கல்வியும் காதலும்

mada

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி காதல் மலரும்? கோயிலில் குளக்கரையில் அவர்கள் சந்தித்துக்கொள்ளலாம். கல்விச்சாலைகளில் சந்தித்துக் கொள்ளலாம். கண்ணும் கண்ணும் சந்திக்கும். ஓரிரு அன்புச்சொற்கள், கேலிகள். பின் காதல் தெரிவிக்கப்படும். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு பல நாவல்களில் காதல் மலர்வது ஆண் பெண்ணுக்கு எழுதப்படிக்கச் சொல்லிக்கொடுப்பதன் வழியாக! நூறாண்டுகளுக்கு முன்பு ஆண் தன் பெண்ணுக்கு எழுத்தறிவிப்பது என்பது பரமரகசியமாகச் செய்யவேண்டிய ஒன்றாக இருந்தது. வீட்டுப்பெரியவர்களுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ரகசியமான எந்தச்செயலும் கிளர்ச்சியூட்டக்கூடியதுதானே?

1877 –ல் கிறித்தவபோதகராகிய ராபர்ட் கால்டுவெல் திருநெல்வேலி மாவட்டம் இடையான்குடியில் பெண்களுக்காக ஒரு பள்ளியை உருவாக்கினார். மத வேறுபாடின்றி அனைவரும் பெண்களை அங்குக் கல்விக்கு அனுப்ப வேண்டும் என்று கோரினார். அதன் பொருட்டு அன்றிருந்த உயர் குடிகளின் வீடுகளுக்கு பெண்களை அனுப்பி அவர்கள் இல்லத்து பெண்களை கல்வி கற்க அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அவர்களில் சிலர் .   “கல்வி என்பது தாசிகளுக்கும் அரச குமாரிகளுக்கும் உரியது. எங்கள் வீட்டுப்பெண்கள் அரசகுமாரிகள் அல்ல, அப்படியென்றால் தாசிகள் என்று அர்த்தமா?” என்றார்கள் என்பது செவிச்செய்தி.

தமிழகத்தில் சங்ககாலம் முதல் பெண்கள் கல்வி கற்றிருந்ததற்கான தடயங்கள் உள்ளன. ஆனால் சிலப்பதிகார காலத்திற்குப் பிறகு பெண்கள் கல்வி கற்றார்களா என்பது சந்தேகத்துக்குரியது. மாதவி கல்வி கற்றிருக்கிறாள். தானாகவே செய்யுளை இயற்றி பாடுகிறாள். செய்யுளில் கடிதம் எழுதி மாடலமறையவனிடம் கொடுத்து கோவலனுக்கு அனுப்புகிறாள். அவள் மகள் மணிமேகலையும் முறையான கல்வி கற்றிருப்பதை மணிமேகலை காவியம் காட்டுகிறது.

ஆனால் கண்ணகிக்கு கல்வி கற்பிக்கப்பட்டதா என்பதைப்பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் இல்லை. அவள் திருமணத்திலிருந்துதான் காப்பியம் ஆரம்பிக்கிறது. அப்போது அவளுக்கு பன்னிரண்டு வயது. [ஈராறாண்டு அகவையாள் என்கிறது சிலப்பதிகாரம்] இளமைத் திருமணமும் கல்விமறுக்கப்படுவதும் ஒன்றுடன் ஒன்று சம்மந்தப்பட்டவை பெண்களுக்கு குடும்ப வேலைகளைக் கற்றுக் கொடுத்து உடனடியாக திருமணம் செய்து வைப்பது அக்கால வழக்கம். பன்னிரண்டு ஆண்டில் திருமணம் செய்து வைக்கப்படும் பெண் ஓரிரு ஆண்டுகளாவது படிக்கவும் எழுதவும் கற்றிருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அதன் பிறகு சோழர் காலத்திலும், நாயக்கர் காலத்திலும் தமிழகத்தில் சாதாரணப் பெண்கள் கல்வி கற்றிருந்தார்கள் என்று உறுதியாக தடயங்கள் இல்லை. திரும்பிப் பார்க்கையில் ஆண்டாள், ஔவையார், காரைக்கால் அம்மையார் போன்று சில கவிஞர்கள் நமக்குத் தென்படுகிறார்கள். ஆனால் இவர்களிலேயே ஔவையார் பாணர் குலத்தைச் சார்ந்தவர். அவர்கள் விறலியராக ஆடிப்பாடுபவர்கள். அதாவது தாசிகள். ஆண்டாள் ஆலயப்பணிசெய்த உயர்குடியினர். காரைக்காலம்மையார் வணிகக்குடியினர்.

பொதுவாக பெண்களுக்கு கல்வி என்பது அவர்களை ஒழுக்கம் இல்லாமலாக்கும் என்ற எண்ணம் தமிழகத்தில் இருந்திருக்கலாம். கல்விச் சாலைக்கு பெண்கள் சென்று பயில்வதற்கான அமைப்புகள் தமிழகத்தில் இருந்தமைக்கான ஆதாரங்கள் அனேகமாக இல்லை. உயர்குடிப்பிறந்த பெண்களுக்கு வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து கல்வி கற்பிக்கப்பட்டிருக்கலாம். பிறருக்கு கல்வி மறுக்கப்பட்டிருக்கிறதென்றே கொள்ளவேண்டும். முதல் முறையாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்று ஒரு கல்விச் சாலையில் அமர்ந்து கல்வி கற்பதற்கான அமைப்பை இங்கு தியோசஃபிக்கல் சொசைட்டி மற்றும் கிறித்தவ மிஷனரிகள்  போன்ற ஐரோப்பியர்தான் உருவாக்கினர்..அனைவருக்குமுரிய பொதுக்கல்வி பெண்களுக்கு அப்படித்தான் அளிக்கப்பட்டது.அவ்வாறு பதினெட்டாம் நூற்றாண்டில் உருவான கல்விநிலையங்களில் ஒன்றுதான் ராபர்ட் கால்டுவெல்லின் கல்வி நிறுவனம்.

[அதற்கும் சில ஆண்டுகளுக்கும் முன்னரே தியாசஃபிகல் சொசைட்டி சென்னையில் ஆரம்பித்த பெண்களுக்கான பள்ளிகளில் சென்னையில் அனைத்துச் சாதிகளையும் சேர்ந்த பெண்கள் சென்று கல்வி கற்க ஆரம்பித்தனர். தமிழகத்தில் தலித் கல்வியை தொடங்கிவைத்த அமைப்பு தியோசபிக்கல் சொசைட்டிதான். அவர்கள் இன்றைய தமிழகம் கர்நாடகம் ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தலித்துக்களுக்கான இரவுப்பள்ளிக்கூடங்களைத் தொடங்கினர். கர்னல் ஆல்காட் அதற்கு பெருமுயற்சி எடுத்து கணிசமான வெற்றியையும் அடைந்தார்.தலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்]

ஆ.மாதவய்யா ராபர்ட் கால்டுவெல்லின் சமகாலத்தவர் தமிழின் முதல் மூன்று நாவல்களில் ஒன்றாகிய பத்மாவதி சரித்திரம் அவரால் எழுதப்பட்டது. முழுக்க முழுக்க பெண் கல்வி சார்ந்து எழுதப்பட்ட ஒரு படைப்பு என்று பத்மாவதி சரித்திரத்தைச் சொல்லலாம். அந்நாவலின் கதாநாயகனாகிய நாராயணன் தான் தன் இளமைக்காதலியாகிய பத்மாவதிக்கு மிகமிக ரகசியமாக, மிக ‘ரொமாண்டிக்’ ஆக எழுத்தறிவிக்கிறான்

அன்றிருந்த பிராமண சமூகத்தின் வாழ்க்கை மாதவையாவின் நாவல்களுக்குப் பின்புலமாக உள்ளது.நெடுங்காலமாக கற்றலையும் கற்பித்தலையும் தங்கள் குலத்தொழிலாகக் கொண்டு இந்திய சமுதாயத்தின் அறிவார்ந்த தலைமையாக அமர்ந்திருந்த பிராமண ஜாதியின் வீழ்ச்சியின் சித்திரத்தை மிக வலுவாக உருவாக்குகிறார் மாதவய்யா.  பத்மாவதி சரித்திரத்தைவிட இச்சித்திரம் மிக மூர்க்கமாக அவருடைய முத்து மீனாட்சி என்ற நாவலில் காட்டப்பட்டிருக்கிறது.

பலகோடிப்பேர் இறந்த இருபெரும் பஞ்சங்கள் இந்தியாவை சூறையாடிய காலம் அது. ஆகவே ஒட்டுமொத்த சமுதாயத்தை அண்டிப்பிழைக்க வேண்டிய நிலையிலிருந்த பிராமணர்கள் பொருளியல் வீழ்ச்சியில் இருந்தனர். மன்னர்களுடனான உறவு, வைதிகத் தகுதி ஆகியவற்றால் சொந்தமாக நிலபுலன் வைத்திருந்த பிராமணர்களுக்கும் பிறருக்குமிடையே மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. புரோகிதத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் கொடிய வறுமையில் இருந்தார்கள். அக்ரஹாரங்களில் ஒரு செல்வந்தரும் அவரை நயந்து பிழைக்கும் பஞ்சைப் பராரிகளுமாக அன்றைய வாழ்க்கை சென்றது.

அத்துடன் பிராமணர்களில் ஒரு சாரார் தங்கள் கல்வி கற்கும் திறனை கோணலான வழிகளில் பயன்படுத்தினர். ஆரம்பகாலத் தமிழ் நாவல்கள் அனைத்திலுமே பொய்ப்பத்திரங்கள் தயார் செய்வது, பொய் வழக்கு ஜோடிப்பது, நீதிமன்றங்களில் பொய்யான தகவல்களை அளித்து மோசடிகள் செய்வது போன்றவற்றில் தேர்ந்த பிராமணர்களைப்பற்றிய விரிவான சித்திரங்கள் வருகின்றன. அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்த  தி.ஜானகிராமனின் கதைகளில் கூட அத்தகைய கதாபாத்திரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

ஏனெனில் அந்த காலத்தில் மற்ற சாதியினரில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி அறிவில்லை. ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளும் திறன் மிகக்குறைவு. அன்றுவரை நிலஉடைமை ஆதாரங்களும் சரி, குற்றவியல் வழக்குகளும் சரி, அந்தந்த கிராம சபைகளுக்குள் பேசி முடிக்கப்பட்டன. மேலதிகமான ஏதாவது மனக்குறைகள் இருந்தால் சிற்றரசர்களோ பெருநிலக்கிழார்களோ கேட்டு அதை முடித்து வைத்தார்கள். பிரிட்டிஷ் அரசு உருவானபோது பழைய நிலப்பிரபுக்களின் அதிகாரம் ரத்து செய்யப்பட்டு சொத்துச்சிக்கல்கள், குற்றவிசாரணை ஆகிய அனைத்துமே அரசு உருவாக்கிய நீதிமன்றங்களால் விசாரிக்கப்படும் நிலைமை வந்தது.

இந்நீதிமன்றங்கள்செயல்படும் முறையே அன்றிருந்த இந்திய சமுதாயத்திற்குப் புரியவில்லை. ஒரு குற்றத்தை நீதிமன்றத்தில் ஒட்டியும் வெட்டியும் விவாதித்து சாட்சிகளின் அடிப்படையில் தீர்ப்பளிப்பதென்பது இந்திய வழிமுறையே அல்ல. தீர்ப்பளிப்பவரின் மனசாட்சியை நம்பிதான் அதுவரைக்கும் நீதி வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. தீர்ப்பளிக்கும் நீதிபதிக்கு உண்மை தெரிந்தாலும் கூட புறவயமான சாட்சிகளில்லையேல் தண்டனை அளிக்க முடியாதென்பதும், அதே சமயம் திட்டவட்டமான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் இருந்தால் அவை பொய்சாட்சிகள் என்றாலும்கூட, குற்றஞ்சாட்டப்பட்டவர் நிரபராதியாக இருந்தாலும் கூட, தண்டிக்கப்பட முடியுமென்பதும் அன்று பெரும் திகைப்புடன் பார்க்கப்பட்டது.

அச்சூழலில் அன்றைய நீதிமன்ற நடைமுறைகளை ஓரளவேனும் தெரிந்து கொண்டு அவற்றை திறம்பட கையாளத்தெரிந்த ஒருவர் அசாதாரணமான அதிகாரங்கொண்டவராக ஆகிறார். பிறர் அவரை அஞ்சுவார்கள். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உருவான எண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து வழக்கறிஞர்கள் இந்திய சமுதாயத்தில் மிகப்பெரிய செல்வாக்கை செலுத்துபவர்களாகவும் மாபெரும் செல்வந்தர்களாகவும் உருவாகி வந்தார்கள். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவருமே வழக்கறிஞர்கள் தான். சேலம் விஜயராகவாச்சாரியார், ராஜாஜி, சத்யமூர்த்தி, ஜஸ்டிஸ் வி.சுப்ரமணிய ஐயர் போன்ற பலரும் வழக்கறிஞர்களே மகாராஜாக்களுக்கு நிகரான வருமானத்துடன் ஆடம்பரத்தில் அன்று வழக்கறிஞர்கள் வாழ்ந்தார்கள்.

நீதிமன்றத்துடன் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே பணம் ஈட்டினர். அதற்கும் வெளியே பிரிட்டிஷ் நீதிமன்றங்களை ஏமாற்றும் கலையறிந்தவர்கள் கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். நிலத்தை கைவசம் வைத்திருப்பவர்களுக்கு தெரியாமலே அது வெவ்வேறு நபர்களுக்கு பட்டா போட்டு அளிக்கப்பட்டது. அதே போன்று குற்ற வழக்குகளில் பொய்சாட்சிகள் ஜோடிப்பதும், பொய் ஆதாரங்கள் உருவாக்குவதும் ஒரு குடிசைத்தொழில் போல பெருகியது. ஆவணங்களை பரிசீலிக்க வெள்ளைய நீதிபதிகளுக்கு போதிய பழக்கம் இருக்கவில்லை. அவர்கள் பொதுவாகப் பிராமண சாதியினரை நம்பினர். ஒரு பிராமணர் மேல் ஐயம் வந்தால் இன்னொரு பிராமணரையே அதை பரிசீலிக்கும்படி கோரினர்.

இது நீதிமன்றமோசடி, நிதிமோசடிகளில் ஈடுபடும் பிராமணர்களை உருவாக்கியது. அவர்களை பிறபிராமணர்கள் அருவருத்து விலக்கினர். ஒருவகையில் வழக்கறிஞர்கள் அனைவர்மீதும் அன்றைய பிராமண சமூகம் ஐயமும் கசப்பும் கொண்டிருந்தது இந்த ஒவ்வாமையை ஜானகிராமனின் பல கதைகளில் காணலாம். க.நா.சுவின் கதைகளிலும். அவர் தன் மாமனார் சாயலில் அமைத்த கதாபாத்திரத்தைக்கூட அப்படித்தான் படைத்திருக்கிறார் [சர்மாவின் உயில்] அத்தனை சாதியினருமே கல்வியறிவு பெறத் தொடங்கி அதன்மூலமே இந்த இருண்ட காலகட்டம் முடிவுக்கு வந்தது.

பத்மாவதி சரித்திரத்தின் மிக முக்கியமான அம்சமென்பது அது இந்த குறிப்பிட்ட ‘இருண்ட காலகட்டத்தை’ மிக அற்புதமாக சொல்கிறது என்பதுதான்.  ஏனெனில் மாதவய்யா திருநெல்வேலி நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர். நீதிமன்றத்தில் நிகழும் ஊழல்களை பத்மாவதி சரித்திரம் கூர்மையாகச் சொல்கிறது. அக்காலத்திலேயே கொலைக்குற்றவாளியை விட்டுவிடுவதற்கு ஐயாயிரம் ரூபாய் வரைக்கும் லஞ்சம் வாங்கியிருக்கிறார்கள் இந்திய நீதிபதிகள். இன்றைய மதிப்பிற்கு அது ஐம்பது லட்சத்திற்கு நிகர்.

நீதிமன்றத்தில் என்னென்ன வேடிக்கைகள் நிகழுமென்பதையும் மாதவய்யா இந்நாவலில் எழுதியிருக்கிறார். புரோகிதர் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வருகிறார். ‘அவருடைய உடையில் நூலைவிட தையல் மிகுதி’ என்கிறார் மாதவையா.  அவர் எல்லாருக்கும் வேண்டியவராதலால் அனைவரையும் நோக்கி மாறிமாறிக் கும்பிட்டபடியும் சிரித்தபடியும் கூண்டிலேறுகிறார். நீதிபதி “ஓய் உமக்கென்ன தெரியும்?” என்கிறார். “எனக்கு புரோகிதவேலை கரதலப்பாடமாக தெரியும். வியாகரணமும் கொஞ்சம் தெரியும்” என்கிறார் புரோகிதர். “ஓய் உமது லட்சணம் எனக்குத்தெரியும். இந்த வழக்கில் உமக்கென்ன தெரியும் என்று சொல்லும்” என்று நீதிபதி அதட்டுகிறார். “நான் எல்லாருக்கும் வேண்டியவன். ஆகவே சண்டைநடந்தபோது நான் காதுகளை இறுகப்பொத்தி கண்களையும் மூடிக்கொண்டேன்” என்கிறார் புரோகிதர். நீதிமன்றமே சிரிக்கிறது

பகடி ஒருபுறமிருக்க இது காட்டும் சமூகச் சித்திரம் அன்றைய பிராமணர்களின் சமூகச்சமநிலை தலைகீழாகிவிட்டது என்பதே. புரோகிதர்கள் மதிப்பிழந்து கேலிக்குரியவர்களாக ஆக, நீதிமன்றம் அரசு போன்றவற்றினூடாக பணமும் அதிகாரமும் பெற்றவர்கள் மேலே அமர்ந்து கீழே நோக்கிச் சிரிக்கிறார்கள். பத்மாவதி சரித்திரத்தின் கதாநாயகனாகிய நாராயணனின் தந்தை சீதாபதி ஐயர் பொய் சாட்சிகள் புனைவதிலும் பொய்ஆதாரங்கள் சமைப்பதிலும் நிபுணராக கிராமத்தில் அனைவராலும் அஞ்சப்படுபவராக வாழ்ந்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு தவறான காலடி வைப்பு வழியாக அகப்பட்டுக்கொண்டு சிறை செல்கிறார். [இந்த விவகாரத்தில் அன்றே  பிராமணரல்லா  உயர்சாதியினருக்கு இருந்த பிராமண வெறுப்பும், அவர்களுக்கிடையே  ஊழலிலும் சுரண்டலிலும்  இருந்த போட்டியும் காட்டப்படுகிறது. சீதாபதி அய்யர் அதில்தான் சிக்கிக்கொள்கிறார்]

அதன்பின் நாராயணனின் வாழ்க்கையை சித்தரித்து முன்னால் செல்கிறது நாவல். நாராயணன் வாழ்க்கையில் இரண்டு பெண்களை சந்திக்கிறான். ஒன்று அவனுடைய முறைமாமனின் பெண்ணாகிய பத்மாவதி எனும் பத்மி. இன்னொரு பெண் அவன் நண்பர் கோபாலனின் தமக்கையாகிய சாவித்ரி. இருவருக்குமே கல்வியறிவில்லை. நாராயணன் இருவருக்குமே கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியனாக இருக்கிறான்.  அதுதான் அவன் பெண்களை அணுகும் வழி

நாராயணன் ஏழையானதனால் சிறுவயது முதலே அவனைக் காதலிக்கும் பத்மியை இன்னொருவருக்குக் கட்டிவைக்கிறார்கள். ஆனால் திருமணம் நிகழாமலேயே விதவையாகிவிட்ட பத்மியை நாராயணன் மறுமணம் புரிகிறான். அவளுக்கு அவன் அளிக்கும் கல்விதான் தன் விதவைவாழ்க்கையை உதறி அவனை மணக்கவும் அதற்காக அனைவரையும் எதிர்க்கவும் பத்மிக்கு ஆற்றலை அளிக்கிறது.

நண்பன் கோபாலன் வீட்டுக்குச் செல்லும் நாராயணன் அவன் தமக்கை சாவித்ரியின் கூரிய அறிவையும் மொழித்தூய்மையையும் கண்டு அவள் கல்வி கற்றவள் என்று நினைக்கிறான்.  “இங்கு எங்கு பள்ளிக்கூடமிருக்கிறது?” என்று கேட்கிறான். கோபானன் “இங்கு பள்ளிக்கூடம் இல்லை” என்று சொல்லும் போது நாராயணன் “இவள் எப்படி கற்றாள்?” என்று கேட்கிறான். கோபாலன் உள்ளே அழைத்துச் சென்று சமையல்கட்டைக் காட்டி  “இதுதான் இவள் படித்த பள்ளிக்கூடம். இந்தப்பானைகள் தான் இவள் படித்த புத்தகங்கள். இந்த சமையல் தான் இவள் இயற்றிய காவியம்” என்கிறான்.

நாராயணன் அதிர்ச்சி அடைகிறான். சாவித்ரியை கல்வி கற்கும்படி அவன் தூண்டுகிறான். அந்தக் கல்வி அவளுக்கு புதிய பார்வையைக் கொண்டு வருகிறது. வாழ்க்கையை நேர் நின்று பார்க்கவும் கொந்தளிப்புகள் இல்லாமல் அணுகவும் தேவையான சமநிலையை அளிக்கிறது. சென்ற நூற்றாண்டில் கல்வி என்பது தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருப்பது மட்டும்தான். அதுவே பெண்களின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்கியது என்பதை இந்நாவலில் காண முடிகிறது.

பெண் அதற்கு முன்பு வெறும் பொருளாக இருந்தாள். அன்னியப்படையெடுப்புகள் வழியாக முந்நூறாண்டுகாலம் தமிழகத்தில் நிலவிய அரசின்மைச்சூழல் காரணமாக குழந்தைத் திருமணம் புகழ் பெற்றது. என்ன ஏதென்று அறிவதற்கு முன் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட்டாள். காமத்தை அறிவதற்கு முன்பே கருவுற்று குழந்தைக்கு அன்னையானாள். வாழ்நாள் முழுக்க சமையலறையில் வாழ்ந்தாள். வறுமை நிறைந்த குடும்பத்தில் பெண்களை இரண்டாந்தாரமாகவும் மூன்றாந்தாரமாகவும் முதியவர்களுக்கு கொடுப்பது மிக சாதாரணமாக இருந்தது.

பத்மாவதி சரித்திரத்திலேயே சேஷய்யர் தன் மகளுக்கும் குறைவான வயதுடைய பெண்ணை திருமணம் செய்து அழைத்து வரும் சித்திரம் உள்ளது அந்தப் பெண்ணின் பரிதவிப்பும் கண்ணீரும் இயல்பாக சொல்லப்பட்டிருக்கிறது. அவளை அவள் குடும்பம் கூறுபோட்டு விலைகூவி விற்கிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று மாதவய்யாவின் முத்துமீனாட்சி நாவலில் வறுமை நிலையிலிருந்த குடும்பம் ஒரு முதியவருக்கு பெண்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டு பணத்தேவைக்காக உடனடியாக அவளுக்குச் சாந்தி முகூர்த்தம் வைக்கிறது. அவள் வயதுக்கு வரவில்லை. இருந்தாலும் அவளுக்கு சாந்திமுகூர்த்தம் வைக்கிறார்கள்.

இத்தகைய கல்வியறிவின்மை மூடத்தனம் திகழும் சித்திரத்திலிருந்து இருட்டுக்குள் ஒரு மெல்லிய சுடர் போல கல்வி எழுந்து வருவதை பத்மாவதி சரித்திரத்தில் காண்கிறோம்.  இளம் குழந்தையாகிய பத்மாவதிக்குச் சிறுவனாகிய நாராயனன் எழுத்து சொல்லிக்கொடுக்கிறான். மொழி என்னும் அற்புதமே அவளை அவன்மேல் காதல்கொள்ளச் செய்கிறது. அவன் தோளைப்பற்றிக் கொண்டு “நான் உனக்கே வாழ்க்கைப்படுகிறேன். வேறுயாருக்கும் வாழ்க்கைப்படமாட்டேன் நீ என்னையே கல்யாணம் செய்து கொள்வேன் என்று ஆணையிடு.  இல்லாவிட்டால் நான் உன்னை கிள்ளுவேன். பாடமும் சொல்லமாட்டேன்” என்று கிள்ளத் தொடங்குகிறாள்.

நாராயணன் ”அப்பா அப்பா விட்டுவிடு. உன்னையே கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்கிறான். கையைநீட்டி  “ஆணையிடு” என்கிறாள் பத்மி ”ஆணைப்படிக்கு! ஆணைப்படிக்கு! வலிக்கிறது விட்டுவிடு” என்கிறான் நாராயணன். அவள் சிரிக்கிறாள்.

இந்நாவலில் பத்மாவதி நாராயணனுக்கு எழுதிய முதல் கடிதம் ஒன்று இருக்கிறது. நாராயணன் கற்றுக் கொடுத்த அடிப்படை எழுத்துக்களை வைத்துக் கொண்டு அவள் எழுதியிருக்கிறாள். ‘என்னேட் அதான் நாணு உக்கு, நான் நமுஷ்காரம் பண்ரேன். இங்கே சவுக்யமா இக்கேன். நீயும் ஆத்தையும் சவுகியமா இக்கேளா?” என்று ஆரம்பிக்கும் அந்த கடிதம் வாசிக்கையிலேயே புன்னகை வரவழைப்பது. ஆனால் நாவலின் இறுதியில் ஆங்கில நூல்களைப்படித்து அவற்றின் பொருளைப்பற்றி தனது கணவரிடம் உரையாடும் பத்மாவதியைப்பார்க்கிறோம். தன் மகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் பத்மாவதி மாதவய்யாவின் கனவுக் கதாபாத்திரம்.

ஆச்சரியமென்னவென்றால் ஏறத்தாழ இதே கதையே இதே உணர்வுகளுடன் மலையாளத்தின் முதல் நாவலாக கருதப்படும் இந்துலேகா. [ஓ.சந்துமேனன்] இளமைத்திருமணம், சாதிச்சழக்கு, கிராமத்து வம்புகளிலிருந்து கல்வியின் வழியாக மேலெழும் இளம்பெண்ணான இந்துலேகாவின் கதை. இந்துலேகாவுக்கும் மாதவனுக்கும் காதல் மலர்வதே அவன் அவளுக்கு கல்வி கற்றுகொடுப்பதன் வழியாகத்தான்.

அக்காலகட்டத்துச் சுயசரிதைகள் பலவற்றில் ஆண்கள் தங்கள் மனைவியருக்கு எழுத்தறிவித்ததன் சித்திரங்கள் உள்ளன. குறிப்பாக காந்தியின் சுயசரிதை. எழுத்தறிந்து கொண்டதன் வழியாகவே ஒரு வகையான அகவிடுதலையை அடைந்த பெண்ணின் வாழ்வை அழகியநாயகி அம்மாள் எழுதிய கவலை என்னும் தன்வரலாறு காட்டுகிறது [எழுத்தாளர் பொன்னீலனின் தாயார் இவர். தமிழில் எழுதப்பட்ட முக்கியமான தன்வரலாறுகளில் ஒன்று இது]

அன்றைய பெண்ணுக்கு விடுதலைக்கான வாயில் என்பது தகுதியான ஆண் ஒருவன் கிடைப்பதே. அன்றைய புனைவுகளை வைத்துப்பார்த்தால் அழகிய பெண்களுக்கே இந்த வாய்ப்பிருக்கிறது. அவர்களுக்கே காதல் கிடைக்கிறது, உபரியாகக் கல்வியும்.கல்வி தடைசெய்யப்பட்டிருந்தது. காதலும் தடைசெய்யப்பட்டிருந்தது. ஆகவே இரண்டும் ஒரு கற்பனாவாத அழகுடன் ஒரிடத்தில் சந்தித்துக்கொண்டன போலும்.

 அ.மாதவையா ஒரு குறிப்பு
அ மாதவையா விக்கி 
========================================================
1. இலட்சியக்காதலியின் வருகை
ஒரு சிறு வெளி

முந்தைய கட்டுரைசோர்பா கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-32