சவரக்கத்திமுனையில் நடப்பது
ஜெ
சவரக்கத்திமுனையில் நடப்பது கட்டுரை படித்தேன். என்னுடைய அனுபவமும் ஏறத்தாழ இதேதான். உங்கள் எழுத்து எனக்குப்பிடிக்கும். ஆனால் அதை எங்கேனும் பேசத்தொடங்கினால் வரும் எதிர்வினைகள் ஒரே மாதிரியானவை
பெரும்பாலானவர்களுக்கு உங்கள் பெயர் மட்டும்தான் தெரியும். ஆனால் தெரிந்ததுபோல காட்டிக்கொள்வார்கள். தெரியுமே இந்த நூலை எழுதியவர் என்று சொல்லிவிட்டு இந்துத்துவா இல்ல, கருணாநிதிய திட்டினார்ல என்று ஏதாவது சொல்வார்கள்.
உங்களுக்கு எதிரான மனநிலை திராவிடக் கட்சி, இடதுசாரிக் கட்சிக்காரர்களிடம் உண்டு. அவர்கள் பொதுவாக ஃபாலோ செய்யும் ஒரு சிலருடைய கருத்துக்களை சொந்தக்கருத்துக்களாகச் சொல்வார்கள். மிகுந்த தார்மீகாவேசத்துடன் எதிர்த்துப் பேசுவார்கள். ’நீங்கள் சொல்லும் அந்த நூலை படித்திருக்கிறீர்களா, அல்லது எந்த நூலை படித்தீர்கள்?” என்று கேட்டால் சண்டை சச்சரவுதான்
பொழுதுபோக்கு எழுத்துக்களைக் கொஞ்சம் வாசிப்பவர்கள் இன்னொரு மாதிரி. அவர்களுக்கு நீங்கள் சுஜாதா பற்றியோ ரமணிசந்திரன் பற்றியோ சொன்னது அவர்களைப்பற்றிச் சொன்னதுமாதிரி. அல்லது சொல்லவில்லை என்றாலும் அப்படி நினைத்துக்கொள்வார்கள். இதெல்லாம் மேட்டிமைத்தனம் அறிவுப் பம்மாத்து என ஆரம்பிப்பார்கள்
கடைசியாகச் குட்டிக்குட்டி எழுத்தாளர்கள். இவர்களே ஒன்றிரண்டு எழுதியிருப்பார்கள். அவர்கள் மானசீகமாக அவர்கள் எழுதியதை உங்கள் எழுத்துடன் ஒப்பிட்டிருப்பார்கள். விமர்சனங்களை வைத்து நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று மதிப்பிட்டிருப்பார்கள். அதைவைத்து ஒரு நிலைபாடு எடுத்து விளாச ஆரம்பிப்பார்கள். முதலில் கொஞ்சம் நிதானமாக, லாஜிக்கலாக இருக்கும். அரைமணிநேரம் போனால் வெறும் வயித்தெரிச்சலாகவே வெளிப்படும்
இவர்கள் நமக்க்குச் சொல்லும் அட்வைஸ்கள் நிறைய உண்டு. ’ஒரே எழுத்தாளரை படிக்காதீர்கள், நிறைய வெரைட்டியாக படியுங்கள் அப்பதான் அறிவுவளரும். எங்கேயும் தேங்கிவிடக்கூடாது என்று சொல்வார்கள்’. நான் அப்படிப் படிக்கவில்லை என்று உங்களுக்கு யார் சொன்னது என்று கேட்பேன். நான் தேங்கிவிட்டேன் என்றால் நீ என்ன மேலே போய்விட்டாய் என்று கேட்பேன். நான் ஜெயமோகன் வழியாக அறிமுகமாகிக்கொண்ட எழுத்தாளர்கள் இன்னின்னார் என்றும் தமிழில் இவர்களை எல்லாம் அவர்தான் அறிமுகம் செய்கிறார் என்றும் சொல்வேன். நீ இதெல்லாம் படித்தாயா என்று கேட்பேன்.
அதேபோல செல்லமான கேலியாக நம்மை அடிமை, சிஷ்யப்புள்ளை, குழுவைச்சேர்ந்தவர் என்றெல்லாம் சொல்வார்கள். இதைக்கேட்டு நாம் கொஞ்சம் சீண்டப்பட்டால் ‘ஜெயமோகனை எனக்குப்பிடிக்கும் ஆனால்…’ என்று மழுப்ப ஆரம்பித்துவிடுவோம். பலபேர் இதைச் சொல்லிக்கொண்டுதான் ஆரம்பிக்கிறார்கள் இன்றைக்கு. இந்த இடத்தில்தான் சுற்றியிருக்கும் மந்தை நம்மை மழுங்கடிக்க ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். நான் சொல்வேன், நான் எனக்குச் சமானமான மூளையுடன் மோதித்தான் வளர்வேன். அது ஜெமோதான். கீழே உள்ளவர்களுக்கெல்லாம் கிரேஸ் மார்க் கொடுக்க முடியாது என்று
உங்களை எதிர்த்துவசைபாடும் பலர் உங்களுடன் மானசீகமாக மோதிக்கொண்டே இருப்பவர்கள். அவர்களைக் கவனித்தால் அந்த விவாதம் வழியாகத்தான் அவர்கள் வளர்கிறர்கள் என்று தெரியும். தங்கள் ஈகோவால் அல்லது நேர்மையில்லாத தன்மையால் அந்த கிரெடிட்டைக் கொடுக்காமல் போஸ்கொடுக்கிறார்கள். ஜெயமோகனிடம் கற்றுக்கொண்டு அவர் எதிரிகளை நண்பர்களாகத் தக்கவைக்கும் ஒரு சீப்பான தந்திரம் இது.
அப்படிப்பட்டவர்களிடம் நான் சொல்வது ஒன்றுதான். அவரை எதிர்க்கும் அதேகும்பல் உங்களை வேவுபார்த்துக்கொண்டுதான் இருக்கும். அவர்களுக்கு நீங்கள் உள்ளூர அவரோட ஆள், எதனாலோ எதிர்நிலை எடுக்கிறீர்கள் என்று தெரியும். நீங்கள் கொஞ்சம் வளர்ந்தாலும் அந்தக் கும்பல் உங்களை கொத்திப்பிடுங்க ஆரம்பிக்கும். ரொம்பநாள் ஓடாது.
கும்பல்கள் உண்டாக்கும் மனநிலை, அரசியல்மனநிலை எல்லாவற்றையும் எதிர்த்து ஆமாய்யா நான் அப்டித்தான் என்று சொல்லத்தைரியம் இல்லாமல் என்ன அறிவுஜீவித்தனம் வேண்டிக்கிடக்கிறது என்று நினைப்பேன். அதைப் பலரிடம் சொல்லியிருக்கிறேன்.
’
ஆனால் நீங்கள் இனிமேல் அரசியல் எழுதமாட்டேன் என்று சொன்னது உடன்பாடு. இலக்கியம் பற்றிப் பேசத்தான் ஆளே இல்லை. இலக்கியம் பற்றி எதைத்தேடினாலும் உங்கள் சைட்டுக்குத்தான் வருகிறது கூகிள். ஆகவே இலக்கியமே உங்கள் வழியாக இருக்கட்டும்
அருண்
படைப்பாளியைப் படைக்கலனுடன் சந்திப்பவர்களுக்கு
————————————————————————————-
நான் உங்களுக்கு அனுமதி தருகிறேன்
சிறிய அளவிலான பயிற்சியுடன்
குறைந்த முன்னேற்பாடுகளுடன்
என்னிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல்
நீங்கள் என்னைக் கொல்லலாம்
துயர் மிக்கது இவ்வுலகம்
அதை அறியும் தோறும்
அதை உணரும் தோறும்
காணும்
வாழ்வின்
சின்னச் சின்ன இனிமைகளை
கணந்தோறும் பெருகும்
புதிய புதிய காட்சிகளை
ஆர்வத்தோடு செயலாற்றியதன் நிறைவை
நான் அனுபவித்திருக்கிறேன்
ஓர் உயிரைக் கொல்வதுடன்
ஒரு வாழ்க்கை முடிந்து விடும்
என நம்பும் உங்களுக்கு
நான் சொல்வது அனுபவமாகியிருக்காது
நான் சொல்வது புரியாது
என்னைக் கொல்வதன் மூலம்
நீங்கள் அடையப்போகும் வெகுமதியில்
குறைந்தபட்சம்
ஒரு மனிதனுடைய தூய உழைப்பாவது கலந்திருக்கிறது
என் கொலைக்குப் பின்னர்
நீங்கள் ஆற்றப்போகும் உரைகளையும்
முழங்கப் போகும் பிரகடனங்களையும்
மனிதர்களே கேட்க இருக்கிறார்கள்
சொல்ல முடியாது
எனது சொற்களை
என்னைப் போன்றோரின் சொற்களைக் கூட
நீங்கள் பயன்படுத்த நேரிடலாம்
சிந்தப்பட்ட குருதியையும்
அழுத கண்ணீரையும்
நுனி நுனியாய்த் தொட்டெடுத்து
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
வார்க்கப்பட்ட வார்த்தைகளை
என்றோ ஒரு நாள்
ஏதோ ஒரு தருணத்தில்
நீங்கள் சிந்தப் போகும்
கண்ணீரின்
ஒரு துளியும் சொல்லாகக் கூடும்
அப்போதும்
அத்தருணத்திலும்
என் சொற்கள் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்
நான் உங்களுக்கு அனுமதி தருகிறேன்
நீங்கள் என்னைக் கொல்லலாம்
***
பிரபு மயிலாடுதுறை