சிறுவெளி -கடிதங்கள்

kamalampal

ஒரு சிறு வெளி

 

அன்புள்ள ஜெ.,

 

கமலாம்பாள் சரித்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் அப்பளம் உடைத்தல், பூ எறிதல் போன்ற விளையாட்டுகள் என் கல்யாணத்திலும் நடந்தன.. ஆனால் அதில் குறிப்பிடட பாலியல் சீண்டல்கள் மட்டும் மிகக் குறைவு.. நீங்கள் சொன்ன மாதிரி அவ்வளவு இறுக்கமாக மாறி விடடோமோ என்ன..

 

அனால் ஒருபுறத்தில் இளைய தலைமுறை மிகவேகமாக எல்லைகளை கடப்பதை கண் கூடாக கண்டுகொண்டிருக்கிறேன்.. பெண்கள் வெளிப்படையாக ஒயின் பரிமாறிக் கொள்கிறார்கள்.. உடையின் எல்லைகள் மாறுகின்றன.. ஆண் பெண் உறவு வேறு பரிணாமத்தில் வளர்ந்திருக்கிறது.. காதல் சகஜமாகிக் கொண்டிருக்கிறது.. இது என் நகர் சார்ந்த, மேல் மத்திய தர வர்க்கத்தில் வெளிப்படையாக நடக்கும் மாற்றம்.. ஜியோவின் புண்ணியத்தில் இந்த மாற்றத்தின் வீச்சு மிக அதிக அளவில், மிகப் பரந்த அளவில் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படும் என்று தான் தோன்றுகிறது..

 

 

நன்றி

ரத்தன்

 

அன்புள்ள ரதன்

 

காதல் களியாட்டு எப்போதுமே உண்டு. வசந்த உற்சவங்கள், ஹோலி, மஞ்சள்தண்ணி ஊற்றுதல். ஆனால் அரசியல்மயமாக்கப்பட்ட ‘கலாச்சாரக் காவலர்கள்’ என்னும் மனநிலை இப்போது வலுப்பெற்று வருகிறது. அப்படி மனிதகுலம் பின்னுக்குச் செல்லுமா என்று கேட்டீர்கள் என்றால் ஈரான், துருக்கி, எகிப்து நாடுகளைச் சுட்டிக்காட்டலாம். மிக மிக தாராளவாத நாடுகளாக, பெண்கள் சுதந்திரமாக வாழ்ந்தவையாக அவை இருந்தன. இன்று கலாச்சார பழமைவாதத்தால் கரும்புகை என மூடப்பட்டுள்ளன.

 

ஜெ

 

அன்புள்ள ஜெ,

 

கமலாம்பாள் சரித்திரம் நாவலைப்பற்றி தனியாக எழுதப்பட்ட கட்டுரைகளைப் படித்ததில்லை. அதன் ‘கருத்தை’ பற்றியே பெரும்பாலும் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆகவே அது ஒரு சாதாரணமான பிரச்சார நாவல் என்ற எண்ணமே எழுந்தது. பலமுறை எங்கள் பாடத்திட்டத்தில் இருந்தாலும் அதைப் படித்ததில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிடுவதைப் பார்க்கையில் படித்தாகவேண்டும், சுவாரசியமான நாவல் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

 

செல்வராசன்

 

அன்புள்ள செல்வராசன்

 

பிற்பகுதியில் சம்பிரதாயமான தத்துவ விசாரமும் செயற்கையான திருப்பங்களும் இருந்தாலும் கமலாம்பாள் சரித்திரம் வாசிப்புக்குரிய படைப்பே. ஆடுசாப்பட்டி அம்மையப்ப பிள்ளைதான் பின்னாளில் புதுமைப்பித்தன் முதல் நாஞ்சில்நாடன் வரை பலர் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கெல்லாம் முன்னோடி

 

ஜெ

 

கமலாம்பாள் சரித்திரம் பற்றி சில கட்டுரைகள்

கமலாம்பாள் சரித்திரம் விக்கி

கமலாம்பாள் சரித்திரம் ஜடாயு

கமலாம்பாள் சரித்திரம் சுப்ரமணியம் ரமேஷ்

 

================================================

 

1. இலட்சியக்காதலியின் வருகை

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-31
அடுத்த கட்டுரைசோர்பா கடிதங்கள்