குருதிச்சின்னங்கள்[கம்பனும் காமமும்.5]

 ‘போருக்கும் காமத்துக்கும் உள்ள உறவைக் கவனித்திருக்கிறீர்களா? சற்று தட்டிக்கொட்டி உருமாற்றினால் பெரும்பாலான காதல்கவிதைகளை போர் பற்றிய கவிதைகளாக மாற்றிவிட முடியும். கவனியுங்கள், சிறுகுழந்தைகளுக்கு உடலுறவை மல்யுத்தமாக எண்ணிக்கொள்கின்றன. உயிர்வதையுடன் மோதிக்கொள்ளும் இருமிருகங்கள் கைகளாலும் வாயாலும் செய்வதையே காமமும் செய்கிறது.ஓர் ஆணும் பெண்ணும் முயங்கி மோதிச் சண்டையிட்டுக்கொண்டால் அந்தச்சண்டை அதிகநேரம் சண்டையாக நீடிக்காது…” — ஒரு கட்டுரையில் மலையாளக்கவிஞர் கல்பற்றா நாராயணன் சொல்கிறார்.

காதல் கவிதைகளைப் படிக்கும்போதெல்லாம் அவற்றில் ததும்பும் வன்முறையே என் கவனத்தில் படிகிறது. ‘தூண்டில் புழுவினைப்போல்’ நெஞ்சம் துடிக்கும் சித்திர வதை. நம் அன்றட வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் திரைப்பாடல்கள்கூட அப்படித்தான். ‘உயிரோடு என்னை சிதையில் ஏற்றினாய்’ ‘அன்பே அன்பே கொல்லாதே’ எத்தனை உச்ச்கட்ட வதைகள். ஏன், நரமாமிச உணவுகூட! ‘தின்னாதே என்னை தின்னாதே’ காதலின் உக்கிரத்தை திரையில் காட்ட காதலர்கள் எரிதீயில் உடலைச் சுட்டுக்கொள்கிறார்கள் நம் படங்களில். ரத்தம் வழிய கீறிக்கொள்கிறார்கள்.

நம் மொழியில் முளைத்த முதல் காதல்கவிதை முதலே இந்த வன்முறையம்சம் காணக்கிடைக்கிறது. பெண்களின் காமம் கொண்ட கண்களை நுனியில் உதிரம் சிவந்திருக்கும் கொலைவேல் என்றுதான் சங்க இலக்கியமும் சொல்கிறது. அவள் அளிக்கும் காதலை கொல்லும் நோய் என்கிறது. காதலியின் புன்முறுவலை உயிர் உண் நகை என்கிறது. எரியும் தீயைத்தழுவி அச்சுதா என்று ஏங்குகிறாள் நம்மாழ்வாரின் தலைவி. உச்சகட்ட வதையை உச்சகட்ட இன்பமாக முன்வைப்பது எதுவோ அதுவே சிறந்த காதல்கவிதை என்று படுகிறது.

குமாரசம்பவத்தில் மலைமகள் பார்வதி சிவனை அடையும் பொருட்டு பஞ்சாக்னி நடுவே தவம்செய்தாள் என்கிறது காவியம். நான்குபக்கமும் தீ. மேலே சுடும் சூரியன்.நடுவே நின்று உடலுருகி தவம்செய்து முக்கண் முதல்வனை அடைந்து கார்த்திகேயனைப்பெற்றாள் அவள்.  அந்த எரி நடுவே அவள் மாளாப்பெருங்காதலின் பேரானந்த நிலையில் ஒருமைகொண்டு நின்றாள் என்று சொல்லமுடியாதா என்ன? காதலின் ஒரு கட்டத்தில் நாம் அத்தனைபேரும் ஒரு கணமேனும் பஞ்சாக்னி நடுவே நின்றிருப்போம் அல்லவா?

நாலாம் வகுப்பு படிக்கும் நாட்களில் நான் என் இல்லத்தருகே இருந்த அக்கா ஒருத்தியின் அணுக்கத்தொண்டனாக இருந்தேன். அந்த வயதிலும் அவளுடைய ஒவ்வொரு உள்ளத்து அலையையும் என் மனம் அறிந்துகோண்டிருந்தது. அதை அறிந்தது என் அறிவோ மனமோ அல்ல, என்னுள் கருவில் உருவாகிக் குடிகொண்ட ஆண் என்னும் உணர்வு. அக்கா ஒருவர் மீது பெருங்காதல்கொண்டிருந்தாள். அவர் நான் படித்த பள்ளியின் ஆசிரியர். பன்னிரண்டு மணிக்கு மதியச்சாப்பாட்டுடன் குடிக்க கஞ்சித்தண்ணீர் கொண்டுவரச்சொல்லி அக்காவிடம் என்னை அனுப்புவார்.

அக்கா அவருக்காக ஒரு பித்தளைச்செம்பு வைத்திருந்தாள். அதை விபூதிபோட்டுத் துலக்கித் துலக்கிப் பொன்போல சுடரும் அது.. அடிக்கடி அதை எடுத்து தன் முகம் நோக்கி புன்னகைசெய்வாள். ஆனால் நான் வருவதைக் கண்டதுமே மீண்டும் அதை எடுத்துக்கொண்டு துலக்க ஓடுவாள். புளிபோட்டுத்துலக்கி துடைத்து அதில் அளவோடு உப்பிட்ட கஞ்சித்தண்ணீரில் வெந்நீர் கலந்து நிறைத்து இருகரங்களாலும் என்னிடம் கொடுப்பாள். ”சிந்தாமக் கொண்டு போகணும் என்ன?” எத்தனை அர்த்தங்கள் கொண்ட ஒருவரி. சிந்தாமல் சிதறாமல் பொன்னிறப்பாத்திரம் ததும்ப நான் கொண்டுசென்றது எதை?

அப்போது அக்காவின் முகமும் கழுத்தும் அடுப்பில் கொதிக்கும் செம்புப்பானை போலிருக்கும். கண்களில் காய்ச்சலின் மினுமினுப்பு தணலும். மூச்சில் மார்பகங்கள் ஏறி இறங்கும். என் கண்களைச் சந்திக்கவே வெட்கி விழிகள் விலகி விலகி உருளும். உதடுகளைக் கடித்து மேலுதடு வியர்க்க ”வாயை பிளந்துட்டு நிக்காம போடா” என்று செல்லமாக சிணுங்குவாள். ஒருநாள் அவள் பாய்ந்துசென்று செம்பைத்துலக்கும்போது சட்டென்று அவள் விம்மிவிட்டதைக் கண்டேன். உதடுகளைக் கடித்துக் கட்டுப்படுத்துவதற்குள் கண்ணீர் செம்மைபரவிய கன்னங்கள் வழியாக உருண்டது.

நான் ”என்ன அக்கா என்ன?” என்றேன். ”ஒண்ணுமில்லடா” என்று புன்னகைசெய்தபடி கைகளைத்தூக்கி ஜாக்கெட்டின் கையால் கண்களைத்துடைத்தாள். கஞ்சித்தண்ணீரைக் கலந்து அளிக்கும்போது அவள் முகம் நெடுநேரம் அழுது பின் தெளிவடைந்தது போலிருந்தது. ”ஒண்ணுமில்லடா…”என்றாள். நான் அவள் அழுகையை வியந்து எண்ணியபடி செம்புடன் நடந்தேன்.

பள்ளியிலிருந்து சாலைக்குச் செல்லும் இடைவழி அக்காவின் வீட்டுக்குப் பின்னால் மரசீனித்தோட்டம் வழியாகச் செல்லும். மழைக்காலத்தில் நீர் செல்லும் ஓடையும் கூட. மரச்சீனி வளர்ந்து நிற்கும்போது அதன் வழியாகச் சென்றால் தலை மேலே தெரியாது. அக்கா தன்வீட்டு வைக்கோல்படப்பிற்குப் பின்னால் ஒளிந்து நின்றுகொள்வாள். கீழே ஆசிரியர் நிற்பார். இருவரும் மிக மெல்ல பேசிக்கொள்வார்கள். அவரது கைகள் தவிப்புடன் துழாவி புல்லைப்பறித்து ஒடித்தும் முடிச்சுபோட்டும் கீழே வீசும். அக்காவின் முகம் வலியில் சிறுத்திருப்பதுபோல் இருக்கும். தவிப்புடன் ”ஈஸ்வரா”என்று சொல்லி கைகளை உதறி தணல்மேல் நிற்பது போல கால்மாற்றுவாள்.

இருவரும் அப்படி என்னதான் பேசிக்கொள்கிறார்கள் என தூரத்தில் ஆள் பார்த்து மாமரம் மீது அமர்ந்திருக்கும் நான் எண்ணிக்கொள்வேன். மிக மிக வேதனையான எதையோ பேசிக்கொள்கிறார்கள். இருவரும் தாளமுடியாத வேதனையால் துவள்கிறார்கள். கண்கலங்குகிறார்கள். சட்டென்று ஒருவரோடுவர் சினந்து பூசலிட்டுக்கொள்வதும் கண்ணீர் விட்டு அழுவதும் பின் மெல்ல அட்டங்கி அமைவதும் உண்டு. வலியின் உச்சத்தில் பிரிகிறார்கள்.

அவர் போனபின்னர் அக்கா தனக்குள் ஆழ்ந்து, நான் கூட இருக்கும்போதே தனித்தவளாக, வருவாள். ”நீ வீட்டுக்கு போ” என்று என்னை அனுப்பிவிடுவாள். அவள் முகத்தில் ஏன் அத்தனை துயரம் என்று எண்ணிக்கொள்வேன். ஏன் பெருமூச்சு விடுகிறாள். ஏன் சட்டென்று ஏங்கி அழுகிறாள். தனித்திருக்க விரும்பி என்னை அனுப்புவாள். நான் மறைந்து நின்று நோக்கும்போது அவள் துவைகல்லில் அமர்ந்து மரக்கிளைகளை நோக்கி மனம் கரைந்து விசும்பி விசும்பி அழுவதைக் காண்பேன். என்ன கொடும்துயரம் கவிந்தது அவள் மீது?

ஒருநாள் அவர் அக்காவை முத்தமிடுவதை நான் கண்டேன். மாமரத்தில் இருந்து திரும்பிப்பார்க்கையில் அவர் வைக்கோல்போர் அருகே ஏறி அக்காவை முரட்டுத்தனமாகப்பிடித்து மாமரத்துடன் சேர்த்து முகத்தில் முகம் சேர்த்தார். அக்கா திமிறி துடித்து அவரை பிடித்துத்தள்ளினாள். சேவல்கோழி பிடைக்கோழியை மேலே அமுக்கி உச்சியில் கொத்துவதைப்போல் இருந்தது. என் மனம் படபடத்தது. ஒரு உச்சகட்ட வன்முறைக்காட்சியை கண்டது போன்று. வாய் உலர்ந்தது. தொடைகள் நடுங்கின. ஆசிரியர் சட்டென்று இறங்கி திரும்பிப்பாராமல் நடந்துசென்றார்.

அவர் சென்றபின் அக்காவுடன் நான் நடந்தேன். அக்கா என்னிடம் ”சார் இனிமே ஒருவாரம் கழிச்சுத்தான் வருவாராம்டா”என்றாள். நான் பார்த்ததை சகஜமாக ஆக்க அவள் விரும்பினாள். ”ஏன்?”என்றேன் ”அவர் தங்கச்சிக்குக் கல்யாணம்” என்றாள். நான் ”சின்னதங்கச்சியா?”என்றேன். அக்கா அதைக் கவனிக்காமல் ”ஒருவாரம்….சிலசமயம் பத்துநாள் கூட ஆகுமாம்.. ச்சே…”என்றாள். தனக்குத்தானே ”நடுவிலே வந்திட்டு போனா என்னவாம்?”என்றாள்.

சட்டென்று இனம்புரியாத ஆவேசம் கொண்டு எதிரே இருந்த முற்றிய காரைமுள்செடியின் மீது காலை வைத்து இறுக்கமாக மிதித்தாள். நான் ஒருநிமிடம் கழித்தே அவள் செய்வதென்ன என்று புரிந்துகொண்டேன். முட்களில் அவளுடைய கால் பதிந்து அழுந்த உதடுகளைக் கடித்து கழுத்து நரம்புகள் புடைக்க இறுக்கி தலைகுனிந்து நின்றாள். நான் ”அக்கா, அக்கா, முள்ளு முள்ளு” என்று பதறினேன். கீழே அமர்ந்து அவள் காலை கையால் பிடித்து தூக்கினேன். பத்துப்பதினைந்து பெரிய காரைமுட்கள் ஆழமாக பதிந்திருந்தன. ஒரு முள் தைத்தாலே வலி நரம்புகளை துடிக்கச்செய்யும்.

”அய்யோ…முள்ளு…” என்று நான் அவள் காலைப்பார்த்து கத்தினேன். எனக்கு அழுகை வந்து விட்டது. அவள் அப்படியே அமர்ந்துவிட்டாள். உடல் வியர்த்து கழுத்து பளபளத்தது. ”பின்னு கொண்டா எடுக்கிறேன்” என்றேன். அவள் தந்த பின்னைக்கொண்டு முள்ளைக்குத்திக் கெல்லி ஒவ்வொன்றாக எடுத்தேன். ”வலிக்குதா? வலிக்குதா?”என்றேன். அவள் தலையை மட்டும் அசைத்தாள். பனிபடர்ந்த கண்களுடன் முட் காயங்களில் இருந்து வழிந்த ரத்தத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ரத்தம் மானுட இலக்கியத்தின் மையப்படிமங்களில் ஒன்று. மனிதனுக்குள் எரிந்தோடும் நெருப்பு அது. அழிவுக்கும் ஆக்கத்துக்கும் அது குறியீடாகிறது. ரத்தம் மானுட உணர்ச்சிகளின் தூலம். ரத்தமளவுக்கு தன்னளவிலேயே உக்கிரமான ஒன்றை மனிதன் காட்டிவிடமுடியாது. நம் குலதெய்வங்களில் பெரும்பாலானவை ரத்தத்தையே பலியாகக் கொள்பவை. மனிதகுமாரனின் ரத்தத்தை மானுடர் அருந்துகிறார்கள்.

குமாரசம்பவத்தில் இமயவர்ணனையில் காளிதாசன் ஒரு படிமத்தை அளிக்கிறான். யானையைக் கொன்று தின்றுவிட்டு இமயமலைச்சரிவில்  நடந்துபோன சிம்மத்தின் பாதச்சுவடுகள் மென்பனியின் வெண்பரப்பில் எழுத்து முத்திரைகளாகப் படிந்திருக்கின்றன. உக்கிரத்தின் வீரத்தின் சுவடுகள் அவை. தீவிரமான அர்த்தத்தை சுமந்து நிற்கும் கவிதையின் வரி போல.

அவ்வரியை மேற்கோள் காட்டும் நித்ய சைதன்ய யதி டிபூஸி என்ற மேலைநாட்டு இசையமைபபளனின் பனியில் உன் பாதத்தடம் என்ற சொனேட்டாவை அதனுடன் ஒப்பிட்டார். உறைபனியில் தன் காதலியின் பாதச்சுவட்டைக் கண்டு பெரும்பரவசம் கொள்ளும் காதலனின் மனத்தின் சித்திரம் அந்த சொனேட்டா என்றார் நித்யா. அந்தக் காலடிச்சுவட்டில் இருந்து அவன் ஓராயிரம் காதலியரை அக்கணத்தில் அடைந்திருப்பான்.

அஞ்சனக் கிரியின் அன்ன
அழிகவுள் யானை கொன்ற
வெஞ்சினத்து அரியின் திண் கால்
சுவட்டோடு, விஞ்சை வேந்தர்
குஞ்சி அம்தலத்தும் நீலக்
குலமணித் தலத்தும் மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த
பசுஞ்சுவடு உடைத்து மன்னோ

[பாலகாண்டம் வரைக்காட்சி படலம் 850]

கரியமைநிற மலையைப்போன்ற மதநீர் ஒழுகும் கன்னம் கொண்ட யானையைக் கொன்ற வெஞ்சினம் மிக்க சிம்மத்தின் திண்ணிய கால்சுவடுகளும், வானுலகத்தவரான விஞ்சையரின் தலையின் மீதும் இந்திரநீலக் கற்களாலான மலைச்சரிவிலும் பதிந்த விஞ்சையர்குலப் பெண்களின் செம்பஞ்சுக்குழம்பிட்ட கால்களின் பாதச்சுவடுகளும் ஒன்றாகக் கலந்து தெரிந்தன.

கம்பனின் காவியத்தில் எந்தப்பயணமும் சாதாரணமாகச் சொல்லப்பட்டதில்லை. மிகவிரிவான காட்சி வருணனைகளுடன்தான் அவை எப்போதும் முன்வைக்கப்படுகின்றன. அவ்வருணனைகளின் உள்ளோட்டமாக எப்போதும் காமம் உள்ளது.  காமம் என்பது கம்பனைப்பொறுத்தவரை இயற்கையின் களியாட்டத் தோற்றத்தின் சாரம். ஒவ்வொரு கணமும் காமம் ததும்பும் ஒரு நடனமேடை அது. அத்தகைய ஒரு காட்சிச்சித்தரிப்பு இது.

பேரழகு மிளிரும் வனக்காட்சியை விஞ்சையரும் கந்தருவரும் கூடிமுயங்கிக் கொண்டாடும் இடம் என்று சொல்வது நம் புராண மரபு. அந்தச்சித்திரத்தை அளிக்க வந்த கம்பன் மிகக்குரூரமான ஒரு படிமத்தினூடாகக் கடந்துசெல்கிறான். கன்னங்கரிய மலைபோன்ற யானையைக் கொன்ற சிம்மம் உதிரம் வழியும் காலடிகளுடன் நடந்துசென்றதன் தடங்கள் பரவிய மலை அது. ஊடலால் தன் காதலர் தலையை மிதித்த தேவகன்னியர் செம்பஞ்சுக்குழம்பு சிந்த நடந்துசென்ற தடங்களும்  அதனுடன் ஒன்றுகலந்து தெரியும் என்கிறான்.

தேவர்களின் காமக் களியாடலையே யானையை சிம்மம் கொல்லும் தருணமாக காட்டுகிறான் கம்பன். ஒன்று நிணம் நாறும் உதிரபாதத்தடம். இன்னொன்று நறுமணக்குழம்பின் பாதத்தடம். இரு எல்லைகள், இரு உச்சங்கள். இரண்டும் ஒன்றாகும் ஒரு தருணமா காமம்? குரூரமும் இனிமையும் கலந்த ஒரு மானுடநிலையா அது?

மீண்டும் மீண்டும் அந்த உவமையிலேயே தோய்கிறது மனம். மதம் கொண்ட களிறு என ஆண்மையையும் அதை வென்று தின்று செல்லும் சிம்மம் என பெண்மையையும் காணும்போது வாசல்கள் பல திறக்கின்றன. மதத்தால் தன்னிலையழிந்து கலங்கி ஒளிரும் வெண்தந்தம் தூக்கி கொம்பு குலுக்கி மண் மிதித்துப்புரட்டி எழும் ஆண்யானை. அதன் மத்தகம் பிளந்து உதிரம் குடித்தபின் மெல்ல வால்தூக்கி சென்று மறையும் பெண் சிம்மம். காமத்தின் முடிவில் உண்டு அடங்கும் பெண்ணின் தன்மையை அதில் காண்கிறேன்.

விசித்திரமான இக்கவிதையை மீண்டும் மீண்டும் சிந்தனை அல்லிவட்டம் புல்லிவட்டம் என இதழ் மலர்த்தி நோக்கிக்கொண்டே இருக்கிறது. என்ன இணைவு இது? எந்த ஒரு மனநிலையில் கவிஞனின் மனதில் குரூரமானதும் அழகானதுமான இந்த உவமை தோன்றியது? ரத்தச்சுவடுகள் பூத்த நிலத்தைக் கண்டு மனம் மலரும் ஒரு நிலையும்  காமத்தில் உண்டா என்ன?

மனிதனின் உச்சம் எங்கெல்லாம் வெளிப்படுகிறது? பெரும் பரவசங்களில், தியாகங்களில், வீரத்தில், ஞானத்தின் சிகரங்களில். அதேபோலவே மரணமுனையின் உச்சகட்ட அச்சத்திலும் தாங்க முடியாத வலியிலும்கூட மனித உச்சம் வெளிப்படுகிறது. அந்த உச்சத்தை அனுபவித்தவர்கள் அந்த தருணங்கள் அனைத்துமே அனேகமாக ஒன்றுதான் என்று உணர்ந்திருப்பார்கள். ஆங்கிலத்தில் இவ்வனைத்தையுமே awe என்ற ஒற்றைச்சொல்லால் சொல்லிவிடமுடியும்.

ஆகவேதான் கவிதை அவற்றில் ஒன்றைச் சொல்ல இன்னொன்றை உவமையாக்குகிறது. இசைகேட்டு உருகும் நிலையை மரணம் என்கிறது. காதலி தீண்டுமின்பத்தை இதயத்தில் கூர்வேல்பாய்ந்த வலி என்கிறது. சொல்லப்போனால் ஓர் உச்சகட்ட அனுபவம் அதற்கு நேர் எதிரான ஓர் உச்சகட்ட அனுபவத்தாலேயே மேலும் துலக்கம் கொள்கிறது. காதலைச் சொல்லக்கேட்ட ஒரு தருணத்தில் நாம் எதிரே கொலைவாளைக் கண்ட பீதியின் பெரும் பரவசத்தை அனுபவிக்கக் கூடும்.

அன்று அக்கா நடந்துசென்ற பாதை முழுக்க செம்மண் தரையில் ரத்தத்தின் சுவடுகள் இருந்தன. முதல் முத்தம் பெற்ற பொற்கணத்தைத்தான் அவள் ஒவ்வொரு முறை குருதிக்காலால் மண்ணைத்தீண்டும்போதும் மீண்டும் மீண்டும் அனுபவித்துக்கொண்டிருந்தாள் என நான் அறிய மேலும் பதினைந்து வருடம் தாண்டியது.

கம்பனும் காமமும் :ஒருகடிதம்

கம்பனும் காமமும்:அணிகளின் அணிநடை

கம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது

கம்பனும் காமமும், இரண்டு

காமமும் கம்பனும்- ஒரு காலைநேரம்

முந்தைய கட்டுரைஒருமலைக்கிராமம்;கடிதங்கள்
அடுத்த கட்டுரைபயணத்தில்