் என்ன பெறப்போகிறாய்?” என்று குதிரை கேட்டது. “அக்குதிரைகளில் குறைவதென்ன என்று உன்னைக் கண்டதும் உணர்ந்தேன். அக்குறையை நிகர்செய்யவே உன்னை வெல்ல வந்தேன்” என்றான் கேதுமாலன். “ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு துளி குறையும். குறைவிலாதது பிரம்மம் ஒன்றே” என்றது குதிரை. “அவ்வண்ணமென்றால் பிரம்மத்தை அடைவதே என் இலக்கு” என்றான் கேதுமாலன்.
“அரசே, என்னில் நீ கண்டு நிறைந்த அக்குறை என்ன என உன் உள்ளத்தில் தொகுத்துக்கொள்” என்று குதிரை சொன்னது. “அது என்னிலுள்ளது என்றால் நான் உன்னுடன் வருகிறேன்.” கேதுமாலன் தன் உள்ளத்தைக் குவித்து அக்குறைவிழுமியத்தை தன்னுள் திரட்டிக்கொண்டான். “அதை இங்கிருக்கும் மலர்களில் ஒன்றென ஆக்கி என்னிடம் தருக!” என்றான் இந்திரன். அருகே நின்றிருந்த நீலச்சங்கு மலர் ஒன்றை தொட்டு “இது” என்றான் கேதுமாலன். அது ஒரு வண்ணத்துப்பூச்சியாகி சிறகடித்தது. அதை கையிலெடுத்துக் கொண்டு இந்திரன் சிறு புள் என ஆகி பறந்து வானிலகன்றான்.
அந்த வண்ணத்துப்பூச்சியை கொண்டுசெல்லும்போது வானில் நின்று அதன் நிழலை மண்ணில் வீழ்த்தி ஒரு கரிய பட்டாம்பூச்சியாக ஆக்கினான். பின்னர் அமராவதி சென்று தன் தோட்டத்தில் முடிவிலாது மலர்ந்துகொண்டிருக்கும் பாரிஜாதத்தில் விட்டான். அதைச் சுற்றி காவலர்களாக கந்தர்வர்களை அமர்த்தினான். நிழல்பட்டாம்பூச்சி பறந்து கேதுமாலனின் அரண்மனையை அடைந்தது. அவனைச் சூழ்ந்து அது பறக்கலாயிற்று. அது பறந்து செல்லும் இடமெல்லாம் விழுந்த அதன் நிழல் அங்கேயே கறையெனப் படிந்தது.
கேதுமாலனின் மாளிகை எங்கும் கரிய கறை படிந்தது. அவன் திரைச்சீலைகளில், அணிகளில், ஆடைகளில் அந்தக் கரி படிந்தது. அவன் சினத்துடன் தன் வீரர்களிடம் அதை பிடித்துத் தரும்படி சொன்னான். “அரசே, அது வெறும் நிழல்” என்றார்கள். ஆனால் எங்கும் அது நிறைந்திருந்தது. சில நாட்களிலேயே கேதுமாலனின் அரண்மனை முழுமையாகவே கருமையாகியது. கேதுமாலபுரி கருவண்ணம் படிந்தது. கேதுமாலமே அக்கரியால் எரிபரந்தெடுத்தல் முடிந்த நிலமென்றாகியது. உளம் சோர்ந்து தனித்த கேதுமாலன் நோயுற்றான். அதுவரை அவனிடமிருந்த அழகு மறைந்தது. முதுமைகொண்டு மெலிந்து சருகுபோல் ஆனான். ஒவ்வொரு நாளும் அவன் இறந்துகொண்டிருக்க அவன் நாடும் நகரமும் அதைப்போலவே இறந்துகொண்டிருந்தன.
கேதுமாலபுரிக்கு நாரதர் மீண்டும் வந்தார். கருகி அழிந்துகொண்டிருந்த நகரின் மீது அந்தக் கரிய பட்டாம்பூச்சி சிறகடித்துச் சுற்றிவந்தது. ஒவ்வொரு பொருளையும் அதன் நிழல்படாமல் காப்பதன்பொருட்டு மக்கள் அவற்றை பதுக்கியும் புதைத்தும் வைத்திருந்தமையால் அழகுள்ள எதுவும் அவர் விழிகளுக்குப் படவில்லை. அரசனின் அரண்மனைக்கு வந்த அவரை அவனுடைய நோய்ப்படுக்கைக்கு அழைத்துச் சென்றனர். பேசவும் இயலாது கிடந்த கேதுமாலனின் அருகே அமர்ந்த நாரதர் அவன் கைகளை பற்றிக்கொண்டார்.
“நான் முன்னரே சொன்னேன், அரசே” என்றார் நாரதர். “அந்தக் கரிய பட்டாம்பூச்சி… அதை வெல்லவேண்டும்… அதை வெல்லாது இந்நகர் வாழமுடியாது” என்றான் கேதுமாலன். “அதை வெல்ல ஒரே வழி அதன் நிழல்படிந்த அனைத்தையும் துறப்பதுதான். வருந்தாமல் உளம்நிறைந்து அவற்றை கொடையளியுங்கள். கொடையினூடாக அவை கறைநீங்கக் காண்பீர்கள்” என்றார் நாரதர். “இந்நகரில் அரும்பொருளென எதுவுமே எஞ்சாதல்லவா?” என்றான் கேதுமாலன். “எஞ்சும், அவையே கறைபடியாதவை, கொடுக்கவும் முடியாதவை” என்றார் நாரதர்.
கேதுமாலன் அனைத்தையும் இரவலருக்கும் பாணருக்கும் கவிஞருக்கும் வேதியருக்கும் முனிவருக்கும் கொடுக்கத் தொடங்கினான். பெற்றுக்கொண்டவர்கள் அந்தக் கறையை காணவே இல்லை. அவர்களின் வாழ்த்துக்களால் நகரம் நிறையும்தோறும் அங்கே படர்ந்திருந்த நிழல் அகன்றது. நோய்கொண்டிருந்தவர்கள் நலம்பெற்று அழகுகொண்டனர். அனைத்துப் பொருட்களையும் அவன் கொடையளித்தான். அரண்மனையின் சுவர்களன்றி எதுவும் எஞ்சவில்லை. மானுடர் உரிமைகொள்ளும் எப்பொருளும், மானுடர் சமைத்த எப்பொருளும் அங்கே எஞ்சியிருக்கவில்லை. இறுதி அரும்பொருளும் நகர்நீங்கியபோது அந்த நிழல்பட்டாம்பூச்சியும் உடன் சென்றது. கேதுமாலன் மீண்டும் பேரழகனாக ஆனான். அந்நகரமும் நாடும் ஒளிகொண்டு துலங்கின.
கேதுமாலத்தில் அதன்பின் அழகென எஞ்சியவை மலர்கள், தளிரிலைகள், செடிகள். நிலமெங்கும் பரவியிருந்த கூழாங்கற்கள். வண்ணச்சிறகுகள் கொண்ட பல்லாயிரம் பறவைகள், ஒளியேயான பூச்சிகள். விழிகள் மின்னும் மான்கள், முகில்வடிவ யானைகள், பட்டொளிர் பசுக்கள், அனல்வண்ணப் புலிகள். ஒவ்வொருநாளும் அந்நிலத்தின் அழகு புதிதாகப் பிறந்தது. ஒவ்வொருகணமும் அது வளர்ந்தது. அதை வெல்ல தேவர்களாலும் இயலவில்லை.
கேதுமாலன் ஒருநாள் தன் அரண்மனைக்கு வெளியே குறுங்காட்டில் நின்றிருந்தபோது தன்னைச் சூழ்ந்திருக்கும் பேரழகை கண்டான். அவன் விழிகள் நிறைந்து வழிந்தன. கைகளைக் கூப்பியபடி நின்றான். பின்னர் வலக்கையால் தன் தலைமுடியை பிடித்திழுத்துப் பறித்து மழிதலையனானான். இடக்கையால் தன் ஆடையை விலக்கினான். தெருவிலிறங்கி நடந்து காட்டுக்குள் நுழைந்தான். அவன் செல்லும் வழியெங்கும் மக்கள் கைகூப்பி நின்றனர்.
கேதுமாலத்தின் எல்லையில் இருந்த கேதுகிரி என்னும் மலைமீது ஏறி நின்றான். விண்ணிலிருந்து அழகிய பட்டாம்பூச்சி ஒன்று சிறகடித்து வந்து அவன் தோளில் அமர்ந்தது. ஆனால் அவன் அதை காணவில்லை. அனைத்து அழகுகளையும் துறந்தவர் மட்டுமே காணும் அழகை அவன் கண்டான். அவன் காலடியில் தேவர்கள் வந்து வணங்கினர். அவன் தலைக்குமேல் விண்ணின் வெள்ளை யானை வந்து நின்றது. அதில் வந்த இந்திரன் அவனை அழைத்து தன்னுடன் கொண்டுசென்றான். அந்த மலைமேல் ஏழு நாட்கள் விண்வில் ஒளியுடன் நின்றிருந்தது.
அவன் அமர்ந்து உடலுதிர்த்த மலைமேல் அவனுடைய இரு கால்களையும் வரைந்தனர். ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் அவனை வணங்கும்பொருட்டு கேதுமாலத்தின் அனைத்து மக்களும் மலையேறிச் சென்றனர். அங்கே மலரிட்டு வணங்கி மீண்டனர். பின்னர் சூழ்ந்திருந்த நாடுகளனைத்திலிருந்தும் மக்கள் வரலாயினர். அழகர் என்றே அவரை நூல்கள் குறிப்பிட்டன.
விறலி “அழகோன் பாதங்களை வணங்குவோம். அவன் விழிகள் விண்ணில் துலங்குக! அவை இங்குள்ள அனைத்தையும் அழகுறச் செய்க!” என்று சொல்லி கைகூப்பினாள். யாழ் முரலொலி எழுப்பி ஓய்ந்தது. விறலி எழுந்தபோதுதான் திரௌபதி தன்னுள் இருந்து மீண்டெழுந்தாள். சூழ நோக்கியபோது அன்னையும் சேடியரும் செவிலியரும் துயில்கொண்டிருப்பதைக் கண்டாள். எழுந்து சிற்றாடையை பற்றிக்கொண்டு விறலியை அணுகி தன் கழுத்திலிருந்த அருமணி மாலையைக் கழற்றி அவளுக்கு அணிவித்தாள். அதை எதிர்பாராத பாணர்குழுவின் முகங்கள் மலர்ந்தன.
விறலி “பேறுபெற்றேன், இளவரசி” என்றாள். திரௌபதி “கேதுமாலபுரி இன்றுள்ளதா?” என்றாள். “ஆம் அரசி, இது அந்நகரின் தொல்கதை.” திரௌபதி “அது எப்படிப்பட்ட நகர்?” என்றாள். “அதுவும் பிற நகர்களை போலத்தான். ஆனால் வட்டவடிவமான கோட்டை ஒன்று நகருக்குள் உள்ளது. அதுவே பழைய நகரம். பிற்காலத்தில் தெருக்கள் கோட்டைக்கு வெளியிலும் விரிந்து பரந்துவிட்டன” என்று விறலி சொன்னாள். “அந்நகர் இக்கதைகளில் வருவதுபோல் அழகு கொண்டதா?” என்று திரௌபதி கேட்டாள்.
பாணன் சிரித்து “இளவரசி, இது கதையல்லவா? என்றேனும் அவ்வண்ணம் ஒரு பெருநகர் மண்ணில் இருந்திருக்கிறதா என்று கேட்டால் எங்கள் முதுசூதர் சிரிப்பார்கள். நூற்றுக்கணக்கான பெருநகர்களின் கதைகள் இங்குள்ளன. மானுடர், நாகர், அரக்கர், அசுரர் ஒவ்வொருவரும் தங்கள் தொல்மூதாதையர் அமைத்த பெருநகரிகளைப் பற்றிய கற்பனைகளை விரித்துக்கொண்டிருக்கிறார்கள். அது என்றுமிருக்கும் ஒரு கனவு. அக்கனவை எண்ணியே மண்ணில் அனைத்து நகரங்களும் அமைக்கப்படுகின்றன” என்றான்.
“அவ்வண்ணம் ஒரு நகரம் இன்று புவியில் இல்லையா?” என்று அவள் கேட்டாள். “இளவரசி, தொல்நகர் தென்மதுரை, காஞ்சி, விஜயபுரி, ராஜமகேந்திரபுரி, மாகிஷ்மதி, ராஜகிரி, அஸ்தினபுரி என இந்நாட்டின் அனைத்துப் பெருநகர்களுக்கும் நான் சென்றிருக்கிறேன். அவை அனைத்தும் மாண்பும் அழகும் கொண்டவையே. ஆனால் கதைகள் சொல்லும் சீர்மை எவற்றுக்கும் இல்லை” என்றான் பாணன். “ஏன்?” என்றாள் திரௌபதி. “ஏனென்றால் சீர்மை முழுமைபெற தேவர்கள் ஒப்புவதில்லை. மானுடரின் விழைவில் புகுந்துகொண்டு சீர்மையை குலைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்து நகர்களும் காடுகளைப்போல தங்கள் எல்லைகளை கட்டற்று விரித்து வடிவிலாது பெருகியவையே.”
“கேதுமாலனின் இடத்தில் நான் இருந்திருந்தால் அந்நகரியை இந்திரனுக்கே அளித்திருப்பேன். தன் நகரம் முழுமையழிவதை அவன் ஒப்பமாட்டான்” என்று திரௌபதி சொன்னாள். விறலி சிரித்தாள். “அந்நகரின் மையத்தில் இந்திரனுக்கு பேராலயம் ஒன்று எழவேண்டும். ஒவ்வொருநாளும் இந்திரன் வணங்கி வாழ்த்தப்படவேண்டும். இந்திரனே அந்நகருக்குக் காப்பாக நிலைநிறுத்தப்படவேண்டும். அதை தேவர்கள் வெல்ல முடியாது” என்றாள் திரௌபதி. விறலி “அவ்வண்ணமொரு நகர் தங்கள் ஆணைப்படி எழுக, அரசி!” என்றாள். திரௌபதி புன்னகைத்தாள்.
அன்னை எழுந்து “என்ன ஆயிற்று? பாடல் முடிந்துவிட்டதா?” என்றாள். சேடியர் விழித்து எழுந்து “ஆம், சற்றுமுன் முடிந்துவிட்டது, அரசி” என்றார்கள். “பரிசில்கள் எங்கே?” என்றாள் அரசி. திரௌபதி “நானே அளித்துவிட்டேன்” என்றாள். “ஆம் பேரரசி, மதிப்புமிக்க பரிசு. இனி பிறிதொரு பெரும்பரிசு நாங்கள் பாரதவர்ஷத்தில் பெறுவதற்கில்லை. பிறிதொரு பேரரசியை பார்ப்பதற்கும் வாய்ப்பில்லை” என்றான் பாணன்.