அன்புள்ள ஜெ
மொழியாக்கம் குறித்து பேசுகையில் மகாத்மா காந்தியின் சத்திய சோதனையை தவிர்க்க முடியாது என கருதுகிறேன். நமமில பலர் சத்திய சோதனை தமிழாக்கத்தை சின்ன வயதில் படித்திருப்போம். மீண்டும மீண்டும் படிப்போரும் உண்டு. அந்த மீள் வாசிப்பு தமிழிலில்தான் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பலர். அதற்கு காரணம் வேங்கடராஜூலுவின் அற்புதமான மொழியாக்கம். காந்தியே நேரடியாக தமிழில் எழுதினாரோ என தோன்ற வைக்கும் மொழி பெயர்ப்பு.
ஆனாலும் அது எளிய தமிழில் இல்லை தனித்தமிழில் இல்லை என சொல்வோரும் உண்டு. ஆனால் அதிகமாக மெருகேற்றினால் அதில் காந்தி மறைந்து மொழிபெயர்ப்பாளரே காட்சியளிப்பார். சத்திய சோதனையில் மொழிபெயர்ப்பாளர் எங்குமே துருத்திககொண்டு தெரியாததே அதன் சிறப்பம்சம் என கருதுகிறேன்… மொழியாக்கம என்ற வகையில் சத்திய சோதனையை எப்படி மதிப்பிடுவீர்கள்.
அன்புடன்
பிச்சை
அன்புள்ள பிச்சைக்காரன்,
சில மொழியாக்கங்கள் ஒருவகையான ‘கல்ட் கிளாஸிக்’குகளாக ஆகிவிட்டிருக்கும். அப்படிப்பட்ட ஒன்று வேங்கடராஜூலுவின் சத்தியசோதனை. பைபிள் மொழியாக்கங்களுக்கு ஒரு விதி முன்னர் இருந்தது. அது ‘சந்தைமொழியில்’ மொழியாக்கம் செய்யப்படவேண்டும். ஏனென்றால் பிரசங்கி சந்தையில் முச்சந்தியில் நின்றுதான் பேசுகிறான். அவன் அதை மேற்கோள்காட்டவேண்டும். அந்த எளிய மக்கள் அதை புரிந்து உள்வாங்க வேண்டும். அவ்வாறுதான் தமிழ் பைபிள் மொழியாக்கமும் அமைந்தது. அன்றைய சந்தைமொழி அது.
ஆனால் மக்கள்மொழியே மாறிக்கொண்டிருக்கிறது. இன்று ரஸ்தா என்றா எவருக்கும் தெரியாது. செய்தி, கல்வி , கேளிக்கையூடகம் மூன்றும் மக்கள்மொழியை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆகவே மக்கள்மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மக்களிடையே வேரூன்றியதானாலும் ஒரு மொழியாக்கம் காலப்போக்கில் மக்களுக்கு அன்னியமானதாக ஆகிவிட வாய்ப்புண்டு. ஆகவே மறுமொழியாக்கம் செய்வதில் பிழையில்லை. ஆனால் மீண்டும் அது மக்கள்மொழியிலேயே அமையவேண்டும்.
சத்தியசோதனை மொழியாக்கம் செய்யப்பட்டபோது அது பள்ளிமாணவர்களிடையே சென்றுசேரவேண்டும் என்ற நோக்குடன் செய்யப்பட்டது. காந்தியின் மொழி மிக எளிமையானது,நேரடியானது. ஆகவே அம்மொழியாக்கம் எளிமையானதாக அமைந்தது. அன்றைய பள்ளிமொழியில் அமைந்த மொழியாக்கம் அது. அதை அன்றைய அறிஞர் பலர் நோக்கி மேலும் எளிமைப்படுத்தியிருக்கிறார்கள். நீளம் குறைவான சொற்றொடர்கள், எழுவாய்ப்பயனிலை சுழற்சியில்லாதபடி அமைதல் ஆகிய இருவிதிகளும் அதில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றன.
நான் அதை வாசிக்கையில் என் வயது 13. எட்டாம் வகுப்பு மாணவன். என்னை கண்ணீர்விடச்செய்த நூல் அது. இன்றும் என்னை நினைவிலிருந்து ஆற்றுப்படுத்துவது. இன்றைய இளம்வாசகனுக்கு அவ்வாறு அது சென்றுசேரவேண்டும். அப்படி ஒரு மறுமொழியாக்கம் வருமென்றால் நன்றே. அதற்காக வேங்கடராஜூலுவின் மொழியாக்கம் வேண்டாம் என்று பொருளில்லை. அது தமிழில் ஒரு கிளாஸிக். அதுவும் உடனிருக்கலாம்
ஜெ