கீதை உரைநூல்கள்

a
ஜயதயால் கோயந்தகாவின் பழைமைவாத உரை

ஜெ,

ஜெயதயால்கோயந்தகா எழுதிய கீதை உரை [கோரக்பூர் பதிப்பு] என்னிடம் உள்ளது. பெரிய புத்தகம். மிகக்குறைந்த விலைக்கு நான் அதை புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன். முழுக்கப் படிக்கவில்லை. சமீபத்தில் ஓர் எழுத்தாளர் அதை அவருடைய ஐந்து நூல்களில் ஒன்றாகச் சேர்த்திருந்தார். அந்நூலைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன? படித்திருக்கிறீர்களா?

எஸ்.ராஜகோபால்

***

d
பிரபுபாதரின் பக்திஉரை

அன்புள்ள ராஜகோபால்,

ஜெயதயால் கோயந்தகாவின் நூல் மிக மலிவானது. ஆகவே பெரும்பாலானவர்கள் அதை வாங்கி வைத்திருப்பார்கள். இதேபோலப் பரவலாகக் கிடைக்கும் இன்னொரு நூல் பகவத்கீதை உண்மையுருவில். ஹரேகிருஷ்ணா ஹரேராமா இயக்கத்தின் நிறுவனரான சுவாமி பிரபுபாதர் எழுதியது.

இருநூல்களையுமே நான் எவ்வகையிலும் சிபாரிசு செய்யமாட்டேன். கீதைக்கு வந்த, வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான உரைகள் ஏன் என்பதை தத்துவ –வரலாற்றுப் பின்னணியில் புரிந்துகொள்ளவேண்டும். கீதை ஒரு தத்துவநூல், மெய்ஞானநூல். போதனைநூலோ பக்திநூலோ அல்ல. எக்காலமும் பிரஸ்தானத் த்ரயம் எனப்படும் தத்துவமும்மையில் ஒன்றாகவே அது கருதப்பட்டுள்ளது [உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை] அவ்வாறே அது பயிலவும்பட்டது. குருவிடமிருந்து அன்றி அதைப் பயிலக்கூடாது. ஆகவே பலநூற்றாண்டுகள் வேதாந்த ஞானத்தின் மெய்நூலாக இருந்தாலும் அது மொழியாக்கம் செய்யப்படவில்லை. சங்கரர் ராமானுஜர் மத்வர் மூவரும் அதற்கு உரை எழுதியிருக்கின்றனர். வட்டார மொழிகளில் எழுதப்பட்ட பழைமையான உரை என்றால் ஞானேஸ்வர் [தியானேஸ்வர் ]மராட்டியமொழியில் எழுதிய ஞானேஸ்வரி என்னும் உரை மட்டுமே

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான் கீதைக்கு இன்றிருக்கும் இடம் அமைந்தது. அன்று ஐரோப்பியர் இந்திய ஞானநூல்களை பெரும் உழைப்பு செலுத்தி கண்டடைந்து ஆங்கிலத்திலும் ஜெர்மன் மொழியிலும் மொழியாக்கம் செய்து கொண்டிருந்தனர். கீதையின் மெய்யியலும் கவித்துவமும் அவர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்துமதத்தின் மையநூலாக அவர்கள் அதை எண்ணத்தலைப்பட்டனர். அவ்வெண்ணம் அவர்களிடமிருந்து இந்தியர்களிடையே பரவியது. கீதை இந்துமதத்தின் புனிதநூல் என இந்துக்கள் எண்ணலாயினர்.இந்திய மொழிகள் அனைத்திலும் ஏராளமான மொழியாக்கங்கள் வரத்தொடங்கின. வந்துகொண்டே இருக்கின்றன.

c
சித்பவானந்தர் அத்வைத நோக்கில்

அன்று இந்தியாவெங்கும் ஓங்கியிருந்தது பக்தி –சடங்கு மரபு. இன்றும்தான். வேதாந்த தத்துவநோக்குக்கு அன்றும் இன்றும் இங்கே பெரிய இடமில்லை. ஆகவே கீதையை பக்தி நோக்கில் விளக்க, ஏற்கனவே இங்கே இருந்துகொண்டிருந்த சாதிய, சடங்குவாத நோக்கில் திரிக்க வேண்டிய கட்டாயம் மரபுவாதிகளுக்கு எழுந்தது. இன்றுகிடைக்கும் பலநூறு விளக்கங்கள் இவ்வாறு எழுதப்பட்டவைதான். மிக முக்கியமான இடங்களில் மழுப்பலும் திரிபுகளும் இருக்கும். ஓர் உரையை எடுத்ததுமே சில குறிப்பிட்ட பாடல்களை பார்த்து என்ன விளக்கம் அளித்திருக்கிறார்கள் என்று பார்த்தாலே அவர்களின் நோக்கம் தெரிந்துவிடும். கிருஷ்ணனே சொன்னாலும் சாதியப்பார்வையை விடமாட்டோம், அதற்குப்பதில் கிருஷ்ணனுக்கு கீதையை மாற்றிச் சொல்லிக்கொடுப்போம் என்ற அந்த பிடிவாதமான கர்மயோகம் ஆச்சரியமளிப்பது.

கீதை சடங்குகளுக்கு எதிரானது. அது ஞானநூல் – யோகநூல். ஆனால் விளக்கங்கள் வழியாக சாதிநூலாகவே ஆக்கிவிடுவார்கள். அவ்வாறு ஒரு பழைமைவாத, சடங்குவாத, தேங்கிப்போன, இருண்ட நோக்கை கீதைமேல் போடும் நூல் ஜயதயால் கோயந்தகாவின் உரை. பெரும்பொருட்செலவில் அது நாடெங்கும் பரப்பப் படுகிறது என்பதே பழைமைவாத அரசியல்நோக்கம் கொண்டது. கீதையை வசைபாடுபவர்கள் எப்போதும் கோயந்தகாவின் உரையையே சான்றாகக் கொள்கிறார்கள். கீதையை அறிய விரும்புபவர்களால், கொஞ்சமேனும் நவீன அறம்கொண்டவர்களால், தவிர்க்கப்படவேண்டிய நூல் அது

பிரபுபாதரின் நூல் அவர்களுடைய குறுகிய பக்திநோக்கின்படி கீதையை விளக்குவது. அவ்வாறு கீதையை அவரவர் கொள்கைப்படி விளக்கும் நூல்கள் பல உள்ளன. விளக்கம் நூலை முழுமையாக மாற்றிவிடமுடியும் என்பதற்கான சான்றுகள் அவை. புதிய வாசகர், பொதுவாசகர் இவ்வகை நூல்களைத் தவிர்த்துவிடுவதே நல்லது. அனைத்து தரப்புகளையும் அறியவிரும்புபவர்கள் வேண்டுமென்றால் பிற்காலத்தில் வாசிக்கலாம்

 

b
மூவர் உரை, அனைத்து நோக்கிலும்

 

கீதையை பொதுவாக அறிய தமிழில்கிடைக்கும் மிகச்சிறந்த நூல் சுவாமி சித்பவானந்தரின் கீதை உரைதான். ஆங்கிலத்தில் பொதுவாசகருக்கு சின்மயானந்தரின் உரை. ஆழ்ந்துசெல்ல விரும்புபவர்களுக்கு நடராஜகுருவின் கீதை உரை. சின்மயானந்தா முதலியோருக்கு மூலமாக அமைந்த நூல் அது.

தமிழில் முக்கியமான ஒரு நூல் நர்மதா பதிப்பகம் வெளியீடாக வந்த க.ஸ்ரீதரன் மொழியாக்கம் செய்த கீதை. சங்கரர் ராமானுஜர் மத்வர் ஆகிய மூவரின் உரைகளும் அடங்கியது அது. அது அனைத்துவகையான தெளிவுகளையும் அளிப்பது. எல்லாவகையிலும் முழுமையானது.

கீதை ஒரு வேதாந்த நூல். அதன்படி அதை வாசிப்பவர்களே அதை அணுகுகிறார்கள்.

ஜெ

***

கீதைவெளி
கீதை அறிவுலகில்
கீதை – நமது

 

முந்தைய கட்டுரைஇரண்டு கணவர்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-37