மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1

mutha

மு.தளையசிங்கத்தை புரிந்துகொள்வதற்கான் அடிப்படைகள்.

மு.தளையசிங்கத்தை இன்று படிக்கும்போது பல இடர்கள் தமிழ் வாசகனுக்கு ஏற்படுவதை கவனித்துள்ளேன். அவனது விமரிசனங்கள் இரு தளத்தில் அமைந்துள்ளன. ஒன்று மு.தளைய சிங்கம் தெளிவாக சிந்திக்கவில்லை, மிகவும் குழப்புகிறார். இரண்டு அவரது பார்வை பல சமயம் அபத்தமாகவும் ,தர்க்கத்தைமீறி அகவயமாகவும், அபூர்வமாக மூட நம்பிக்கை அளவுக்கும் போகிறது. அவர் வழிமுறைகளைப்பற்றிய தெளிவு இல்லாமல் ஒரு இலட்சிய வாழ்க்கைநிலையை அல்லது காலகட்டத்தை கற்பனை செய்கிறார் என சுந்தர ராமசாமி மிக மென்மையாக அதையே சொல்கிறார். இக்குற்றச்சாட்டுகள் பொத்தாம் பொதுவானவை என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் இவற்றை கூர்ந்து அவதானிக்கவேண்டியுள்ளது. தளையசிங்கத்தை புரிந்துகொள்வதில் நம் சூழலுக்கு உள்ள சிக்கல்கள் முதல் விஷயம். தளையசிங்கத்துக்கே சிந்திப்பதிலும் வெளிப்படுத்துவதிலும் இருந்த சிக்கல்கள் இரண்டாம் விஷயம் .தளையசிங்கம் சொல்வதென்ன என்று யோசிப்பதற்கு முன்னால் இப்பிரச்சினைகளை பற்றிய ஓர் தெளிவை அடையவேண்டிய அவசியமுள்ளது .

படைப்புச்சிந்தனையும் தெளிவும்

தெளிவாக யோசித்தல் மற்றும் பேசுதல் என்பதை அசல் சிந்தனையாளர்களுக்கு நிபந்தனையாக ஆக முடியாது என்றே படுகிறது. முதற்கட்ட சிந்தனையாளர்களுக்கு முக்கியமாக . முதற்கட்ட சிந்தனையாளர்கள் அல்லது அசல் சிந்தனையாளர்கள் வழி தவறுவது , குழம்புவது ,பாதியில் நின்றுவிடுவது எல்லாமே சாத்தியம் தான் .ஏனெனில் முதற்கட்ட சிந்தனையாளர்கள் எனது கணிப்பில் சிந்தனையை அதாவது தருக்கத்தை [கரண அறிவை, கரணியத்தை Reason /Rationality] நம்பி இயங்குவதைப் பார்க்கிலும் அதிகமும் உள்ளுணர்வை நம்பியே இயங்குகிறார்கள் . கறாரான வரைபடமொன்றினை வைத்துகொண்டு படிப்படியான சிந்தனைவளர்ச்சி மூலம் சீராக முன்னகரும் இயல்பு அவர்களிடம் இல்லை . அவர்களுக்கு கருத்துக்கள் அவர்கள் ஆழத்திலிருந்து மின்னல்கள் போல தெறித்தே வருகின்றன என்றுபடுகிறது . ஒரு கோணம் அப்படியே திறந்துகொள்கிறது . அதை பிறகு அவர்கள் விரிவாக தருக்கப்படுத்தி விளக்க முயலலாம்.

எனவே இவர்களின் மன இயக்கத்தில் சிந்தனையானது தர்க்க அலகுகளாக இருப்பதைவிட சில மனப்படிமங்களாக இருப்பதையே அதிகமாக காண்கிறேன் .எல்லா முக்கிய சித்தனையாளர்களுக்கும் அவர்களுக்கே உரிய படிமங்கள் சில இருப்பதை கவனிக்கலாம் . கணிசமான சிந்தனையாளார்கள் ஒரு குறிப்பிட்ட காலம் கழிந்ததும் அப்படிமத்தின் மூலமே நினைவுகூரப்படுகிறார்கள். அவர்களுடைய முக்கிய பங்களிப்பாக அந்த படிமமே எஞ்சிவிடுகிறது. சாக்ரட்டாஸுக்கு குகை படிமம். ஹெகலுக்கு ஆண்டான் அடிமை என்ற படிமம். ஃபூக்கோவுக்கு கண்காணிப்புக் கோபுரம் குறித்த படிமம், சங்கரருக்கு கயிற்றரவு, நாகசேனருக்க்கு தீபச்சுடர் …இவ்வாறு [தளையசிங்கத்துக்கு மாடிகள் எழுந்துகொண்டேயிருக்கும் கட்டிடம் ]அதாவது முதல் கட்டச் சிந்தனையாளர்கள் ஒரு வகையான இலக்கியப் படைப்பாளிகள்தான் . கற்பனையும் உள்ளுணர்வும் அவர்களை இயக்கும் முக்கிய மூல விசைகள். ஆகவே படைப்பாளிகளையும் கலைஞர்களையும் அலைக்கழிக்கும் அதே நிலையின்மை , வகுத்துவிட முடியாத தன்மை அவர்களையும் ஆட்கொள்கிறது . அவர்களும் கண்ணைமூடிக்கொண்டு துழாவுபவர்களே . அதன் நிறை குறைகளை அவர்களிடமும் காணலாம்.

சிந்தனையாளர்கள் இரு வகை. நாம் அறியும் பெரும்பாலான சிந்தனையாளர்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட வாழ்க்கை பற்றிய ஒரு தரிசனத்தை அல்லது தத்துவச் சட்டகத்தை அல்லது அடிப்படைப் புரிதலை சார்ந்து , அதன் இடைவெளிகளை நிரப்பும் பொருட்டோ அல்லது அதை தங்கள் சூழலிலோ தாங்கள் செயல்படும் துறைகளிலோ செயல்படுத்தும் பொருட்டோ சிந்திப்பவர்கள் . இதற்கு உதாரணமாக ஞானி , கைலாசபதி ஆகியோரை சொல்லலாம் .மார்க்சியம் அவர்களுக்கு அடிப்படையான சிந்தனைச் சட்ட்டகத்தை அளித்துள்ளது . ஞானி மார்க்ஸிய விளக்கத்தில் இலக்கியம் , கலாச்சாரம் , மெய்யியல் குறித்த இடைவெளிகள் இருப்பதை நிரப்ப முயல்கிறார். கைலாசபதி மார்க்ஸியச் சட்ட்டகத்தை தமிழ்ச் சூழலுக்கு செயல்படுத்திப் பார்க்கிறார் . நமது இரண்டாம் நிலை சிந்தனையாளர்களை இவ்விரு வகைப்பாடுகளுக்குள் அடக்கிவிடலாம் . பின் நவீனத்துவர்களில் பிரேம் ஞானியின் வகைபட்டவர் . தமிழவன் கைலாசபதியின் வகை. இவர்களுக்குக் கீழே இங்கு பெருவாரியாக உள்ளவர்கள் சிந்தனைகளைப் பிரதியெடுப்பவர்கள் ,மொழிபெயர்ப்பவர்கள் ,மேற்கோள் காட்டுபவர்கள் . இவர்களை வெறுமே அறிஞர்கள் என்று மட்டுமே சொல்ல முடியும் உதாரணம் சிவத்தம்பி , எஸ் வி ராஜதுரை . பலரை அப்படிக்கூட சொல்ல முடியாது , அவர்களுடையது விசுவாசமும் அரைகுறைக் கேள்வி ஞானமும் மட்டுமே , உதாரணமாக தி .க. சிவசங்கரனைக் கூறலாம் .

அசல் சிந்தனையாளன் சிறிய அளவிலேனும் சுயமாக வாழ்க்கை பற்றிய ஒரு தரிசனத்தை கொண்டிருப்பான் என நான் எண்ணுகிறேன் .[தரிசனம் என்பது இங்கு வாழ்க்கையின் ஒட்டுமொத்தத் தன்மையை கணக்கில் கொண்ட ஒரு அடிப்படையான பார்வை என்று பொருள்படும் ]அத்துடன் அதை விளக்கும் தத்துவ அமைப்பை சென்றடைய அவன் தொடர்ந்துமுயல்வான்[ தத்துவம் என்பது அனைத்து துறைகளிலும் உள்ள தருக்கங்களின் தொகுதியான ஓர் அமைப்பு என்று இங்கு கொள்ளப்படுகிறது ] அனைவரையும் போலவே அவனும் பிறரது சிந்தனைகளில் இருந்தே தொடங்குகிறான் .அவற்றிலிருந்து நகர்ந்து தன்னுடைய சுய சிந்தனைத்தளத்துக்குப் போகிறான் .அச்சிந்தனைகளின் மீதான அவனது விமரிசனம் அவனது அனுபவம் சார்ந்ததாகவும் , உள்ளுணர்வினைச் சார்ந்ததாகவும் இருக்கலாம் .

ஒரு முந்தைய சிந்தனை மரபில் இருந்து வெளியேறும் அசல் சிந்தனையாளன் அதன் தருக்கக் கட்டமைப்பின் போதாமையை உணர்ந்து தான் வெளியெறுகிறான் என்று புரிந்துகொள்வது நம் வழக்கம் .குறிப்பாக மார்க்ஸ் ஹெகல் இருவருக்குமிடையேயான உறவு குறித்த விவாதத்தில் அப்படி இங்கு பேசப்பட்டிருக்கிறது . ஆனால் தருக்கம் வெளிப்பாட்டு முறையையும் , தரிசனத்தையும் புறவயமாக்கும் முயற்சியை மட்டுமே சார்ந்தது என்பதே என் கணிப்பு . உண்மையில் ஹெகலுக்கும் மார்க்ஸுக்கும் தருக்க அமைப்பு ஒன்றேதான். அவர்களுக்கு இடையேயான முரண்பாடானது அடிப்படையில் தரிசனரீதியானது, மெய்யியல் சார்ந்தது .[ அதை ஞானி விளக்கியுள்ளர் .] மெய்யியல் சார்ந்த போதாமை என்பது பெரும்பாலும் அவனது அந்தரங்கமான கேள்விகளை ஒட்டி உணரப்படுவதாகும் . அவனுடைய அந்தரங்கம் வாழ்க்கை மற்றும் பிரபஞ்சம் குறித்து எழுப்பும் அடிப்படையான கேள்விகளுக்கு அவனுக்கு திருப்தியான ஒரு பதிலை நோக்கி நகரும் முனைப்பே அவனைஇயக்குகிறது .

தமிழ்ச் சமூகத்தில் அப்படிப்பட்ட அசலான சிந்தனையாளர்கள் அனேகமாக இல்லை . இரு விதிவிலக்குகள் ஆனந்தக் குமார சாமியும் மு. தளையசிங்கமும் மட்டுமே . ஆனந்தக் குமாரசாமி தமிழில் எழுதவில்லை ,தமிழ்ச் சமூகத்தை முன்னிறுத்திப் பேசவுமில்லை .ஆகவே அவரை தமிழ்ச் சிந்தனையாளராக கருதமுடியாது . ஆகவே இப்போதைக்கு நம் முன் உள்ள ஒரே உதாரணம் தளைய சிங்கம் மட்டுமே . அதிலும் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. ஒரு சிந்தனையாளராக ஒருவகையில் தளையசிங்கம் தோல்வியடைந்தவரே. அவரது தோல்வி மகத்துவம் கொண்ட தோல்வி என்போமே அவ்வகைப்பட்டது. தன் சூழலை ஆழமாகப் பாதிக்க அவரால் முடியாமல் போய்விட்டது என்பதை வைத்தே அவரை தோல்வியடைந்தவர் என கூறுகிறேன். அதற்குக் காரணம் அவரது சிந்தனைகள் முழுமைபெறவில்லை , திட்டவட்டமாக முன்வைக்கப்படவுமில்லை . அவரது தோல்வியில் இருந்து நம் சூழலை எதிர்கொள்ளும் அறிவார்ந்த சவால்கள் என்னென்ன என்று நாம் ஊகிக்க முடியும். சுயமாக சிந்திப்பதற்கு நமக்குள்ள தடைகள் என்ன , சிந்தித்தவற்றை வெளிப்படுத்தும் புறவய மொழி மற்றும் தத்துவ அமைப்பை உருவாக்குவதில் உள்ள பிரச்சினைகள் என்ன என்பவற்றை ஊகிக்க முடியும் . அனைத்தையும் விட மேலாக அவரிலிருந்து பல சிந்தனைமுளைகளை நம்மால் இன்றைய புதிய சூழலில் வளர்த்தெடுக்க முடியும் .

இந்திய தத்துவ உபகரணங்களின் எல்லைகள்

தளையசிங்கம் மிக இளம் வயதிலேயே மரணமடைய நேரிட்டது அவரது தேடல் திட்டவட்டமான பலன்களை அளிக்க முடியாமல் செய்த முதல்க்காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. அவரது காலத்தில் அவர் முன்வைத்த கருத்துக்களை ஆக்க பூர்வமாகப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றிய வாசகர்களோ , அவரை தர்க்க தளத்தில் அறிவார்ந்த நேர்மையுடன் விமரிசித்த எதிர்தரப்பினரோ இல்லை என்பது அடுத்த முக்கியமான காரணம் . வெறும் அக்கப்போர்த் தளத்தில் வைத்தே மார்க்ஸியர் அவரது கருத்துக்களை எதிர்கொண்டிருக்கிறார்கள் . கைலாசபதியிடமிருந்து அதை விட முதிர்ச்சியான எதையும் எதிர்பார்ப்பதற்கான ஆதாரம் எதையும் அவர் உருவாக்கவுமில்லை . மார்க்ஸியரல்லாத எழுத்தாளர்களும் தளையசிங்கத்தை எதிர்கொண்ட விதமும் அப்படியே . தமிழ் நாட்டில் வெங்கட் சாமிநாதன் , சுந்தர ர ‘மசாமி ஆகியோர் தளைய சிங்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தபோதிலும் கூட அவர்களுக்கிடையே ஆக்கபூர்வமான விவாதம் ஏதும் நடந்தது இல்லை. வெங்கட் சாமிநாதநுக்கும் தளையசிங்கத்துக்கும் தொடர்பு இருந்தபோதிலும்கூட அவர் தளையசிங்கம் பற்றி முக்கியமாக எதுவும் எழுதவில்லை .சுந்தர ராமசாமி மிகவும் பிந்தி குறிப்பிடத்தக்க கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் . தளைய சிங்கத்தை தமிழ்ச் சூழல் பொருட் படுத்தியமைக்கான ஒரே ஆதாரம் அக்கட்டுரைதான் .

இவை வெளித்தடைகள் .தளைய சிங்கம் போன்ற தீராத ஆற்றல் உடைய மனிதர் இத்தடைகளை தாண்டக் கூடியவர்தான். இவற்றை விட பெரிய பிரச்சினை அவர் எதிர்கொண்ட அகத்தடை . அது தத்துவார்த்தமானது . தன் சிந்தனைகளை நிறுவுவதற்கான தத்துவார்த்தப் பின்னணியை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல் என அதைக் கூறலாம் .தளைய சிங்கம் இந்நூற்றாண்டின் எல்லா சிந்தனையாளர்களையும் போல முதலில் மேற்கத்தியக் கல்வியையே பெற்றிருக்கிறார் . அக்கல்விக்கு அடிப்படையாக அமைந்த மேற்கத்திய தத்துவமரபின் வழியாகவே அவரது சிந்தனைகள் உருவாகியுள்ளன. மேற்கத்திய மார்க்ஸிய சிந்தனை மற்றும் சுதந்திர சிந்தனையாளர்கள் அவரைப் பாதித்துள்ளனர் . என் வாசிப்பில் எமர்சன் , தோரோ போன்ற சிந்தனையாளர்கள் மற்றும் எஃப் ஆர் லூயிஸ் முதலிய இலக்கிய விமரிசகர்கள் . அவரது ஆரம்பகட்டச் சிந்தனைகள் அந்தப் பாணியிலேயே அமைந்தன. உதாரணமாக ‘ ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ‘ யானது எலியட் , எஸ்ரா பவுண்ட் முதலிய நவீனத்துவகால இலக்கிய விமரிசகர்களின் பாணியில் அமைந்துள்ளது. தமிழ் நவீன இலக்கியம் நவீனத்துவத்தால் உருவாக்கப்பட்டது என்பதனால்தான் அக்கட்டுரைநூல் அந்த அளவுக்கு பரபரப்பையும் ஆர்வத்தையும் இங்கு உருவாக்கியது . இலக்கியப்படைப்பு என்பது அதை உருவாக்கிய படைப்பாளியில் ஆளுமையின் வெளிப்பாடுதான் , அவ்வாளுமைவழியாகவே அவன் வாழும் சூழல் அவனை ஊடகமாக்கிக் கொண்டு வெளிப்படுகிறது என்பதிலெல்லாம் தளைய சிங்கத்துக்கு அழுத்தமான நம்பிக்கை இருப்பதாக அதை வாசித்தால் உணர முடிகிறது .

ஆனால் அவரது சிந்தனையின் வளர்ச்சிப்போக்கில் அவர் இந்திய சிந்தனைமரபின் நீட்சியாகவே தன்னை அடையாளம் காண்கிறார் [ இங்கு இந்தியாவை ஒரு அரசியல் அமைப்பாக அன்றி கலாச்சார அமைப்பாகவே கருதவேண்டும் ] அவரது அறிதல் முறையில் நம் மரபான ஆய்வு உருவகங்கள் நேரடியாகவே செல்வாக்கு செலுத்துவதை பார்க்கிறோம் .உதாரணமாக மெய்யுளில் அவர் நம் மரபு எப்படி யுகப்பிரிவினைகளை செய்தது அதை எப்படி இன்றைய காலகட்டத்தை பிரித்து வகுத்துக் கொள்ள பயன்படுத்தலாம் என்று கூறும் இடத்தை உதாரணம் காட்டலாம் . மேற்கு xஇந்தியா என்ற இந்த இரு மரபுகளின் இணைப்பில்தான் பிரச்சினைகள் உள்ளன . அவற்றை என் பார்வையில் அரவிந்தரோ விவேகானந்தரோ தீர்த்துவைக்கவுமில்லை . அப்பிரச்சினைகளை தளையசிங்கமும் எதிர்கொள்ளவில்லை . ஆகவே அவரது சிந்தனை ஆழம ‘ன பல முரண்பாடுகளை எதிர் கொண்டு தேங்கிவிட நேரிட்டது .

மேற்கத்திய சிந்தனை அதன் ஆரம்பகட்டம் முதலே புறவயத்தன்மை [Objectivity ] என்ற இலக்கை நோக்கி நகர்வதைக் காணாலாம். இன்றும் மேற்கத்திய சிந்தனையின் அடிப்படியாக உள்ள புறவய அறிதல்முறைகள் பெரும்பாலானவை அரிஸ்டாடில் காலத்திலேயே உருவாகிவிட்டன . அகவய சிந்தனைகள் அந்த அடிப்படைகளுக்கு மாற்றாகவே அங்கு உருவாக்கப்பட்டன. ஆகவே நாம் காண்பது மிகத் துல்லியமான ஓர் அறிவியங்கியல் படிப்படியாக அங்கு உருவாகி வருவதைத்தான் . முற்றிலும் அகவயமான அணுகுமுறைகொண்ட எமர்சன் போன்றவர்கள் கூட கறாரான புறவயத் தருக்கத்துடன் பேசுவது எனக்கு ஆரம்ப காலத்தில் அளித்த வியப்பு சாதாரணமல்ல. நேர்மாறாக நம் மரபு ஆரம்பம் முதலே அகவய அறிதல் முறைகளையே அதிக அழுத்தம் தந்து பேசியிருக்கிறது . புறவயசிந்தனை கொண்ட மரபுகளாலான சாங்கியம் வைசேஷ ‘ ‘கம் முதலியவை கூட தருக்கப்போக்கில் அகவய அறிதல்முறைநோக்கிச் செல்வதையே நமது சிந்தனை வரலாற்றில் காண்கிறோம். இது ஏன் என்ற வினாவுக்குள் இங்கு புகவிரும்பவில்லை . ஆனால் நமது மரபார்ந்த தத்துவ உபகரணங்களை நாம் இன்றைய பிரச்சினைகளை விளக்குவதற்குப் பயன்படுத்த இந்த விஷயம் பெரும் தடையாக உள்ளது என்பது ஓர் அனுபவ உணமை .

தளைய சிங்கம் மெய்ய்ளில் இவற்றை பயன்படுத்துவது பற்றியே பார்ப்போம் .‘ ‘ பரிணாம த்தில் அன்னமய கோசமும் பிராணமய கோசமும் வெளிப்படுத்தப்பட்ட காலங்கள் விஞ்ஞான ரீதியாக சொல்லப்போனால் உலக பரிணாமத்தின் அன்னமய கோசத்தை geosphere என்றும் [சட நிலையும் அதன் வலயமும் ] பிராணமய கோசத்தை [உயிர்நிலையும் அதன் வலயமும்]biosphre என்றும் சொல்லலாம். இன்று அவற்றுக்குரிய குணங்களாக முக்குணங்களில் தாமத குணங்களையும் [அன்னமயகோசம்] ரஜத குணத்தையும் [ பிரணமய கோசம் ] குறிப்பிடலாம். மனிதனிலும் இயற்கை செயல்பாட்டிலும் இவ்வலயங்கள் மட்டுமல்ல அவற்றுக்குரிய குணங்களும் இருக்கின்றன ….. ‘ ‘ [மெய்யுள் ]

………பரிணாமவளர்ச்சி பற்றிய மேற்கத்திய சித்தாந்தங்கள் எல்லாமே புறவயமான நிரூபணவாதக் கருத்துக்களின் மூலம் முன்வைக்கப்பட்டவை என நாம் அறிவோம். ஆனால் அன்னமய கோசம் பிராணமய கோசம் போன்ற கருத்துக்கள் அப்படி நம் மரபில் புறவயமாக வரையறை செய்யப்பட்டவையல்ல . உதாரணமாக அன்னமய கோசத்துக்கும் பிராணமய கோசத்துக்கும் இடையேயான வித்தியாசம் என்ன என்று நம் மரபு எங்காவது வரையறை செய்து சொல்லியிருக்கிறதா ? யோகம் மூலம் தன்னை அறியும் ஒருவன் அவற்றை அறிய முடியும் ,அவற்றை பற்றிய ஒரு சித்தரிப்பை நியாய மரபின் வழிமுறைகளை உபயோகப்படுத்தி அவன் அளிக்கவும் முடியும் . அவ்வளவுதான் . இந்நிலையில் தளைய சிங்கம் பரிணாம வாதத்தின் அடுத்த கட்டத்தை , மாமனிதன் அல்லது பேர்மனதை நோக்கி வாதகதிகளை இட்டுச் செல்லும்போது பிழையான ஒரு தாவலை நிகழ்த்துவதாக நமக்கு படுகிறது .புறவயமாக நகர்ந்த தருக்கம் மொழியின் சகஜமான நகர்வை பயன்படுத்திக் கொண்டு அகவய எல்லைக்குள் தாவி விடுகிறது இங்கு .

இந்திய சிந்தனை முறைக்கு தொடர்ச்சியான வளர்ச்சி இல்லை . அதன் முக்கியப் போக்கு அகவயமானது , சாராம்சப் பார்வை கொண்டது , பொதுவாக அது ஆன்மீகம் என்று குறிக்கப்படுவது . இந்திய சிந்தனையில் பெரும் எழுச்சிகள் நடைபெற்ற காலத்தில் அப்போக்குக்கும் அதன் மறுஇணையான உலகியல்கொள்கைகளுக்கும் இடையே அதி தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. வேதங்களின் காலத்தில் அகவயப்பார்வை வெறும் நம்பிக்கை மட்டுமே . வேதாந்தங்களின் [உபநிடதங்களின் ] காலத்தில் அது வலுவான தருக்க முறைகளை அடைந்துவிட்டிருந்தது , அதற்குக் காரணம் உலகாயதர்களுடன் அது மேற்கொண்ட விரிவான விவாதமே என்று காணலாம் . அதைப்போலவே அடுத்தகட்ட லோகயத சிந்தனை போக்குகளான சாங்கிய ,யோக, நியாய, வைசாஷிக மரபுகள் வேதாந்தத்துடன் விவாதித்து தங்களை வலுப்படுத்திக் கொண்டவை . அவற்றின் நீட்சியான பெளத்தமும் வேதாந்த மரபுடன் விவாதித்தே வளர்ந்தது . பெளத்த மெய்யியலை மறுத்து விவாதித்துத்தான் பிற்கால வேதாந்தங்களான அத்வைதம் போன்றவை தங்களை விரிவாக்கம் செய்தன. சங்கரரின் நூல்களிலெல்லாம் பரபக்கமாக லோகாயத சிந்தனைகள் வலுவாக வீற்றிருப்பதைக் காணலாம் . அதன் பிறகு இந்திய சிந்தனைமரபில் பெரும்தேக்கம் . பிற்பாடு நாம் காண்பவை பயணங்களல்ல , மரபை காலத்துக்கேற்ப மறுவிளக்கம் தரும் முயற்சிகள் மட்டுமே. .இக்காலகட்டத்தையே பொதுவாக உரைகளின் [பாஷ்யம்] காலம் என்றால் மிகையல்ல . இருபது நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய சிந்தனையில் ஆன்மிகப்போக்குகளுக்கு வலுவான பரபக்கமாக விளங்கிய லெளகீகவாத தரிசனங்கள் மறைந்தந்ன . ஆகவே நான்கு நூற்றாண்டுக் காலம் இந்திய சிந்தனை உறைந்து கிடந்தது .

பிறகு மேற்கத்திய கல்வி , நவீன அறிவியல் ஆகியவற்றின் மூலம் நவீன மேற்கின் உலகியல் சார்ந்த புறவயமான சிந்தனைமுறைகள் இங்கு வர ஆரம்பித்த பிறகுதான் இந்திய சிந்தனை மரபில் மெல்லிய சலனங்கள் ஏற்பட ஆரம்பித்தன என்று காணலாம் . மரபை ‘மீட்பது ‘ குறித்து இந்திய மறுமலர்ச்சிக்கால சிந்தனையாளர்கள் , சுவாமி தயானந்த சரஸ்வதி முதல் விவேகானந்தர் வரை , பேசும்பொதெல்லாம் காலத்துக்கு ஏற்ப மறுஆக்கம் செய்வது என்ற தொனியே இருப்பதை இன்று காணமுடிகிறது .அவர்கள் அனைவருமே மேற்கத்திய மரபுடன் இந்திய மரபை உரையாட வைப்பதிலும் ஆர்வம் காட்டினார்கள் . புகழ்பெற்ற உதாரணம் விவேகானந்தர் . மேற்கத்திய அறிவியங்கியலின் [ epistemology] முறைகளைப் பயன்படுத்தி இந்தியமெய்யியல் கோட்பாடுக்ள் சிலவற்றை முன்வைத்தவர் அவர் . அதன் பொருட்டு அவர் இந்திய மெய்யியலை வளைத்து அமுக்கிச் சுருக்கினார் என நடராஜ குரு போன்றவர்கள் பிற்பாடு குறிப்பிட்டிருக்கிறார்கள் . மேற்கத்திய அறிவியங்கியலை அப்படியே பிரதிசெய்து டாக்டர் ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இந்திய சிந்தனையை கிட்டத்தட்ட மாற்றி எழுதினார்கள் . இந்திய மெய்யியல் மரபை மேற்கத்திய தத்துவ அலகுகளின் அடிப்படியில் ராதாகிருஷ்ணன் பிரித்தார் என்று கூறலாம் .

கார்பே , ஷெர்பாட்ஸ்கி , போன்ற இந்தியவியலாளர்கள் மேற்கத்திய அடிப்படைகளின்படி இந்திய மெய்யியலும் குறியியலும் தொகுக்கப்பட பெரும்பங்காற்றியுள்ளனர் . அன்னி பெசண்ட் , ஆர்தர் ஆவலோன் போன்ற இந்திய மெய்யியலின் மேற்கத்திய வழிபாட்டாளர்கள் வேறு ஒரு வகையில் இந்திய மெய்யியலை திரித்து மேற்கத்திய சிந்தனைசட்டகத்துக்குள் கொண்டு சென்றார்கள் .உதாரணமாக மேடம் ப்ளவாட்ஸ்கி இந்திய மெய்யியல்மரபை தன் கற்பனைப்படியெல்லாம் கொண்டு சென்று இறுதியில் மேற்கே பலகாலங்களாக கற்பனை செய்யப்படும் ஒரு மாய உலகைச் சேர்ந்ததாக அதை ஆக்கிவிட்டார் . அதற்கு பூமியுடன் உள்ள எல்லா தொடர்புகளையும் துண்டித்துவிட்டார் என்று சொல்லவேண்டும் . அதை மூடநம்பிக்கை என்றெல்லாம் விளக்க முயல்வதில் எனக்கு மாறுபாடான கருத்து உண்டு.அது ஒரு கூறுமுறை [narration ] தன் ஆழ்த்தள அறிதல்களை ஒரு குறிப்பிட்ட வகையான படிம/ உருவக முறைப்படி முன்வைக்கமுயல்வது .அது அவரை பொறுத்தவரை ஒருவகையான யதார்த்தமாகக்கூட இருக்கலாம் . அவரது வளர்ப்புப்பின்னணி அதற்கு பங்களிப்பாற்றியது என்று கருதலாம் .

ஆக ஒட்டுமொத்தமாக நமக்கு கிடைக்கும் இந்திய மெய்யியல் காலத்தால் மிகவும் பின்தங்கியது , நவீன அறிவுத்தேடலுக்கு நேரடியாகப் பயன்படுத்த முடியாதது. இந்தியவியலாளர்கள், பண்பாட்டு மீட்பாளர்கள் ஆகியோரால் இருவேறுகோணங்களில் மறுஆக்கம் செய்யப்பட்டது. அதை இருவகையில் நாம் அணுகுகிறோம் . ராதாகிருஷ்ணன் போன்ற மேற்கத்திய அறிவியங்கியல் விதிக்ளை அடிப்படையாகக் கொண்டு அணுகுபவர்களை வாசிக்கும்போது நமக்கு கிடைப்பது ஒரு உயிருள்ள சிந்தனைமுறை அல்ல. கடந்தகால சிந்தனை அமைப்பு ஒன்றின் வரலாற்றுத் தகவல்கள் மட்டுமே. மறுபக்கம் சென்று மாடம் பிளவாட்ஸ்கி போன்றவர்களின் மூலம் நுழையும்போது நாம் அறிவியங்கியலுக்கே தொடர்பற்ற ஒரு படிம உருவக வெளியை அடைகிறோம் .இப்போது இவ்விரண்டில் ஒன்றே சாத்தியம் என்பதே உண்மை.

என்னைப் பொறுத்தவரை இரண்டாவது முறையே பிழையானவற்றில் மேலானது .முதல்பார்வை நம்மை நம் மரபு குறித்த மிகத்தவறான ,எளிதில் சரிசெய்துவிட முடியாத ஒரு போலி அறிவுத்தளத்துக்கு இட்டுச் செல்கிறது . மிகதவறாக சிந்திப்போம் ,ஆனால் அத்தவறு மேற்கத்திய நவீன அறிவியங்கியலின்படி செய்யப்படுவதனால் அது மிக கறாரான புறவய தன்மை கொண்டது என கற்பனை செய்தும் கொள்வோம். மிகச்சிறந்த உதாரணமாக இங்கு குறிப்பிடப்பட வேண்டியது நம் போலி அறிவுஜீவிகளில் சிலர் நமது தியான மரபை ஃப்ராய்டிய முறைப்படி புரிந்துகொண்டு விளக்க மூற்பட்டமைதான் . தாந்த்ரீக மரபை நவீன குறியியல்படி விளக்க முற்பட்டிருக்கும் சிலரும் இங்கு உண்டு .முற்றிலும் வேறான ஒருதளத்தின் ஆயுதங்கள் இங்கு பயன் படுத்தப்படுகின்றன என்பது ஒருபக்கம் .மறுபக்கம் அவ்வாயுதங்கள் எல்லாமே மிக எளியவை வளர்ச்சியடையாதவை என்பது . தன் சொந்த அம்மாவை மானுடவியலின் உதவிகொண்டு புரிந்துகொள்ள முயலும் அன்னய்யாக்கள் இங்கு சாதாரணம்*

த ளையசிங்கம் இவற்றில் இரண்டாவது அணுகுமுறையின் அருகே நிற்கிறார் . அதற்குக் காரணம் பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை .அன்னையின் அணுகுமுறை பிளவாட்ஸ்கியின் நோக்குக்கு மிக அருகே நெருங்கி வருவதாகும் . அதற்கு அன்னையின் மேற்கத்திய வளர்ப்புப் பின்னணியும் காரணமாகலாம் .இந்த அணுகுமுறையின் முக்கியமான சிக்கல் இது சற்றும் புறவயமானது அல்ல என்பதும் நவீன அறிவியல் கோட்பாடுகளையோ பிற நவீன சித்தாந்தங்களையோ தருக்கபூர்வமாக சந்தித்து விவாதிக்க முடியாத ஒன்று என்பதும்தான். ஒரு நவீனவாசகன் சிலசமயம் ஒருவகை சங்கடத்தையும் ஒட்டுமொத்தமான அவநம்பிக்கையையும்கூட அடையக்கூடும். உதாரணமாக தளையசிங்கம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் மாணவரான சசியின் அடுத்த பிறப்பே என்று அன்னை சொன்னதை மு. பொன்னம்பலம் தளையசிங்கத்தின் நூலின் முகப்பில் எடுத்து தந்திருப்பதைக் கூறலாம் . ஆனால் இதன் முக்கியமான சாதக அம்சம் ,என்னதான் இருந்தாலும் படிம உருவகங்கள் ஆழ்மனம் சார்ந்தவை , அவை அறிவுத்தள சிக்கல்களால் நேரடியாக திரிபு அடைவது இல்லை என்பதே . அவற்றை சிறப்பாக கலை இலக்கியத்தில் பயன் படுத்தலாம் . ஆழ்மன தரிசனப்பயணங்களுக்கு அவை மிகவும் உபயோகமானவையே. ஆனால் அவற்றுக்கு புறவய இயக்கம் இல்லையென்பதால் தத்துவ சித்தாந்த விவாதத்தில் அவை பயன்படுத்தப்படும்போது விவாதம் அகவயமாகச் சுருங்கி இறுதியில் வெற்றுக்கனவாக அடையாளப்படுத்தப்படும் நிலை ஏற்படுகிறது . இதுவே தளைய சிங்கத்துக்கு நேர்ந்தது .

இங்கு சம்பந்தமில்லையென்றாலும் ஒன்றை சொல்லவேண்டியுள்ளது. இந்தியமரபின் கருத்தியல் உபகரணங்களை நவீன காலகட்டத்துக்கு ஏற்ப பயன்படுத்துவதில் வழிகாட்டியான முயற்சிகளை நடராஜ குருவும் நித்ய சைதன்ய யதியும் ஆற்றியுள்ளனர் . அவர்கள் அளவுக்கே இத்தளத்தில் அகேகாநந்த பாரதியின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது . முந்தைய இருவரும் இந்திய தத்துவ ஞானியர்களிலேயே அதிகமான அளவுக்கு முறையான மேற்கத்திய தத்துவக் கல்வி உடையவர்கள் .அமெரிக்கரான அகேகானந்தபாரதி இங்கு வந்து கற்றவர் . மேற்கத்திய அறிவுத்துறைகள் மற்றும் அறிவியங்கியலுடன் இந்திய மரபின் அறிவியக்கத்தையும் உபகரணங்களையும் ஒப்பிடுவது இவர்களின் வழிமுறை. ஆனால் இருமரபுகளையும் கலக்கவோ ஒன்றுக்கொன்று ஏற்ப மாற்றவோமுயல்வதில்லை. தனித்தன்மைகளை மட்டும் அடையாளம் காண்கிறார்கள் ,சவால்களை வகுத்துக் கொள்கிறார்கள். பிறகு இந்தியமரபின் இயல்புக்கு ஏற்ப அதன் கருத்துக்களை அதற்கு சமானமான மேற்கத்திய அறிவுத்தளத்துடன் ஒப்பிட்டு வளர்த்தெடுக்கிறார்கள் . ஆயினும் இது பல தளங்களில் கூட்டாக பலர் உருவாக்கியெடுக்கவேண்டிய ஒரு வளர்ச்சி . அதன் பின்னரே இவ்வுபகரணக்களை நவீன தளத்துக்கு பயன்படுத்துவது சாத்தியமாகக் கூடும் .

வெற்றுகனவா மெய்யியல் ஊகமா ?

மெய்யுளின் பல பகுதிகள் மீமெய்யியல் [metaphysics ] ஊகங்களாகவே நின்று விடுவதாக படுகிறது . ஆகவே சாதாரண தத்துவ விவாதத்தில் அவற்றின் மதிப்பு குறைந்து விடுகிறது.அடிப்படை விவாதத்தில் மட்டுமே அவற்றை கருத்தில் கொள்ள் முடிகிறது .ஆனால் சுந்தர ராமசாமி கூறுவதுபோல அவை உட்டோப்பியக் கற்பனைகள் அல்ல. உட்டோப்பியக் கற்பனை உலகியல் சார்ந்தது , கற்பனாவாதப்பண்பு இருப்பினும் கூட அதற்குரிய தருக்கமும்உலகியல்சார்ந்ததே. மீமெய்யியல் ஊகங்கள் அகவயமானவை , அவற்றின் தருக்கங்கள்கூட உருவகங்களினால் ஆனவையாகவே பொதுவாக காணப்படுகின்றன. அவை ஒரு மெய்மையின் அகமனப் படிமநிலைகள் . தரிசனிகர்களான சிந்தனையளர்களிடம் அந்த அம்சம் பெரும்பாலும் காணப்படுகிறது.மீமெய்யியல் ஊகத்தின் தளம் என்பது நமது அடிப்படைப்புரிதல்களை கொண்டுசென்று பொருத்திப்ப ‘ர்த்து புரிந்துகொள்ள வேண்டிய , அல்லது விரிவாக்கம் செய்துகொள்ளவேண்டிய ஒரு உதாரணப் பிராந்தியம் மட்டுமே . எதிர்கால ‘ மீ மனிதன் ‘நீட்சேயின் ஒரு மீமெய்யியல் உருவகம் மட்டுமே, உட்டோபிய கற்பனை அல்ல.

உட்டோப்பியக் கற்பனைகள் கூட தத்துவ விவாதத்தில் படிப்படியாக மீமெய்யியல்படிமமாக மாறிவிடக்கூடுமென்பதற்கு முதல்பெரும் உதாரணம் பிளேட்டோவின் குடியரசு தான் .அது நேரடியான புறவய தருக்கத்துடன் முன்வைக்கப்பட்ட ஓர் உலகியல் கனவு. ஆனால் பிற்பாடு அது மீமெய்யியல் ஊகமாக மாறி , அரசு சமூகஅமைப்பு ஆகியவை குறித்த நமது ஊகங்களை முழுக்க பரிசோதித்துக் கொள்ளும் களமாக ஆகி தத்துவ சிந்தனையில் கடந்த இருபத்தைந்து நூற்றாண்டாக இடம்பிடித்து வருகிறது. அதேபோல ஹெகலின் இலட்சிய சமூக அமைப்பு என்ற தத்துவார்த்த உருவகம் –மீமெய்யியல் ஊகங்களின் அருகே நிற்பது — மார்க்ஸில் ஒரு உட்டோப்பிய கனவாக மாறியதையும் நாம் காணலாம் .

தளையசிங்கம் உட்டோபிய கனவை முன்வைப்பவரல்ல .ஆகவே சுந்தர ராமசாமி எதிர்பார்ப்பதுபோல புறவயமான தருக்கம் , அங்கு போய்சேர்வதற்கான வரைபடம் , அவரிடம் இருக்க நியாயமில்லை . அவரளவுக்கு அது ஒரு யதார்த்தமானாலும் தளைய சிங்கத்தின் ‘புது யுகம் ‘ ஒரு மீமெய்யியல் ஊகமாகவே உள்ளது . அதன் மதிப்பு அந்நிலையில் அவரது கருத்தியல் ஆய்வுகள் ஓர் ஊச நிலையை அடைந்து அடிப்படை விவாதங்களை நோக்கி நகர்கின்றன என்பதே. ஹென்றி பெர்க்சன், அரவிந்தர் , நடராஜ குரு , ஜெ கிருஷ்ணமூர்த்தி என பெரும்பாலான அடிப்படை சிந்தனையாளர்களிடம் இப்படி ஒரு உச்சநிலை குறித்த உருவகம் இருப்பதைக் காணலாம் . அதன் பயன் இதுவேயாகும்.

இத்தகைய பிழைகள் தளையசிங்கத்தின் ஒட்டுமொத்த அணுகுமுறையையும் ஓர் இடத்தில் உறைந்து நிற்கச்செய்துவிடுகின்றன .தன் அகத்தரிசனங்களை அவர் இந்தியமரபை சார்ந்த உபகரணங்கள் மூலமே அடைகிறார் , முன்வைக்கிறார் .அவற்றை மேற்கத்திய மரபின் ஆய்வு முறைகள் மற்றும் ஆய்வுபகரணங்களுடன் சாதாரணமாக இணைத்து விடுகிறார். கிருதயுகம் ஆன்மீக விடுதலை , உபரி குவிக்கப்படாத சமூகம் , ஆழ்மனத்துடன் மோதாத மன இயக்கம் எல்லாம் எந்த இடத்தில் ஒன்றாக மாறுகின்றன என நிதானிக்க முடியவில்லை . இந்தப்போக்கில் ஒரு புள்ளியில் தளைய சிங்கம் பிறரால் பின் தொடர முடியாதபடி மிக அந்தரங்கமாக பேச ஆரம்பித்துவிடுவதாக நமக்கு தோன்றிவிடுகிறது . தத்துவ அறிஞராக தளையசிங்கத்தின் தோல்வி இங்குதான் நிகழ்கிறது .ஆனால் உண்மையில் அதுகூட தளைய சிங்கத்தின் உபகரணங்கள் அளிக்கும் மாயத்தோற்றம் மட்டுமே . அவை மிக எளிதில் முக்கியமான அழகியல்க் கோட்பாடுகளாகவோ தத்துவ தரிசனங்களாகவோ மாற்றப் படச்சாத்தியமான ஒருவகை அகவய தரிசனக்களேயாகும் . . தளைய சிங்கம் தன் சிந்தனையின் பயணத்தில் வரலாறு உருவாக்கி வைத்திருந்த ஒரு அகழியில் அகப்பட்டுக் கொண்டதன் மூலம் பயணம் தடைபட்ட ஒரு மேதை .

தரிசனத்தின் உளவியல் சிக்கல்கள்

சிந்தனை தரிசனமாவது எப்போது ? அது ஒருவிதத்தில் முழுமையைத் தொட்டுவிடமுனையும் போது என்று சொல்லலாம் . வாழ்க்கையின் எல்லா தளங்களையும் தழுவி விரியும் கருத்தே தரிசனம் என்பது . தருக்கம் வழியாக அப்படி ஒரு மனம் நகர வாய்ப்பே இல்லை . மானுட அனுபவம் , அறிவு அனைத்துக்கும் திட்டவட்டமான எல்லைகள் உண்டு .தன் காலத்தை ,தான் வாழும் சூழலை தாண்டி சிந்திப்பது சாத்தியமில்லை என்றே சொல்லவேண்டும் .ஆனால் எல்லா காலகட்டத்திலும் கால இடத்துக்கு அப்பால் நகரக்கூடிய தரிசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் சிந்தனைகள் செயல்படும் பொதுசட்டகங்களை அல்லது வரைபடங்களை அவையே உருவாக்குகின்றன . ஆகவே தரிசங்கள் என்பவை சிந்தனைத்தளத்தில் வெளிப்படும் உள்ளுணர்வுகளே என்று படுகிறது . படைப்பூக்க நிலைபோலவே தரிசன நிலையும் ஒரு அதீதமனநிலை. ஆழ்மனம் தன்னை வெளிப்படுத்தும் தருணம் .

சிந்தனை படைப்புநிலை என்ற இரு இயக்கங்களுக்கும் பொதுவாக முக்கியமான அம்சம் ஒன்றை அடையாளம் காணலாம். படைப்பூக்கநிலை ஒரு வகை பிளவுண்ட ஆளுமையின்[ schizophrenic ] விளைவு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது . [குறிப்பாக பின் நவீனத்துவ விமரிசகர்கள் இதுகுறித்து அதிகமாக பேசியுள்ளனர் .தமிழில் இக்கருத்தாக்கத்தின் பலதளங்களைமுன்வைத்து பிரேம் ரமேஷ் எழுதியுள்ளனர் ] தருக்கபூர்வமான் புறவய உலகின் நியதிகளுக்கு கட்டுப்பட்ட ஓர் ஆளுமையை மீறி அப்பால் உள்ள பிறிதொரு ஆளுமை கிளம்பி வருதல் பெரும்பாலான படைப்பூக்க நிலைகளில் சாத்தியமாகியுள்ளது . அதையே படைப்பாக்கத்தின் பரவச நிலை என்றோ ஆழம் என்றோ பித்து என்றோ வேறு சொற்களிலோ காலாகாலமாக சொல்லிவருகிறார்கள். சன்னதம் கொள்ளும் சாமியாடியின் அதே மனநிலை . இது கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள , அளந்து எடுத்து பயன்படுத்தப்படுகிற ஒரு மனப்பிளவுநிலை என்று கூறலாம் .மனப்பிறழ்வு என அதை சொல்ல முடியாது .

இன்றைய உளவியல் படைப்பூக்கம் கொண்ட அதீத மனநிலைகளுக்கும் மனப்பிறழ்வுக்கும் இடையேயான நுண்மையான வேறுபாட்டினை உணர்ந்துள்ளது . படைப்பியக்கம் குறித்து 1970களில் மலையாளச்சிந்தனையாளரான பி .கெ .பாலகிருஷ்ணன் * எழுதிய நூலில் மனப்பிறழ்வு நிலைக்கும் படைப்பூக்கத்துக்கும் குறித்து விரிவாக பேசியுள்ளார் .படைப்பாளியில் செயல்படும் இந்த ‘மற்ற ஆளுமை ‘யை அழகாக படைப்பாளிகளே சித்தரித்துமுள்ளனர். போர்ஹெயின் மற்றவன் என்ற கதை தமிழிலும் புகழ்பெற்றது . ஹெர்மன் ஹெஸ்ஸின் சுயகதையில் அவரது சிறுவயது முதல் இன்னொரு சிறுவன் கூட இருக்கிறான் அவன் என்ன செய்தாலும் அதை அப்படியே திருப்பிச் செய்வதுதான் குட்டி ஹெஸ்ஸியின் வெலை .அவனுக்கு எல்லாம் தெரியும் .அவனுக்கு என்ன தெரியுமென்பது மட்டும் ஹெஸ்ஸிக்கு தெரியாது . ஷேக்ஸ்பியரின் இறுதி நாடகமான ‘ புயல் ‘ குறியீட்டு ரீதியாக ஒரு சுயகதை என சொல்லப்பட்டுள்ளது .மந்திரத்தால் பிராஸ்பரோ கட்டிவைத்துள்ள ஏரியல் என்ற சுட்டித்தனமான ஆவி ஷேக்ஸ்பியர் என்ற பிராஸ்பரோவின் மற்றவன் தான் . தடைகளற்றவன் ,மனிதர்கள் மேல் பிரியம் கொண்டவன், அவர்களுடைய அற்பத்தனக்களையும் பேராசையையும் மூர்க்கத்தையும் கண்டு உள்ளூர அரண்டுபோனவன் ,மனிதர்களால் ஒருபோதும் நெருங்கமுடியாதவன்.

மனப்பிளவு நிலை என்பது கலாச்சாரத்தால் கட்டமைக்கப்படுவது என்று இன்று அனைவருமே ஏற்கிறார்கள் .கலாச்சாரம் அளிக்கும் அழுத்தத்தை தாங்க முடியாத மனித மனம் தன்னை இரண்டாகப் பகுத்துக் கொண்டு தன் புழங்கிடத்தை அதிகரித்துக் கொண்டு அதை எதிர் கொள்கிறது .இப்பகுப்புகளுக்கிடையேயான ஒத்திசைவு முற்றிலும் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக ஆகும்போது அது சிதறுண்ட நிலைக்கு செல்கிறது. 1986 முதல் இரண்டரை வருடக்காலம் எனக்கு இப்பிரச்சினை இருந்தது . உச்ச கட்டத்தில் மூன்று மாதம் சிகிழ்ச்சை எடுத்துக் கொண்டதைத் தவிர்த்துப் பார்த்தால் நான் வேலைக்குச் சென்றபடியும் சமூகக்கடமைகளை ஆற்றியபடியும்தான் [பல குளறுபடிகள் இருந்தன என்பது உண்மைதான். பிறர் சிறு பிரச்சினை உள்ளவனைக்கூட பைத்தியம் என அழைப்பதை மிகவும் விரும்புகிறார்கள் ] இருந்தேன். எனது ஒரு பகுதி பூமியின் கட்டுப்ப ‘டுகளுக்குள் செயல்பட்ட போது விடுபட்ட் மற்ற பகுதி தடையற்ற வெளியில் உலாவியது .இரண்டும் ஒன்றை ஒன்று வேவு பார்த்துக் கொண்டிருந்தன . என் படைப்பியக்கத்தின் மிக உக்கிரமான பகுதிகளில் எல்லாமே எனது இந்தக் காலகட்ட அனுபவத்தின் நேரடி பாதிப்பு இருக்கிறது என்று படுகிறது .

இவ்வனுபவத்தை வைத்து இப்படிச் சொல்லமுடியும் . தரிசனிகர்களில் செயல்படும் மனப்பிளவானது சமகாலத்தின் தத்துவ தருக்கங்கள் ,மனநிலைகள் ஆகியவற்றில் இருந்து விலகி அப்பால் செல்ல மனம் மேற்கொள்ளும் முயற்சியின் விளைவேயாகும் . தன்னை பிளந்து ஒரு பகுதியை அவர்கள் கால இடத்துக்க்கு அப்பால் வீசிவிடுகிறார்கள் . அந்த விலகல் மூலமே அவர்களுடைய தனித்த பார்வை , தீர்க்க தரிசன அம்சம் சாத்தியமாகிறது . ஆனால் அது அவர்கள் தங்களில் இருந்து விலகிச்சென்று அடைந்தது என்பதனாலேயே சாதாரணமான தர்க்கத்துக்கு அதீதமானதாக உள்ளது .

நாராயணகுருவைப் பற்றிய தன் ஆய்வுநூலில்* பி. கெ. பாலகிருஷ்ணன் தீர்க்கதரிசிகள் மற்றும் தரிசனிகர்களின் மனநிலை குறித்த விவாதத்தில் படைப்பியக்க மனநிலையின் பிளவுண்ட தனமை எப்படி மேலும் பலமடங்கு உக்கிரத்துடன் அவர்களில் வெளிப்படுகிறது என்று தீர்க்கமாக விளக்கியுள்ளார் . தரிசனம் என்பது ஒருபோதும் தருக்கபூர்வமான சாதாரண மனநிலையின் வெளிப்பாடுகளாக இருப்பது இல்லை .தீர்க்கதரிசியின் மற்றவன் அவரை விழுங்குமளவுக்கு பெரிதாக வளர்ந்து விடுகிறன். அவ்விரு ஆளுமைகளுக்கு இடையே ஒரு குறைந்தபட்ச இணைப்பு சாத்தியமல்லாதாகும்போது பலசமயம் அவர்கள் பித்தர்களேயாகிவிடுகிறார்கள் . மற்றவன் பேசுபது கனவு நிலைக்கூற்றாக , தர்க்கத்துக்கடங்காததாக , வகுத்துவிட முடியாத ஒரு கவித்துவத்தால் தன்னை வெளிப்படுத்துவதாக உள்ளது . கிறிஸ்துவோ , முகம்மதோ ‘ நான் ‘ என்று சொல்லும்போது கால இடத்தில் அகப்பட்ட அந்த ஆளுமை அதைச் சொல்லவில்லை . அவனுக்கு அப்பாற்பட்ட தடையற்ற பேராளுமை ஒன்றே அங்கே பேசுகிறது . எளிய முறையில் கவிஞர்களிடமும் அந்த மற்றவனின் குரலை கேட்கலாம். அதைத்தான் இவன் சாதாரண மொழியிலும் தருக்கத்திலும் கொண்டுவர வேண்டியுள்ளது .

முதல்நிலை தரிசனிகர் பலருடைய மொழிகள் அப்படியே நமக்கு கிடைப்பது இல்லை.அவர்களுடைய மாணவர்களால் அவை ஒழுங்குபடுத்தப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. கிறிஸ்து ,புத்தர் போன்றவர்களின் கூற்றுகளாக தொகுக்கப்பட்டுள்ளவை உச்சபட்ச கவித்துவம் ஒரு வலுவான தொகுப்புமுறையால் பிற்பாடு ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதையே காட்டுகின்றன. அரவிந்தர் இதைக்குறிக்க அழகிய சொல்லாட்சி ஒன்றை முன்வைக்கிறார் , உச்சக் கவித்துவ அரற்றல் [supreme poetic utterance] ஆகவே தரிசனச்சாயல் கொண்ட எந்த சிந்தனையாளனிலும் ஒழுங்கின்மை ஒரு இயல்பாக இருப்பதைக் காணலாம் . காந்தியின் அரசியலில் அவரது தரப்புகள் தெளிவாக முன்வைக்கப்பட்டிருப்பினும் அவர் அங்கு வந்து சேர்ந்த முறை எப்போதுமே மர்மமானதுதான் .அதை அவர் ‘குரல் ‘ என்கிறார் . அது அந்த பிறனின் குரல்தானே ?

முதன்முதலாக நான் நீட்சேயின் அனைத்து எழுத்துக்களின் தொகுப்பை படிக்க முற்பட்டபோது அவற்றின் சிதறுண்ட தன்மை , சட்டென்று அபத்தத்துக்கு தாவிவிடும் அகத்தரிசனங்கள் ஆகியவற்றால் பெரிதும் குழப்பப்பட்டேன் .நாந்த குழப்பத்திலிருந்து மீளவுமில்லை .

நான் காத்திருந்தேன் வெறுமே

ஆனந்தமாக நன்மைதீமைகளுக்கு அப்பால்

ஒளி பின்பு நிழல் அந்த நாள் மட்டுமே இருந்தது

அந்த ஏரி , அம்மதியம், முடிவின்றி வளர்ந்த காலம்

நண்பனே அப்போது ஒருவர் இருவரானோம்

ஜரதுஷ்ட்ரன் என்னிலிருந்து என் வழியாக வெளிவந்தான் .

நீட்சே [ ஹால்வே யில்]

நீட்சேயின் மனப்பிளவுநிலையைப்பற்றிய அவரது நேரடி வாக்குமூலமாக ஆகும் முக்கியமான கவிதை இது . சமீபத்தில் விட்ஜென்ஸ்டானின் நூலை படிக்கும்போதும் அதே குழப்பம் ஏற்பட்டது .பி.கெ. பாலகிருஷ்ணன் கூற்றுப்படி மிகச்சில தரிசனிகர்களே அந்தக்குழப்பங்கள் இல்லாமல் , இருதளங்க்ளுக்கிடையே சமநிலையை தக்கவைத்தப்டி செயல்படுகிறார்கள் , உதாரணம் சங்கரர் , கார்ல் மார்க்ஸ் .

மு தளையசிங்கத்தின் இறுதிக்காலகட்டத்தில் அவரை பற்றி ஒரு சக அறிஞர் எழுதிய கடிதம் மெய்யுளில் தரப்பட்டுள்ளது . அதில் அவரை மனப்பிளவு நோயால்பீடிக்கப்பட்டவர் என்று அவர் குறிப்பிடுகிறார் . அது சரிதான் என்பதற்கு மெய்யுளே ஒரு சிறந்த சான்றேடு ஆகும். அதன் உன்மத்த நிலை ஒருபுறமிருக்க , நேரடியாகவே அது ஒரு மனப்பிளவு ஆவணம் . நல்லசிவம் ,மு தளையசிங்கம் என இரு ஆளுமைகள் மோதியும் கலந்தும் வெளிப்படுவதை ஆதாரமாக சொல்லலாம். தளைய சிங்கத்தின் விருப்பபடி அவரது தம்பி பொன்னம்பலம் எழுதிய பதிலில் மனப்பிளவு என்ற கருத்து மனத்தின் இயக்கநிலைகள் குறித்து பெரிதாக ஞானமேதுமில்லாத நிலையில் உளவியலாளர் உருவாக்கியது என்கிறார் . அது உண்மை என இன்று மனப்பிளவு முறித்து வரும் ஆய்வுகளை பார்த்தால் உணரலாம் . ‘

‘ பிளவுண்ட மனம் என்பதைவிட நான் கட்டுரையில் கூறிய விதத்தில் இரு மனத்தளங்களின் கலப்பு என்று சிந்தித்துபார்த்தால் அதன் முற்போக்கான வளர்ச்சி மாற்றத்திற்குரிய தன்மையைகாணலாம்.அந்தத்தன்மையை வடிவாகப்பயன்படுத்துவதற்கு அவை பற்றி சீராக தெரிந்த சமய ஞானங்களுக்குரிய யோக முறையை நாடவேண்டுமே ஒழிய திரும்பவும் பொருள்முதல்வாத பெளதிக விஞ்ஞானத்திடம் சரண்புகுவது புத்திசாலித்தனமல்ல ‘ ‘[மெய்யுள் பகுதி கலப்பு வலயம் ]

என்று மிக நுட்பமாக அந்தமனநிலையின் சாத்தியங்களையும் பயன்பாடுகளையும் மு.பொன்னம்பலம் விளக்குகிறார் .

மனப்பிளவை கட்டுப்படுத்தி ,ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி ,மனிதர்களின் உளச்சக்தியை இருமடங்காக்க முடியும் என்றுகூட இன்று அறிவியல் ஊகங்கள் முன்வைக்கப்படுகின்றன . மு.பொன்னம்பலம் தொடர்ந்து

‘ ‘ பிளவுபட்ட அல்லது கலப்பு மனநிலையை தாண்ட முடியாத நிரந்தர மனக்குழப்பங்களை காட்டும் பைத்தியங்கள் கூட பரிணாம வளர்ச்சியில் எதிர்பார்க்க வேண்டிய breaks வகையேதான்…. ‘

என்று ஒரு படிமேலே சென்று வலியுறுத்துகிறார் . இக்கடிதம் எழுதப்பட்ட போது அந்த நண்பர் எதிர்பார்த்த மேற்கத்திய உளவியல் சார்ந்த நிரூபணங்களை அளிக்க மு.பொன்னம்பலத்தால் முடிந்திருக்காது .ஆனால் இன்று ஆலிவர் சாக்ஸ்* போன்ற நவீன நரம்பியல் ,உளவியல் அறிஞர்களிடமிருந்து ஏராளமான ஆய்வுண்மைகளை முன்வைக்கமுடியும் .

தரிசனிகர்களில் ஒரு பகுதியினர் தங்களை வெளிப்படுத்த முடியாதவர்கள் , அந்த இறுதி எல்லையை அடைந்து நிறுவிட்டவர்கள் . இன்னொரு சாரார் வெளிப்படுத்தியும் புரிந்துகொள்ளப்படாதவர்கள் . இவ்விரு சாராரும் தங்கள் தரிசனத்தை தங்கள் வாழ்க்கையால் அடிகோடிடும் பொருட்டு சிலுவை ஏறியே ஆகவேண்டுமென்ற நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் என்று பி. கெ. பாலகிருஷ்ணன் சொல்கிறார் .ஏசுவும் காந்தியும் தங்கள் மரணத்தை நோக்கி தாங்களே நடந்து சென்றனர் ,தங்கள் உயிர்த்தியாகம் மூலம் ,அது உருவாக்கும் மனசாட்சிப் பிரச்சினைகள் மூலம் ,தங்கள் தரிசனத்தை பிறர் பொருட்படுத்தியேதீரவேண்டுமென்ற நிலையை உருவாக்கினார்கள் என்கிறார் .மு தளையசிங்கத்தின் வாழ்க்கையை பார்க்கும்போது அவரும் அதே பாதையில் செல்வது தெரிகிறது .மெய்யுளுக்கு பிறகு அவர் தன் மரணம் மூலம் தனது நேர்மையான தீவிரத்தை அடிக்கோடிட்டு முடித்துக் கொள்வதே சாத்தியமான விஷயமாக இருந்தது .

ஆகவே தளையசிங்கத்தின் மெய்யுள் தரிசன நூல்களுக்கே உரிய அனைத்துச் சிக்கல்களுடனும் உள்ளது. அது படிம மொழியில் பேசமுயல்கிறது .பல படிமங்கள் மரபிலிருந்து வந்தவை ,பல அந்தரங்கமானவை . படைப்பூக்கம் கொண்ட உக்கிரமான மனப்பிளவு நிலையில் அது செயல்படுகிறது . ஆகவே அது அகவெளிப்பாடுகளுக்கும் புறத் தருக்கங்களுக்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்க ஓயாது முயன்று பலசமயம் தோல்வியையே அடைந்துள்ளது . ஒரு பிரதி என்ற முறையில் மெய்யுளை அணுகுவது மிகச்சிரமமானது . அது நம் சிந்தனையை சிதறடிக்கலாம். நாம் அதனிடம் கேட்கும் வினாக்களுக்கு அது நேரடியாக பதில் அளிக்காமல் போகலாம் . மெய்யுளை அணுக சிறந்த வழி அதை தனித்தனி துளிகளாக வாசிப்பதே .அதாவது அதை நமது கற்பனை மற்றும் சொந்த தருக்கம் மூலம் தொகுத்துக் கொள்ளலாம் . தளையசிங்கம் அளிக்கும் தொகுப்புமுறையை முற்றிலும் உதாசீனம் செய்துவிடலாம் . அவரது அரைகுறை விளக்கங்கள் , விவாத எல்லையை மீறிய பயணங்கள் ,சில அபத்தமான சுயவிவரணைகள் ஆகியவற்றை நாம் துணிந்து வெட்டித்தள்ளிவிடவேண்டும் . அப்படி வாசித்தால் அற்புதமான அகத்தரிசனம் ஒளிவிடும் துளிகளை அடுத்தடுத்து நாம் கண்டபடியே போகலாம் . நமக்கு வரலாற்று பிரக்ஞையும் , கற்பனை ஆற்றலும் ,சிந்தனைப்பழக்கமும் இருக்குமென்றால் அந்த ஒவ்வொரு துளியும் நமக்கு ஒரு வாசலை திறந்தபடியே போகும் . இந்த அனுபவத்தை அளிக்கும் தமிழ் சிந்தனையாளர் எவருமில்லை

நம்மில் அப்பொறிகள் உருவாக்கும் திறப்புகளை தொகுத்து அதன்மூலம் நாம் தளையசிங்கத்தை புரிந்து கொண்டோமென்றால் மட்டுமே அவரது மனம் அதன் உக்கிரநிலையில் எப்படி இயங்கியதோ அதன் அருகே நம்மால் போக முடியும். அதுவன்றி நாம் அவரது ஒழுங்கின்மையை பிழைகளை முக்கியப்படுத்தினோமெனில் அவரை முற்றாக இழந்துவிடுவோம் . துரதிருஷ்டவசமாக மேற்கோள்கள் மூலம் தெள்ளத்தெளிவாக சொல்லப்பட்ட ஒன்றை மனனம் செய்து உச்சாடனம் செய்வதே சிந்தனை என நம்மிடம் சொன்னபடியே இருப்பவர்களையே நாம் சிந்தனையாளர்களாக பல காலமாக கண்டு வருகிறோம் . அவர்களின் ‘தெளிவுக்கு ‘ பழகி விட்டிருக்றோம் . அவர்கள் தளையசிங்கம் போன்றவர்கள் மீது முன்வைக்கும் விமரிசனங்களுக்கும் பழகிவிட்டிருக்கிறோம். விட்ஜென்ஸ்டான் தமிழில் எழுதினாலும் தளையசிங்கம் எதிர்கொண்ட அதே விமரிசனங்களைதான் பெற்றிருப்பார் . அவர் தெளிவாகவும் தருக்கபூர்வமாகவும் ஏதும் எழுதியது இல்லை . வாதிட முன்வந்ததே இல்லை . அவரது எல்லா எழுத்துக்களும் சிறு சிறு உதிரி கூற்றுகளாக , ஒற்றையான தரிசனத் தெறிப்புகளாக உள்ளன. அவரை அறிய வேண்டுமெனில் அவற்றுக்கு இடையே அவரது மனம் அடைந்த பாய்ச்சல்களை அவ்வரிகளினூடாக சென்று நாம் அடையவேண்டும் . எந்த மூலச்சிந்தனையாளனையும் அறிய அது அவசியம் .தளையசிங்கம் அத்தகைய கவனம் இருந்தால் மட்டுமே அடையக்கூடிய சிந்தனையாளர் .

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 2

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 3

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 1

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 2

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 3

முந்தைய கட்டுரைதிண்ணை ஆசிரியருக்கு கடிதம்
அடுத்த கட்டுரைமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 2