மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 2

thalaiyasingam

ஊட்டியில் காலையில் எழுவதென்பது எப்போதுமே சிரமமானது . குளிருக்குப் பழக்கமில்லாத வியர்வையூர் வாசிகளுக்கு மிக மிகச் சிரமமானது . இரவெல்லாம் உடலில் இருந்து ஊறிய இளம் வெம்மை அப்போதுதான் கம்பிளிக்குள் தேங்கி சுகமாக உடலைத் தழுவியிருக்கும் . ஆனால் அனைவரையும் எழுப்பி காலை நடைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு. காலையில் எழச் சிரமப்படுபவர்கள் கூட எழுப்பாவிட்டால் கோபித்துக் கொள்வதுண்டு .ஊட்டியின் அழகே காலையின் மூடுபனிக்குள் ஊடுருவி எழும் வெயில் மெல்ல பொன் மஞ்சள் நிறமாக மாறுவதுதான் . காலையில் எழுந்து பல்துலக்க வரும்போது மூத்தவர்கள் எல்லார்மே எழுந்து விட்டிருப்பதைக் கண்டேன். நாஞ்சில்நாடன் வெங்கட் சாமிநாதனுடன் அந்த வேளையிலும் இலக்கியம்தான் பேசிகொண்டிருந்தார் .

குருகுலத்தில் பால்வர தாமதமாகும் ஆகவே காலையில் பால் இல்லாத கருப்பு டா தான் .குளிருக்கு அது மிக சுவையாகவே இருக்கும் .மேலும் ஊடி டாக்கு பச்சை வாசனையும் இருக்கும். கூட்டமாக காலைநடை கிளம்பினோம். வெயில் தெளிவான மஞ்சள் நிற அருவிகள்போல மரங்களிலின் ஊடே விழுந்துகொண்டிருந்தது .கிட்டத்தட்ட இரண்டரைமணிநேரம் நடந்தோம். இதய நோய்க்கு சிகிழ்ச்சையில் இருந்தபோதும்கூட நாஞ்சில்நாடனும் நடந்தார் . வழியில் நின்று ஒரு டாக்கடையிலிருந்து டாகுடித்தபடி பேசிக் கொண்டிருந்தோம் .ஒன்பதரை மணிக்கு திரும்பிவந்தோம் .எம் யுவன் வந்திருந்தார் .அபிலாஷும் அவர் நண்பரும் வந்தனர் . பத்துமணிக்கு முதல் அமர்வை துவங்கினோம்.

முதலில் எம். வேதசகாயகுமார் பேசினார் . அவரது கட்டுரையின் சாரமான கருத்து தளைய சிங்கம் ஒரு இலக்கியக்கலைஞனாக எவ்வாறு உருவாகி மெல்ல மெல்ல தத்துவவாதியாக மாறினார் என்பதன் சித்தரிப்புதான் . தளைய சிங்கம் வெளியேயிருந்து வந்த சித்தாந்தங்களில் நம்பிக்கை கொள்ளவில்லை . தன் சுயமான தேடலின் அடிப்படையிலான சிந்தனைப்பயணத்தையே மேற்கொண்டிருந்தார் .அவ்வகையில் தமிழில் பாரதிக்கு அடுத்தபடியாக சொல்லப்படவேண்டிய முக்கியமான சிந்தனையாளர் அவரே . பாரதிக்கு சிந்தனையில் கைகூடாத வெற்றி தளையசிங்கத்துக்குக் கைகூடியது என்றார் வேதசகாயகுமார் .

முற்போக்கு முகாம் மீதான தளையசிங்கத்தின் விமரிசனம் அது கலையை எளிமைப்படுத்தியது ,குழு அரசியலை விமரிசனமாக முன்வைத்தது ஆகியவை சம்பந்தமானதே . அத்துடன் முற்போக்கு முகாமில் இருந்த படைப்பாளிகள் உழைப்பாளிகள் அல்ல , உயர்மட்டத்தினரே என்பதும் தளையசிங்கத்தின் விமரிசனமாக இருந்தது . ஆனால் அடிப்படையில் தளையசிங்கம் மார்க்ஸியத்தின் இலட்சியக்கனவுக்கு எதிரானவர் அல்ல . இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான சிந்தனையாக அவர் மார்க்ஸியத்தையே காண்கிறார் . அத்துடன் மார்க்ஸியத்தின் போதாமைகளைப் பற்றிய பிரக்ஞை கொண்டு அவற்றை ஈடு செய்வதற்கான சுயசிந்தனைகளில் அவர் ஈடுபடுகிறார் . வர்க்கப்போராட்டம் மூலம் பொருளியல் விடுதலை அடைந்தால் மட்டும்போதாது தனிநபரின் மனவிடுதலையும் தேவை என்பது அவரது முதல்கட்ட மாற்றுக்கருத்த ‘க இருந்தது. அத்துடன் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்ற பிரிவினைகள் தத்துவ மட்டத்தில் காலாவதியாகிவிட்டன என்ற புரிதலும் அவருக்கு உருவாகியது .

‘ஏழாண்டு இலக்கியவளர்ச்சி ‘ -யில் தளையசிங்கம் இலக்கிய அரசியலை அடிப்படையாகக் கொண்டு ஈழச் சூழலில் செயல்படும் மாறுபட்ட கருத்தியல் போக்குகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு இடையேயான அதிகார ஓட்டங்களை சித்தரித்துக் காட்டுகிறார் .அவ்வதிகாரப் போக்குகள் எப்படி தனி மனிதர்களின் வழியாகச் செயல்பட்டன என்பதை விளக்குகிறார் .சிலமாற்றங்களுடன் அப்போக்குகள் தமிழகத்திலும் இருந்ததனாலும் அவற்றை மதிப்பிடுவதில் தளையசிங்கம் காட்டிய அபூர்வமான கூர்மையும் சமரசமற்ற தீவிரமும் காரணமாகவும்தான் பலவருடங்கள் கழித்து தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அந்நூல் தமிழ்ல் முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது ,இன்றும் விவாதிக்கப்படுகிறது . அந்நூலில் ஒரு முக்கிய இலக்கிய விமரிசகராக தன்னை அடையாளம் காட்டும் தளையசிங்கம் எஸ் பொன்னுத்துரையை ஒரு ஆற்றல் மிக்க எழுத்தாளராக அடையாளம் காட்டி அவருடைய மொழிமோகத்தை கண்டித்து முன்னிறுத்துகிறார் . அடுத்த கட்டத்துக்கு ஈழ எழுத்தை எடுத்துச் செல்லும் முதன்மைப் படைப்பாளியாக தன்னையும் குறிப்பிடுகிறார் .

ஆனால் போர்ப்பறையில் தளையசிங்கத்தின் இலக்கு மாறுபடுகிறது . தத்துவ தேடல் முதன்மைப்படுகிறது. அப்போக்கு மெய்யுளில் உச்ச நிலையை அடைகிறது. இதன் விளைவாக அவர் முன்வைத்த அளெளகோல்கள் மாறுபடுகின்றன. கருத்தியல் செயல்பாட்டுக்கு முன்பு தரமறுத்த முக்கியத்துவத்தை இப்போது தளைய சிங்கம் அளிக்கிறார் . கைலாசபதியைக்கூட அங்கீகரிக்கிறார் .ஆனால் எஸ் .பொன்னுத்துரையை முற்றாக நிராகரித்து விடுகிறார் .தத்துவ தேடலை முதன்மைப்படுத்தி அவர் உருவகித்த மெய்யுள் வடிவரீதியான முக்கியத்துவம் உடையதேயானாலும் கலையாக வெற்றிபெறவில்லை . பாரதியின் ஞான ரதம் போல ஒரு தொடர்ச்சியில்லாத வடிவமாக அது நின்றுவிட்டது . தளைய சிங்கம் தன் அடிப்படை சிந்தனைகளுக்காக தமிழில் இன்றுள்ள முக்கியத்துவத்தை பெறுகிறார் .அத்துடன் ஈழ இலக்கியத்தில் ஒரு மரபை தோற்றுவித்த பெருமையும் அவருக்கு உண்டு . அவரது ஆரம்பகால சிறுகதைகளுக்காக அவருக்கு தமிழ் படைப்பிலக்கிய வரலாற்றிலும் முக்கிய இடம் உண்டு :வேதசகாய குமாரின் கருத்துக்கள் இவை .

ஜெயமோகன்: முதலில் ஓர் அடிப்படை விஷயத்தை விவாதிக்க வேண்டுமென விரும்புகிறேன். தளையசிங்கத்தின் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி முக்கியமாக ஒரு இலக்கிய அரசியல் [Polemics ] நூல் . உலகம் முழுக்கவே இலக்கிய சூழலில் புதிய கருத்துக்கள் உருவாவதற்கு இலக்கிய அரசியல் பெரும் பங்கு ஆற்றியுள்ளது என நாம் அறிவோம் .சமீபத்தில்தான் பிளேக் கின் இலக்கிய அரசியல் கட்டுரைகள் சிலவற்றை படித்தேன் . அவற்றில் தனிப்பட்ட கோபதாபங்கள் ஏராளமாக உள்ளன என்றாலும் அறிவார்ந்த வேகம் பல புதிய எல்லைகளை சென்று தொட்டு மீள்கிறது. பின் நவீனச் சூழலுக்கு இலக்கிய அரசியல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது . தமிழில் பல பிரபலமான இலக்கிய அரசியல் விவாதங்கள் உள்ளன . பாரதி மகா கவியா இல்லையா விவாதம் [ கண்ணன் என் கவி -சிட்டி கு ப ராஜகோபாலன்] புதுமைப்பித்தனுக்கும் கல்கிக்கும் நடந்த தழுவல் குறித்த விவாதம் [ ரசமட்டம் கட்டுரைகள் ] க .நா .சுவுக்கும் கைலாசபதிக்கும் நடந்த விவாதம் , வெங்கட் சாமிநாதனுக்கும் கைலாசபதி குழுவுக்கும் நடந்த விவாதம் [ மார்க்ஸின் கல்லறையில் இருந்து ஒரு குரல் வெ. சாமிநாதன் ] ஜெயகாந்தன் படைப்புகளை தினமணி சுருக்கியது சம்பந்தமாக வெங்கட் சாமிநாதன் எழுத எழுந்த விவாதம் [அழ வேண்டாம் வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும் – அசோகமித்திரன் ] பிரமிள் வெ.சாமிநாதன் இருவருக்கும் இடையே நடந்த விவாதங்கள் [விமரினாஸ்ரமம் ] போன்றவை முக்கியமான்வவை . இந்த விவாதங்கள் எந்த அளவுக்கு தமிழ் இலக்கிய உலகுக்கு பயன்பட்டுள்ளன ? இவ்ற்றின் முக்கியத்துவம் என்ன ? தளையசிங்கத்தின் இந்த நூல் அளவுக்கு தரமான இலக்கிய அரசியல் நம்மிடையே ஏன் இல்லை ?

எம் யுவன் : இதைப்பற்றி எனக்கு சில சொல்ல இருக்கிறது ஜெயமோகன். சமீப காலமாக ஒரு சாரார் இந்த இலக்கிய விவாதங்களை வெறும் குழுச்சண்டைகளாகவும் குழாயடிச்சண்டைகளாகவும் சித்தரித்துக் காட்ட முயன்று வருகிறார்கள் . இலக்கியவாதிகளுக்கு இடையே ஒற்றுமை தேவை என்று உபதேசம் செய்பவர்களும் பெருகி வருகிறார்கள் . இலக்கியத்தின் அடிப்படைகளையும் இலக்கியம் இயங்கும் விதத்தையும் சற்றும் அறியாமல் மேலோட்டமாக செய்யப்படும் ஒரு விமரிசனம் இது என்பது என் கருத்து . நான் தனிப்பட்ட முறையில் எந்த விவாதத்திலும் கலந்துகொள்ள மாட்டேன் . அது என் இயல்பல்ல .ஆனால் தமிழில் நடந்த இந்த விவாதங்கள் மிக முக்கியமானவை என்று கருக்துகிறேன். நாம் கருத்துக்களின் முரண்பாட்டியக்கத்தில் [ Dialectics ] நம்பிக்கை கொண்டிருந்தால் இவ்விவாதங்களே கருத்துச்சூழலை முன்னெடுத்துச் செல்பவை என்பதைக் காணமுடியும் .இவற்றை தவிர்த்துவிட்டு எவரும் நமது கருத்துச்சூழலைப்பற்றி எதுவும் பேசிவிடமுடியாது என்று தெரியும் . நீ சொன்ன விவாதங்கள் வழியாகத்தான் இங்கு இலக்கியத்துக்கும் கலைகளுக்கும் இடையேயான உறவு , இலக்கியத்தின் சமூகப்பொறுப்பு பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டு தெளிவு உருவாகியுள்ளது . இன்றைக்கு நாம் இந்த அளவுக்கு பேசுகிறோம் என்றால் அந்த விவாதங்களின் இரு தரப்பையும் நாம் கவனித்து வளர்ந்தோம் என்பதுதான் காரணம்…

நாஞ்சில் நாடன் : அது தான் என் கருத்தும் .என்னைபொறுத்தவரை நானும் எந்த விவாதத்திலும் இறங்க விரும்பாதவன்ன்தான் .ஆனால் விவாதங்களை கவனித்துத்தான் என் சிந்தனைகளை விரிவாக்கிக் கொண்டேன் .

மோகனரங்கன்: புதிய கருத்துக்கள் மொழிபெயர்ப்பு மூலமேகூட வந்து சேரும் . ஆனால் விவாதங்கள்தான் நமக்கு சிந்திக்க கற்றுத்தருகின்றன . விவாதங்களின் எல்லாதரப்பையும் நாம் கவனிக்கும் போது நமக்கு ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராயும் பயிற்சி கிடைக்கிறது . தொடக்க காலத்திலாவது இலக்கிய விவாதங்களை கவனிக்காத ஒரு வாசகனுக்கு இலக்கியம் பற்றி சிந்திக்கவே முடியாது …

வேதசகாய குமார் : நாங்கள் [நானும் ராஜமார்த்தாண்டனும் ] கொல்லிப்பாவை இதழ் நடத்தியபோது அதில் தான் வெங்கட் சாமிநாதனும் பிரமிளும் தொடர்ந்து விவாதித்தார்கள் .அப்போது பலர் இது குறித்து என்னிடம் கேட்டதுண்டு .பதில் சொல்லி சொல்லி நாங்கள் களைத்துப் போய்விடுவோம். விவாதத்தின் எல்லைகளை ஆசிரியர்கள் வகுக்கவும் முடியாது .

ஜெயமோகன்: விவாதங்கள் பற்றிய என் கருத்தும் இதுதான் .இதை நான் ஏற்கனவே குமுதம் உட்பட உள்ள இதழ்களில் சொல்லியும் இருக்கிறேன். உண்மையில் வைணவ உரை மரபிலும் சைவ சித்தாந்த மரபிலும் நடந்த விவாதங்கள் அளவுக்கு அதி தீவிரமான கருத்துப் போராட்டங்கள் இன்னமும் நவீன இலக்கியச் சூழலில் நடைபெறவில்லை . நவீன இலக்கியத்தில் பேணப்பட்ட குறைந்தபட்ச நாகரீகம் கூட மேற்குறிப்பிட்ட தத்துவ /மத விவாதங்களில் பேணப்படவும் இல்லை .ஆகவே விவாதங்களைப்பற்றி சிலர் இப்போது சொல்லும் அப்பாவித்தனமான கருத்துக்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை . ஆனால் நமது விவாதங்களில் உள்ள தரம் பற்றி நாம் விவாதிக்கத்தான் வேண்டும் . நமது விவாதங்கள் பெரும்பாலும் அடிப்படையான தத்துவபிரச்சினைகளுக்குள் போவதில்லை . அதாவது தரப்பை எத்தனை மூர்க்கமாக முன்வைத்தாலும் அத்ன் அடிப்படை சக்தியாக சித்தாந்தம் இருந்தபடியே இருக்கவேண்டும் . அப்படி இருந்தால்தான் விவாதம் மூலம் ஒரு பொதுத்தளம் உருவாகி வரமுடியும்….

சூத்ரதாரி: அதைப்போல கருத்துக்களில் நேர்மையும் முக்கியமல்லவா ? வெறுமே விவாதத்துக்காக விவாதம் , இடத்துக்கு ஏற்ப மாறும் கருத்து என்றெல்லாம் விவாதம் நடக்கும் போது அதில் என்ன பயன் ?

எம் யுவன் : தமிழ் விவாதங்களில் கண்டிப்பாக அப்படிப்பட்ட ஆழமான தளங்கள் வெளிப்பட்டபடித்தான் இருக்கின்றன. உதாரணமாக நாட்டார் கலைகளில் உள்ள தன்னைமறந்த கலைவேகம் நவீனகலையில் தேவை என்று வெங்கட் சாமிநாதன் எழுதினார் . நாட்டார் கலைகளை அப்படியே ஒரு நவீனமனம் ரசிக்க முடியாது அதன் சாராம்சமான பகுதிகளை மறு ஆக்கம் செய்யத்தான் முடியும் என்று பிரமிள் பதில் சொன்னார் …. இதை கவனிக்கும் ஒருவர் மூன்றாவது தரப்பு ஒன்றுக்கு போகவும் இடம் இருக்கிறது …….

ஜெயமோகன்: அப்படிப்பட்ட முக்கியமான பலதளங்களை நம் விவாதங்கள் அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளன என்பது உண்மைதான் . ஆனால் பொதுவாக தனிப்பட்ட தாக்குதல்கள் வசைகள் ஏராளமாக காணக்கிடைக்கின்றன. எதிரியின் கருத்தை திரிப்பது , அதன் பின்னணித்தளத்தை தவறான அர்த்தம் வரும்படி திருகுவது போன்ற விஷயங்களை பிரமிள் தயகமேயில்லாமல் செய்துள்ளார் . வெங்கட் சாமிநாதனும் கடுமையான தனிப்பட்ட சொல்லாட்சிகளைமுன்வைக்க தயங்கியவரல்ல . இதெல்லாம் விவாதத்தின் பொதுவான தளத்தை பெரிதும் குறைத்து விட்டன. இன்னொன்று சில விஷயங்களில் தனிப்பட்ட கோபங்கள் தவிர வேறு இலக்கிய ரீதியான பிரச்சினையே இல்லமலும் இருந்ததுண்டு .இலக்கிய பிரச்சினையில் தொடங்கினாலும் கூட தனிப்பட்ட பிரச்சினைகளில் போய் முடிந்துள்ளந சில விவாதங்கள் ….

வெங்கட் சாமிநாதன் : என் தரப்பை சொல்லிவிடுகிறேன் . நான் இலக்கிய விவாதங்களில் எப்போதுமே என் மனசாட்சிப்படி நேர்மையாகத்தான் நடந்துவந்திருக்கிறேன் . நான் எழுதிய எந்த விஷயத்தைப்பற்றியும் எனக்கு இப்போது எந்தவித மனக்குறையும் உறுத்தலும் இல்லை . எனக்கு இலக்கிய ஆக்கத்தில் ஒரு தர அளவுகோல் உண்டு .அதை பாரபட்சமின்றி பிரயோகித்திருக்கிறேன் . அப்படி இல்லை , தெரிந்தவர் வேண்டியவர் என்றெல்லாம் பாரபட்சம் காட்டினேன் என்று எவரும் சொல்ல முடியாது . அந்த நேர்மை எனக்கு இருப்பதால் அதெ நேர்மையை மற்றவர்களிடமிருந்தும் எதிர்பார்க்க எனக்கு உரிமை உண்டு . நான் கடுமையான விமரிசனங்களை முன்வைத்திருக்கிறேன் என்றால் அது இரண்டு விஷயங்களுக்காகத்தான் . ஒன்று , தகுதியே இல்லாத ஒரு நபர் தனிப்பட்ட தொடர்பு ,அரசியல்ச் சார்பு போன்ற காரணங்களுக்க ‘க தூக்கி பிடிக்கப்படும்போது .இரண்டு , இலக்கிய உலகின் போலித்தனங்களைக்கண்டு . நேரடியான வேகத்துடன் இருப்பது போலித்தனமாக இருப்பதை விட மேலானதுதான். கண்டிக்க வேண்டிய விஷயங்கள் என நான் கருதியவற்றை முடிந்தவரை தீவிரமாக கண்டிப்பதுதான் எனது பாணி எனக்கு இலக்கியத்திருந்து எந்த தனிப்பட்ட லாபமும் கிடைக்கவில்லை …

ஆர் பி ராஜநாயகம்: சதங்கையில் முருகேசபாண்டியன் ஒரு விஷயம் எழுதியிருக்கிறார் . எண்பதுகளில் அவர் வீட்டுக்கு வந்து பேசிகொண்டிருந்த சமயவேல் சட்டென்று குரலைத்தாழ்த்தி ‘ ‘ உறுதியான ஆதாரம் கிடைச்சுட்டது .நான் இப்ப கோவில்பட்டியிலேருந்து வாறேன்,வெங்கட் சாமிநாதன் சி ஐ ஏ உளவாளிதான் ‘ ‘ என்றாராம். அந்த பிரச்சாரம் அப்பொது மிக பலமாக இடதுசாரிகளால் முன்வைக்கப்பட்டது

ஜெயமோகன்: இடதுசாரிகள் அவதூறுக்கு அஞ்ச மாட்டார்கள். அவர்களுடைய தலைவர்கள் வெளியேறியபோதுகூட அவதூறு மூலம் தான் ஒழித்துக் கட்டினார்கள்

வேதசகாயகுமார் : வெங்கட் சாமிநாதன் தன்னை எற்று கொண்டவர்கள் சிறப்பாக எழுதாத போது கடுமையாக விமரிசித்திருக்கிறார் . மாற்றுத்தரப்பை சேர்ந்தவர்கள் நன்றாக எழுதியதாக தோன்றியபோது பாராட்டவும் செய்திருக்கிறார் …அதைப்பற்றிநான் சொல் புதிதில் எழுதிய கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்…..

ஜெயமோகன்: இலக்கிய விவாதங்களை அழகியல் சித்தாந்த விவாதங்களாக மாற்ற தமிழில் ஓரளவேனும் சிட்டி

– குபரா விற்குத்தான் முடிந்துள்ளது . தளையசிங்கத்தின் ஏழாண்டு இலக்கியவளர்ச்சி இன்றும் முக்கியமாக கவனிக்கபடுகிறதுஎன்றால் அதற்கு காரணம் இலக்கிய அரசியல் சார்ந்த விவாதம் ஆழமாக சென்று சித்தாந்த தளத்தினை தொடுவதுதான்…

வேதசகாயகுமார்: தளையசிங்கத்தின் பார்வையில் ஒரு முக்கியமான அம்சம் உள்ளது .ஆரம்பத்தில் அவர் இலக்கிய அரசியல் கோணத்தில் எழுதியபோது கைலாசபதி ஒரு முக்கியமான ஆளுமையாக , முதன்மையான எதிர்தரப்பாக அவர் முன் இருக்கிறார் .ஆனால் அந்த தளத்தில் இருந்து விலகி அவர் தத்துவ விவாத தளத்துக்குள் போகப்போக கைலாசபதி காணாமல் போய்விடுகிறார். அதாவது கைலாசபதியை தளையசிங்கம் இலக்கிய அரசியல் ரீதியாக மட்டுமெ பொருட்படுத்தினார் ……

ஜெயமோகன்:ஆனால் தளைய சிங்கத்தின் பார்வையில் எப்போதுமே இலக்கிய அரசியல் இருந்தபடித்தானே உள்ளது மெய்யுளிலும் கூட இலக்கிய அரசியல் உள்ளது, சற்று மாற்றப்பட்ட வடிவில்….

வேதசகாய குமார் : தளையசிங்கம் மெய்யுளில் இலக்கியஅரசியலின் வடிவத்தை கையாள்கிறார், அவ்வளவுதான்

ஜெயமோகன்: தளைய சிங்கம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் தனிநபர் சார்ந்த தாக்குதல்களை நிறைய செய்கிறார். இது சரிதானா ?

வெங்கட் சாமிநாதன்: படைப்பாளி எழுதும் போது தன்னுடைய அந்தரங்க ஆளுமையைத்தான் முன்வைக்கிறார் . அதை த்தான் சமூகம் பார்க்கிறது. நாம் படைப்புமூலம் அவனது மனத்துக்குத்தான் போய் சேர்கிறோம் .அது முக்கியமானது அதை அறிய அவனது அந்தரங்கம் முக்கியமானதேயாகும் .ஆதற்காக அவனது அந்தரங்க விஷயங்களை எல்லாம் தோண்டியெடுக்க வேண்டுமென சொல்லவரவில்லை . அதை மேற்கே நிறைய செய்கிறார்கள். ஆனால் அவன் தன் படைப்பில் வெளிப்படுத்தும் ஆளுமை ,அதன் தார்மீகம் சார்ந்த அவனது சுயவாழ்க்கையை கணக்கில் கொண்டுதான் பேச வேண்டும் .

ஜெயமோகன்: உதாரணமாக ஞானி திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோயிலில் தன் அறுபதாம் வயது நிறைவுக்கு பூஜை நடத்தினார் என்று பரவலாக சொல்லப்பட்டது . அ மார்க்ஸ் இதை வைத்தே ஞானியை நிராகரித்து விடுகிறார் ஒரு கட்டுரையில் .இது எந்தளவுக்கு சரியானது ?

சூத்ரதாரி : அது அவரது குடும்ப விஷயம் . அதை விவாதமாக்குவது சரியல்ல..

ஜெயமோகன்: என் தரப்பை சொல்லிவிடுகிறேன். எழுத்துக்கு பின்னால் உள்ள நோக்கமும் அதை ஆக்கும் ஆளுமையும் மிக முக்கியமானது , அதில் இருந்து எழுத்தாளனை பிரித்து விட முடியாது என்றே நான் எண்ணுகிறேன் . ஞானி நடத்திய சடங்கு தவறு என்பதற்கோ கண்டிப்பதற்கோ நமக்கு உரிமை இல்லை . அதேபோல அந்த ஒரு விஷயத்தை வைத்து அவரை பொய்யர் என்றோ வேடதாரி என்றோ நிராகரிப்பதும் சரியல்ல . ஆனால் ஞானி கடவுள் ஏன் இன்னும் இறக்கவில்லை என்று நூல் எழுதியவர் . அவரை அறிய இச்சம்பவம் மிக முக்கியமானதே . கைலாசபதியைப்ப்ற்றி தளையசிங்கம் தரும் தனிப்பட்ட தகவல்கள் அவரது கருத்துநிலைகளை அறிய மிக முக்கியமானவைதான் . கைலாசபதியை ஈழ உயர்வட்ட உயர்சாதி மனிதர் என்றும் அரசு ஆதரவு இதழுக்கு உறவு பலத்தால் ஆசிரியரானவர் என்றும் பிரசுரசாதன வசதியை தன் குழுவை வளர்க்க பயன் படுத்தியவர் என்றும் தளைய சிங்கம் சொல்கிறார் . இதை நாம் தவிர்க்கமுடியாது . இங்கு அறிமுகமான கைலாசபதி ஒடுக்கப்பட்ட வற்கத்தின் புரட்சியின் ஆசான். சொந்தமாக ஒரு தட்டச்சு பொறி வைத்திருந்ததற்காக நாடோடியான க நா சுவை முதலாளி என்று சொன்னவர் .

நாஞ்சில்நாடன்: இந்த விஷயம் பற்றி எனக்கு சற்று தெரியும் . ஞானியை தெரிந்தவன் என்ற முறையில் அவர் மத உணர்வுகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவர் என்பதை நான் உறுதியாகவே சொல்ல முடியும்..

தாமரை ஆறுமுகம்: ஞானி கோயிலில் சாமி கும்பிட்டார் , ஆகவே அவர் மதவாதி , பழமையாளர் என்றெல்லாம் முத்திரை குத்தும் போக்கு அவதுற்று மட்டும்தான்.

நாஞ்சில்நாடன் : ஞானியின் மனைவியின் ஆசை அது .அதை அவர் மறுக்க முடியாது .விழி இழந்தபிறகு அவர் அவர்களையே சார்ந்து இருக்கிறார் . அவர்கள் வற்புறுத்தும் போது அதை அவரால் மீறமுடியவில்லை என்று சொன்னார் .

ஜெயமோகன்: அதை தவறென்று சொல்லவில்லை . ஈ எம் எஸ் மனைவி குருவாயூருக்கு சாமி கும்பிட சென்றபோது வாசலில் பகிரங்கமாக காத்திருந்தார் . அந்த பகிரங்கம் தேவை .இங்கு இந்த உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் முத்திரை குத்தி ஒழித்துக்கட்ட சிறுமைப்படுத்த முய்ற்சி செய்வார்கள் என்பது உண்மைதான் . ஆனாலும்கூட பகிரங்கமாக இருக்கும் தார்மீக பொறுப்பு அவருக்கு உண்டு . அப்படி இல்லாதபோதுதான் அது இலக்கிய அரசியல் விஷயமாக ஆகிறது ….

வேதசகாயகுமார்: இன்னொரு விஷயம் இப்படி பிறரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் எப்படிப் பட்டவர்கள் அவர்களை இதே விமரிசனத்துக்கு ஆளாக்கினால் எப்படி இருக்கும் என்பது . அவர்களை எதிர்ப்பவர்களுக்கு அதில் ஆர்வமில்லை என்பதே அவர்களுடைய பலம்

ஜெயமோகன்: திண்ணை இணைய விவாதத்திலே வ ந கிரிதரன் என்ற புலம்பெயர்ந்த ஈழ எழுத்தாளர் தளையசிங்கம் பற்றி சொல்லும்போது அவர் ஏழாண்டு இலக்கியவளர்ச்சியில் எஸ் பொன்னுத்துரை போன்றவர்களை சாதி சொல்லி தாக்குகிறார் என்று குற்றம் சாட்டினார் .

வேதசகாயமுமார் : சாதியை கணக்கில் கொள்வதில் என்ன தவறு ? உண்மையான மார்க்ஸிய விமரிசனம் அதைத்தானே செய்யவேண்டும் ? மனிதன் அவனது சமூக சூழல் பிறப்புசூழல் ஆகியவற்றிலிருந்து வேறானவனல்ல. அவனது ஆளுமையை அவற்றையும் சேர்த்து கணிப்பது ம்க அவசியமான ஒன்றுதான் .நம் சூழலைவைத்து பார்த்தால் பொதுவாக பிராமண எழுத்தாளர்களைப்பற்றி மட்டுமே அப்படி செய்திருக்கிறோம். மற்றவர்களைப்பற்றி பேசுவதேயில்லை.அவர்கள் அதை விரும்புவதில்லை என்பதுதான் காரணம். நமது விமரிசனத்தில் இடக்கரடக்கல்கள் அதிகம். பிரச்சினை வராமல் எழுதுவோம்.தளையசிங்கத்துக்கு பயமே இல்லை .ஆகவே அவருக்கு தயக்கமும் இல்லை.

ஜெயமோகன்: கிரிதரனின் மனக்குறை என்னவென்றால் படைப்பை கணக்கில் கொள்ளாமல் சாதியை மட்டுமே கணக்கில் கொள்கிறார் என்பதே…

வேதசகாயகுமார் : ஏழாண்டு இலக்கியவளார்ச்சி இ;லக்கியபிரதிகளைப்பற்றிய விமரிசனமல்ல. அது பொதுவாக இலக்கியக் கருத்தியல் போக்குகளைப்பற்றிய அலசல். இதில் ஒவ்வொரு எழுத்தாளாரைப்பற்றி பேசும்போதும் த்ளைய சிங்கம் முதலில் அவர்கள் படைப்புகளைப்பற்றித்தான் பேசுகிறார் என்பதைக் கவனிக்கலாம். பொன்னுத்துரையின் ஆக்கங்கள் பற்றி மிக விரிவாகவே தளையசிங்கம் பேசுகிறார் .பிறகு அன்றைய பொதுப்போகுகளைப்பற்றி பேசும்போது அதில் அங்குள்ள சமூக அமைப்பும் சூழல் எந்த பங்காற்றுகிறது , எழுத்தாளார்களின் தனிப்பட்ட ஆளுமை எப்படி அதன் மூலம் வடிவமைக்கப்படுகிறது என்றெல்லாம் பேசுகிறார் . அங்குதான் சாதி பற்றிய பேச்சுவருகிறது .

ஜெயமோகன்: தளையசிங்கத்தில் உயர்சாதிமனப்பான்மையை குற்றம் சாட்டுகிறார் கிரிதரன். வியப்பு என்னவென்றால் அவருக்கு தளையசிங்கம் தலித் மக்களுக்ககாக போராடி உயிர் துறந்தவர் என்ற விஷயமே கூட தெரியவில்லை .

வேதசகாய குமார் : வருத்தம் தரக்கூடிய விஷயம்தான் ,ஆனால் அப்படித்தான் எப்போதுமே நிலைமை இருக்கிறது .தளையசிங்கம் தலித் மக்களை பற்றி என்ன சொல்கிறார் ? ஒரு தலித் அறிவுஜீவி அடிப்படையில் அறிவார்ந்த ஆணவமும் , அதிகார இச்சையும் உடையவராக இருக்கவேண்டும் என்கிறார் .இல்லையேல் அவரது வளர்ப்பு சூழல் காரணமாக தாழ்வுணர்சியும் அதன் வெளிப்பாடான அங்கதமும் கசப்பும் நிரம்பிஅயவராக எதிர்மறைப்போக்கு உடையவராக ஆகிவிடுவார் என்கிறார் . அது உயர்சாதி மனப்பான்மையா என்ன ?

தேவகாந்தன்: தளையசிங்கம் தலித்துக்களுக்காக போராடி அடிபட்டபோது முற்போக்கு அமைப்புகள் அவரை உதாசீனம் தான் செய்தன.

ஜெயமோகன்: மல்லிகை ஆசிரியரான டொமினிக் ஜீவா பற்றி முதளையசிங்கம் இப்படி சொன்னதாக என் கெ மகாலிங்க ம் என்னிடம் சொன்னார் . அவர் தலித்தாக இருந்தபோதிலும் தளையசிங்கம் போராடிய செய்தியையோ அடிப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த செய்தியையோ தன் இதழில் போடவில்லை.கைலாசபதி மீதான பயம்தான் காரணம். ‘ ‘ எழுத்தாளர் வீட்டு பெட்டைய வயசுக்கு வந்தா செய்தி போடுறவனுக்கு இது செய்தியெண்டு தோணவில்லை . நான் செத்தால் அவனுக்கு என் படம் கூட கொடுக்கக் கூடாது ‘ ‘ என்று தளையசிங்கம் சொன்னாராம்.

மோகனரங்கன் : தளையசிங்கம் ஒரு இடத்தில் சொல்கிறார், புதுமைப்பித்தனும் மெளனியும் மார்க்ஸியத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் மேலும் நன்றாக எழுதியிருக்கலாம் என்று. ஆனால் தமிழில் மார்க்ஸியத்தை மறுப்பவர்களே நல்லபடைப்பாளிகளாக இருந்துள்ளார்கள். இதைப்பற்றி வேதசகாய குமார் என்ன எண்ணுகிறார் ?

வேதசகாய குமார் அதைப்பற்றி நான் எனது கட்டுரையின் முதல் பகுதியிலேயே சொல்லியிருக்கிறேன். படைப்பாளிக்கு தேவை சிந்தனை. அது அவனுக்குள் இருந்து அவனது தேடலின் விளைவாக உருவாகிவரக்கூடியது. ஆனால் நமது சிந்தனையாளர்களிடம் உள்ளது தத்துவ ஈடுபாடு.அது அவர்களுக்கு வெளியே உள்ள ஏதாவது ஒரு தத்துவம் மீதான ஈர்ப்போ விசுவாசமோ தான்.

மோகனரங்கன்: தளையசிங்கம் இங்கு தத்துவபிடிப்பு பற்றித்தானே சொல்கிறார் ?

அன்பு வசந்த குமார்: கூர்ந்துபார்த்தால் ஒன்று தெரியும் தளைய சிங்கம் மார்க்ஸியத்தின் இலட்சியவாத அம்சத்தை பற்றித்தான் அதிக கவனம் தந்து பேசுகிறார். அதன் முரணியக்கஇயங்கியல் இந்த காலகட்டத்துக்கு மட்டும் உரியது அடுத்த கட்டத்தில் மதிப்பிழக்கக் கூடியது என்கிறார் .ஆகவே மெளனியும் புதுமைப்பித்தனும் கட்சி உறுப்பினர் ஆக இருக்கவேண்டும் என்றோ ,அல்லது மார்க்ஸிய அரசியல் செயல்திட்டத்தின் படி படைப்புகளை ஆக்கியிருக்கவேண்டுமென்றோ அவர் சொல்லியிருக்க வாய்ப்பில்லை . அவர்களில் இருந்த எதிர்மறையான , இருண்மையான நோக்கினை மார்க்ஸிய இலட்சியவாதம் பெரிதும் குறைத்து மேலும் உத்வேகமும் தீவிரமும் கொண்ட படைப்புகளை எழுதச்செய்திருக்கும் என்று அவர் கூறுகிறார் என்று கொள்ளலாம்….

ஜெயமோகன்: தளையசிங்கம் சொன்னது ஒரு வகையில் சரி என்றே நானும் எண்ணுகிறேன் . மார்க்ஸியம் வரலாற்றுப்பார்வையை அளிக்கிறது .அதை எதிர்த்து சிந்தித்தால்கூட நாம் நேர் எதிர்மறையான வரலாற்றுப்பார்வையை சென்றடைவோம். மெளனிக்கும் புதுமைப்பித்தனுக்கும் வரலாற்றுப்பார்வை ஏதுமில்லை என்று நாம் அறிவோம்.மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும்ன்பதில்லை ,ஓரளவாவது பயின்றிருக்கவேண்டியது அவசியம்…அதையே தளையசிங்கம் சொல்கிறார் என்று படுகிறது….

நாஞ்சில்நாடன்: என்னை பொறுத்தவரை எந்த விதமான தத்துவ பயிற்சியும் கலைக்கு எதிராகவே இருக்க முடியும் . இசைப்பாடகன் இசையிலக்கணத்தை அதிகமாகத் தெரிந்துகொண்டால் பிறகு பாட்டு சுவையாக இருக்காது என்பார்கள் .தத்துவத்தில் ஆர்வம் ஏற்படும்தோறும் எல்லாவற்றுக்கும் காரணம் கண்டுபிடிப்பது , எல்லாவற்றையும் தொகுத்துக் கொள்வது என்றெல்லாம் ஆர்வம் ஏற்பட்டுவிடும் .தளையசிங்கத்துக்கு நேர்ந்ததும் இதுவே .அவர் தத்துவவாதியாக ஆகும்போது கலையின் நுட்பங்கள் எல்லாம் போய்விடுகின்றன, வெறும் தர்க்கங்கள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன..

சூத்ரதாரி: வேத சகாய குமார் சிந்தனை வேறு தத்துவம் வேறு என்கிறார் . கலைஞனுக்கு சிந்தனையும் இருக்கக் கூடாதா ?

நாஞ்சில்நாடன்: எனக்கு அப்படி இரண்டு இருப்பதாக படவில்லை . தன் சொந்த சிந்தனையாக இருந்தாலும் சரி ஏற்றுக் கொண்ட தரப்பாக இருந்தாலும் சரி கலைஞன் எதற்காகவும் வாதாடக்கூடாது .

தேவதேவன்: எல்லா தத்துவங்களும் சாராம்சமான மெய்த் தரிசனங்கள் குறிப்பிட்ட காலத்துடன் உறவு கொண்டு வெளியாகும்போது உருவாகக் கூடியவை மட்டும் தான் . உண்மைக்கு காலம் கிடையாது ,இடம் கிடையாது . ஆனால் தத்துவத்துக்கு இதெல்லாம் உண்டு .ஆகவேதான் தத்துவம் காலாவதியாகிறது .உண்மை ஒரு போதுமே காலாவதியாவது இல்லை . தத்துவ வாதி தர்க்கம் மூலம் கண்டு சொல்ல முற்படும் அதே உண்மையைத்தான் கலைஞனும் கலைமூலம் சொல்ல முற்படுகிறான் . அவனால் தத்துவவாதியை விட நுட்பமாக மேலும் செல்ல முடியும் .இலக்கியமும் கலையும் அவற்றின் உன்னத நிலையில் காலத்தை கடந்து செல்ல முடியும் . அதனால்தான் நேற்றைய தத்துவங்களெல்லாம் இன்று பழையவையாக ஆகிவிட்டபோது இலக்கியப்படைப்புகள் மட்டும் நூதனமாகவே நின்று கொண்டிருக்கின்றன… தளையசிங்கம் உண்மையின் தரிசனத்தை கண்டடைந்தவர் , அந்தரங்கமாக அதை உணர்ந்தவர். அதை அவர் தத்துவ ரீதியாக முன்வைக்கும்போது அன்றைய சிந்தனைகளுடனும் அரசியல் சமூக சூழலுடனும் தொடர்பு படுத்தித்தான் முன்வைக்க முடிகிறது . ஆகவே அது கால இடத்துக்கு கட்டுப்பட்டதாக உள்ளது .அவர் அதை கலைமூலம் முன்வைத்திருந்தால் அதன் நித்திய மதிப்பு அதிகமாக் இருந்திருக்கும் . அப்படி முன்வைக்க முடியாமல் போனதே தளையசிங்கத்தின் தோல்வி.

ஜெயமோகன்: கலைப்படைப்பு அப்படி நேரடியாக உண்மையை வெளிப்படுத்தும் ஒரு வடிவமாக இருக்கமுடியாது. உண்மையின் தரிசனம் ஒரு மின்னல் போல அபூர்வமான ஒரு கணமாகத்தான் இருக்கும் .அதை அப்படியே வெளிப்படுத்தும் பொறுப்பு மட்டுமே கலைக்கு இல்லை . கலை அதை வாழ்க்கையின் எல்லாதருணக்களுடனும் இணைக்க வேண்டியுள்ளது .அப்போதுதான் அதற்கு புறவயமான மதிப்பு ஏற்படும் . கலைப்படைப்பின் வடிவம் எப்படி புறவயமாக பயிந்று அடையப்படுகிறதோ அப்படித்தான் கலைப்படைப்பின் தருக்க பூர்வமான கட்டுக் கோப்பும் . ப்டைப்புக்கு தொகுப்புத்தன்மையை அளிப்பது அதுதான் .அதற்கு தத்துவ அடிப்படை கண்டிப்பாக தேவை .

எம் . யுவன்: நாம் இங்கே வார்த்தைகளைப்போட்டு குழப்பிக் கொள்கிறோம் .தத்துவ நம்பிக்கை வேறு .தத்துவதேடல் வெறு. கலைப்படைப்புக்கு தத்துவ தேடல் கண்டிப்பாக இன்றியமையாதது. எப்போது வாழ்க்கையை இலக்கியம் மொழிவழியாக சந்தித்து தொகுத்துக் கொள்ள முயல்கிறதோ அப்போதே வேறு வழியேஇல்லாமல் இலக்கியத்தில் தத்துவம் வந்தாகிவிட்டது .அதை தவிர்க்கவே முடியாது .தத்துவம் தேவையில்லை , தங்களுக்கு ஆர்வமில்லை என்று சொல்பவர்களிடம் கூட தத்துவம் இருக்கும் . அது அவர்கள் மரபாக பெற்று இயல்பாக கொண்டிருக்கும் தத்துவ நம்பிக்கையாக இருக்கும் . அதை அவர்கள் வாழ்க்கையைப்பற்றிய இயல்பான உண்மைகளாகவும் , அனுபவஞானமாகவும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவற்றை அவர்கள் ஐயப்பட ஆரம்பித்தார்கள் என்றால் தத்துவத்தேடல் ஆரம்பித்துவிடும் . அது இலக்கிய ப்படைப்புக்கு ஆதாரமாக உள்ளதேடல் …

வேதட்சகாயகுமார்: ஏறத்தாழ நான் சொன்னதும் இதைத்தான் . தத்துவ நம்பிக்கையில் சிந்தனைக்கு இடமில்லை . தத்துவ தேடல் சிந்தனையின் தீராத ஓட்டம். .தளையசிங்கம் தத்துவ நம்பிக்கை உடையவரல்ல . தத்துவத்தை தாண்டிச்செல்லும் தேடல் உடையவர் அவர்.

வெங்கட் சாமிநாதன்: எனக்கு அதில் சந்தேகம் தான் இருக்கிறது. தளையசிங்கம் முன்னகர்ந்துகொண்டே இருந்தார் என்பதிலோ அவருடைய தேடல் முக்கியமான ஒன்று என்பதிலோ எனக்கு சந்தேகமேதுமில்லை. ஆனால் அவருக்கு மார்க்ஸியத்திலிருந்து கிடைத்த பொன்னுலகம் என்ற கருத்து மீது ஒரு மிதமிஞ்சிய ஈர்ப்ப்பு ,அதை நான் Obsession என்று சொல்லதயங்கமாட்டேன் ,இருந்தது . அந்த நம்பிக்கை அவரை தொடர்ந்து கடைசிவரை இயக்கியது .எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பொன்னுலகைப்பற்றிய செய்தியை சொன்ன தீர்க்கதரிசி என்ற இடத்தை தளையசிங்கம் மிகவும் விரும்பினார் , அதற்காக அதை அவர் மீண்டும் மீண்டும் சொன்னார் என்றுதான்.தளையசிங்கத்தின் எல்லா கருத்துக்களையும் இந்த புதுயுகம் என்ற கருத்து திரித்துவிட்டது. உதாரணமாக ஏற்கனவெ சொன்னோமே மெளனி புதுமைப்பித்தனைவிட ஜெயகாந்தனை அவர் முக்கியமாக காண்கிறார் என்று அதற்கு காரணமும் இதுதான் .கலைக்கும் பிரச்சாரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைக்கூட காணமுடியாதவராக அது அவரை மாற்றி விட்டது .இது துரதிர்ஷ்டவசமானது என்றே சொல்வேன்.

தேவதேவன்: அப்படிப்பார்த்தால் எல்லா தத்துவ ஆசிரியர்களும் ஏதேனும் ஒரு தரிசனத்தையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள்.

மோகனரங்கன்: வேதசகாயகுமார் பேசும்போது எதிர்காலத்தில் நாவல் வளரும் சிறுகதை தளரும் என்று கைலாசபதி சொல்லியிருப்பதைப்பற்றி சொன்னார் . அது எந்த அளவுக்கு முக்கியமான் கருத்து ?

வேதசகாயமுமார் : சிறுகதையை பார்க்கிலும் நாவல் தத்துவ சித்தாந்த விவாதத்துக்கு ஏற்ற வடிவம் . ஆகவே அது வளரும் என கைலாசபதி சொல்லியிருக்கலாம்.ஆனால் இரு வடிவங்களும் மாற்றம் பெற்று வள்ர்ந்தபடித்தான் இருக்கின்றன. தளையசிங்கத்தை பொறுத்தவரை இன்றுள்ள எல்லா கலைவடிவங்களும் தளரும். புத்தம் புதிய வடிவங்கள் உருவாகிவரும் . அதைத்தான் அவர் மெய்யுளில் எழுதிக்காட்ட முயன்றார் . அவரைப்பொறுத்தவரை கற்பனை மூலம் மாற்று யதார்த்த சித்திரங்களைமுன்வைக்கும் வடிவங்கள் இல்லாமலாகி மெய்தரிசனத்தின் அனுபூதி நிலையில் நின்றபடி உண்மையை தருக்கமாகவும் கவிதையாகவும் சொல்லும் வடிவமே இனி வரக்கூடியது.

சூத்ரதாரி :மெய்யுளை அந்த உதாரணமாக கூற முடியுமா ?

வேதசகாயகுமார் :மெய்யுள் நம் மனதை கவரும் படி இல்லை . அதற்கு தொடர்ச்சியும் உருவாகவில்லை. ஒரு புது சாத்தியததை ஊகிப்பது வேறு எழுதிக்காட்டுவது வேறு…

ஜெயமோகன் : ஆனால் எனக்கு மிக முக்கியமாக ஒன்று படுகிறது .இப்போது தமிழில் நகுலன் ,பிரேம் போன்றவர்கள் ஒரு வடிவத்தை எழுதிக்காட்டியுள்ளார்கள் .[ நினைவுப்பாதை ,வாக்குமூலம் -நகுலன் ;எரிக்கப்பட்ட பிரதிகளும் புதைக்கப்பட்ட மனிதர்களும் , சொல் என்றொரு சொல்- பிரேம் ] அதை பிரேம் Meta epic என்கிறார் . அதன் வடிவம் ஆச்சரியமூட்டுமளவுக்கு மெய்யுளின் இலக்கணங்களை ஒத்திருக்கிறது .அதை நாம் புறக்கணிக்க முடியாது . ஒன்று அது மெய்யுளைப்போலவே விவாத வடிவில் உள்ளது .அதாவது அவை பிளவுண்ட அல்லது சிதறுண்ட ஆளுமையின் பிரதிகள் . இரண்டாவது அவற்றில் அறிவார்ந்த தருக்கம் கவிதை வரலாறு போன்றவற்றுக்கு இடையேயான எல்லைச் சுவர் தகர்ந்துள்ளது . இதைப்பற்றி பிறகு விரிவாக பேசலாம் . என் கட்டுரையில் கூட எழுதியுள்ளேன். ஆகவே மெய்யுளின் வடிவம் தொடர்ச்சியற்றுப்போன ஒன்றல்ல என்று சொல்லலாம்.

அன்பு வசந்தகுமார்: தளையசிங்கம் கூறும் பிரபஞ்ச யதார்த்தம் ஒரு தத்துவத்தரப்பாக படவில்லை .மிக அகவயமான ஒரு ஆன்மீக கருத்தாகவெ படுகிறது.

வேதசகாயமுமார்: பிரபஞ்சம் தழுவிய ஒரு யதார்த்தம் என்ற அர்த்தத்தில் அப்படி சொல்கிறார் தளையசிங்கம்.மார்க்சியம் பேசும் யதார்த்தம் அப்படிப்பட்டது அல்ல. அது வற்கம் தழுவியது மட்டுமே.

அன்பு வசந்த குமார்: எந்த யதார்த்தமாக இருந்தாலும் மனித அறிதலுக்குள் சிக்கும்போது அது மனிதயதார்த்தம்தான்.

சூத்ரதாரி: மு .தளையசிங்கம் கலை என்பது பரவச விடுதலையை அளிப்பது என்கிறார் அப்படியானால் அவர் கலையின் அனுபவத்தையே முன்வைக்கிறார் என்று சொல்லலாமா ?

அருண்மொழிநங்கை : தளையசிங்கத்தின் மெய்யுளில் அவர் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பே மேலான கலை தரும் பரவசத்துக்கு சமமான பரவசத்தை அளிப்பதாக சொல்கிறார் . அப்படியானால் அவர் சொல்வது கலை தன் வெளிப்பாட் டு முறை மூலம் நமக்கு அளிக்கும் பரவசநிலையை அல்ல . அக்கலை வடிவத்தின் மூலம் நம் மனத்தில் உருவாக்கும் மெய்மையைத்தான். அதேமெய்மையை அறிவியலும் அளிக்கலாம் ,செய்தியும் அளிக்கலாம் . தளையசிங்கத்தின் கருத்தை நாம் உருவம் உள்ளடக்கம் என்ற மரபான பிரிவினைக்குள் அடக்க முயலக்கூடாது .

வேதசகாயகுமார் : இந்த எண்ணத்தை தமிழில் திட்டமிட்டு சுந்தர ராமசாமி உருவாக்கினார் . தளையசிங்கம் ஜெயகாந்தனைப்பற்றி சொல்லிய கருத்துக்கு விரிவான பின்னணி உண்டு என்று கண்டோம்.ஆனால் ஜெயகாந்தன் தன் கதைகளில் சொன்ன கருத்துக்களை ஒட்டித்தான் தளையசிங்கம் இந்த முடிவுக்கு வந்தார் என்றும் , ஆகவே அவர் மார்க்ஸியர்களைப்போல உள்ளடக்கவாதி என்றும் தன் கட்டுரையில் அவர் காட்டிவிட்டார்.தமிழ் நாட்டில் அவரது கட்டுரை வழியாகவே தளைய சிங்கம் அறிமுகம் பெற்றார் என்னும்போது அக்கருத்து ஆழமாக பதிந்துவிட்டது .

மோகனரங்கன்: அந்தக்காலத்தில் உருவமா உள்ளடக்கமா என்ற வாதம் அப்படி ஆழமாக வேரூன்றியிருந்தது .

வேதசகாய குமார்: ஆனால் தளையசிங்கம் தன் ஏழாண்டு இலக்கியவளர்ச்சியில் பெரும்பாலான கருத்துக்களை வடிவ அடிப்படையிலும் மொழி அடிப்படையிலும் தானே முன்வத்துள்ளார் .அதை எப்படி மறுக்க முடியும் ?

அருண்மொழி நங்கை :தளையசிங்கத்தின் கருத்தில் சொன்னால் ஒரு படைப்பு மெய்மையை நம் மனத்தில் எழுப்புவதற்கு வடிவமும் உள்ளடக்கமும் ஒரே போல பங்காற்றுகின்றன என்று கொள்ளமுடியும் .

வேதசகாயகுமார்: வடிவ ரீதியான விமரிசனமே படைப்பின் சாராம்சத்தைமேலும் நெருங்க உதவுவது என்று முதளையசிங்கம் கருதுவதாகக் கூட சொல்லலாம். உதாரணமாக மெளனியை பிரமிள் அக்கதைகளின் உள்ளடக்கமான ஆன்மீக [Mystic] மனநிலையை ஆராய்ச்சி செய்து அவற்றுக்கு புதியவாசிப்பை அளிப்பதன் மூலம் விளக்கினார் . க நா சு அவற்றின் மொழி மற்றும் கூறுமுறையை மட்டுமே கருத்தில் கொண்டார் .தளையசிங்கம் க நா சுவே மெளனியை சிறப்பாக புரிந்து கொண்டு விமரிசிக்கிறார் என்கிறார் .இந்தக்கருத்து மிக முக்கியமான ஒன்று…

சூத்ரதாரி : ஆமாம் . இங்கே மெளனியை மிகச்சிறப்பாக விமரிசித்தவர் பிரமிள் தான் என்ற கருத்து நிலவுகிறது …

மோகனரங்கன்:ஜெய காந்தனின் விழுதுகள் போன்ற ஒரு கதை மெளனி எழுதிய எல்லா கதைகளைவிடவும் மேலானது என்று தளையசிங்கம் சொல்லியிருக்கிறாரே

வேதசகாயகுமார்: தளையசிங்கத்தை பொறுத்தவரை அந்தக்கருத்து உண்மையானதுதான். அவருக்கு இலக்கியப்படைப்பில் சாராம்சமாக திரண்டுவரும் மெய்யின் தரிசனம் முக்கியமானது. மெளனியிலும் புதுமைப்பித்தனிலும் அந்தமெய்யனுபவம் குறித்த ஒரு தத்தளிப்புதான் இருக்கிறது .

வெங்கட் சாமிநாதன்: புதுமைப்பித்தைன் பல கதைகளில் ஆழ்மானமெய்யனுபவம் உள்ளது . ஜெயகாந்தனில் இருப்பது அத்தகைய அனுபவமல்ல , அவ்வனுபவம் பற்றிய ஒரு கருத்து [idea] மட்டும்தான் . அதை தளையசிங்கம் அனுபவத்தின் தீவிரத்தைவிட மேலானதாக பார்ப்பது ஏற்கனவே நான் சொன்னதுபோல அவரது மிதமிஞ்சிய புதுயுக ஈர்ப்பு காரணமாகத்தான் .

நாஞ்சில்நாடன்: எனது கருத்தும் அதுதான் .புதுமைப்பித்தன் கதைகளை ஜெயகாந்தன் கதைகளுடன் ஒப்பிடுவது அபத்தம் .ஜெயகாந்தன் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட இடத்துக்கே போய் சேர்கிறார் .

எம் யுவன்: வெ சா சொன்ன கருத்தையே நானும் சொல்ல விரும்புகிறேன். உண்மையான மெய்யனுபவம் ஜெயகாந்தனின் இக்கதை யில் உள்ளது போல இத்தனை திட்டவட்டமானதாக முடிவுற்றதாக இருக்காது. அதற்கு புதிய புதிய தளங்கள் உருவானபடியே இருக்கும் .அது நம் மனத்தில் வளர்ந்தபடியே இருக்கும். இன்னொன்றும் சொல்லவேண்டும் , விவேகம் அல்லது wisdom ஒரு போதும் மெய்யனுபவமல்ல. அதை நாம் பிரித்துபார்த்தாகவேண்டும். விவேகம் அனுபவமுதிர்ச்சியில் இருந்தோ, அல்லது மரபில் இருந்தோ வரமுடியும்.நாட்டுப்புற கலைகள் கதைகளில் அது உண்டு. மெய்யனுபவத்தில் ஒரு புதுமை, வியப்பினையும் பிரமிப்பினையும் ஊட்டும் ஒரு அம்சம், எப்போதுமே இருந்தபடியே இருக்கிறது.. ஜெயகாந்தனின் கதையில் மரபான விவேகம் மட்டும்தான் இருக்கிறது . அது நல்ல கதைதான் , மகத்தான கதைஅல்ல .

வேதசகாய குமார்:தளையசிங்கத்தின் பார்வையில் கலைப்படைப்புக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவும் முக்கியமானது.மெளனிகதைகளை அவர் அப்படிகுறைத்துமதிப்பிட்டதற்கு அதுதான் காரணம் என்று சொல்லலாம்.

அன்பு வசந்தகுமார்: அவர் என்ன சொல்கிறார் ? கதைகள் சமூக மனத்தை நோகி பேச முயலவேண்டும் என்றா ? மார்க்ஸியர் கூட இப்போது அப்படி சொல்லமாட்டார்கள்.

வேதசகாயகுமார்: அவரை பொறுத்தவரை கலையின் ஆக்கம் மெய்யை தேடுதலும் கண்டடைதலும் வெளிப்படுத்தலும்தான். அக்கலைப்படைப்பினை சமூகம் ஏற்பதில் மூன்று நிலைகளை அவர் சொல்கிறார் . ஒன்று அது சமூகத்தை செயல்படத்தூண்ட வேண்டும் . இரண்டு அது சமூகத்தில் ஏற்கனவே இருந்துவரும் முற்போக்கான செயல்பாடுகளுடன் ஒத்துழைக்கவேண்டும். மூன்று அது சமூகத்தின் எதிர்மறையான போக்குகளை எதிர்க்கவேண்டும் .அதாவது தளைய சிங்கத்தை பொறுத்தவரை ஒரு இலக்கியபடைப்பு சமுக்கத்தின் வளார்ச்சிக்க்க்கு எந்தபங்காற்றுகிறது என்பதே அதை அளக்க அளவுகோல் . அப்படி பங்காற்றாத படைப்பு எத்தனை அழகுகள் கொண்டிருந்தாலும் அவரால் ஏற்க முடியாது . சமூகப் பயனற்ற கலை என்பதை அவரால் ஒப்பவே முடியவில்லை ….

எம் யுவன் : கலையின் பயன் மதிப்பு அல்லது சமூக மதிப்பு என்ன என்று உடனடியாக எவரும் மதிப்பீடு செய்துவிட முடியாது. கலை அறிகிறது வெளிப்படுத்துகிறது.அதன் பயன் அதுதான் .அதன் பணியே அதன் பயன் என்று சொல்லலாம்.அதைபயன் படுத்துவதும் சரி தவறாக பயன்படுத்துவதும் சரி சமூகத்தின் விருப்பம் மனநிலை சார்ந்த விஷயங்கள் மட்டுமே.

மோகனரங்கன்: அதைவிட கலையின் சமூக பயனை யார் தீர்மானிப்பது , எந்த அளவுகோல் என்பதுதான் பிரச்சினை. முற்போக்கு ,நல்ல போக்கு என்பதையேல்லாம் தீர்மானிக்க அளவுகோல் என்ன ? பழ்ழைய மார்க்ஸியர்கள் சோவியத் ரஷ்யாவை எதிர்த்து எழுதிய எல்லா எழுத்தாளார்களையுமே முற்போக்குக்கு எதிரானவர்கள் என்றுதான் சொன்னார்கள் .கொல்லவும் செய்தார்கள். இப்படி ஒரு அளவுகோலை வைத்தால் இலக்கிய படைப்புக்குமேலே வேறு ஒரு அதிகாரத்தை வைப்பதுபோலத்தான் ஆகும்.அது இலக்கியத்தையே அழித்த்விடும் .தத்துவம் கூட இலக்கியத்த்க்கு உதவிதான் செய்யமுடியுமே யொழிய வழி நடத்தமுடியாது…

வேதசகாய குமார்: தத்துவம் அரசியல் போன்றவற்றுக்கும் இலக்கியத்துக்கும் இடையே இப்படி ஒரு பிரச்சினை எபோதுமே உள்ளது . எல்லையை எப்படி யார் வகுப்பது என்ற பிரச்சினை ,..

மதிய உண்வுக்கான நேரம் நெருங்கியபடியால் காலை அமர்வு முடிக்கப்பட்டது .மாலை ஆறுமணிக்கு அமர்வு துவங்கும் என அறிவிக்கப்பட்டது .

[மாலை அமர்வு பற்றிய குறிப்புகள் தொடரும் ]

***

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 1

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 2

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 3

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 2

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 3

முந்தைய கட்டுரைமு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் 1
அடுத்த கட்டுரைமு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 3