வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-34

wild-west-clipart-rodeo-31யுதிஷ்டிரர் சகுனியின் அறைவாயிலை அடைந்தபோது காலடியோசை கேட்டு துயில் விழித்த வாயிற்காவலன் திடுக்கிட்டு வாய்பிளந்தான். உடலில் கூடிய பதற்றமான அசைவுகளுடன் உள்ளே செல்ல திரும்பி உடனே அவரை நோக்கி திரும்பி வணங்கி மீண்டும் உள்ளே செல்ல முயல அவன் தோள்தொட்டு தடுத்த யுதிஷ்டிரர் “நான் எவருமறியாமல் தனிப்பட்டமுறையில் காந்தாரரை சந்திக்க வந்தேன். அவரிடம் சொல்” என்றார். அவன் தலைவணங்கி உள்ளே சென்றான்.

அவன் திரும்பிவந்து தலைவணங்கி உள்ளே செல்லும்படி கைகாட்டியதும் “என் மைந்தன் சர்வதன் எனக்குத் துணையாக வந்துள்ளான். அவனை ஓய்வெடுக்கச் சொல்க!” என்றபின் யுதிஷ்டிரர் உள்ளே சென்றார். அறைக்குள் சகுனி இல்லை. மஞ்சமும் அருகே இரு பீடங்களும் ஒழிந்துகிடந்தன. சூதுப்பலகை காய்கள் பரப்பிய நிலையில் விரிந்திருக்க அப்பால் சாளரத்திலிருந்து காற்று வந்து திரைச்சீலைகளை நெளியச்செய்தது.

யுதிஷ்டிரர் உப்பரிகையில் சகுனி நிற்பதை கண்டார். அவருக்கு பின்னால் சென்று நின்று “வணங்குகிறேன், காந்தாரரே” என்றார். சகுனி திரும்பாமல் மறுமொழி சொல்லாமல் அசைவிலாது நின்றார். “உங்களை சந்திக்க வந்தேன், காந்தாரரே” என்றார் யுதிஷ்டிரர் மீண்டும். சகுனி மெல்ல முனகினார். “நாம் ஒருமுறைகூட நேருக்குநேர் என சந்தித்ததில்லை. எண்ணிநோக்குகையில் அது பெரிய விந்தையெனப்படுகிறது. எண்ணிநோக்கினால் நாம் இருவர் கொண்ட முரணே இவையனைத்தும். நாம் இருவர் சூதாடியுமிருக்கிறோம். ஆனால் உரையாடியதில்லை.”

“சூது ஓர் உரையாடலே” என்றார் சகுனி. யுதிஷ்டிரர் சற்று தடுமாறி “ஆம்” என்றபின் “நாம் ஏன் பேசிக்கொள்ளக்கூடாது? நான் அதையே ஆண்டுக்கணக்கில் கனவுகண்டுவந்திருக்கிறேன். இப்போதில்லை எனில் இனியில்லை என்று தோன்றியது. ஒரு கனவு. அதில் இளைய யாதவர் என்னிடம் ஒரு வளையத்தை நிறைவாக்கச் சொன்னார். நான் அதை நிரப்புகிறேன். விழித்துக்கொண்டதுமே இங்கே வந்தாகவேண்டுமென முடிவு செய்தேன். மைந்தனை அழைத்துக்கொண்டு வணிகனாக நகர்புகுந்தேன். காவலர் என்னை அறிவார்கள். ஆகவே நான் மட்டுமே அறிந்த கரவுப்பாதை வழியாக வந்தேன்” என்றார்.

“நாகங்களின் பாதை அது” என்றார் சகுனி. யுதிஷ்டிரர் “நாம் பேசிக்கொள்ளலாம், காந்தாரரே. நாம் இடக்கு பேசவேண்டியதில்லை. சொல்திறன் காட்டவேண்டியதில்லை. போரிடும்பொருட்டு நான் வரவில்லை. நெஞ்சோடு நெஞ்சென தழுவிக்கொள்ளவே வந்தேன்” என்றார். சகுனி “நம்மிடையே அது இயல்வதா என்ன?” என்றபடி திரும்பினார். “இது நீங்கள் இறுதிவரை முயன்றீர்கள் என்று நாளை உங்களை நிறைவுபடுத்திக்கொள்வதற்கான முயற்சி அல்லவா?” யுதிஷ்டிரர் “இருக்கலாம், ஆனாலும் நான் வந்திருக்கிறேன். இது ஒரு வாய்ப்பு. நாம் பேசிக்கொள்வோம்” என்றார்.

சகுனி சில கணங்கள் இமைக்காமல் நோக்கியபின் “ஆம், அது ஒரு வாய்ப்பே” என்றார். “பேசுவோம்” என்றபடி தன் கால்களை நீக்கி நீக்கி வைத்து உள்ளே வந்தார். யுதிஷ்டிரரை அவர் கடந்துசெல்லும்போது மெல்லிய புண்வாடை எழுந்தது. பீடத்தில் வலிமுனகலுடன் அமர்ந்து சிறுபீடத்தின் மெத்தைமேல் காலைத் தூக்கி வைத்தார். அமர்க என யுதிஷ்டிரருக்கு கைகாட்டினார். யுதிஷ்டிரர் அமர்ந்ததும் கைகளை மார்பின்மேல் கட்டியபடி காத்திருந்தார். அவருடைய சிறிய விழிகள் உணர்வற்றவை போலிருந்தன. ஓநாயின் விழிகள். இரு சோழிகள் போல. ஒளியற்ற கூர்மை கொண்டவை.

யுதிஷ்டிரர் “நான் சொல்வதற்கு தத்துவமோ அரசுசூழ்கையோ ஏதுமில்லை, காந்தாரரே. நான் வெறும் தந்தையாக, அரசனாக இங்கே வந்திருக்கிறேன். இந்தப் போர் பேரழிவிலேயே முடியும் என என்னைப்போல் நீங்களும் அறிந்திருப்பீர்கள். இதனால் நாம் அடைவது எதுவாக இருந்தாலும் இருமடங்கு விலைகொடுத்திருப்போம். எளிய மக்கள் இறப்பார்கள். நம் மைந்தர் மடிவார்கள். நினைவில் பெருவடுவென இதை மானுடம் நெடுங்காலம் கொண்டுசெல்லும். இதைச் செலுத்திய அனைவரும் தலைமுறைதோறும் பழிகொள்வார்கள்” என்றார். சகுனி இதழ்கோட புன்னகைத்து “ஆம்” என்றார். “ஆனால் நான் பழியஞ்சவில்லை. நீர் அஞ்சுகிறீர்.”

“ஆம், நான் அஞ்சுகிறேன்” என்றார் யுதிஷ்டிரர். “நான் மன்றாடவே வந்தேன். நாம் இதை நிறுத்திக்கொள்வோம். உங்களுக்கு என்னிடம் சொல்ல என்ன உள்ளதென்று கூறுக! நான் செய்யவேண்டுவதென்ன என்று கூறுக!” அவர் கைகள் இரப்பவை என குவிந்து நீண்டன. “எந்த எல்லைவரை தாழவும் நான் சித்தமாக உள்ளேன். கோழையென்றும் கீழ்மகன் என்றும் இழிவுகொள்ளவோ, அனைத்தையும் இழந்து வெறுமைகொள்ளவோ. நான் செய்யவேண்டுவதென்ன என்று சொல்லுங்கள்.”

சகுனி “தெளிவாக பலமுறை சொல்லிவிட்டேன். எனக்கு இந்நிலம் வேண்டும்” என்றார். யுதிஷ்டிரர் “எடுத்துக்கொள்ளுங்கள்… நான் விட்டுவிடுகிறேன். எனக்கு இங்குள்ள எதுவும் வேண்டியதில்லை. அஸ்தினபுரியை நான் துறக்கிறேன்” என்றார். “அஸ்தினபுரி மட்டுமல்ல உடைமையென்றிருப்பது. பாண்டுவின் பெயரே உங்களுக்கு உடைமைதான்.” யுதிஷ்டிரர் தன்வதை வெறியுடன் “அதையும் அளித்துவிடுகிறேன்… பெயரிலியாக கிளம்புகிறேன்” என்றார். சகுனி “நிலம் என நான் சொன்னது அஸ்தினபுரியை அல்ல. பாரதவர்ஷத்தை” என்றார். “ஆற்றல்கொண்ட இளையோருடன் நீங்கள் எங்கு சென்றாலும் எங்களுக்கு எதிரியே.”

“பாரதவர்ஷத்திலிருந்தே கிளம்புகிறோம். பீதர்நாடு செல்கிறோம், இல்லையேல் யவனநாட்டுக்கு… நாங்கள் உங்கள் பாதையில் குறுக்கே வரப்போவதே இல்லை” என்றார் யுதிஷ்டிரர். “உங்கள் புகழ் குறுக்கே வரும். ஒவ்வொருநாளும் சூதரும் கவிஞரும் குடிகளும் அர்ஜுனன் வில்லையும் பீமனின் தோளையும் புகழ்ந்து பேசுவர்” என சகுனி புன்னகை செய்தார். “அவர்கள் முற்றழிக்கப்படாமல் அவர்களின் புகழ் அழியாது. அப்புகழ் இருப்பதுவரை நாங்கள் எந்நிலத்தையும் முழுதாள இயலாது.”

“நாங்கள் பணிகிறோம். வில்வைத்து அடிபணிந்து விடைகொள்கிறோம்” என்றார் யுதிஷ்டிரர். “ஆம், அப்போது நாங்கள் கொண்டதெல்லாம் உங்கள் கொடையென்றே ஆகும். வீரத்துடன் கொடையும் சேர மேலும் புகழ்பெறுவீர்கள். மேலும் எங்களை வெல்வீர்கள். ஒருபோதும் அதை நாங்கள் ஒப்பவியலாது.” யுதிஷ்டிரர் சொல்லிழந்து வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தார். அந்த முட்டுப்பெருஞ்சுவரை அவர் அப்படி நோக்கியதே இல்லை என்று உணர்ந்தார்.

சகுனி “என்ன செய்வது? சொல்க, பாண்டவரே!” என்றார். “நான் என்ன செய்யவேண்டும்?” என்றார் யுதிஷ்டிரர் தளர்ந்த குரலில். “முழுவிசையுடன், முழுப்படைவல்லமையுடன் எங்களை எதிர்த்து நிற்கவேண்டும். நீங்கள் எங்களுக்குச் செய்யவேண்டுவது அது ஒன்றே. படைக்களத்தில் எங்கள் முன் ஒருகணமும் விட்டுக்கொடுக்காமல் பொருதி தோற்று முற்றழியவேண்டும். உங்கள் குருதியை நாங்கள் நெஞ்சில் பூசிக்கொள்ளவேண்டும். உங்கள் குடிகளின் குருதிமேல் வெற்றிக்கூத்திடவேண்டும். அதை மட்டுமே நீங்கள் செய்யமுடியும்.” முகம் கோணலாகி “ஆனால் அதை தவிர்க்கவே இங்கு வந்துளீர், பாண்டவரே” என்றார் சகுனி.

யுதிஷ்டிரர் நெஞ்சின் எடை தாளாமல் உடலை அசைத்தார். நீள்மூச்சுவிட்டு தன்னை எளிதாக்கிக்கொள்ள முயன்றார். பின்னர் தொண்டையை கனைத்து குரல்தீட்டியபடி “காந்தாரரே, மானுடத்தின்பொருட்டு உங்கள் மைந்தரின்பொருட்டு ஓர் அணுவேனும் இதில் விட்டுக்கொடுக்க இயலாதா தங்களால்?” என்றார். சகுனி “விட்டுக்கொடுக்கிறேன். ஆனால் எந்த அணுவை என நீங்கள் சொல்லவேண்டும்” என்றார்.

சிலகணங்கள் எண்ணியபின் யுதிஷ்டிரர் “நாங்கள் இப்புவியில் எங்கேனும் வாழ்கிறோம்” என்றார். “எங்கு வாழ்ந்தாலும் உங்கள் புகழ் தேடிவரும். எங்களைச் சூழ்ந்து அது ஒலித்துக்கொண்டிருக்கும். இறந்தபின் மானுடனின் புகழ் ஏன் பெருகுகிறது? வாழும் மானுடனின் எதிரியல்புகள் அவன் புகழுக்கு மறுதரப்பை அமைத்துக்கொண்டே இருக்கின்றன. இறந்தவனின் செய்கைகள் மறக்கப்படுகின்றன. புகழ் மட்டும் சொல்லி பெருக்கப்படுகிறது. பாண்டவரே, மறைந்தவர் இறந்தவரைவிட ஆற்றல்மிக்கவர். இறந்தவருக்கு இல்லாத பூடகம் மறைந்தவருக்கு உண்டு. அவர்கள் மீண்டு வர வாய்ப்புகள் உண்டு. அவர்களின் புகழ் பெருகிக்கொண்டே இருக்கும்.”

யுதிஷ்டிரர் தத்தளித்தபின் “இங்கேயே இளையோர் என அமைகிறோம். நிலமோ அரசமுறைமையோ தேவையில்லை. என் தம்பியரும் நானும் துரியோதனனுக்கு முற்றடிமையாகிறோம். அதை அறிவிக்கிறோம்” என்றார். “பீமன் ஏதேனும் மக்கள்மன்றில் அரசனை போருக்கழைப்பான் எனில் அரசன் போர்புரிந்தாகவேண்டும் அல்லவா?” என்றார் சகுனி. “அழைக்கமாட்டான். அவன் ஆணையிடுவான்” என்றார் யுதிஷ்டிரர். “அழைக்காவிட்டால் அது வெல்வான் என்பதனால் என்றே கொள்ளப்படும். அரசனின் மணிமுடி பீமனால் அளிக்கப்பட்டதாகவே கொள்ளப்படும்.” சலிப்புடன் தலையசைத்து பின் எண்ணி உளமிரங்க “வேறென்னதான் செய்வது, காந்தாரரே?” என்றார் யுதிஷ்டிரர்.

“நான் முன்பு சொன்னதை, முழுவிசையும்கொண்டு களம்நில்லுங்கள். போரிட்டு தலைவீழ்த்துங்கள். உங்கள் நெஞ்சுகள்மேல் மிதித்து நாங்கள் நின்றிருக்கையில் இது முடியும். பாண்டவரே, குருதிக்குரியது குருதியாலன்றி தீராது.” யுதிஷ்டிரர் “உங்கள் மைந்தரும் களம்புகுவார்கள். உங்கள் குடிகள் போரிலழிவார்கள்” என்றார். “அவர்களும் நானும் வேறா என்ன?” என்றார் சகுனி. அச்சொல் யுதிஷ்டிரரை திடுக்கிடச் செய்தது. அவர் சகுனியின் மங்கலான விழிகளை நோக்கினார். எரிச்சலுடன் விழிகளை திருப்பிக்கொண்டு “நீங்கள் போரில் வெல்லப்போவதில்லை. இதை அறியாவிட்டால் உங்களைப்போன்ற மூடர் இப்புவியில் இல்லை” என்றார். “வெற்றியை விழைந்து வெற்றியென நம்பி போரிடுவதே வீரர் வழக்கம்” என்றார் சகுனி.

“வெற்றி இல்லை என்று அறிந்தும் தன்னையும் தன்னை நம்பியவர்களையும் பேரழிவுக்கு கொண்டுசெல்லுதல் வீணரின் இயல்பு” என்றார் யுதிஷ்டிரர். சகுனி புன்னகைத்து “வெற்றி உறுதியென்றால் ஏன் அஞ்சுகிறீர்கள், பாண்டவரே?” என்றார். “நான் பழியை அஞ்சுகிறேன். அறத்தை எண்ணுகிறேன்” என்றார் யுதிஷ்டிரர். “வெற்றி கிடைக்குமென்று உறுதி இருந்தால் இழப்பை அஞ்சுபவர் யார்? இழப்பில்லை என்று அறிந்தால் அறத்தை எண்ணுபவர் யார்?” என்றார் சகுனி.

“நான் உங்கள் விழிநோக்கி கேட்கிறேன் காந்தாரரே, இது அறமா என ஒருபோதும் நீங்கள் என்னிடம் கேட்கப்போவதில்லையா?” என்றார் யுதிஷ்டிரர். “இல்லை, தெய்வங்களிடமும் கேட்கப்போவதில்லை. ஏனென்றால் அறமென்பது வென்றவனின் பசப்பு, தோற்பவனின் மன்றாட்டு, பிறிதொன்றுமல்ல என்று நான் அறிவேன்” என்றார் சகுனி. “அறமிலாது புவி இல்லை” என்றார் யுதிஷ்டிரர். “புவிக்குள் புதைந்துகிடக்கும் மாபலி எந்த அறத்தால் அங்கு சென்றார்? கொடையெனும் அறத்தாலா?” என்று சகுனி ஏளனத்துடன் கேட்டார். “அவர் கொண்ட அறத்தைவிடப் பேரறம் ஒன்றால்” என்றார் யுதிஷ்டிரர். “சிற்றறத்தை பேரறம் விழுங்குகிறது என்றால் அதற்கென்று அறமேதுமில்லையா?” என்று சகுனி நகைத்தார்.

யுதிஷ்டிரர் அவரை நீர்மைகொண்ட கண்களுடன் நோக்கிக்கொண்டிருந்தார். “நீங்கள் அறிவுடையோர் என்றால் கானேகலிலேயே மறைந்துபோயிருக்கவேண்டும். மீண்டு வந்திருக்கலாகாது. மீண்டுவரச் செய்தது உங்கள் துணைவியின்பொருட்டு எடுத்த வஞ்சினம். பாண்டவரே, அவ்வஞ்சினம் உரைக்கப்பட்டபோதே போர் முற்றாக முடிவெடுக்கப்பட்டுவிட்டதல்லவா?” என்றார் சகுனி. யுதிஷ்டிரர் அவர் என்ன சொல்லவருகிறார் என்று புரியாமல் வெறித்துப்பார்த்தார்.

“ஒருவழி உள்ளது, பாண்டவரே. மீதியின்றி அனைத்தையும் அது முடித்துவைக்கும். பாண்டவர்கள் எங்களுக்கு எவ்வகையிலும் பகையோ நிகரோ அல்ல என்று நாங்கள் நம்பச்செய்யும். நீங்கள் எவ்வகையிலும் ஒரு பொருட்டல்ல என்று இன்றிருப்போரும் நாளை எழுவோரும் முற்றாக ஏற்கச் செய்யும். உண்மையில் அதன்பின் பாதிநாட்டை, பாண்டுவின் பெயரை உங்களுக்கு அளிப்பதிலும் அஸ்தினபுரியின் அரசனுக்கு தடையேதுமிருக்காது.” புன்னகை ஒரு தசைவளைவென தங்கியிருந்த முகத்துடன் “குலப்பழி என நீங்கள் எண்ணுவது முற்றாக நீங்கும். குடிக்குள் அனைத்தும் முடியும்” என்றார் சகுனி. யுதிஷ்டிரர் “என்ன அது?” என்றார். அக்குரல் வெளியே ஒலித்ததா என்றே ஐயமாக இருந்தது.

“அஸ்தினபுரியின் அரசனின் ஆழமறிந்து நான் சொல்வது இது. ஈரைந்து தலைகொண்ட அரக்கர்கோன் நெஞ்சில் வாழ்ந்த விழைவுக்கு நிகர் அது. ஒளிக்கும்தோறும் ஆற்றல்கொண்டு தெய்வமென்றே எழுந்து அனைத்தையும் ஆள்வது அதுதான்…” யுதிஷ்டிரர் நெஞ்சிடிப்புடன் நோக்கிக்கொண்டிருந்தார். “அத்தனை பூசல்களையும் முற்றாக முடிப்பது அது. ஏனென்றால் அனைத்துக்கும் முதல் விதை அது” என்றார் சகுனி. அவர் முகத்தில் அதுவரை இருந்த மென்புன்னகை மறைந்தது. விழிகளில் மேலும் இடுங்கலும் ஒளியணைதலும் நிகழ்ந்தன.

சிலகணங்கள் அவர் ஏதும் சொல்லவில்லை. யுதிஷ்டிரர் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். சகுனி “திரௌபதி அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரை மணம்புரிந்துகொள்ளட்டும். அஸ்தினபுரியின் அரியணையில் அவருக்கு அரசியென அமரட்டும்” என்றார். யுதிஷ்டிரர் அச்சொற்கள் செவிப்பதியாமல் வெற்றுநோக்குடன் அமர்ந்திருந்தார். “உளம்கொள்வது கடினமென்று நானும் அறிவேன். ஆனால் பாஞ்சாலத்துக் குலஒழுக்கத்திற்கு இது மாறல்ல. ஐவருக்குத் துணைவி ஆறாவதொருவரை ஏற்பது பிழையும் அல்ல.” யுதிஷ்டிரர் குளிர்நீரில் நனைந்தவர்போல வியர்வையுடன் நடுங்கிக்கொண்டிருந்தார். நெஞ்சில் ஒரு சொல்லும் எழவில்லை.

“இருவர் இங்கே சத்ராபதி என்று அமைய முடியாதென்பதே மெய்யான சிக்கல், பாண்டவரே. இருவரும் அமைந்தாகவேண்டும் என்பது ஊழ். இருமுனையையும் சேர்த்து முடிச்சிட்டாலொழிய தீர்வமையாது இதற்கு” என்றார் சகுனி. “என்னடா சொன்னாய், இழிமகனே?” என்று கூவியபடி யுதிஷ்டிரர் பாய்ந்தெழுந்தார். ஓங்கி சகுனியை உதைக்க பீடம் சரிந்து சகுனி நிலத்தில் விழுந்தார். மீண்டும் உதைக்க காலெடுத்த யுதிஷ்டிரர் சகுனியின் புண்பட்ட காலை நோக்கிவிட்டு மூச்சிரைக்க நின்றார். “இழிமகனே, இழிமகனே, இழிமகனே” என்று கூச்சலிட்டார்.

“அவளிடம் சென்று கேளுங்கள், பாண்டவரே. பாரதவர்ஷத்தின் மும்முடி சூடி அமர்வதற்கு அதுவே எளிய வழி என்றால் அவள் ஒப்புவாளா என்று.” யுதிஷ்டிரர் தன் காலை ஓங்கியபடி மீண்டும் முன்னகர்ந்தார். “வாயைமூடு… வாயைமூடு! கீழ்பிறப்பே!” என்று மூச்சொலிக் குரலில் சொன்னார். “நீங்கள் கேட்கமாட்டீர்கள்…” என்று சகுனி சிரித்தார். மெல்ல புரண்டு வலியுடன் முனகியபடி “மிகமிக எளிதானது. ஆனால் செய்யமாட்டீர்கள்” என்றார். “ஆம், ஏனென்றால் நான் ஆண்மகன். கற்புள்ள பெண்ணின் கருவில் பிறந்தவன்.”

சகுனி “நெஞ்சுக்குள் கற்புள்ள பெண் என எவளுமில்லை” என்றார். “நீ நஞ்சு… முற்றழிக்கவேண்டிய தீங்கு” என்றபடி யுதிஷ்டிரர் கால்தளர்ந்து பின்னால் சென்றமைந்தார். “இதோ நீங்களும் போர் அறிவித்துவிட்டீர்கள், பாண்டவரே” என்றார் சகுனி. “ஆம், போர்தான். உன் குடியை மிச்சமின்றி அழிக்காமல், நீ நடந்த மண்ணை குருதியால் கழுவாமல் என் வஞ்சம் அணையாது. இப்புவியில் எனக்கிழைக்கப்பட்ட சிறுமையின் உச்சம் இப்போது நீ சொன்னதுதான்” என்றார் யுதிஷ்டிரர்.

“பாண்டவரே, ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். இப்படி நான் சொன்னேன் என அவளிடம் சொல்லுங்கள். அவள் சீறி மறுப்பாள். உங்கள் சங்கறுக்க எழுவாள். ஏழு நாட்கள் எண்ணியபின் முடிவெடுக்கும்படி அவளிடம் கோருங்கள். ஏழு நாட்களுக்குப் பின் அவள் அதே சினத்துடன் மேலும் விசையுடன் மறுப்பாள். அவளிடம் ஒருகணமேனும் அவள் அவ்வழியே சென்றாளா என்று கேளுங்கள். அனல்தொட்டு ஓர் ஆணையிடும்படி கோருங்கள். ஆணையிடுவாளென நினைக்கிறீர்களா?” யுதிஷ்டிரர் திகைத்து அமர்ந்திருந்தார்.

சகுனி மேலும் மேலும் குரல்தெளிந்தார். “மானுட உள்ளத்தின் வழிகள் முடிவிலாதவை. விண்ணில் முப்பத்துமுக்கோடி தேவர்களாகவும் ஆழங்களில் மூவாயிரத்துமுந்நூற்று முப்பத்துமுக்கோடி நாகங்களாகவும் நிறைந்திருப்பவை அவையே.” சகுனி காலை அசைக்க முயன்று வலியுடன் முனகி கண்களை மூடி தலையை பின்னுக்கு சரித்துக்கொண்டார். தளர்ந்த குரலில் “பிறகென்ன அறம்? எங்குளது ஒழுக்கம்? எவர் கற்புள்ளவர்? அறத்தோர் என்பவர் யார்?” என்றார்.

விட்டில் என தலை நடுங்கிக்கொண்டிருக்க யுதிஷ்டிரர் அவரை சிவந்து கலங்கிய விழிகளால் நோக்கிக்கொண்டிருந்தார். “அந்த எல்லை வரை எந்த அறத்தானும் தன்னையும் பிறரையும் இழுப்பதில்லை, பாண்டவரே” என்று சகுனி நகைத்தார். யுதிஷ்டிரர் எழுந்தார். “என்னை தூக்கிவிட்டுவிட்டுச் செல்க, பாண்டவரே!” என்றார் சகுனி. யுதிஷ்டிரர் வெறுப்பால் சுழித்த முகத்துடன் நின்றார். “எனக்காக சொல்லவில்லை, பாண்டவரே. நீங்கள் வெளியே செல்கையில் நான் இப்படி கிடந்தால் நீங்கள் இங்கேயே சிறைப்படுவீர்கள். கொல்லவும் படலாம்” என்றார் சகுனி.

பற்கள் தெரிய சிரித்து “ஆம், அறத்தின்பொருட்டே. இல்லையென்றால் நீங்கள் எப்படி அஸ்தினபுரிக்குள் நின்று என்னை பழிக்கமுடியும்?” என்றார். யுதிஷ்டிரர் அருகே வந்து கைகளை நீட்டி சகுனியின் கைகளை பற்றிக்கொண்டார். தூக்கி அமரச்செய்தபோது வலியுடன் முனகி பற்களைக் கடித்த சகுனி “தெய்வங்களே… மூதாதையரே” என்று கூவினார். பீடத்தில் மீண்டும் அமர்ந்ததும் “நீங்கள் சினத்துடன் மீள்கிறீர்கள், பாண்டவரே. சினம் வேண்டியதில்லை. உங்கள் சினம் சரியே. ஆனால் என் கூற்று பிறிதொரு சரி. எண்ணிப்பாருங்கள்” என்றார்.

“நான் சொன்னதைப்போல் பாரதவர்ஷத்திற்கு நலம் பயக்கும் பிறிதொன்று உண்டா? போர் இல்லாமலாகும். குலம் ஒன்றாகும். மக்கள் நலம்நாடும் இரு ஆட்சியாளர்கள் பாரதவர்ஷத்திற்கு அமைவார்கள். அவர்களை எதிர்க்க இங்கு எவருமில்லை. போர்களும் பூசல்களும் இன்றி ஒருகுடைக்கீழ் பாரதம் ஆளப்படும். போரொழிந்த நாட்டில் திருமகளும் கலைமகளும் குடியேறுவார்கள். வேள்வி செழிக்கும். நெறிகள் நிலைகொள்ளும். ஞானமும் தவமும் பெருகும். கலைகள் வளரும்” என்றார்.

தலையை அசைத்து “வேண்டாம்” என்றார் யுதிஷ்டிரர். “கேட்கக் கசக்கும்தான். ஆனால் எண்ணிப்பாருங்கள், நம் தலைமுறைகளுக்கு ஒளிமிக்க பாரதப் பெருநிலம் கைக்கு வரும். அதைவிட மூதாதையருக்கும் தெய்வங்களுக்கும் உகந்தது எது?” “நான் கிளம்புகிறேன். சொல்லொடுக்குக!” என்றார் யுதிஷ்டிரர். “ஏன் கசக்கிறது என் சொல்? அதை எண்ணிப்பாருங்கள். அரசியின் ஆணவம் புண்படும் இல்லையா?” யுதிஷ்டிரர் நாவெடுப்பதற்குள் “தன்மதிப்பு என தனக்குத் தோன்றுவது பிறருக்கு ஆணவம்” என்றார் சகுனி.

“நான் நெறியுடையவள் என்னும் நிறைவு. நான் வளையாதவள் என்னும் பெருமிதம். பிறர்முன் நிமிர்வு. பாண்டவரே, படைகொண்டுவந்த அரசன் முன் முடி அடிபட வணங்கி கப்பம் அளித்து நாடுகொள்ளும் அரசர் உண்டு. அவனுக்கு மகளை மணம்செய்து கொடுப்பதுண்டு. மகனை அவனிடம் அடிமையென அனுப்புவதுண்டு. அரசியை அவனுக்கு அளிக்கும் வழக்கமும் உண்டு. மக்கள் நலன் பொருட்டு, நாடுகாக்கும் பொருட்டு அனைத்தும் அவர்களுக்கு ஒப்பப்பட்டுள்ளது. அரசாள்வோர் தங்கள் தனிமதிப்பை, தன்னலனை, குடியை, மூதாதையரைக்கூட முதன்மைப்படுத்தாலாகாதென்பதே பராசர நெறிநூல். பயின்றிருப்பீர்கள், பாண்டவரே.”

யுதிஷ்டிரர் அறியாத கணத்தில் உளமுடைந்து விசும்பியழத் தொடங்கினார். உதடுகளை அழுத்தியபடி விழிகளை இறுக்கி தன்னை அடக்கி அடைத்த தொண்டையை மீட்டதும் பற்களைக் கடித்தபடி, கழுத்துத்தசைகள் இழுபட்டு அதிர “இந்த ஒவ்வொரு சொல்லுக்காகவும் உன் குலத்தை அழிப்பேன். உன் மைந்தர் களத்தில் சிதைந்து கிடப்பதைக்காண நானே செல்வேன். உன் குருதியை மிதித்துச்சென்று என் தேவியிடம் நான் பழிநீக்கினேன் என்பேன்” என்றார்.

சகுனியின் புன்னகையைக் கண்டு உடல் எரிய பற்றிய சினத்துடன் “இனி ஒரு சொல் இல்லை. தெய்வங்களே வந்தாலும் தணிதல் இல்லை. காந்தாரக் குடியின் முற்றழிவு அன்றி எதிலும் அமைவதில்லை. என் குடியே அழிந்தாலும் சரி. என் மைந்தர் இறந்தாலும் சரி. என் குருதியில் ஒரு துளி இப்புவியில் எஞ்சுவதுவரை காந்தாரத்தை அழிக்கவே அது நின்றிருக்கும். மாற்றில்லை, இதுவே என் வஞ்சம். அறிக தெய்வங்கள்!” என்றார்.

சகுனியின் விழிகள் அளிகொண்டவை என கனிந்தன. முகம் நெகிழ “இவ்வளவுதான், பாண்டவரே. என் நிலையை அறிய வந்தீர்கள் அல்லவா? நீங்கள் உங்கள் தேவிமேல் கொண்டுள்ள அதே பற்றை நான் நிலத்தின்மேல் கொண்டிருக்கிறேன். என் வஞ்சினமே என் அறம். அதை நெகிழ்த்துவது எனக்கு சாவுக்கு நிகர்” என்றார். யுதிஷ்டிரர் அவரை சிலகணங்கள் நோக்கிவிட்டு “ஆம், புரிந்துகொண்டேன்” என்றார். “குருதி” என்றார் சகுனி. “ஆம், குருதிமட்டும்” என்றபின் யுதிஷ்டிரர் தன் மேலாடையை அணிந்துகொண்டு வெளியே சென்றார்.

காவலன் அவரை நோக்கி வணங்கினான். பல ஆண்டுகள் முதுமைகொண்டவரைப்போல நடந்து படிகளில் இறங்கி முகப்புக்கூடத்தை அடைந்தார். சர்வதன் அவரைக் கண்டு எழுந்து நின்றான். அவனை தன்னை தொடரும்படி சொல்லிவிட்டு வெளியே சென்று தேரிலேறி அமர்ந்தார். அவன் ஏறும்போது தேர் சற்று உலைய உடல் அசைந்தபோது அது ஒரு கனவோ என்னும் எண்ணத்தை அடைந்தார்.

முந்தைய கட்டுரைதாசியும் பெண்ணும்
அடுத்த கட்டுரைஇமையம்நோக்கி…