யாருடைய சொத்து?

na-pichamurthy1

மாயாவி எழுதிய கண்கள் உறங்காவோ என்னும் தொடர்கதை என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானது.  வீணா என்னும் இளம்விதவை ஒரு கிராமத்திற்கு டாக்டராக வருகிறாள். அவள் சிறுமியாக இருக்கும்போதே திருமணம் செய்யப்பட்டு கணவனை இழந்தவள். கிராமத்தில் அவள் சேவைசெய்ய நினைக்கிறாள். அவளுக்கு மறுமணம் செய்யும் எண்ணம் வருகிறது. அவள் மறுமணம் செய்வது அந்தக்கிராமத்தையே உலுக்குகிறது. மிகப்பெரிய சமூகமோதலாக அதுவெடிக்கிறது. அவளை மறுமணம் செய்யவிருந்த விகாஸ் என்பவனை ஊர் பண்ணையார் தானாவதிப்பிள்ளை குத்திக்கொல்கிறார். வீணாவை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டவர் அவர். வீணா மறுமணம் செய்துகொள்ளாமல் ஊரைவிட்டுச்செல்கிறாள்.

செல்லும்போது “நாம் நினைத்ததை செய்யமுடியாமல் போகலாம். ஆனால் நாம் நடத்திய போராட்டத்தால் சிலருடைய மனமாவது மாறியிருக்கும்” என்கிறாள். இந்தக்கதையில் ஆசிரியருக்கு வந்த சங்கடங்களை கூர்ந்து பார்க்கலாம். ஒன்று வீணா ஒருவனுடன் வாழ்ந்தவள் என்றால் அவள் மறுமணம் செய்துகொள்வதை வாசகர்களே ஒத்துக்கொள்ளமாட்டார்கள். ஆகவே அவள் பருவமடையும் முன்னரே விதவை ஆனவள், கன்னி எனக்காட்டப்படுகிறாள். அதன்பின்னரும்கூட அவள் மறுமணம் செய்வதை அன்றைய வாசகர்கூட்டம் விரும்பவில்லை. ஆகவே கடைசியில் அவள் காதலனை ஆசிரியரே போட்டுத்தள்ளி சட்டுப்புட்டென்று கதையை முடிக்கிறார்.

kankaL

இதுதான் எண்பதுகள் வரை தமிழ்ச்சினிமாவிலும் நிகழ்ந்தது.   அழகுமலராட என்று ரேவதி விதவையாக வந்து ஆக்ரோஷமாக ஆடும் காட்சி நினைவிருக்கலாம்.   1984ல் வெளிவந்த நான் பாடும் பாடல் என்னும் படத்தில் விதவையான அம்பிகாவை சிவக்குமார் மணக்க விரும்புவார். அவர் நெற்றியில் பொட்டு போட்டுவிடுவார். அவர் தீக்கொள்ளியை எடுத்து அந்தப் பொட்டோடு சேர்த்து நெற்றியைச் சுட்டுவிடுவார். சின்னத்தம்பி படத்தில் மனோரமாவுக்கு இழைக்கப்படும் உச்சகட்டக் கொடுமையே வெள்ளைச்சீலைக்காரியாகிய அவருக்கு வண்ணச்சேலை அணிவிப்பதுதான்.

தமிழிலக்கியம் உருவாகி வந்த ஆரம்பகாலகட்டத்தில் விதவைகளின் மறுமணம் பற்றி நிறையப் பேசப்பட்டது. திரு.வி.க சென்னையில்    1930ல் விதவைத்திருமணம் பற்றி பேசிய அரங்கில் படித்த பெண்களே வந்து கலவரம் செய்தனர். அதை அவர்  தன் வாழ்க்கைக்குறிப்புகள் நூலில் பதிவுசெய்கிறார். தமிழில் நவீன இலக்கியம் தொடங்கியது 1890 முதல் 1930 வரையிலான அந்தக்காலகட்டத்தில்தான். ஆகவே அன்று விதவைமறுமணம் குறித்த கதைகளை அனைவருமே எழுதியிருக்கிறார்கள். தமிழிலக்கிய முன்னோடிகளான புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி மூவருமே விதவை மறுமணப்பிரச்சினையை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் மூவருமே சீர்திருத்த நோக்கம் கொண்டவர்கள். ஆகவே விதவை மறுமணத்தை ஆதரித்தே எழுதியிருக்கிறார்கள்

ஆனால் அவர்களுக்கே பலவிதமான தயக்கங்கள் இருந்தன. அவர்கள் மறுமணம் செய்யப்படலாம் என ஒப்புக்கொள்ளும் விதவைகள் அனைவருமே இளம்விதவைகள், பெரும்பாலும் குழந்தைத்திருமணத்தில் விதவையான கன்னிகள். ஒருவனுடன் வாழ்ந்து குழந்தைபெற்ற பின்னர் விதவையான ஒருபெண்ணின் மறுமணம் பற்றி அவர்களால் எண்ணிப்பார்க்கவே முடியவில்லை.

ந.பிச்சமூர்த்தியின் காவல் என்னும் சிறுகதை அந்தப்பிரச்சினையை  அவர்கள் எப்படிப்பார்த்தார்கள் என்பதற்குச் சரியான உதாரணம். சேவு செட்டியார் இறந்துபோகும் இடத்தில் கதை தொடங்குகிறது. அவர் எண்ணையாட்டும் தொழில் செய்துவந்தவர். செக்கும் மாடும் ஒரு சிறிய வீடும்தான் சொத்து. ஒரே மகன் நரியன் சின்னப்பையன். வேறுவழியில்லாமல் அவள் செக்கையும் மாட்டையும் விற்கிறாள். நரியனே அதை வாங்க ஆளைக்கூட்டிவருகிறான். அவனே அம்மாவுக்கு ஒரு கிளப்பில் வேலைக்கும் ஏற்பாடு செய்கிறான். சாப்பாடு போட்டு மாதம் ஒன்பது ரூபாய் சம்பளம். அங்கே கழுவித்துடைக்கும் வேலை.

செங்கமலம் வேலைக்குச் செல்கிறாள். செங்கமலம் இளமையானவள். ஆகவே அவளை அடைய அத்தனைபேரும் தூண்டில்போடுகிறார்கள். அதை அவள் உணர்வதற்கு முன்னரே உணர்பவன் நரியன் தான் . அதை ந.பிச்சமூர்த்தி இப்படி காட்டுகிறார். “குனிந்த தலை நிமிராமல் அவன் தாயார் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்ததால், முதலாளி கொல்லைப் பக்கம் வந்து வெந்நீர் அறை ஒரமாக நின்றதைக் கவனிக்கவில்லை. பாம்பு இருந்தால் மாட்டுக்கு வாசனை தெரியும் என்பார்களே, அதைப்போல நரியன்மட்டும் இதைக் கவனித்துவிட்டான்”

ஓட்டல் தொழிலாளியான மலையாளி ஒருவரும் செங்கமலத்தைக் கவர முயல்கிறார். குஞ்சான் என்பவன் அவளுக்கு மெல்ல நூல்விட்டுப்பார்க்கிறான். செங்கமலம் கொஞ்சம் சூட்டிகை குறைவானவள். அவளுக்கு இவர்களெல்லாம் அன்பாக இருக்கிறார்கள், அன்பை சின்னச்சின்ன பரிசுகள் வழியாகக் காட்டுகிறார்கள் என்றுதான் எண்ணம். ஆனால் மிகச்சிறிய பையனாகிய நரியன் அதை கவனித்துக்கொண்டே இருக்கிறான்.

செங்கமலம் மதியம் ஓட்டலில் இலை வைக்கும் இடத்தில் தூங்குவது வழக்கம். அவள் தூங்கும்போது முதலாளி உள்ளே வந்து இலைகளை நறுக்க ஆரம்பிக்கிறார். சரியாக அப்போது நரியன் உள்ளே வருகிறான். “ஏண்டா பம்பரம் விளையாடப்போகலையா?” என்றார் முதலாளி. “சும்மா குளத்தங்கரைப் பக்கம் போனேன். காவல்காரன் இல்லை. ஆளுக்கொரு பக்கமாகத் தூண்டில் போட்டுக்கிட்டு இருந்தாங்க. பாத்துட்டு வரேன்.”  என்கிறான் நரியன்.  முதலாளிக்கு அது புரிகிறது.

அம்மா எழுந்ததும்  “முதலாளி அறைக்குள் வந்தது தெரியுமா?” என நரியன் கேட்கிறான். அவள் “நான் தூங்கிக்கொண்டிருந்தேனே, எப்படித்தெரியும்?” என்கிறாள். “இனிமேல் நீ மதியம் வீட்டிலேயே போய் தூங்கு” என்கிறான் நரியன். முதலாளி அவளுக்கும் நரியனுக்கும் ஆடை எடுத்துக்கொடுக்கிறார். அதை அப்படியே சுருட்டி முதலாளி காலடியில் எறிகிறான் நரியன். செங்கமலம் திகைக்கிறாள். முதலாளியிடம் மன்னிப்புகோருகிறாள்.

மறுநாள் அவள் காலையில் எழும்போது நரியன் கிளம்பிக்கொண்டிருக்கிறான். “என்னடா?” என்கிறாள் செங்கமலம்.  “ இம்மே இந்த வேலை வேண்டாம். காவல்காரன் இல்லாத குளமின்னு நெனைச்சுக்கிறான்கள். ஆயா வரமாட்டான்னு நான் போய்ச் சொல்லிடறேன்” என்று நரியன் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டான் என பிச்சமூர்த்தி கதையை முடிக்கிறார்.

நல்ல கதை. அன்னையும் மகனும் குளம் தூண்டில் என்னும் சொற்கள் வழியாகவே பூடகமாக உரையாடிக்கொள்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்ன பிரச்சினை என்று. அந்த நுட்பத்தாலும் நரியன் சிறுவனில் இருந்து ஓர் ஆண்மகனாக எழுவதைக் காட்டும் அழகாலும் போற்றப்படுகிறது இந்தக்கதை

ஆனால்  உண்மையில் விதவைத்திருமணம் அன்றைய தமிழகத்தில் அவ்வளவு பெரிய சமூகப்பிரச்சினையா என்ன? தமிழகச்சாதிகளில் மிகச்சில உயர்சாதிகள் தவிர பிற அனைத்திலுமே ‘அறுத்துக்கட்டுவது’ என்று சாதாரணமாக இருந்தது. உண்மையில் அது ஓர் உயர்மட்டச் சிக்கல் மட்டுமே. பிராமணர், வேளாளர் போன்ற  ஒருசில சாதிகளில் மட்டுமே பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதும் மறுமணம் செய்வதும் சாத்தியமில்லாமல் இருந்தது.  ஆனால் அன்று எழுதவந்தவர்கள் பெரும்பாலும் உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள். அதை அவர்கள் மொத்தச்சமூகத்தின் பிரச்சினையாக முன்வைத்தார்கள்.

நரியனின் நடத்தையை இக்கதைக்குள் பிச்சமூர்த்தி நியாயப்படுத்துவதைக் காண்கிறோம். ஆனால் இது சரி என இப்போது பார்த்தால் சொல்லமுடியுமா என்ன? செங்கமலம் ஒரு மறுமணம் செய்துகொண்டால் என்ன தவறு? அவள் நரியனின் சொத்தா என்ன? குளத்துக்கு அவன் எப்படிக் காவல்காரனாக ஆகமுடியும்? அந்தக்குளத்திற்கு ஏன் ஓர் ஆண் காவலாக இருக்கவேண்டும்?

நம் பார்வையை  மனுஸ்மிருதியில் வரும் இந்த புகழ்பெற்ற வரி தீர்மானித்திருந்தது

பிதா ரக்‌ஷிதே குமாரே

பதி  ரக்‌ஷிதேயௌவனே

புத்ரோ ரக்‌ஷிதே வார்த்தக்யே

ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ரியம் அர்ஹதி

[தந்தை கன்னிபப்ருவத்தில் காக்கவேண்டும்

கணவன் இளமையில் காக்கவேண்டும்

மைந்தன் முதுமையில் காக்கவேண்டும்

பெண்ணுக்கு சுதந்திரத்திற்கு தகுதியில்லை]

இந்தப்பார்வையை ஓர் ஒடுக்குமுறையாகக் காணவேண்டியதில்லை. அல்லது மதநெறியாக எடுத்துக்கொள்ளவேண்டியதுமில்லை. இந்துமதத்தில் ஸ்மிருதி சுருதி என இருவகை நூல்கள் உண்டு. ஸ்மிருதிகள் என்பவை சமூகச்சட்டங்கள். அவை காலந்தோறும் அக்காலத்தைய தேவைக்கேற்ப மாறவேண்டியவை. மனுஸ்மிருதிக்கு முன்பு நாரத ஸ்மிருதி, யமஸ்மிருதி, யாக்ஞவால்கிய ஸ்மிருதி  போன்ற பலநெறிநூல்கள் இருந்துள்ளன. சுருதிகள் என்பவை தத்துவம் ஞானம் ஆகியவற்றை முன்வைப்பவை. அவை இதைச்செய் இதைச்செய்யாதே என்று சொல்வதில்லை. அவையே இந்துமதத்தின் அடிப்படை நூல்கள். ஓர் இந்து மாறாமல் கடைப்பிடித்தாகவேண்டிய நூல் என ஏதும் இல்லை.

முந்தைய காலகட்டத்தில் பெண்கள்  சுதந்திரமாக முடிவெடுத்தனர், கல்விகற்றனர், பலமுறை மறுமணம் செய்துகொண்டனர் என்பதை மகாபாரதம் போன்ற நூல்களே காட்டுகின்றன. மேலும் ஆயிரமாண்டுகாலம் கடந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் மனுஸ்மிருதி உருவானது. அக்காலகட்டத்தில் இந்தியாவில் பலநூறு அரசர்களும் நாடுகளும் உருவாகி  போர்ச்சமூகமாக இந்தியா மாறிவிட்டிருந்தது. மனு சொல்வது அந்த போர்ச்சூழலுக்கான நீதியை.

அச்சூழல் பதினேழாம் நூற்றாண்டுவரை பெரும்பாலும் நீடித்தது என நாம் அறிவோம். இருநூறாண்டுகளுக்கு முன்புவரைக்கூட பெண்ணைப் பிடித்துக்கொண்டுபோவது மிகச்சாதாரணமாக இருந்தது என்பதை கதைகளில் காணலாம். ஆகவேதான் பெண்களுக்கு குழந்தைமணம் செய்வித்தார்கள்.

ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி உருவாகி சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் நிலைபெற்றதுமே அந்தக்கால நெறிகள் அர்த்தமில்லாதவையாக ஆகத் தொடங்கின.  நவீன யுகம் தொடங்கியபோது கல்வி, வேலை ஆகியவற்றுக்காக பெண்கள் வீட்டைவிட்டு வெளியே செல்வதும் பிடித்த ஆணை மணம் செய்துகொள்வதும் தேவையாக ஆகியது.

விதவைமறுமணம் இன்னும் சிக்கலானது. ஆண்கள் போரிலும் நோயிலும் செத்துக்கொண்டிருந்தகாலகட்டத்தில் இளம் கன்னிப்பெண்களுக்கு கணவன் அமைவதே பெரும்போராட்டமாக இருந்தது. ஆகவேதான் விதவைமறுமணம் தடுக்கப்பட்டது. பலதார மணம் அனுமதிக்கப்பட்டது

ஆனால் காலம் மாறியபின்னரும் ஸ்மிருதிகளின் கூற்றை மாறாநெறியாகவே சொல்லிக்கொண்டிருந்தார்கள் பழமைவாதிகள். அவர்களை எதிர்த்துத்தான் பெண்கல்வி, விதவை மறுமணம் ஆகியவற்றை முன்வைத்தனர் எழுத்தாளர்களும் சீர்திருத்தவாதிகளும். ஆனால் அவர்களும் மனுஸ்மிருதியின் பார்வையை கடக்கமுடியவில்லை . செங்கமலத்தின் மனதிலும் அதுதான் இருக்கிறது. ஆகவேதான் அவள் சின்னப்பையனாகிய நரியன் சொல்வதை ஏற்றுக்கொள்கிறாள்.

jeyakanthan

மேலும் முப்பதாண்டுகள் கடந்து 1962 ல்  ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் நாவல் வெளிவந்தது. அதில்  தங்கம் என்னும் அடித்தளப்பெண் கணவனை இழக்கிறாள். அவள் மகன் சிட்டி. அவள் தனித்து வாழமுடியாமல் கிளிசோதிடனாகிய மாணிக்கத்தை கணவனாக ஏற்கிறாள். அதை சிட்டியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் வீட்டைவிட்டு வெளியேறுகிறான். தனியாக வாழ்கிறான்

இன்னொரு குழந்தைக்கு தாயாகும் தங்கம் மரணப்படுக்கையில் கிடக்கிறாள். மாணிக்கம் வந்து மன்றாடியதனால் அவளைச்சென்று பார்க்கிறான் சிட்டி. தன் குழந்தையை முதல் மகன் கையில் அளித்து தங்கம் சொல்கிறாள். “நீ ரோஷக்காரன். நம்மைப்போன்ற ஏழைகளுக்கு ரோஷம்தான் சொத்து. நீ உன்னைப்போல ரோஷக்காரனாக இவனை வளர்த்து ஆளாக்கு. இவன் உன்னைப்போல் ஒருவன்”

புகழ்மிக்க இந்த நாவலிலும் அந்த மனுஸ்மிருதியின் நெறி உள்ளடங்கியிருக்கிறது. கணவனில்லாத தாய் மகனின் சொத்து என்பது. இது ஏன்? எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனையை சமூகச்சூழலில் இருந்தே எடுத்துக்கொள்கிறார்கள். சமூகத்தில் ஓங்கியிருக்கும் சிந்தனையையே அவர்கள் காட்டுகிறார்கள். செங்கமலமும் தங்கமும் அடித்தள மக்கள். அங்கே விதவைமறுமணம் ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் எழுத்தாளர்களுக்கு அது பெரிய பிரச்சினை.

ஆனால் அது மட்டும் அல்ல. ஒரு தமிழ் சினிமாவின் பார்வையாளர்கள் 90 சதவீதம்பேரும் அடித்தட்டு மக்கள், அவர்களிலும் பெரும்பாலானோர் பெண்கள். ஆனால் ஒருவனுடன் வாழ்ந்த பெண்ணை, ஒருவனான் வல்லிறவு கொள்ளக்கப்பட்ட பெண்ணை ஒருவர் மணப்பதை தமிழ் சினிமா காட்டத்துணியவில்லை, ஏனென்றால் அது ஏற்றுக்கொள்ளப்படாது. 1980களில் வெளிவந்த சத்ரியன் என்ற சினிமாவின் தோல்வியே இதனால்தான் என்று பேசப்பட்டது. 2000 த்துக்குப்பின்னரே அந்நிலை மாறியது

அதாவது நவீன காலகட்டத்தில் மேலிருந்து விக்டோரிய ஒழுக்கமும், உயர்குடி ஒழுக்கமும் கீழே சென்று அடித்தள மக்களால் அவையே ஒழுக்கமென்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்கள் கடைப்பிடிக்காவிட்டாலும்கூட அதுதான் சரியானது என அம்மக்கள் நம்பினர். இன்றுகூட மறுமணம் தங்கள் மகன்களுக்குச் செய்யும் துரோகம் என்னும் எண்ணம் பெண்களிடையே உறைந்திருக்கிறது.   அதை காவல் முதல் தமிழ்ச்சிறுகதைகள் வழியாக தொடர்ச்சியாக அடையாளப்படுத்த முடியும்.

***

காவல்-ந. பிச்சமூர்த்தி

========================================================

1. இலட்சியக்காதலியின் வருகை

ஒரு சிறு வெளி

கல்வியும் காதலும்

4  இரண்டு கணவர்கள்

முந்தைய கட்டுரைராஜம் அய்யர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-39