மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 2

மு.தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?

தளையசிங்கத்தின் கருத்தியக்கத்தை இரு கூறாக வகுத்து புரிந்துகொள்வது அவசியமாகும் . தருக்கபூர்வமாக , சிந்தனை சார்ந்து அவர் செயல்பட்ட தளம் முதலாவது. உள்ளுணர்வு சார்ந்து அவர் செயல்பட்ட தளம் இரண்டாவது . அவரிடம் இவ்விரு தளங்களுக்கும் இடையே மோதலும் முரண்பாடும் எப்போதும் உண்டு . அவரை இன்று நாம் பொருட்படுத்த வேண்டியது அவரது உள்ளுணர்வு வெளிப்படும் கணங்களுக்காக மட்டுமே .

அடுத்த யுகம் குறித்த கனவின் பின்னணி

தளையசிங்கத்தின் தரிசனங்களில் அடுத்த யுகம் குறித்த கனவுகளுக்கே பெரிதும் இடமளிக்கப்பட்டுள்ளது . இதை இரண்டு தளங்களில் நாம் புரிந்துகொள்ள முடியும் .ஒன்று காலம்காலமாக மானுட சிந்தனையில் மேலும் சிறப்பான அடுத்த காலகட்டம் குறித்த கனவுக்கு இடம் இருந்தபடியே உள்ளது . எல்லா தரிசனங்களும் அடிப்படையில் பொற்காலம் குறித்தவையே என்று சொல்லலாம். சென்று மறைந்த பொற்காலத்தை மீட்பது பற்றியோ அல்லது புதிய ஒரு பொற்காலத்தை உருவாக்குவது பற்றியோதான் அவை பேசுகின்றன. சொல்லப்போனால் இப்பெரும் கனவே மானுடத்தை இதுவரைக்கும் இட்டு வந்துள்ளது .

அடுத்த தளம் குறிப்பானது . மேற்கத்திய சிந்தனையில் , பதினெட்டாம் நூற்றாண்டில் பற்ப்ல துறைகளில் பல்வேறு வகையான பரிணாம வாத கருத்துக்கள் உருவாகி வலுப்பெற்றன. அதற்கும் முன்பே கிரேக்க சிந்தனையிலேயே பரிணாம வாதம் பேசப்பட்டிருந்தது . அதன் உச்சப்புள்ளி சார்ள்ஸ் டார்வினின் உயிரியல் பரிணாம க் கொள்கை . அது எப்படி செமிட்டிக் மதங்களின் பிரபஞ்ச உருவகத்தை உலுக்கியது என நாம் அறிவோம். ஆனால் அனைத்து சிந்தனைகளிலும் அதன் குறியீட்டு தாக்கம் ஏற்பட்டது . உயிரியல் பரிணாமத்தின் விதிகளை அப்படியே கலாச்சாரத்திலும் , சமூகவியலிலும் , வரலாற்றிலும் பிற்பாடு உளவியலிலும் போட்டுப் பார்த்ததன் விளைவாக பல்வேறு விதமான சித்தாந்தங்கள் உருவாயின .

உதாரணமாக ஒருசெல் உயிரினத்திலிருந்து பரிணாமம் அடைந்து இன்றைய மனிதன் உருவான நீண்ட பரிணாமப் பாதையின் திசை மேற்கொண்டு என்னவாக இருக்கும் என்ற கேள்வி தத்துவ வாதிகளால் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டது . அதேவினா வரலாற்றையும் கருத்தியல்களையும் மையமாக்கி விரிவுபடுத்தப்பட்டது .அன்றையகாலகட்டமானது பொருள்முதல்வாதிகளின் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்ட கருத்துமுதல்வாதம் தன் தர்க்கத்தை விரிவுபடுத்தி பல உச்சங்களை கண்டடைந்த ஒன்றாகும். அத்துடன் அந்த உச்சநிலையில் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் ஒன்றையொன்று கண்டுகொண்டதும் நிகழ்ந்தது .ஹெகல் மார்க்ஸ் நீச்சே போன்றவர்கள் அப்படிப்பட்ட உச்சநிலைகள் .மேற்கண்ட வினாவை எழுப்பிய தத்துவவாதிகள் மனிதனின் பரிணாமத்துக்கும் , அவனது இதுவரைக்குமான வரலாற்றுக்கும் ஒரு தெளிவான இலக்கு , அதை நோக்கி அவனை நகர்த்திச் செல்லும் திட்டம் இருப்பதாக உர்வகித்தார்கள் . முழுமுதல்படைப்பாளி, கண்ணுக்குதெரியாத இயக்குநன் ,கடவுள் என்ற மையத்தில் தேங்கி நின்றிருந்த கருத்துமுதல்வாதம் இந்த கட்டத்தில்தான் புத்துயிர் பெற்று பாய்ச்சலை நிகழ்த்தியது என்பதைக் காணலாம்.

வரலாற்றுவாதம் [Historicism ] தான் கருத்துமுதல்வாதத்தின் கடைசி பெரும் ஆக்கம். அதை மார்க்ஸியம் போன்ற பொருள்முதல்வாத சித்தாந்தத்துக்கும் செல்லுபடியானதாக ஆக்கியதுதான் அதன் வெற்றி. வரலாற்றுவாதம் வரலாற்றை ஒரு திட்டம் உடையாதாக சித்தரிக்கும்போது வேறுவழியில்லாமல் இறுதி இலக்கையும் தீர்மானித்து விடுகிறது . ஆகவேதான் ஹெகல் உச்சகட்ட நாகரீகம் அடைந்த ஒரு அதிசமூக அமைப்பு நோக்கி வரலாறு நகர்வதாக சொல்லநேர்ந்தது .நீட்ச்சே அதிமனிதனை உருவகிக்கிறார் . மார்க்ஸ் பொதுவுடைமை சமூகத்தை உருவகிக்கிறார் . ‘ முழுமுதல் மனிதன் ‘ , ‘ முழுமுதல் சமூகம் ‘ குறித்த ஏதேனும் ஒரு சித்தாந்தத்தை இக்கால தத்துவவாதிகளில் பெரும்பாலோர் முன்வைத்திருப்பார்கள் .

பிற்பாடு உளவியலின் கண்டுபிடிப்புகள் பரவலாக வெளிவந்தபோது இந்தப்போக்குகளில் வேகம் கூடியது . ஃப்ராய்ட் மனம் என்பது ஒரு இயல்பான அகச்செயல்பாடு அல்ல , அறியமுடியா ஆழங்கள் கொண்டது என கூறியதானது மானுட மனம் எதிர்காலத்தில் அடையச்சாத்தியமான பெரும் பாய்ச்சல்கள் குறித்த கனவுகளை மேற்கே ஏற்படுத்தியது .சி ஜி யுங்கின் கருத்துக்களை பயன்படுத்தாத மேற்கத்திய கருத்துமுதல்வாதிகளே இல்லை என்று சொல்லலாம் .மானுடக் கூட்டுமனம் குறித்த உருவகமே அதிமனம் , மாமனம் குறித்த பலவகையான உருவகங்களுக்கு ஆதாரம் .

பரிணாமவாதம் கருத்துமுதல்வாத அடிப்படையில் விரிவுபடுத்தப்பட்டதே ஹென்றி பெர்க்ஸனின் படைப்பூக்க பரிணாமம் குறித்த சித்தாந்தம் . தத்துவார்த்தமாக பரிணாம வாதத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துசென்றவர் கார்ல் பாப்பர். மானுடம் ஒருநாள் மரணத்தையும் தாண்டி செல்லலாம் என்கிறார் பெர்க்ஸன் . மனிதனின் எல்லா உளவியல் நிகழ்வுகளையும், எல்லா கலாச்சார எத்தனங்களையும் மேலும் மேலும் சிறந்த மனிதத்துக்காகவும் , சமூகத்துக்காகவும் இயற்கை மேற்கொள்ளும் சிருஷ்டிகர செயல்பாடுகளாகவே விளக்க முடியும் என்கிறார் பெர்க்சன் . அதேபோல மேலோட்டமான பார்வையில் மானுட வரலாற்றிலும் மானுட சிந்தனைப்போக்கிலும் உருவாகும் முரண்பாடுகளை விரிவான மானுடபரிணாமம் சார்ந்த ஒரு திட்டத்தில் பொருத்தினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்கிறார் பாப்பர் . இதற்கு சமானமாக மேலும் அகவயமான ஒரு குரலின் அரவிந்தர் மாமனிதன் குறித்து பேசுகிறார் . பரிணாமவாதம் நவீன நரம்பியல் ஆய்வுகளில் மேலும் பல [என்னால் தெளிவாக புரிந்துகொள்ள முடியாதபடி உள்ள ] முக்கியமானவளர்ச்சிகளை அடைந்துள்ளது.இப்போக்குக்கு எதிரானது மேற்கே இப்போது சற்று அடங்கியுள்ள பின் நவீனத்துவ அலையாகும்.

பரிணாம வாதத்தையும் அதன் விளைவான வரலாற்றுவாதத்தையும் உளவியல் கருவிகளின் உதவியுடன் விளக்க முயல்கிறார் தளையசிங்கம் . அவரது படைப்புலகில் பொதுவாக மேற்குறிப்பிட்ட சிந்தனையாளர்களின் பெயர்களையும் மேற்கோள்களையும் காணமுடிவதில்லை . ஆனால் அவர்களின் பாதிப்பையும் சமானமான சிந்தனைகளாஇயும் காணாமுடிகிறது . வரலார்ருவாதம் சார்ந்த கனவு அவருக்கு அரவிந்தரிலிருந்து கிடைத்திருக்கிறது .

வரலாற்றுவாதத்தினை நிராகரிக்கும் பின் நவீனத்துவ சிந்தனைகள் இங்கு வரும் போது அவர்கள் எதிர்கொள்ளவேண்டிய முக்கியப்படைப்பாளி தளைய சிங்கமே . அவர் வேறு ஒருவகையில் நவீனத்துவத்துக்கு எதிராக இருப்பதையும் , அவரது படைப்புகளின் பிளவுண்ட தன்மை பின் நவீன படைப்புகளுக்கு சமானமாக இருப்பதியும் அவர்கள் விளக்கவேண்டியிருக்கும்

இலக்கியவாதியும் தத்துவவாதியும்

தளையசிங்கம் ஒரு முற்போக்காளராக தன் இலக்கிய வாழ்க்கையை ஆரம்பித்தவர் . பிற்பாடு இலக்கிய ஆக்கம் மூலம் அத்தத்துவத்தின் போதாமைகளை உணர்ந்து அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தவர் . அவர் தீவிரமாக செயல்பட்ட காலத்தில் தான் சோவியத் ருஷ்யா குறித்த நம்பிக்கைகள் வீழ்ச்சி அடைந்தன. உலகம் முழுக்கவே இடதுசாரி எழுத்தாளர்கள் வேறு தளங்களுக்கு நகர முற்பட்டனர் . இடதுசாரி கருத்துக்களில் இருந்து வெளியேவர தளைய சிங்கத்துக்கு ஆர்தர் கோஸ்லர், ஷோல்செனிட்சின் முதலியோரின் ஆக்கங்கள் தூண்டுதலாகியுள்ளமை அவரது எழுத்துக்களில் இருந்து தெரிகிறது . அதன் பின் தளையசிங்கத்தின் எழுத்துக்களில் நவீனத்துவச் சாயல் உருவாகிறது . கோட்டை , தொழுகை போன்ற கதைகள் நவீனத்துவ வடிவப்பிரக்ஞையும் , தத்துவ நோக்கின் சாயலும் உடையவையே. இந்தியாவெங்கும் இடதுசாரிக் கருத்துக்களைமீறி வளர்ந்த எல்லா படைப்பாளிகளும் நவீனத்துவ அழகியல், தத்துவ கட்டமைப்புக்கு உள்ளேயெ சென்று சேர்ந்துள்ளனர் . அங்கேயே தங்கி பல ஆழமான சிறுகதைகளையும் சிறு நாவல்களையும் படைத்துள்ளனர். தமிழில் சிறந்த உதாரணம் சுந்தர ராமசாமி. இன்று நவீனத்துவம் பின்னகர அவர்கள் தங்கள் முக்கியப்படைப்புகள் சிலவற்றை மட்டும் விட்டுவிட்டு காலத்தில் மறைந்து கொண்டிருக்கிறார்கள் . ஆனால் தளைய சிங்கம் சீக்கிரத்திலேயே அந்த வட்டத்துக்கு உள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருப்பதைக் காணலாம் .

தளையசிங்கத்தை மேலும் நகரவைத்தது எது ? முதல் பார்வைக்கு அது இந்திய ஆன்மீக மரபின்மீது அவர் கொண்ட ஈடுபாடுதான் என்று படும் . அது அடிப்படையில் நாஸ்திக [எதிர்மறை ] தன்மைகொண்ட நவீனத்துவ கொள்கைகளுடன் ஆழமான விலகலை அவருக்கு ஏற்படுத்தியது என்று தோன்றும் . ஆழ்ந்து யோசித்தால் தளைய சிங்கத்தை இயக்கிய அடிப்படை வினாக்கள்பலவற்றுக்கு நவீனத்துவ மரபில் பதில் இல்லை என்பதே அதற்குக் காரணம் என்று தெரியும். உதார்ணமாக தளையசிங்கம்அறிவியலின் எல்லை என்ன என்றகேள்விக்கு அழுத்தமான முக்கியத்துவம் தருபவர் . அறிவியல் நோக்கின் அடிப்படையாக மெய்யியலுக்கு கவனம் தருபவர் .இந்த பார்வையே நவீனத்துவர்களிடம் இல்லை. நவீனத்துவம் அறிவியல் நோக்கின் கலைநீட்சி மட்டுமே . நவீனத்துவத்திலிருந்து விலகிய தளையசிங்கம் அதற்கு அடுத்தகட்டத்துக்கு தன் சொந்த உள்ளுணர்வையும் தருக்கத்தையும் துணைகொண்டு நகர முயன்றார்,அவரது முதன்மையான பங்களிப்புகள் இந்த தளத்திலேயே அமைந்தன.

தளையசிங்கத்தின் சிறந்த சிறுகதைகளை [ கோட்டை ,தொழுகை, ரத்தம் , தேடல், சாமியாரும் வீட்டுக்காரரும் ] தமிழின் ஆகச்சிறந்த 50 கதைகளின் பட்டியலில் சேர்க்கலாம். ஈழத்தின் படைப்பிலக்கியவாதிகளில் இப்பட்டியலில் முதலிடம் தரத்தக்கவர் தளையசிங்கமே . அவரது ‘ஒரு தனிவீடு ‘ ஈழ குறுநாவல்களில் முதன்மையானது என்பது என் கணிப்பு. ஆயினும் தமிழின் முக்கியமான படைப்பாளிகளுடன் ஒப்பிடப்பட்டால் தளயசிங்கம் சற்று கீழேயே நிற்கநேரிடும் . அவரது முக்கியத்துவம் அவர் நவீனத்துவத்தை விட்டு முன்னகர்ந்த பிறகே ஏற்படுகிறது . அப்படி முன்னகர்ந்தபோது அவர் படைப்பிலக்கியத்தைவிட்டும் பெரிதும் நகர்ந்து விட்டிருந்தார் .இம்முன்னகர்தலை முதலில் அடையாளம் காட்டிய நூல் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி ‘

ஏழாண்டு இலக்கியவளர்ச்சி அடிப்படையில் இலக்கிய சர்ச்சைத்தன்மை [polemical] கொண்டது .ஈழ இலக்கியத்தின் ஒரு காலகட்டத்துப் போக்குக்ளை அவற்றின் படைப்பாளிகளை முன்வைத்து தளையசிங்கம் அலசுகிறார் .ஆனால் அதன் அமைப்பை கூர்ந்து கவனித்தால் அக்காலகட்ட கருத்தியல் இயக்கத்தை ஈழ இலக்கியத்தை முகாந்திரமாகக் கொண்டு தளையசிங்கம் மூன்று பெரும் போக்குகளாகப் பிரித்து ஆய்வுக்கு உட்படுத்துவது தெரியவரும் .ஒன்று மார்க்ஸிய சிந்தனைத்தளம். பொருளியல் அடிப்படையில் சமூக இயக்கத்தை புரிந்துகொள்ளுதல், வர்க்கப் போரின் அடிப்படையில் வரலாற்றை விளக்குதல் ,மனித மனத்தை ஒரு சமூகக் கட்டுமானமாக காணுதல் , கலைஇலக்கியங்களை கருத்தியலின் நீட்சிகளாகமட்டும் வகுத்துக் கொள்ளுதல், கருத்தியலை சமூக மாற்றத்துக்கான கருவியாக பயன்படுத்துதல் ஆகியவை அதன் ஆதாரப்போக்குகள் . கைலாசபதி இதன் பிரதிநிதி .

முற்போக்கில் பங்குகொண்டிருந்து பிரிந்து எதிராக ஆகிய போக்கு எஸ் பொன்னுத்துரை வழிநடத்திய நற்போக்கு . இதை உலகளாவிய தளத்தில் விரித்துப் பார்த்தால் மனித மனத்தின் இயக்கத்திற்கு நேரடியான சமூகவியல் விளக்கங்களை அளிக்க மறுத்து அதன் செயலபாடுகளை மேலும் நுட்பமாக காணமுயன்ற , மொழிக்கு மனித மன இயக்கத்துடன் கொள்ள சாத்தியமான இணைவை இலக்கியத்தின் அடிப்படை விதியாகக் கண்ட , தன்னை முன்னிறுத்தி சமூகத்தையும் வரலாற்றையும் அறிய முயன்ற நவீனத்துவப் பொதுப்போக்குகளுடன் அடையாளப்படுத்தலாம்.ஆனால் நற்போக்கு முற்போக்கைப்போலவே சமூக மாற்றத்தில் இலக்கியம் ஆற்றக்கூடிய பங்களிப்பை வலியுறுத்தியது . இதன் இணையான மறுபக்கமாக செயல்பட்ட நவீனத்துவத்தின் இன்னொருபோக்கை முதளையசிங்கம் பிரமிளில் சரியாகவே அடையாளம் கண்டார்.கருத்தியல் இயக்கம் , சமூக இயக்கம், அழகியல் ஆகியவற்றுக்கு இடையே இணைகோடுகளை போட மறுத்து இலக்கியத்தை பெரிதும் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் காணமுயன்ற மரபு இது .

தன் இயல்பின்படி பிரமிளின் செயல்தளத்துடன் இணைவு கொள்ள வேண்டியவரே தளையசிங்கம். அவரது உள்ளுணர்வு பிரமிளின் படைப்பியக்கத்தை ஏற்கவும் செய்கிறது . ஆனால் இரு அடிப்படைகளில் இருந்து இறுதிவரை தளைய சிங்கம் விலகவில்லை .ஒன்று அனைத்து செயல்பாடுகளுக்கும் மானுட விடுதலைமேம்பாடு ஆகியவற்றுடனான உறவு முக்கியம் என அவர் கருதினார் .இரண்டு தத்துவம் அரசியல் அறிவியல் போன்ற துறைகளுடன் உறவின்றி இலக்கியம் தனித்து இயங்க முடியாது என அவர் நம்பினார் . இந்த இரு நம்பிக்கைகளும் அவரை மேலும் உந்திச்சென்றன. ஏழாண்டு இலக்கியவளர்ச்சியை பார்த்தோமென்றால் தளைய சிங்கம் கைலாசபதி முன்வைத்த எந்திரத்தனமான அணுகுமுறையை கடுமையாக நிராகரிக்கிறார் என்பது தெரிகிறது . அத்துடன் நற்போக்கினர் மொழியில் ஆழ்ந்து இலக்கியத்தை உச்சாடனத்தொழில்நுட்பமாக ஆக்க முயன்றதையும்ம் நிராகரிக்கிறார். பிரமிளின் உள்ளுணர்வு சார்ந்த இயங்குதளம் அவரை ஒப்பீட்டளவில் மேலும் கவர்கிறது .

ஆனால் மூன்று போக்குகளையும் தளையசிங்கம் நிராகரிக்கவே செய்கிறார் . இது முதல் தோற்றம் என்பேன் . அவர் கைலாசபதியை நிராகரிப்பது அறிவியலுக்கு எதிரான நோக்கில் அல்ல .மாறாக கைலாசபதி முன்வைத்த அறிவியல் நோக்கு காலத்தால் பின்தங்கியது என்பதனாலேயே . ஏழாண்டு இலக்கியவளர்ச்சி எழுதப்பட்ட காலத்தில் ஐரோப்பாவில் தளையசிங்கத்தின் தரப்பை மிக வலுவாக உறுதிப்படுத்தும் ஏராளமான அறிவியல் கோட்பாடுகள் வர ஆரம்பித்துவிட்டன, அவற்றை தளையசிங்கம் அறிந்திருக்கவில்லை என்றே அவரது எழுத்துக்களில் இருந்து தெரிகிறது .அக்கோட்பாடுகள் எண்பதுகளில்தான் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டு விவாதத்துக்கு வந்தன . மொழியைமுன்னிறுத்தி வரலாறு , இலக்கியம் , தத்துவம் , அறிவியல் ஆகியவற்றை விவாதிக்க முற்பட்ட கோட்பாடுகளையே குறிப்பிடுகிறேன் . அவை புறவயம ‘ன அறிவு என்ற கருத்தை கேள்விக்குரியதாக்கி , நிரூபணவாதத்தின் முக்கியத்துவத்தை நிராகரித்தன என்பதை நாம் அறிவோம் . கைலாசபதி முன்வைத்துப்பேசிய அறிவியல் கோட்பாடுகள் அவை பிறந்த அறிவுத்தளத்திலேயே ஆழமான மறுபரிசீலனைகளுக்கு ஆளாகிவிட்டிருந்தன.

தளையசிங்கம் இந்த சிந்தனை அலையை நேரடியாக அறியாவிட்டாலும் அவர் அன்றைய நுண் இயற்பியலில் வந்த மாற்றங்களை கூர்ந்து கவனித்திருந்தார் . அம்மாற்றங்கள் புறவய யதார்த்தம் , நிரூபணவாதம் போன்ற கருத்துக்களின் அடிப்படைகளை நிராகரிப்பதை அவர் ஊகித்தார் .அவை கருத்தியல் தளத்தில் ஏற்படுத்தபோகும் மாற்றங்களை அவர் முன்கூட்டிக் கண்டார் . கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் போன்ற பிரிவினைகள் அர்த்தமிழந்துவிட்டன என அவர் மீண்டும் மீண்டும் சொல்வதை காணலாம். அப்போது அவருக்கு பதில் சொல்ல வந்த ஈழ எழுத்தாளர் ஒருவர் தளைசிங்கத்தின் கருத்துக்களுக்கு நிரூபணவாத பலம் இல்லை என்று சொன்னது மெய்யுளில் பிரசுரமாகியுள்ளது.இன்று அக்கேள்விகளுக்கு பதிலை நாம் ஃபிரிஜோ காப்ராவில் ,காரி சுகோவில் , ரோஜர் பென் ரோஸில் , பால் டேவிஸில் அல்லது க ‘ர்ல் பாப்பரில் இருந்து எடுத்துச் சொல்லலாம் . கைலாசபதியின் பார்வை நவீன அறிவியல் நோக்குக்கு எதிரான இயந்திரயுகத்து பார்வை என்பதே தளையசிங்கம் முன்வைக்கும் விமரிசனம் .

அதேபோல நவீனத்துவத்தை விமரிசிக்கும் தளையசிங்கம் அதன் தனிமனிதமையப் பார்வையை ஏற்கமறுக்கிறார். அது தருக்கபுத்தியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை அவரால் ஏற்கமுடியவில்லை . மேற்கத்திய சுதந்திர இச்சை [free will ] விவாதங்களின் நீட்சியாக உருவான நவீனத்துவ சிந்தனைப்போகுகள் மனிதனை சமூகத்துக்கு எதிரானவனாக நிறுத்துவதன் மூலம் அவனது சக்தியை வீணடிக்கின்றன என்று அவர் கருதுவது தெரிகிறது . மனிதனை சமூகத்தில் இருந்து பிரித்துப் பார்ப்பதை அவர் விரும்பவில்லை .அத்துடன் தளையசிங்கத்தை பொறுத்தவரை மெய்யியல் மிக முக்கியமானது . அது மானுட நன்மையை மேம்பாட்டை இலக்காக கொண்டதாகவும் இருந்தாக வேண்டும். நவீனத்துவம் மீது தளையசிங்கம் முன்வைக்கும் பல விமரிசனங்கள் பின் நவீனத்துவம் முன்வைத்தவற்றுக்கு சமமானவை . அக்கருத்துக்கள் மேற்கத்திய சிந்தனையின் வார்ப்படத்தில் அப்போதுத ‘ன் உருக ஆரம்பித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது .

தளையசிங்கம் ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில் ஒரு இலக்கியவாதியாக இந்த போக்குகளுக்கு இடையே ஒரு இணைப்பு ,ஒரு பொது இடம் உருவாக சாத்தியமுண்டா என்று பார்க்கிறார் என்று சொல்லலாம். தன் படைப்பியக்கத்தை அந்த இணைப்பின் தளம் நோக்கி நகரக்கூடிய ஒன்றாக அவர் அடையாளம் காண்கிறார் . ஆனால் தொடர்ந்து அவரது தேடல் அவரை படைப்பியக்கத்தில் இருந்து வெளியே கொண்டு செல்கிறது . ‘போர்ப்பறை ‘ இந்த திசைமாற்றத்தை சுட்டும் திருப்புமுனையான படைப்பு . தன் கேள்விகளுக்கு தருக்கத்தால் விடை தேடுவதை மெல்ல தவிர்த்து அவர் தன் உள்ளுணர்வை நோக்கி திரும்பும் காலம் இது . இத்தொகை நூலில் கவனத்துக்கு உரிய விஷயம் ஓன்று உண்டு . இதில் தளையசிங்கத்தின் படைப்பியக்கம் பலவீனமடைந்துள்ளது .கதைகள் கருத்துமையம் கொண்ட எளிய அமைப்புடன் உள்ளன. ஆனால் கட்டுரைகளில் அதுவரை இருந்த சர்ச்சை தன்மை விலகி சுய உரையாடலுக்குரிய தோரணை தென்பட ஆரம்பிக்கிறது .விளைவாக சீராக விரியும் வாதகதிகளுக்குப் பதிலாக ஒழுங்குக்குள் சற்று சிரமப்பட்டுமட்டுமே தன்னை நிறுத்திகொள்ளும் சிந்தனை மின்னல்கள் காணக்கிடைக்கின்றன . இந்த மாற்றம் முக்கியமானது .

ஒரு சிந்தனையாளராக தளையசிங்கம் நேரடியானவர் .இடக்கரடக்கல்கள் , தயவு தாட்சணியங்கள் அற்றவர் .உண்மையில் பூசிமெழுகாது பேசும் ஒருவரை நாம் எளிதாக புரிந்துகொள்ளும் நிலை இருக்கவேண்டும் . ஆனால் நமக்கு இதுமிகப்புதியது ஆகையால் அதிர்ச்சியும் குழப்பமும்தான் ஏற்படுகிறது .இலக்கியப்படைப்பு ஒரு படைப்பாளியின் சுயத்தின் வெளிப்பாடு என்ற நவீனத்துவ நிலைப்பாடுதான். அந்த சுயம் அவன் வாழும் சூழலின் விளைவு என வரையறுத்துக் கெ ‘ண்டு பேசுகிறார் தளையசிங்கம். ஆகவே சாதி குறித்து பேசும்போது எந்தவிதமான பாவனைகளுமில்லாமல் அப்பட்டமாக பேசுகிறார் தளையசிங்கம் .அந்த அப்பட்டத்தன்மை அவரது அந்தரங்க சுத்தியின் விளைவு. அவரது எழுத்துக்களும் அவரது தனிப்பட்ட வாழ்வும் மரணமும் அவர் எந்த அளவுக்கு சாதியசமூக அமைப்பிற்கு எதிராக இருந்தார் என்பதற்குச் சான்ற ‘கும் . அறிவியக்கத்தில் ஈடுபடமுனையும் அடித்தளச் சாதியினருக்கு ஏற்படும் தாழ்வுணர்வு அதுசார்ந்து எழும்பிரச்சினைகளை வெளிப்படையாக விவாதித்த ஒரே தமிழ்ச் சிந்தனையாளர் தளையசிங்கமே , அது தமிழின் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்தும்கூட .முற்போக்கு கெடுபிடிகளை எத்தனை துணிச்சலாக அவர் எதிர் கொண்டார் எனபதற்கு இது சான்று . அதேசமயம் அவர் தாழ்வுணர்ச்சியை , அதன்மூலம் உருவாகும் அவநம்பிக்கைமனநிலையை வெல்வதற்கு அவர் அடித்தள சாதியினருக்கு பரிந்துரை செய்தது தீவிரமா ‘ன அதிகார மோகம் , தாக்கிவெல்லும் முனைப்பு ஆகியவற்றையே என்பதைக்காணலாம்.

ஆனால் தளையசிங்கத்தின் ஆழ்மனவெளிப்பாடு முதன்மைகொண்டுள்ள மெய்யுளின் அத்தகைய அப்பட்டமான குரல் இல்லை.அது பூடகமும் சிக்கல்களும் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் இயல்பும் உடையதாக காணப்படுகிறது .மெய்யுள் தளையசிங்கத்தின் படைப்புகளில் மிகச் சிக்கலானது . அவரது ஆக்கங்களிலேயே துல்லியமற்றது ,கட்டுக்கோப்பற்றது அதுதான் . ஆனால் அதுவே மிக முக்கியமானது .தமிழில் எழுதப்பட்ட அசல் சிந்தனை நூல்களில் பலவகையிலும் ஆழ்ந்து பயில வேண்டிய முதல் நூலும் அதுதான்,வேறு சூழல்களில் இத்தைகைய நூல் வந்திருந்தால் அடுத்தகட்ட அறிஞர்களால் அவை நீவி சீராக்கப்பட்டு தேவையான பின்னணி விளக்கங்கள் அளிக்கப்பட்டு [அன்டோனியோகிராம்ஷியின் சிறைக்குறிப்புகள் போல ] நமக்குக் கிடைத்திருக்கும் . இப்போது நாமே ஒரு எளிய முன்வரைவை உருவாக்கிக் கொண்டு முன்னகரவேண்டியுள்ளது .

பரிணாமத்தின் அடுத்த கட்டம் , புதுயுகம் ?

மெய்யுளின் அடிப்படையானது மனித சமூகத்தின் வளர்ச்சி குறித்த ஒரு உருவகத்தில் உள்ளது . பரிணாம வளர்ச்சியில் மனிதன் அடுத்த படியை நோக்கி நகரவேண்டிய கட்டத்தில் இருக்கிறான் என தளைய சிங்கம் கருதுகிறார் . பரிணாம வரலாற்றை மெய்யியல் நோக்கில் விரித்தெடுத்து ஒரு சித்திரத்தை அளிக்கிறார் .சடநிலையில் இருந்து பிரபஞ்சம் உயிர்நிலை நோக்கி முதலில் பரிணாமம் பெற்றது . அதில் இருந்து அது மனநிலைக்கு வளர்ச்சி பெற்றது. அடுத்த பரிணாம கட்டம் பேர்மனம் உருவாவதாகும் எனலாம் என்கிறார் . இது ஒவ்வொன்றும் ஒரு சுழல். ஒவ்வொரு சுழலிலும் நான்கு யுகங்களை [ கிருத துவாபர திரேத கலி யுகங்கள் ] உருவகம் செய்யலாம். அப்படியானால் இப்போது நாம் மனம் மையமாக உள்ள யுகத்தின் கலியுக முடிவில் இருக்கிறோம். இந்த காலகட்டம் ஒரு கொந்தளிப்பின் காலகட்டம் .ஒரு யுகம் முடிந்து பிறிதொன்று பிறக்கும் தருணம் . இதையே புதுயுகம் பிறக்கிறது என்று தளையசிங்கம் சொல்கிறார் . இங்கு ஒரு விஷயம் கவனிக்கவேண்டும்.இவை உருவகங்களே என்றும் புரிந்து கொள்ளும் வசதிக்காக செய்யப்படுபவை என்றும் தளையசிங்கம் வலியுறுத்திச் சொல்கிறார்.

இதை இந்திய யோகமரபின் அடிப்படையில் [ இங்கு பொதுவாசகர்களுக்காக ஒன்றைச் சொல்லவேண்டும் . தமிழ் சூழலில் யோகம் என்பதை ஆன்மீகத்துடனும் வழிபாட்டுடனும் கடவுளிடமும் எல்லாசாராரும் பிணைத்துவிட்டனர் . யோகம் மூலவடிவில் ஒரு லெளகீகவாத அல்லது பொருள்முதல்வாத தரிசனம்தான் . உள்ளத்தை ஆழ்ந்து அறிவதற்கான பயிற்சிகள் தான் அது முன்வைப்பது . மிகப்பிற்காலத்தில் அதை ஆன்மீகவாத மரபுகள் எடுத்துக் கொண்டன .இந்த எடுத்தாளுகை பகவத் கீதையால் செய்யப்பட்டது என்பார் டி டி கோசாம்பி ] தளையசிங்கம் இதை விளக்குகிறார் . மனித இருப்பு அன்னமயகோசம் [பருப்பொருள்] பிராணமய கோசம்[உயிர்] மனோமய கோசம் [ மனம்] விஞ்ஞானமயகோசம் [ஆழ்மனம்] ஆனந்தமய கோசம் [ ஒட்டுமொத்த ஆழ்மனம் ,பேர்மனம் ] ஆகிய பல தளங்களில் உள்ளது என்று பகுக்கிற ‘ர் . பிரபஞ்சத்தில் ஆதியில் அன்னமய கோசம் மட்டும் இருந்தது . அதாவது ரசாயனங்கள் போன்றவை. பிறகு உயிருள்ள இருப்புகள் உருவாயின. பின்பு மனம் உருவாகிவந்தது. இப்போது மனத்தை மையமாககொண்டதாக மானுட இருப்பு உள்ளது . இனி ஆழ்மனத்தை மையமாகக் கொண்ட மானுடம் உருவாகும் என்கிறார் .இதுவரை அதிமானுடர்களுக்கும் யோகிகளுக்கும் சாதகம் செய்து அடையக் கூடியதாக இருந்த விஞ்ஞான மய கோசமும் ஆனந்தமனகோசமும் இனிமேல் உருவாகும் காலச்சுழலில் அனைவருக்கும் உரியதாக ஆகும் என்கிறார் தளைய சிங்கம் .

இது ஒரு வகை தத்துவார்த்த விளிம்புநிலை உருவகம் . இன்றைய அறிவியல் புனைகதைகளில் இத்தகைய அறிவியல் விளிம்புகள் தொடர்ந்து பலவாறாக பரிசீலிக்கபடுவதைக்காணலாம் . உண்மையில் இதுசாத்தியமா என்ற கேள்வியைவிடவும் முக்கியமானது அப்படிப்பட்ட ஒரு நிலையில் இன்று நாம் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் கொள்கைகள் கோட்பாடுகள் எம்மாதிரி பொருள்படும் என்ற வினாதான் .

பூரணஅத்வைத நிலை

இந்தப் புதுயுகத்தை தளையசிங்கம் இப்போது பிரிந்தும் தங்களுக்குள் மாறுபட்டும் கிடக்கும் பலவகைப்பட்ட அறிதல்முறைகளுக்கு இடையேயான ஒரு பூரண இணைப்பின் மூலம் நிகழக் கூடியதாக காண்கிறார் என எளிதாக விளக்கலாம் . உதாரணமாக ஜனநாயக அமைப்பு ஒவ்வொருகூறுக்கும் சுதந்திரமான வளர்ச்சியை வாக்குறுதியளிக்கிறது . ஆனால் அதில் மையப்படுத்தப்பட்ட இலக்கும் இல்லை , ஆகவே ஒருங்கிணைவு இல்லை , அது தாமதம் மூலம் நேர் எதிரான விளைவுகளையே உருவாக்கும் . அதேபோல சர்வாதிகார அமைப்புகளில் ஒருங்கிணைப்பும் இலக்கும் துரிதமும் இருப்பினும் சுதந்திரம் இல்லை .இரு போக்குகளின் எல்லா சிறப்பியல்புகளும் இணையும் ஒரு அமைப்பினை மனித இனம் அடையுமென தளையசிங்கம் கற்பனை செய்கிறார் .இலக்கும் தெளிவும் உள்ள , அதேசமயம் சுதந்திரத்தின் மதிப்பை உணர்ந்த ஞானி அரசை தலைமைதாங்கலாம் என்று கருதுகிறார் தளையசிங்கம் .

அதேபோல கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் போன்ற கருத்துருவங்கள் பொருளிழந்து போகும் என தளையசிங்கம் கூறுகிறார் . பதிலுக்கு மெய்முதல்வாதம் மனித குலத்தின் அறிதல்முறையாக ஆகும் என்று சொல்கிறார் .இதை இன்றைய சிந்தனைப் போக்குகளில் அறிமுகமுள்ளவர்கள் பலவகையில் தொடர்பு படுத்தி புரிந்துகொள்ள முடியும். புறவய அறிதல்முறை என்ற ஒன்று இல்லை , ஒரு வரையறுக்கப்பட்ட பேசுதளத்தில் பொதுவாக ஏற்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கருத்தே புறவயமானது எனப்படுகிறது என்ற கூற்று அடிப்படையில் இந்தப் புரிதலில் இருந்து உருவாவதுதான்.பொருள் என்பதே அப்படி ஒரு ஒரு தளத்தில் நம் பார்வையை வரையறுத்துக் கொள்வதனூடாக நம்மால் அறியப்படுவது மட்டும்தான் எனும்போது பொருள்முதல்வாதம் அடிப்படையற்றுப் போகிறது . அதேபே ‘ல கருத்தும் அப்படி ஒரு தளத்துக்கு ஏற்ப வரையறுத்துக் கொள்ளப்படுவதுதான் என்று கொள்ளும்போது ஒவ்வொன்றுக்கும் மூலமாக உள்ள முழுமுதன்மையான கருத்து என்பதும் இல்லையென்றாகிறது . அப்போது எஞ்சும் வினா ஏன் , எப்படி ,நம் தளவரையறைகளை உருவாக்கிக்கொள்கிறோம் என்பதே . இங்குதான் மெய்யியல் முதன்மைப்படுகிறது .

அறிவியல் சித்தாந்தங்களின் அடிப்படியாக அமைபவை ஊகங்கள்[hypothesis ] அவை மானுடனின் தேவையில் , அவனது கற்பனையின் சாத்தியங்களில் , உலகைவிளக்க அவன் கொள்ளும் கோணத்தில் இருந்து முளைப்பவை .அவற்றுக்கு அடிப்படியாக அமைவது அவனுக்கும் பிரபஞ்சத்துக்குமான உறவேயாகும். அது மெய்யியல்சார்ந்தது . ஆகவே அறிவியலின் அடிப்படையாக ஆழ்ந்த மெய்யியல் தரிசனம் இருக்கவேண்டும் என்றுடின்று கருதப்படுகிறது .அதே இதழில் குமரிமைந்தன் நவீன வரலாற்றாய்வு குறித்து பேசும்போது வேறு ஒரு கோணத்தில் இதையெ கூறுகிறார் . புறவயமான தரவுகள் என ஏதுமில்லை .வரலாற்றாய்வுக்கு அடிப்படியாக அமைவது ஆதன் மெய்யியலே என. இந்த அம்சத்தை தளையசிங்கம் கூறும் மெய்முதல்வாதத்துடன் இணைத்து யோசிக்கலாம் .

இதேபோல உள்ளுணர்வு சிந்தனை ஆகிய பிரிவினைகளும் பொருளிழந்து போகலாம் என தளையசிங்கம் சொல்கிறார் .அவை முரண்படும் நிலை மனத்தை மையமாக கொண்ட ஒரு மானுட சமூகத்துக்கு உரியது . அன்றாட வாழ்வுக்குரியதாக உள்ளது மனம் ,அல்லது ஜாக்ரத் அல்லது பிரக்ஞை .ஆழ்மனம் அதன் அடித்தள விரிவாக பின்ன்ணியில் ம்றைந்துள்ளது .ஆழ்மனம் வெளிப்படுபதையே உள்ளுணர்வு என்கிறோம். ஆழ்மனதை மனதால் விளக்கமுடியாதபோது அது முரண்படுகிறது.உள்ளுணர்வின் வெளிப்பாடு பித்தாக தோன்றுகிறது .மனத்தின் தருக்கத்தை விரித்து ஆழ்மனத்தை அள்ள முயன்று களைக்கிறோம் .அனைவருமே விஞ்ஞான கோச நிலையில் அதாவது ஆழ்மனமே இயல்பான மன இயக்கமாக இருக்கும் நிலையில் இந்த இருபாற்பிரிவினையும் சரி மோதலுமசரி இருக்காது என தளையசிங்கம் சொல்கிறார் .

கலையிலக்கியங்களின் அடிப்படை

இதன் அடுத்தபடியாக கலை இலக்கியங்களின் பணி என்ன என்ற கேள்விக்கு வருகிறார் .கலையின் நோக்கமே உண்மையான பரவச விடுதலையை அளிப்பதுதான். அது எப்படி அப்பரவச விடுதலையை அளிக்கிறது ? மனத்தை மையமாகக் கொண்டு வாழும் மனிதர்களுக்கு அது ஆழ்மனங்களை காட்டுகிறது .மனோமயகோசத்தில் வாழ்பவர்களின் விஞ்ஞான ஆனந்தமய கோசங்களை வெளிக்கொணர்கிறது . ஆனால் சமுகமே சாதாரணமாக அந்நிலையை அடையும்போது கலை அப்பணியை செய்யவேண்டியிருக்காது. சாதாரணமான தொழில்களே அன்றாட அனுபவங்களே அந்த பரவச நிலையை மனிதர்களுக்கு அளிக்கும் .முழுவாழ்க்கையே கலையாக ஆகும்காலகட்டத்தில் கலை எதற்கு என்கிறார் தளையசிங்கம். அந்நிலையில் கலை பூரண கலையாக ஆகவேண்டியிருக்கும். இலக்கியம் பூரண இலக்கியம் ஆக மாறவேண்டியிருக்கும்

இதனடிப்படியில் பூரண இலக்கியம் என்ற கருத்தைப்பற்றி தளைய சிங்கம் விரிவாகபேசுகிறார் .இனிமேல் இலக்கியவாதி பொழுதுபோக்கு எழுத்தாளனாகவோ , வாழ்க்கையின் ஏதேனும் ஒரு தளத்தைச் சேர்ந்த உண்மையை சொல்பவனாகவோ இருக்க முடியாது.இனிவரும் இலக்கியவாதி அறிவியல் அரசியல் அழகியல் ஆகிய அனைத்திலும் ஊடிருவியுள்ள பூரணமான ஞானத்தை உணர்ந்தவனாக அதை தன் எழுத்தினூடாக அனுப்வமாக்குபவனாக இருக்கவேண்டும். அதாவது அவன் எழுதுவது அறிவியல் சமயம் என்றெல்லாம் பிரிக்கமுடியாதபடி அனைத்தையும் தழுவிய சாரம்சத்தைக் கொண்டவனாக இருக்கவெண்டும் .நேற்று ஒரு சமய ஞானி தன் மெய்யறிதல்மூலம் பெற்ற பூரண நிலையை எழுத்தாளன் கலைஞன் ஆகியோர் தங்கள் இலக்கியம் கலை மூலம் சாத்தியமாக்க வேண்டும்.

இந்த பூரண இலக்கியத்துக்கு உரிய வடிவமாக தளையசிங்கம் மெய்யுள் என்ற வடிவத்தை கற்பிதம் செய்கிறார் . அவ்வடிவில் ‘கலைஞனின் தாகம் ‘ என்ற நூலை உருவாக்குகிறார் . அந்நூல் மெய்யுளின் இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது . ஆனால் அது ஒரு ஆளுமைப் பிளவு பிரதியாக உள்ளது . [ schizophrenic text] தளையசிங்கம் உத்தேசித்துள்ள வடிவம் ஒரு க்லவை , அதாவது கவித்துவம் /புனைவு/விவாதம் இயல்பாகவே ஒருமுனைப்பட்டு ஒரு பேருண்மையை வெளிப்படுத்துவது ஆகும் . ஆனால் இப்பிரதியில் அந்த இயல்பான இணைப்பு உருவாகவேயில்லை . மாறாக அவற்றுக்கிடையேயான மோதல் உக்கிரப்பட்டு ஆழ்மன ஒளிகளும், அவற்றை அபத்தமாக கைநீட்டிப் பிடிக்கத்தாவும் தருக்கவிளையாட்டுகளும் , சுருதியிறங்கும்போது மேலோட்டமான கவிதைநடையில் வெளிப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புமாக ஒரு ருசியற்ற கலவை வடிவில் அது அமைந்துள்ளது .

தமிழின் இலக்கியமுக்கியத்துவம் கொண்ட ஆளுமைப்பிளவுப் பிரதிகளில் நகுலனின் ‘நினைவுப்பாதை ‘ இலக்கிய ரீதியாக முக்கியமானது .[நகுலன்X நவீனன் ] அதன் ஊடுபிரதித் தன்மை [ inter textuality]மற்றும் நடையில் உள்ள மெல்லிய நகைச்சுவை ஆகிய்வை அதை முக்கியப்படுத்துகின்றன . கலைஞனின் தாகம்[நல்லசிவன்Xமு.தளையசிங்கம் ] தத்துவ அடிப்படையில் முக்கியமானது .ஒரு தத்துவவாதியை ஆழமான சிந்தனைகளில் இறக்கிவிடும் ஒளிமிக்க வரிகளாலானது இது . மெய்யுளின் பல பகுதிகளை தன் உக்கிரமான மனநிலைகளை அவ்வாசிரியரே வேறு ஒரு தளத்தில் மிக எளிமையாகப் புரிந்து கொண்டமையின் விளைவு என நவீன வாசகன் ஒதுக்கிவிட வேண்டியிருக்கும் . புதுயுக மாற்றமொன்றை கற்பனைசெய்யும் தளையசிங்கம் அம்மாற்றம் உலகத்துக்கு ஈழத்திலிருந்து தெரியவரும் என எண்ணிக்கொள்கிறார் .அதை ஈழ அரசியலுடன் அவர் இணைக்கும் இடத்தில் தான் ஆளுமைப்பிளவு பிரதிகளுக்கே உரிய அபத்தம் துல்லியப்படுகிறது . பழையபாணி உளவியலாளன் உடனே மருத்துவத்தை ஆரம்பித்துவிடுவான்.

***

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 3

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 1

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 2

மு.தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – 3

முந்தைய கட்டுரைமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 1
அடுத்த கட்டுரைமு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – 3