அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நிகழ்விற்கு முந்தைய பின்னிரவில் பதட்டத்துடன் பணிகள் செய்துகொண்டிருந்தபோது குக்கூ காட்டுப்பள்ளி நண்பர்களோடு வந்திருந்த சுயம்புசெல்வி அக்கா, உனது கடிதத்தை ஜெயமோகன் அய்யா தனது இணையத்தில் பதிந்திருக்கிறார் என்று சொன்ன கணத்தில், மனதில் பதற்றம் தணிந்து அமைதியும் நம்பிக்கையும் வியாபித்துக்கொண்டது. பின்னர் வேலைகள் செய்தபடியே உரையாடிக் கொண்டிருந்தபோது பொழுது புலர்ந்தது.
மிகுந்த ஆனந்தத்துடனும் நண்பர்களின் அரவணைப்புடனும் துகள் மற்றும் நூற்பு கைத்தறி நெசவுக்கான கூட்டுறவு தொழிற்கூட திறப்புவிழா நிகழ்வு நடைபெற்றது. தற்போது வேலைகள் தொடங்கி ஒரு சுழற்சிக்கு தயாராகி கொண்டிருக்கிறது அவ்விடச்சூழல்.
உள்ளார்ந்து கேட்கும் அறத்தின் குரலுக்கு மதிப்பளித்து அதை செயலாக மாற்றி அந்த செயலுக்கு நம்மை அர்ப்பணிக்கும்போது அது ஏற்படுத்தும் நம்பிக்கையும் மனவிரிவும் வாழ்வை அர்த்தமுள்ளதாக உருமாற்றுகிறது என்பது எவ்வளவு எளிய உண்மை.
காந்தியத்தை இன்றைய கால சூழலுக்கு ஏற்றார்போல் உருமாற்றிக்கொண்டு பயணப்படவேண்டும், பயணப்படுவதோடு மட்டுமில்லாமல் வெற்றியையும் அடையவேண்டும்,காரணம் தற்போது எல்லா வகையிலும் சின்ன சின்ன வெற்றிகள் தேவையாகவும் இருக்கிறது என்ற கரிசனம் நிறைந்த ஜீவானந்தம் அய்யாவின் அனுபவ சொல் ஒலித்தது.
இன்றைய சமூகமும் வெறும் பொருள் ஈட்டுவதை மட்டும் தன் வாழ்வின் கடமையாக செய்துகொண்டிருக்கிறது. எல்லா எளியசெயல்களையும் வணிகநோக்கத்தின் கண்ணோட்டத்துடனே பார்க்கிறது. எல்லாவற்றையும் தாண்டி இயற்கையையும் மனிதத்தையும் மனதால் மதிக்கும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை வி.பி குணசேகரன் அய்யா பதிவுசெய்தார்.
பின்னர் நண்பர்களின் உளமாற பகிர்தலோடு நிகழ்வு முழுமைபெற்றது. நிகழ்வு முடிந்து ஒரு நாள் கழத்து அஸ்வேஷ் என்ற நண்பர் அழைத்திருந்தார். அவர் தங்களின் இணையத்தை தொடர்ந்து இடைவிடாது வாசிப்பவர். அவர் தனக்கு திருமணம் நடக்க இருக்கிறது, என் மனைவிக்கு நானே சேலை நெய்து கொடுக்க வேண்டும் என்ற அகம்நிறைந்த விருப்பத்தை முன் வைத்துவிட்டார்.
நான் கல்லூரியில் படிக்கும்போது காந்தியவாதியான என் ஆசிரியரின் தாக்கத்தால் நெசவு கற்றுக்கொண்டேன். நான் வந்து நெசவு செய்ய வாய்ப்பு கிடைக்குமா என்றார். ஒருநிமிடம் கண்கள் கலங்கிவிட்டது. தற்போதுதான் அதுபோல சூழலை உருவாக்கி கொண்டிருக்கிறோம் என்று சொன்னவுடன் புரிந்துகொண்டு நீண்டநேர உரையாடலுக்கு பின் கட்டாயம் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.
இந்த சம்பவம் மனதின் ஏதோ ஒரு மூளையில் இருந்துகொண்டு இடைவிடாது அறம்நோக்கியும் உள் அன்பை நோக்கியும் இயங்க சொல்லிக்கொண்டே இருக்கிறது. நண்பரின் இந்த சொல்லை பெரும் வாழ்த்தாக கருதுகிறோம். இந்த உணர்வினை கண்டடைய மூலமாக இருந்த உங்களுக்கு அகம்நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
அவர் தொடர்புகொண்ட அன்றைய இரவில் மீண்டும் மெல்லியநூல் கதையை என் மகளின் காதுகளுக்கு அருகில் வாசித்துகாட்டினேன். உங்கள் சொல்லை நன்றியோடு உள்வாங்குவதை தவிர வேறோன்றும் கைமாறு இல்லை.
இறைவேண்டலுடன்,
சிவகுருநாதன்
அன்புள்ள சிவகுருநாதன்,
பேச்சு எங்கும் பெருகிக்கிடக்கும் சூழலில் அர்ப்பணிப்பும் நம்பிக்கையும் கொண்ட செயல்கள் மிக அரிதாகவே எங்கேனும் நிகழ்கின்றன. எல்லாவகையிலும் அவற்றை போற்ற என்னைப்போன்றவர்கள் கடன்பட்டிருக்கிறோம்
ஜெ