தாசியும் பெண்ணும்

muvalu[மூவாலூர் ராமாமிருதத்தம்மையார்]

இன்று ஆண்கள் சிலர் தனியாகக்கூடினால் பேச்சு முழுக்க சினிமா நடிகைகளைப்பற்றித்தான் இருக்கும். சினிமா தோன்றாத நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எதைப்பேசிக்கொண்டார்கள்? , தாசிகளைப்பற்றித்தான்.

இதற்கு நான் ஆதாரமாகக் கொள்வது வடுவூர் துரைசாமி அய்யங்கார் [ 1880 – 1942] அவர்களின் நாவல்களை. பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராகப் பணியாற்றிய துரைசாமி அய்யங்கார் முழுநேர எழுத்தாளராக ஆனார். தன் நாவல்களை தானே அச்சகம் நடத்தி வெளியிட்டார். தன் நாவல்களை வெளியிட ”மனோரஞ்சனி” என்ற மாதஇதழை நடத்தினார். தமிழ் வணிக இலக்கியத்தின் முதல் சூப்பர் ஸ்டார் அவர்தான். கல்கி, சாண்டில்யன், சுஜாதா போன்ற மூன்றுதலைமுறை சூப்பர்ஸ்டார்கள் வருவது அதன்பிறகுதான்.

தமிழில் துப்பறியும் கதைகளை எழுதுவதில் முன்னோடிகள் மூவர். வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஜே.ஆர்.ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார். இவர்கள் அன்று ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த ரெயினால்ட்ஸ் போன்றவர்களின் நாவல்களைத் தழுவி தமிழில் நீண்ட துப்பறியும் கதைகளை எழுதினார்கள். இன்று வாசிக்கையில் இந்தநாவல்கள் எல்லாமே பழைமையானவையாகவும் சிறுபிள்ளைத்தனமானவையாகவும் தெரிகின்றன.  ஆனால் அச்சுமுறை உருவாகி இதழ்களும் புத்தகங்களும் உருவாகி வந்த காலகட்டம் அது. அன்று வாசிப்பை ஒரு சமூகப்பழக்கமாக ஆக்குவதில் இந்நாவல்கள் பெரிய பங்களிப்பை ஆற்றின. இதைப்பற்றி ஆ.இரா.வெங்கடாசலபதி நாவலும் வாசிப்பும் என்ற நூலில் வரலாற்றுரீதியாகப் பேசியிருக்கிறார்

இந்த ஆரம்பகால துப்பறியும்நாவல்கள் அடைந்த வெற்றியை நோக்குகையில் நாம் முக்கியமாகக் கவனிக்கவேண்டிய ஒன்று உண்டு. இந்தியாவில் போலீஸ்த்துறை, நீதிமன்றம் ஆகியவை அப்போதுதான் தொடங்குகின்றன. குற்றங்களை காவல்துறை துப்பறிவதும் அப்போதுதான் ஆரம்பிக்கிறது. அதற்கு முன்புவரை அரசர்களும் ஊர்ச்சபைகளும் குற்றங்களை விசாரித்து ஆசாரப்படி தண்டனை வழங்கின. குற்றத்தை சட்டபூர்வமாக ஆதாரங்களுடன் நிரூபிக்கவேண்டிய அவசியம் அன்று இருக்கவில்லை. சொல்லப்போனால் புறவயமான நிரூபணம் பெரிய விஷயமே இல்லை. அந்த சபையில் வெளிப்படும் உணர்ச்சிகளே முக்கியமானவை. ஆனால் நீதிமன்றம் ஆதாரங்களைச் சார்ந்தது, உணர்ச்சியற்றது. அது மக்களின் வாழ்க்கையை பாதிக்க ஆரம்பித்த காலம். ஆகவே அன்று துப்பறியும் கதைகளுக்கு மிகப்பெரிய வாசகவட்டம் இருந்தது. அவை ஆங்கிலேயர்களின் சட்டங்களையும் குற்றவியல் நடவடிக்கைகளையும் புரிந்துகொள்ள மிகவும் உதவியும் செய்தன. ஆகவே வடுவூர் துரைசாமி அய்யங்கார் போன்றவர்கள் எழுத்தின்மூலம் பெரும்பணம் ஈட்டினார்கள்.

இந்த நாவல்களில் எல்லாம் கதைப்புலம் அன்றிருந்த உயர்குடிச் சமூகம்தான். ஜமீன்தார்கள், மிராசுதார்கள் போன்றவர்கள். அவர்களின் சபைகளில் எல்லாம் எப்போதுமே தாசிகளைப்பற்றித்தான் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. வடுவூர் துரைசாமி அய்யங்காரின் கதைகளில் குற்றம், புலனாய்வு ஆகியவற்றுடன் தாசிகளைப்பற்றிய உரையாடல்களும் சமமாகக் கலந்துவிடப்பட்டிருக்கும்.  குற்றப்புலனாய்வு என்பதே குற்றவாளியை மடக்கியபின் அது எப்படி நிகழ்ந்தது என விளக்கி பேருரை ஆற்றுவதுதான். ஆனால் அப்படி நேரடியாக தாசிகளைப்பற்றி வர்ணிக்க முடியாது, அன்று ஆங்கிலேயர் உருவாக்கிய ஒழுக்கக் கெடுபிடிகளும் அதிகமாக இருந்தன. ஆகவே இத்தகைய நாவல்களில் தாசிகள் வருவார்கள், கூடவே தாசிகளிடம் செல்வது எவ்வளவு தவறானது என்ற அறிவுரைகளும் இருக்கும். சிலசமயங்களில் தாசிகளேகூட விரிவாக அந்த அறிவுரையைச் சொல்வார்கள். ஆனால் அதுவும்கூட கிளுகிளுப்பாகவே பார்க்கப்படும்.

தமிழ் இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமணியம் அன்று வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவல்களை வாசிப்பது அன்று எப்படியெல்லாம் ஒழுக்கக்கேடாகப் பார்க்கப்பட்டது என்பதை எழுதியிருக்கிறார். அவற்றின் பரபரப்பான விற்பனைக்கு இந்த சமூகத்தடையும் காரணமாக இருந்திருக்கலாம். ஜமீன்தார்களும் மிராசுதார்களும் அவற்றை பணம் கொடுத்து வாங்கினர். அவை ஆங்கில நூல்களுக்குச் சமானமாக உயர்தர அட்டையுடன் நல்ல காகிதத்தில் அச்சிடப்பட்டன. அன்றெல்லாம் சோப்பு, பல்பொடி போன்ற ‘நவநாகரீக’ பொருட்கள் ரயில்நிலையங்களில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் என்ற ஆங்கிலேயக் கடையில் மட்டுமே கிடைக்கும். வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவல்களும் அங்கேதான் கிடைத்தன இன்று இவரது திகம்பரச் சாமியார் போன்ற நாவல்களை அல்லையன்ஸ் பதிப்பகம் மறுவெளியீடு செய்துள்ளது.

அன்றைய சமூகம் மறைவாக தாசிகளைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தது என்பதை இந்நாவல்கள் காட்டுகின்றன. அத்தனை கோயில்நகரங்களும் தாசிகளால் நிறைந்திருந்தன. பணமிருப்பவர்கள் தாசிகளிடம் செல்வதை கௌரவமாக நினைத்தார்கள். தாசிகளுக்காக பணக்காரர்கள் மோதிக்கொண்டார்கள். அந்த மோதல்கள் இதிகாசங்களைப்போல சாமானியர்களால் பன்னிப்பன்னிப் பேசப்பட்டன. ஆங்கிலேயர் இங்கே ரயிலையும் சாலைகளையும்அமைத்தபோது வெளியூர் தாசிகளைத் தேடிச்செல்வது பெருகியது. இதேதான் கேரளத்திலும். ஆரம்பகால குஜிலிப்பதிப்பு எனக்கூறப்பட்ட பதினாறுபக்க சந்தைப்பதிப்பு  பாட்டுநூல்களில் தாசிகளைப் பற்றிய செய்திகள் மிகுதி. இவை நகரவர்ணனை எனப்பட்டன. சிறுவயதில் நானே கொல்லம், கொச்சி வர்ணனை என்ற பழைய நூலை வாங்கியிருக்கிறேன்.

பரத்தமைக்கு நமக்கு நீண்ட மரபு உண்டு. நமக்குக் கிடைக்கும் மிகப்பழைய இலக்கியமான அகநாநூறிலேயே அன்றிருந்த மிக விரிவான பரத்தைமை ஒழுக்கம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியத்தில் நேர்பாதி பரத்தமைபற்றித்தான். ஆகவே அதை வாசிக்ககூடாது என்று சைவசமைய துறவிகள் ஆணையிட்டிருந்தார்கள்.

அந்தப்பரத்தையர் யார் என்பது விவாதிக்கத் தக்கது. இன்றிருப்பது போல அவர்கள் விபச்சாரிகளின் சமூகமா அல்லது சுதந்திரமான பாலியல் உறவுகள் அனுமதிக்கப்பட்ட ஒருவமையான பெண்மையச்  சமூகமா என்பது ஆராய்ச்சிக்கு உரியது. அன்று அவர்கள் சமூகப் படிநிலையில் இழிந்தவர்களாக இருக்கவில்லை. செல்வத்திலும் குறைவின்றி இருந்தார்கள். பரத்தையரிடம் செல்வது. ஆண்மையின் ஒரு அடையாளமாகவே கருதப்பட்டது. சங்க காலத்தின் இறுதிக் கட்டத்தில் கலித்தொகை போன்ற படைப்புகளில்தான் பரத்தையர் இழித்து உரைக்கப்படுகிறார்கள்.  பாங்கர்கள் மேலும் இழித்துரைக்கப்பட்டார்கள்.

அக்காலகட்டத்தில் தமிழகத்தில் சமணமும் பௌத்தமும் வேரூன்றியிருக்கலாம். சங்கம் மருவிய காலகட்டத்தில் எழுந்த சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காவியங்கள் பரத்தமையை ஒரு சமூகச் சீர்கேடாகவும் ஒழுக்கக்கேடாகவும் காட்டுகின்றன. திருக்குறள் மிகக் கடுமையான வார்த்தைகளில் பரத்தமையை விலக்குகிறது. ஆணுக்கும் கற்பொழுக்கத்தை வலியுறுத்துகிறது.

சமண பௌத்த மதங்கள் ஓங்கியிருந்த களப்பிரர் காலகட்டத்தின் முடிவில் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும் ஆட்சி அமைதனர்.அந்தக் காலகட்டத்தில்தான் பக்தி இயக்கம் பெரு வீச்சுடன் எழுந்தது. பெரிய ஆலயங்கள் உருவாகி வந்தன. அவ்வாலயங்களின் சடங்குகளின் ஒரு பகுதியாக இசையும் நடனக்கலையும் பேணப்பட்டன. அவற்றுக்குரிய தேவரடியார் சமூகங்கள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்டன. இவ்வாறாக பிறிதொரு வகையில் சங்க காலத்தில் இருந்த பரத்தமை தமிழகமெங்கும் பரவி வேரூன்றியது.

கிபி 9-ம் நூற்றாண்டு வாக்கில் சோழர்காலத்தில் உருவாகிய இந்த தேவரடியார் சமூகமும் தொழிலும் பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்கும் தமிழ்ப் பண்பாட்டில் மிகத் தீவிரமான பங்களிப்பை ஆற்றின. ப.சிங்காரம் அவருடைய புயலிலே ஒரு தோணி என்ற நாவலில் முத்தொள்ளாயிரத்தில் மூன்று பாடல்களை எடுத்துக் காட்டி ”இந்த மூன்று பாடல்களுமே காமம் காமம்’ என்று கூவுகின்றன. தமிழகம் ஆண்மை இழந்து அழிந்ததின் வரலாறே இந்தக் கவிதைகளில் இருக்கிறது” என்று வாதிடுகிறார். ஆனால் ’புயலிலே ஒரு தோணி’யே கூட மிகவிரிவான தாசிவர்ணனை கொண்ட நூல்தான்.

.தமிழகத்தின் பிற்கால சிற்றிலக்கியங்கள் முழுக்கவே பரத்தமையைச் சுற்றி அமைந்திருந்தனவோ என்று தோன்றுகிறது. சிற்றிலக்கியங்கள் பேசும் காமமென்பது மன்னர்களின் சபைகளில் பரத்தையர் பாடி ஆடுவதற்காகவே எழுதப்பட்டது. கூளப்பநாயக்கன் காதல், விறலிவிடு தூது போன்ற சிற்றிலக்கியங்களில் காதலே இல்லை, வெறும் காமம் மட்டும்தான்.  எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் பக்தி இலக்கியத்தின் பித்தும் வேகமும் அடங்கிய பின்னர் பதினைந்தாம் நூற்றாண்டு முதல்  முந்நூறு ஆண்டுகாலம் தமிழகம் கண்ட இலக்கியம் அனைத்துமே ஒருவகையில் பரத்தைமை இலக்கியம் தான்.

பதினெட்டாம் நூற்றாண்டில் நவீன உலகம் தமிழகத்தை வந்தடைந்தது.  பிரிட்டிஷார் இந்தியப் பெருநிலத்தை கைப்பற்றினர். தமிழகத்தின் பெரும்பகுதி நேரடியாகவே பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே சென்றது. அவர்கள் நீதிமன்றத்தையும் கல்வி நிலையங்களையும் பொது செய்தித் தொடர்பையும் உருவாக்கினார்கள். அவற்றினூடாக 19-ம் நூற்றாண்டின் ஐரோப்பாவில் இருந்த நவீன பண்பாட்டுக் கூறுகள் நமது சிற்றூர்களைச் சென்றடைந்தன. தனிமனித சுதந்திரம், அரசியல் உரிமை,மானுட சமத்துவம், பெண்விடுதலை போன்ற கருதுகோள்களுக்கு நிகராகவே பிரிட்டிஷார் அன்று பேணியிருந்த விக்டோரிய யுக ஒழுக்கமும் மக்களைச் சென்றடைந்தது. அது நமது மரபிலிருந்த பரத்தமை ஒழுக்கத்தை அதிர்ச்சியுடன் பார்த்தது. முதல் முறையாக நம்மவருக்கே தமது நீண்ட பண்பாடென்பது ஆழ்ந்த ஒழுக்கக் கேடொன்றை தன்னியல்பாகக் கொண்டது என்ற எண்ணம் வர ஆரம்பித்தது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1780களிலும் 1870 களிலும் உருவான இரு பெரும் பஞ்சங்கள் இங்கிருந்த நிலப்பிரபுத்துவ அமைப்பை உலுக்கின. பஞ்சங்கள் எப்போதுமே உற்பத்தியுடன் நேரடியாக தொடர்பு கொண்டிராத ஜாதிகளைத்தான் முதன்மையாகப்பாதிக்கும். செல்வந்தர்களை அண்டி வாழ்ந்த பிராமணர்களும் பரத்தையரும் வெவ்வேறு வகையில் தங்களுக்கிருந்த பொருளியல் அடிப்படையை இழந்தனர். பிராமணர்கள்  கல்வித்திறன் மூலம் அன்றிருந்த பிரிட்டிஷ் ஆட்சியின் வேலைவாய்ப்புகளுக்குள் இணைந்து தங்களை மீட்டெடுத்துக் கொண்டனர். அப்படி மீட்டெடுத்துக் கொள்ளாதவர்கள் ஆழ்ந்த வறுமையில் நசுங்கி அழியவும் செய்தனர். அந்த வாய்ப்பு பரத்தையருக்கு கைகூடவில்லை.

தமிழகமெங்கும் பரத்தையர்கள் உயர்ந்த சமுகப்படிநிலைகளில் உயர்ந்த பொருளியல் நிலைகளில் இருந்தனர். 1960 களில் பதிவு செய்யப்பட்ட சில தேவரடியார்களின் நினைவுகளில் கூட அவர்கள் பல்லக்கில் ஏறும் உரிமை, ஆலயத்தின் உள்ளே செல்லும் உரிமை ஆகியவற்றுடன் மிக கௌரவமாக வாழ்ந்ததாக உள்ளது ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் நிலை இழந்து நேரடியாக விபச்சாரத்திற்கு தான் சென்றனர். அதையொட்டி சமூக அந்தஸ்தும் இல்லாமல் ஆயிற்று .அவர்கள் வெறும் விபச்சாரிகளாக சமூகத்தில் உளப்பதிவு பெற்றார்கள்.

இந்தப் பரிதாபநிலை பற்றியும் பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் வடுவூர் துரைசாமி அய்யங்கார் முதலியோரின் எழுத்துக்கள் முழுக்கமுழுக்க தாசிகளை மோசக்காரர்கள், கொடூரமானவர்கள் என்றே காட்டுகின்றன. அதாவது தாசிகளிடம் செல்வது, அவர்களைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பது, அதேசமயம் அவர்களை வெறுப்பது. இந்த மனநிலை இன்றும் நம்மிடம் உள்ளது. தாசிகளைப் பற்றிய வர்ணனை திகம்பரச் சாமியார் போன்ற ஒரு துப்பறியும் நாவலுக்கு ஏன் தேவையாகிறது? ஒன்று, அந்நாவலின் மக்களான அன்றைய ஜமீந்தார்கள் ,வணிகர்களின் வாழ்க்கையுடன் அவர்கள் இணைந்திருந்தனர். இரண்டு, அவர்களுக்கு குற்றங்களுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பிருந்தது. ஆனால் அதைவிட அவர்களை அவற்றுடன் சம்பந்தப்படுத்தும் மனநிலை அன்று இருந்தது. குற்றங்கள் அளிக்கும் கிளுகிளுப்பே பரத்தமைக்கும் இருந்தது.

இச்சூழலில்தான் தாசித்தொழில் செய்யும் தேவரடியார் குலத்தில் பிறந்த மூவாலூர் ராமாமிருதத்தம்மையார் [1883–1962] எழுதிய “மதிபெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோசவலை’ என்ற நாவல் வெளியாகியது.

மூவாலூர் ராமாமிருதத்தம்மையார் திருவாரூரில் பிறந்து மயிலாடுதுறை அருகே மூவாலூரில் வளர்ந்தார். இளமையிலேயே சமூகசீர்திருத்தத்திற்காக களமிறங்கிப்போராட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தவர் பின்னர் ஈ.வே.ராவின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றினார். பொட்டுகட்டும் முறையை ஒழிப்பதற்காகப் போராடினார். அதற்காக 1936ல் தன் நாவலை எழுதினார்

மதிபெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோசவலை என்ற தலைப்பைப் பார்த்தால் வழக்கம்போல தாசிகளை கிளுகிளுப்பாக வர்ணித்துவிட்டு நல்லுரை கூறும் நாவல் என்றே தோன்றும். ஆனால் உள்ளே அந்த மனநிலையை கிழிகிழி என கிழிக்கிறார் மூவாலூர் ராமாமிருதத்தம்மையார். தாசிகளை உருவாக்கி நிலைநிறுத்தும் சமூக அமைப்பையும், அதன் பழமைவாதத்தை ஆதரித்தபடியே ஒழுக்கநெறி பேசுபவர்களின் போலித்தனத்தையும் தாசிகளைக்கொண்டே சாடுகிறார். தாசிகுலத்தவர்களும்  சமமான உரிமையுடன் திருமணம் செய்துகொண்டு சுயமரியாதையுடன் வாழ்வதற்கு அறைகூவுகிறார். தாசிகளின் மோசவலை பற்றி பேசுபவர்கள் குடும்பப் பெண்களை தெய்வநிலைக்கு உயர்த்தி வைத்துக்கொண்டும் இருப்பார்கள். நீ பரத்தை ஒழுக்கம் உடையவன் என்றால் பெண்ணின் கற்பைப்பற்றிப்பேச உனக்கென்ன தகுதி என்கிறார் மூவாலூர் ராமாமிருதத்தம்மையார்.

வடுவூராரின் கும்பகோணம் வக்கீல் அல்லது திகம்பர சாமியார்  என்னும் நூலில் தாசி ஒருத்தி தாங்கள் எப்படியெல்லாம் மோசம்செய்வோம் என்று விரிவாகப் பேசும் இடத்தை வாசித்து அதே நாளிலேயே மூவாலூர் ராமாமிருதத்தம்மையாரின் நாவலில் தாசி தங்கள் உரிமை குறித்துப்பேசுவதை வாசித்த நினைவிருக்கிறது. இருபகுதிகளையும் ஒப்பிட்டால் தமிழ் பண்பாட்டின் இரு பார்வைகள் தெரியவரும். அவர்களின் மரபு அப்படியே தொடர்கிறது. வடுவூராரின் மரபைச்சேர்ந்தவர்கள் என புஷ்பா தங்கத்துரை, ராஜேந்திரகுமார் போன்றவர்களைச் சொல்லலாம். மறு எல்லையில் மூவாலூராரின் தரப்பில் லட்சுமி, சிவசங்கரி, வாசந்தி போன்று ஒரு தலைமுறை உருவாகி வந்திருக்கிறது.  ஆண்களின் ரகசிய ஆசைகளுக்கும் யதாத்தமான பெண்ணின் உரிமைக்கும் இடையே உள்ள போராட்டம் இது

1. இலட்சியக்காதலியின் வருகை

ஒரு சிறு வெளி

3  கல்வியும் காதலும்

முந்தைய கட்டுரைபேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-34