சோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை
அன்புநிறை ஜெ,
சோர்பா எனும் கிரேக்கன் நாவல் குறித்த பதிவை வாசித்தேன். தெளிவான நடையில் ஆழ்ந்த அவதானிப்புகளை எழுதியிருக்கிறார்கள். தத்துவம், வரலாறு, சமூகவியல், மதம் என விரியும் பார்வையில் நாவலின் விரிவும் தெரிகிறது, அருண்மொழி நங்கை அவர்களுடைய பரந்துபட்ட வாசிப்பும் தெரிகிறது. உபநிடத வரிகள் மற்றும் சார்வாக தரிசனத்தின் ஒளியில் இந்த கிரேக்க நாவல் வாசிக்கப்படும் போது கிடைக்கும் திறப்பு இலக்கியம் எப்போதும் மனித குலம் முழுமைக்குமான தேடலுக்கானது என்பதை மீண்டும் சொல்கிறது.
//முதலில் பல்கேரியன், துருக்கியன் என்றும் ஒரு கட்டத்தில் நல்ல செயல் புரிபவன் என்றும் தீயோன் என்றும் மனிதர்களை பார்த்தேன். இப்போது என் மனதில் பிரிவினையே இல்லை.//
இதைச் சொல்லும்போது சோர்பா இருமையைக் கடந்து அத்வைத தரிசனத்துக்கு அருகில் வந்துவிடுகிறான் அல்லவா?
அவநம்பிக்கையும் அலைக்கழிப்புமே கலைஞனின் உபகரணங்கள். ஆம், அவற்றிலிருந்தும், கலையிலிருந்தும் கூட விட்டுவிடுதலையடைதலே ஆன்மாவின் இலக்கு. அருமையான எழுத்து, நாவலை வாசித்துவிட்டு மீண்டும் எழுதுகிறேன்.
மிக்க அன்புடன்,
சுபா
அன்புள்ள ஜெ
சோர்பா என்னும் கிரேக்கன் கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. நூல்களைப்பற்றி எழுதும்போது இங்கே இருக்கும் இரண்டு வழக்கங்கள் அதன் கதைச்சுருக்கத்தை எழுதுவது. இன்னொன்று அதைப்பற்றி மேலைநாட்டு விமர்சனங்களில் சொல்லப்பட்டிருப்பதைச் சொல்வது. அவ்வாறன்றி கட்டுரை ஆசிரியர் தனக்குத் தோன்றியதை, தானே உணர்ந்ததை எழுதமுயன்றிருப்பது சிறப்பானது. அதுவும் இந்தியமரபுப் பின்னணியில் சோர்பாவை ஒரு சார்வாகன் என வகுத்துக்கொண்டது முக்கியமானது
சோர்பா ஹெடோனிஸ்ட் ஆக இருந்தாலும் அதை அவன் கொள்கையாக முன்வைக்கவில்லை. அது அவன் வாழ்க்கையின் ஒரு காலகட்டம் மட்டும்தான்.
மகாதேவன்
ஜெ
சோர்பா தி கிரீக் படத்தில் ஆண்டனி குவின் ஆடும் கடைசி நடனம் புகழ்பெற்றது. கதைசொல்லியும் சோர்பாவும் சேர்ந்து ஆடும் அந்த நடனம் இருவரும் ஒருவரை ஒருவர் நிறைப்பவர்கள் என்ற கட்டுரையாசிரியரின் கூற்றுக்கு சமானமாக உள்ளது
ஆர்.ரமேஷ்