நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் யுதிஷ்டிரர் கேட்டார் “யாதவனே, நான் உன்னை காணவேண்டுமென எண்ணிய தருணத்தை சொல்கிறேன். விழியிலாதாயிற்றெனச் செறிந்த இருளை நோக்கி நின்றபோது என்னை எண்ணி வியந்தும் மருகியும் இகழ்ந்தும் அலைபாய்ந்தேன். ஒரு தருணத்தில் தோன்றியது நான் இந்திரன் அல்லவா என்று. அக்கணத்தில் ஏற்பட்ட நடுக்கில் நான் அவனென்றே ஆனேன். அவனென நின்று அனைத்தையும் நோக்கி மீண்டேன்.”
“விஸ்வஃபுக் ஏன் மேலும் விழைவுகொண்டான்? பிரம்மத்தின் பேருருவை கண்ட தேவர்க்கிறைவன். முடிவிலிகளாலான முடிவிலி என்று நூல்கள் சொல்வதை, அறிதல்களுக்கு அப்பாற்பட்ட அறிதல் என்று முனிவர் நவில்வதை அறிந்தவன். அவனுக்கு ஏன் விழைவெழுந்தது? ஏன் அவன் கணமொழியாமல் ஆட்டுவிக்கப்பட்டான்?” என்றார் யுதிஷ்டிரர்.
“அவன் அரசன் என்பதனால்” என்று இளைய யாதவர் மறுமொழி சொன்னார். “அரசன் பெருவிழைவால் ஆற்றல் கொள்பவன். இந்திரன் அரசர்களுக்கு முன்வடிவான அரசன். கணம் என தோன்றி விண் முழுதளக்கும் மின்படை கொண்டவன். அரசன் கற்பதும் முழுமைகொள்வதும் விழைவின் பாதையிலேயே. அவர்களுக்கான வழியை அரசமெய்மை என்றனர் நூலோர்.”
யுதிஷ்டிரர் தன்னுள் எழுந்த வினாக்களால் மேலும் மேலுமென சீற்றம் கொண்டபடியே சென்றார். “எளிய விடைகளுக்காக நான் இங்கே வரவில்லை, யாதவனே. நான் யுதிஷ்டிரனல்ல, நான் பெரும்பசி கொண்ட விஸ்வஃபுக். இந்திரனென்றமைந்து நான் கேட்பதற்கு மறுமொழி சொல்க!” என்றார்.
மூன்று முதற்தெய்வங்களும் எண்ணியறிய முடியாத அதன் எல்லையின்மையை நான் அறிவேன். ஒரு முழு பால்வழியே துகளென நொறுங்கியழிந்தாலும் அதற்கு கணத்திலும் கணத்திலும் கணமென்றமையும் துளியினும் துளியினும் துளியான நிகழ்வல்ல அது. அதன் விரிவில் நிகழ்வது நிகழாமைக்கு சற்றும் மாறுபட்டதே அல்ல.
அது இரக்கமற்றது. தன் அலகிலா பேருருப் பெருக்கினாலேயே நோக்கும் விழியற்றது. கேட்கும் செவியற்றது. அறியும் உளமற்றது. ஆனால் சிற்றெறும்புக் கூட்டுக்குள்ளே ஆற்றலின் நெறி ஒன்று இலங்குகிறது. பெருங்கரி மந்தையையும் அன்னையே ஆள்கிறது. நெறியிலாத ஒரு துளி இடத்தையும் எங்கும் காணமுடிவதில்லை. நீரில் கலப்பதில்லை எண்ணை. அனலில் எரிவதில்லை கல். முறை வகுக்கப்படாத எதுவுமில்லை இங்கே.
அவை எவருடைய ஆணை? எவருடைய விழைவை சூடியிருக்கின்றன இங்கெனத் திரண்டிருக்கும் இவையனைத்தும்? வினாக்களென நம்முள் எழுவன அனைத்தும் இங்கிருக்கும் நெறிமேல் நம் சித்தம் சென்றுமுட்டுவதனால் எழுவன. விடையென அமையவேண்டிய அது அப்பாலென பேருருக்கொண்டு நின்று அஞ்ச வைக்கிறது. சித்தம் பேதலிக்கச் செய்து விலகிச் செல்கிறது.
இதோ போர்ச்சூழல் இறுகி விம்முகிறது. பல லட்சம் மக்கள் செத்துக் குவியவிருக்கிறார்கள். அவ்விருளில் நின்றபோது என் நெஞ்சு அச்சம்கொண்டு உறைய ஒருகணத்தில் அனைத்தையும் உணர்ந்தேன். தலைமுறை தலைமுறையென பிறந்து பிறந்து பெருகிப்பெருகி இப்போர் நோக்கி வந்துகொண்டிருக்கின்றது பாரதவர்ஷத்தின் மக்கள்திரள். போர்வெறியும் போரின்மீதான அச்சமும் அங்கே செல்வதற்கான விசையே. வஞ்சமும் அமைதிக்கான விழைவும் அதை நோக்கிய நகர்வே.
அங்கு நிகழவிருப்பதென்ன? வில்வல்லமையும் எண்ணிக்கைவல்லமையும் உளவல்லமையும் ஊழ்வல்லமையும் நின்று மோதிக்கொள்ளும். வெல்வர், தோற்பர். அதற்கேற்ப பாரதவர்ஷத்தின் எதிர்காலம் மாறும். இன்னமும் கருபுகாத கோடிமக்களின் ஊழை இங்கு முடிவுசெய்யவிருக்கிறோம். யாதவனே, இவ்விசையின் ஊற்று எது? இங்கு இதை ஆற்றுவது அது என்றால் அந்த அலகிலி சொல்லவேண்டும் இவனையனைத்துக்கும் என்ன பொருள் என்று. இவற்றுக்கெல்லாம் அந்த அறியமுடியாமை வரை செல்லும் ஒரு நெறி இருக்கவேண்டும்.
நாளை அக்களத்தில் இளமைந்தர் நெஞ்சுபிளந்து செத்துக்கிடப்பார்கள். இறப்பை அஞ்சி, வலியில் துடித்து வான்நோக்கி கைவிரித்து ஓலமிடுவார்கள் சிலர். அன்னையரும் மனைவியரும் குழல் விரித்திட்டு ஓடிவந்து களம்பட்டோர் மீது விழுந்து அலறியழுவார்கள். தலையை நிலத்தில் அறைந்து கூவி கதறி மயங்கி விழுந்து மண்ணில் புரள்வார்கள்.
இல்லங்களெங்கும் இருள்பரவும். கைம்பெண்கள் மூலைகளில் ஒடுங்குவர். இளமைந்தர் தந்தையைத் தேடி அழுதுதிரிவர். பெருந்துயர் நிறைந்த நகரில் நகையெழ ஆண்டுகளாகும். குருதிமண்மீது மீள மீள மழைபொழிந்து பசுமையெழவேண்டும்.
அத்தனைபேரும் விண்ணை நோக்கியே கூவுவர். இரக்கம் கோரி. விளக்கம்கோரி. அப்பெருவெளிநோக்கி இதுவே உன் நெறியா, அளியே உனக்கில்லையா என்ற குரலெழாத ஒருகணமேனும் இம்மண்ணில் உண்டா?
இரக்கமற்ற பெருவிரிவு. இங்கிருக்கும் எவற்றுக்கும் பொருள் அலாத அலகிலாமை. எச்சொல்லும் எவ்வெண்ணமும் எவ்வுணர்வும் எவ்வூழ்கமும் சென்றடைய முடியாத ஆழிப்பேராழி. ஆனால் அங்கிருந்து வருகின்றன இங்கிருக்கும் ஒவ்வொரு கணத்தையும் ஆளும் நெறிகள். என்றால் அது பொறுப்பேற்கட்டும் அறத்திற்கு. அதுவே அறமழிவுக்கும் பொறுப்பேற்கட்டும். இருளுக்கும் ஒளிக்கும் ஆக்கத்திற்கும் அழிவுக்கும் அடிப்படையென வந்து நிற்கட்டும்.
அதன் முன் எளியோர் நாம் ஏன் நம் செயல்களுக்கு பொறுப்பேற்கவேண்டும்? நாம் ஏன் குற்றவுணர்வு கொண்டு கலுழவேண்டும்? நன்றென்றும் தீதென்றும் அறமென்றும் அலவென்றும் ஏன் உசாவவேண்டும்? ஏன் அளிகொள்ளவேண்டும்? எதன்பொருட்டு நாம் கட்டுண்டிருக்கவேண்டும்?
என் ஆணவமே அறமென்று என்னைச் சூழ்ந்தது என்று இன்று அறிகிறேன். நான் அரியவன் என்று பிறர்முன் காட்ட விழைந்தேன். பிறர் வகுத்த களத்தில் ஆடி முதன்மை பெற்று அவர்களின் பாராட்டைப் பெற விழைந்தேன். அறமென்பது பொய்யென்று அறிந்திருந்தமையால் என்னுள் நிறைவிழந்திருந்தேன். பொய்யென அறிந்த ஒன்றுக்காக என் இன்பங்களை கையளிக்கிறேனா என எண்ணி துயர்கொண்டிருந்தேன்.
அதுவே அடிப்படை. அது அறமிலாதது எனில் இங்கு எதுவும் அறமிலாததே. அது அளியிலாதது எனில் இங்கு அளி என்பதே தேவையில்லை. அது அறியமுடியாதது எனில் இங்கு எதையும் அறியமுடியாது. யாதவனே, அது பொருளில்லாதது என்றால் இங்கே பொருள்தேடி பேசுவதெல்லாம் பசப்பே.
நான் கேட்பது ஒன்றே. மிக எளிய சொற்களில் இதுவே. யாதவனே, இங்குள்ள அறங்கள் அனைத்தும் தெய்வங்கள் பெயரைச் சொல்லி நிறுத்தப்படுவன. அவை தெய்வங்களால் அளிக்கப்படுவனவா? இருமையற்றது அது என்றால் எதுவும் அதன் உச்சத்தில் இருமையற்றதே. அவ்வாறென்றால் இங்கே நன்றும் தீதும், அறமும் மறமும் இல்லையென்றே ஆகுமல்லவா?
இளைய யாதவர் புன்னகையுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு யுதிஷ்டிரர் சினம்கொண்டு குரலுயர்த்தினார். “சொல்க, அறமென்பதும் அளியென்பதும் வெறும் உளமயக்குகளன்றி வேறென்ன? அவற்றை உதறிவிட்டு வாழ்ந்தால் வென்றாலும் இழந்தாலும் குற்றவுணர்விலாது, உளக்குழப்பமில்லாது இங்கு வாழமுடியும் அல்லவா?”
“ஆம்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவ்வாறு இயலுமென்றால் அது நல்லதுதான்.” யுதிஷ்டிரர் கையை வீசி “ஏன் இயலாது? விலங்குகள் வாழ்கின்றன. பூச்சிகள், செடிகள் அவ்வாறே வாழ்கின்றன” என்றார். “காமமும் குரோதமும் மோகமும் மட்டுமே அவற்றை இயக்குகின்றன. வேறெந்த நெறியுமில்லை.”
இளைய யாதவர் அதே புன்னகையுடன் “இல்லை. அவ்வாறென்றால் ஒரு தலைமுறையுடன் உயிர்கள் அழியும். வேட்டைக்கு எளியதும் உண்பதற்கு இனியதும் இளங்குழவிதான்” என்றார்.
யுதிஷ்டிரர் திகைக்க “ஆனால் இங்கு குழவிகளே அரசர்களுக்கு நிகராக பேணப்படுகின்றன. அன்னையரின் குருதியை உண்கின்றன. தந்தையர் மீதேறி மறுசொல்லெழா ஆணைகளை இடுகின்றன. குழவிகளின் பொருட்டே அனைத்துக் குலநெறிகளும் அமைந்துள்ளன. குழவிகளின்பொருட்டு அனைத்துயிரும் தங்கள் உயிரை அளிக்கவும் சித்தமாகின்றன” என்றார் இளைய யாதவர்.
எப்போதும் எங்கும் நெறியே ஆள்கிறது, யுதிஷ்டிரரே. அரிதாக சில உயிர்த்தொகைகளில் நெறிகள் அழிகின்றன. அனைத்தும் நிலைகுலைந்து சரிய அந்த அழிவினூடாக கற்றுக்கொண்டு அறத்தை மீட்டுக்கொள்கின்றது அந்த உயிர்த்தொகை.
அறத்தை ஐயப்படாத மானுடனே இல்லை, ஏனென்றால் அதன் வழிகள் மறைவானவை. அறத்தை நம்பாத மானுடனும் இல்லை. ஏனென்றால் அது இன்றி அவன் வாழவியலாது. அறத்தை ஐயம்கொள்பவனே அதை உள்ளூர சார்ந்திருக்கிறான். அறத்தை மறுப்பவன் அதை அஞ்சுகிறான். அறத்தைக் கூவுபவன் அதன்மேல் ஐயம்கொண்டிருக்கிறான்.
உயிர் ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான அறம் உள்ளது. மானுடருக்குரிய அறம் மானுடரால் உருவாக்கப்பட்டது. குடிகள், குலங்கள், நாடுகள் போல. இல்லங்கள், நகரங்கள் போல. ஆடை போல, அணி போல. அது இனிதென்றும் நன்றென்றும் கண்டமையால் பேணப்பட்டது. அது பல்லென்றும் நகமென்றும் ஆகுமென்பதனால் பூணப்பட்டது.
அறங்கள் மண்ணில் கண்டடைந்து பெருக்கப்பட்டவை. முன்பொருநாள் ஒரு துளிச் செம்பு மண்ணில் மானுடனால் கண்டெடுக்கப்பட்டது. அது நன்றென்று உணரப்பட்டது. மீண்டும் மீண்டுமென செம்பைத் தேடி சேர்த்தனர் மானுடர். அது படைக்கலமும் மனைக்கலமும் அணிகலமும் ஆகியது. அவர்களைக் காத்தது, ஊட்டியது, அவர்கள் உள்ளத்தின் அழகு ஆகியது.
மண்ணிலிருந்தும் அது பிரித்தெடுக்கப்படுகிறது. ஆழங்களில் இருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்டது ஒருபோதும் மீள மண்ணுக்கு செல்வதில்லை. அது தொழில் மாறக்கூடும். அதற்கேற்ப உரு மாறக்கூடும். ஒன்றோடொன்று கலந்து ஒளிமாறக்கூடும். ஆனால் ஒருபோதும் கைவிடப்படாமல் என்றும் இங்கிருக்கும்.
செம்பு மென்மையானது. இரும்பு வன்மையானது. வெள்ளி ஒளி கொண்டது. பொன் அரிதானது. செம்பை இரும்பு வெல்லும். வெள்ளியை பொன் மிஞ்சும். மென்மையான பொன் வன்மையான இரும்பை ஆளும். செம்பு பொன்னுடன் கலந்து விலைமிகும். உலோகங்கள் போரிடுகின்றன. உலோகங்கள் வென்றும் தோற்றும் உலகு சமைக்கின்றன.
உலோகங்கள் ஒன்றே. இரும்பு வேர். செம்பு தண்டு. வெள்ளி இலை. யுதிஷ்டிரரே, தங்கம் மலர். ரசக்கலை அறிந்த யோகி ஒருவன் இரும்பை பொன்னாக்கினான். பின்னர் பொன்னை இரும்பாக்கிக்கொண்டான். இரண்டையும் சாம்பலாக்கி காற்றில் கரைத்துவிட்டு அமர்ந்திருந்தான்.
மானுடனின் அனைத்து தெய்வங்களும் மானுடனால் உருவாக்கப்பட்டவை என்பதே வேதச்சொல். நற்செயல்கள் நெறியென ஆற்றப்படுகையில் வேள்விகளாகின்றன. வேள்வியால் தேவர்கள் உருவாகிறார்கள். அவிகொண்டு ஆற்றல் பெறுகிறார்கள். தேவர்களால் தெய்வங்கள் விண்ணில் நிறுத்தப்படுகின்றன. மண்ணில் வேள்வி அழியும்போது தெய்வங்கள் நீர்பெறாத செடிகள் என வாடிக் கருகி அழிகின்றன.
ஆகவேதான் நீங்கள் தெய்வங்களை கைவிடாதிருங்கள், உங்களை தெய்வங்கள் கைவிடாதிருக்கட்டும் என்கின்றன வேதங்கள். தெய்வங்களைக் கைவிடும் குடிகள் தங்களை அழித்துக்கொள்கின்றன. தெய்வங்கள் மானுடனால் ஆற்றல்பெற்று மானுடனை ஆள்கின்றன. அரசன் வரிகொண்டு குடிகளை ஆள்வதுபோல.
கடுவெளியும் காலமும், பொருளும் ஆற்றலும், இன்மையும் இருப்பும் முடிவிலியும் இரண்டிலியும் ஆன அது எதற்கும் விடையல்ல. அது எதையும் ஆற்றுவதில்லை. அது எதற்கும் பொறுப்பல்ல. மானுடவினாக்களுக்கு மானுட தெய்வங்களே விடைகள். மானுடரை மானுட தெய்வங்களே ஆக்கி புரந்து அழிக்கின்றன. அவையே மானுடனுக்கு பொறுப்பேற்கின்றன.
நோக்கிலாததன் நோக்கே தெய்வங்கள். அளியற்றதன் அளி. அலகிலாததன் அறிவடிவு. முடிவிலாததன் கருத்துரு. தெய்வங்களால் ஆளப்படுகின்றது புடவி. எறும்பும் ஈயும் புழுவும் பறவையும் தங்கள் வேள்விகளால் தங்களுக்குரிய தெய்வங்களை சமைக்கின்றன. தங்கள் தெய்வங்களால் படைத்துக் காத்து அழிக்கப்படுகின்றன.
நேர்கொண்ட பார்வையில் தொகுத்து முன்சென்று இதை அறியவியலாது. ஊசலென ஆடி, முரண்கொண்டு திரும்பி அறியவேண்டியது இது. சொல்லடுக்கை கற்பனையால், அறிவை ஊழ்கத்தால், தெளிவை பித்தால் நிரப்பிக்கொண்டு சென்றடையவேண்டியது. கருத்தென அல்ல புதிரென அறியப்படவேண்டியது. அறிந்தவற்றை அறியாமையால், கூர்மையை பேதைமையால் எழுப்பாதவன் இதை உணரமுடியாது.
இந்த முரணே ராஜவித்யை எனப்படுகிறது. அறிதற்கரிதென்பதனால் ராஜகுஹ்யம் எனப்படுகிறது. இது தூய்மையளிப்பதில் மாண்புடையது. கண்முன் என காண்பதற்குரியது. அறத்துக்கு இயைந்தது. இயற்றுதற்கெளியது. அழிவற்றது.
அறியா நுண்மையாய் அது இவ்வுலகை தாங்கியிருக்கிறது. அதிலமைகின்றன ஐம்பெரும் பருக்களும். ஆனால் முற்றிலும் கடந்துறைகிறது அது. பருவெளியை ஆக்கி பருப்பொருட்களின் நெறிகளுக்கே அவற்றை அளித்து தான் அப்பாலிருக்கிறது.
முதலியற்கையின் மூவியல்புகளின் முடிவிலா நிகராடலுக்கு விடப்பட்டுள்ளன அனைத்தும். நிகர்கொண்டு, நிகரழிந்து, புணர்ந்து, பிரிந்து, திரிந்து, திரண்டு, எழுந்து, அமைந்து, குவிந்து, பரந்து இங்கு பருப்பொருள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீரலைகள் மேல், துளிகள் மேல், துமிகள் மேல் விண்கதிரோன் என அது பருப்பொருளில் தன்னை நிகழ்த்தி விளையாடுகிறது.
இப்பருவெளியை ஆள்வது பருப்பொருள் தன்னுள் கொண்ட நெறியே. பருப்பொருள் என்பது அந்நெறியின் பொருள்விளக்கம். அந்நெறி அப்பொருளின் கருத்துறைவு. உலகியலின் நெறிகள் உலகை ஆள்கின்றன. உலகியல் நெறிகளை அந்நெறிகளுக்குரிய தெய்வங்கள் ஆள்கின்றன. நெறிபுரப்போரால் அவை அவியிட்டு வளர்க்கப்படுகின்றன.
அனைத்துக்கும் அப்பாலிருக்கும் அதுவே அனைத்துக்கும் முதல் விசை. அதுவே முதல் விதை. அதுவே வயல். அதுவே விளை. அதுவே களை. அதுவே பசி. அதுவே உடல். அதுவே உயிர். ஆயினும் முற்றிலும் அகன்றது. வேள்வி அது. எரிகொடை அது. எரியும் அது. நுண்சொல்லும் அதுவே. உடல் அது. நோய் அது. மருந்து அது. நெய்யும் அனலும் அதுவே. அதுவே ஒளி. ஒளியிருள் என்றிலாததும் அதுவே.
யோகத்திலமைந்தவர் அதை ஒன்றென உணர்கிறார்கள். ஞானத்தில் செல்பவர்கள் அதை பலவென அறிகிறார்கள். செயலில் இருப்பவர் அதை செயல்தருணங்களில் காண்கிறார்கள்.
கவிதையெனும் சோம மது உண்டவர்கள், அரசமைந்து பழிகள் அகன்றோர், வேதமறிந்தோர் எனும் மூன்று தரப்பினர் தங்களுக்குரிய வேள்விகளால் அதை வேட்டு விண்ணுலகு கொள்கிறார்கள். இந்திரநிலை அடைந்து அமைகிறார்கள். விண்ணின்பம் நிறைந்தவுடன் அழிவுடைய மண்ணுலகுக்கே மீள்கிறார்கள். விழைவுகொண்டவர் விழைவிலேயே உழல்வதே நெறி. அவர்களின் தெய்வங்கள் அவர்களை காக்கின்றன, வழிநடத்துகின்றன.
தேவரை வேட்போர் தேவரை எய்துவர். மூதாதையரை நோற்பவர் தென்புலத்தை வெல்வர். பருவுலகை தொழுவோர் செல்வங்களை அடைவார்கள். அதை மட்டுமே நாடுவோர் அதை அடைவார்கள். மங்கலம் மங்கலமின்மை கொண்ட இருபால் பயன்களைத் தருவனவாகிய செயற்சுழலிலிருந்து அவர்களே விடுபடுகிறார்கள்.
இளைய யாதவரின் சொல்கேட்டு திகைத்து அமர்ந்திருந்த யுதிஷ்டிரர் மீண்டும் தன்னை திரட்டிக்கொண்டு கேட்டார் “யாதவனே, சொல்க! வரவிருக்கும் இப்பேரழிவால் நீ துயருறவில்லையா?” இளைய யாதவர் புன்னகையுடன் “இல்லை, நானே கொல்கிறேன்” என்றார். “அவர்கள் மேல் அளிகொள்ளவில்லையா நீ?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “எவர்மீது எவர் அளிகொள்வது?” என்றார் இளைய யாதவர். “இறப்பதும் நானே.”
“எளிய மானுடர் அவர்கள். வாழப்பிறந்தவர்” என யுதிஷ்டிரர் குரல் அடைக்க சொன்னார். நெஞ்சு நெகிழ விழிநீர் வடித்தபடி “மைந்தர், தந்தையர், உடன்பிறந்தார்…” என்றார். “என் நெஞ்சு தாளவில்லை. எதன்பொருட்டு என்ன பொருள் என என் உள்ளம் ஏங்கித் தவிக்கிறது.” “பொருளறிந்தால் துயர் மீள்வீரா, யுதிஷ்டிரரே?” என்றார் இளைய யாதவர். “ஆம்” என்றார் யுதிஷ்டிரர்.
“மெய்மை நான்கு வகை துயர்களுக்கு மாற்று என்கின்றன நூல்கள். தெய்வம், பொருள், மானுடர் என்னும் மூன்று வகையில் எழும் உலகத்துயர் அனைவருக்கும் உரியது. இருத்தலை எண்ணும் எளியோன் நிலையாமை கண்டு துயர்கொள்கிறான். அறிஞன் அறியமுடியாமையின் துயரை அடைகிறான். இருமையின் துயர் அடைகிறான் ஞானி.”
“நீங்கள் கொண்டிருப்பது எளியோரின் துயர். அதை நீக்கினால் அறிஞனுக்குரிய துயரையே சென்றடைவீர்கள். யுதிஷ்டிரரே, இங்கிருக்கையில் துயரிலிருந்து துயருக்கே சென்றடைய முடியும். முற்றிலும் துயரற்றவன் இருமை கடந்தவன் மட்டுமே.”
“நான் கோருவது என் துயரை நீக்குவதற்காக அல்ல. இங்கு நிகழும் இப்பேரழிவு என்னும் துயரை நீக்கும்பொருட்டே” என்றார் யுதிஷ்டிரர். “அதன் பொறுப்பை என்னிடமிருந்து அகற்றும் மெய்மை எது என்று மட்டுமே.”
“இவ்வொரு பயணத்தில் வழிநடந்தபோது நீங்கள் பன்னீராயிரம் சிற்றுயிர்களை மிதித்துக் கொன்றீர், யுதிஷ்டிரரே” என்றார் இளைய யாதவர். சினம் கொண்ட யுதிஷ்டிரர் “என்னிடம் அணிச்சொல்லெடுக்க வேண்டாம். நான் மானுடரைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்றார். “உயிர்களில் வேறுபாடு நோக்கும் ஒரு தெய்வத்திடம் எதை கோருகிறீர், தர்மரே?” என்றார் இளைய யாதவர்.
மறுமொழி சொல்லாமல் தலையை அசைத்த யுதிஷ்டிரர் “என் நாவை அடக்குதல் எளிது. கண்ணெதிரே அழிவு நிகழ்கையில் அறிவுக்கு மட்டுமே உகக்கும் கொள்கை பேசி அமர்ந்திருத்தல் அதனினும் எளிது” என்றார். “அரசன் என, தந்தை என நான் உனது விழிநோக்கி கேட்பது இதுவே, அறமென கனியாத மெய்மையால் என்ன பயன்?”
“இமயத்தால் என்ன பயன்?” என்று இளைய யாதவர் கேட்டார். “அம்மியென சமைந்தால் அடுமனைக்காகும். தூணென்று நின்றால் கூரையைத் தாங்கும். சிலையென ஆனால் தெய்வமேயாகும். வடதிசை எழுந்தது தேவதாத்மா என்று முனிவரால் வணங்கப்படுவதோ வெறுமனே வான்தொட்டு நின்றிருப்பதனால்.”
யுதிஷ்டிரர் திகைத்து நோக்க இளைய யாதவர் தொடர்ந்தார் “அறிக, ஆயிரம் பல்லாயிரம் கோடி அம்மிகளும் தூண்களும் தெய்வச்சிலைகளுமாக உருமாறிக்கொண்டே இருக்கையிலும் முகில்சூடி நின்றிருக்கும் இமயமே அனைத்துக் கற்களுக்கும் பொருள் அளிக்கிறது. அனைத்துக் கல்லும் இமயமே என்று உணர்ந்தவனே கல்லை அறிகிறான்.”
“விழிதூக்கி நோக்கி இமயத்தைப் பார்க்கையில் புலன்தொட்டறியும் பிரம்மம் என்று உளமெழாதவர் பாரதவர்ஷத்தில் எவர்?” என்றார் இளைய யாதவர். “கல் தேவையென்றால் கல்லை எடுங்கள். மலை தேவையென்றால் மலை கொள்க! கல்லும் மலையே என்று உணர்வதே யோகம்.”
யுதிஷ்டிரர் “அளியின்மை… அதை ஆயிரம்கோடி சொற்களைக் கொண்டும் எவரும் மறைத்துவிட முடியாது” என்றார். பின்னர் எழுந்துகொண்டு “போதும், இந்தத் தத்துவங்களன்றி எதையும் நீ என்னிடம் சொல்லிவிடமுடியாதென்று உணர்கிறேன். நான் கிளம்புகிறேன்” என்றார். “நான் எவரையும் அருகழைப்பதில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். உடனே “ஆனால் தூண்டிலிட்டு அமர்ந்திருக்கிறேன்” என உரக்க நகைத்தார்.
புரிந்துகொள்ளா விழிகளுடன் நோக்கிய யுதிஷ்டிரர் “நான் விடைகொள்கிறேன், யாதவனே” என தன் மேலாடையை சீரமைத்தார். இளைய யாதவர் எழுந்து நின்று “நன்று யுதிஷ்டிரரே, நற்சொற்களை உரைக்கும் வாய்ப்பு அளித்தீர்கள்” என்றார்.
யுதிஷ்டிரர் தலையசைத்துவிட்டு திரும்பும்போது இளைய யாதவர் “என்னை சந்திக்க விழைவதற்கு முன்னரே பிறிதொருவரை சந்திக்க எண்ணியிருந்தீர்கள், யுதிஷ்டிரரே. அவரை சந்தித்துவிட்டு இங்கு வந்திருக்கலாம்” என்றார். யுதிஷ்டிரர் திடுக்கிட்டவர்போல திரும்பி “யாரை?” என்றார். இளைய யாதவரின் விழிகளைப் பார்த்தபின் “ஆம், ஆனால் அதனால் இனி பயனில்லை” என்றார். “அறிந்துகொள்ளுதல் பயனுள்ளதுதானே?” என்றார் இளைய யாதவர்.
“ஆம், நான் என்னுள் ஏந்திக்கொண்டிருந்த எண்ணம் சகுனியை நேருக்குநேர் சென்று சந்திப்பதுதான். தனிமையில். உளம் நெகிழ்ந்திருக்கும் ஒரு விடியற்காலையில்” என்றார் யுதிஷ்டிரர். “அதை என் கீழ்மையின் வெளிப்பாடாகவே இன்று பார்க்கிறேன். நான் அறத்தோன் என்றும் அளிகொண்டவன் என்றும் எண்ணினேன். அவரை நேரில் கண்டு என் உள்ளத்தை திறந்து வைத்தால், கைகளை பற்றிக்கொண்டு கண்களை நோக்கி பேசினால் அனைத்தும் சீரடைந்துவிடுமென நம்பினேன்.”
“அந்த நம்பிக்கையை பகற்கனவெனக் கொண்டலைந்தேன். அதை நான் ஏன் செயல்படுத்தவில்லை என இன்று தெளிவாக அறிகிறேன். அது செயற்தளத்தில் உண்மையை காட்டிவிடக்கூடும் என அஞ்சியது என் ஆழம். ஆகவே அதை ஓர் இனிய கனவென்று கொண்டலைந்தேன். ஒவ்வொருநாளும் இளங்காதலன் என அவ்வெண்ணத்தை எனக்குள் வைத்து வருடி மகிழ்ந்தேன். நரம்பு தெறிக்க அடித்து என் நம்பிக்கைகளை சிதறடித்தது நடைமுறை உண்மை. இப்போது அது எனக்கு கூச்சமளிக்கும் ஒரு பழைய நினைவு மட்டுமே.”
“அவ்வளவுதானா?” என்றார் இளைய யாதவர். “பிறகென்ன?” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “வெறும் அறக்கற்பனையா? அதற்கப்பால் ஏதுமில்லையா?” யுதிஷ்டிரர் அவர் விழிகளை நோக்கி “சொல்” என்றார். “அந்த அறக்கற்பனையின் ஆழத்தில் வஞ்சம் இல்லையா?” என்றார் இளைய யாதவர். “ஆம், இருந்தது. இப்போதும் வஞ்சமில்லை என்று சொல்லமாட்டேன். என் எதிரி அவர்.”
இளைய யாதவர் “ஆம், ஆனால் முதன்மை வஞ்சம் அதுவல்ல” என்றார். “என் குலமகளை அவைச்சிறுமை செய்தவன் அவனே” என்றார் யுதிஷ்டிரர். இளைய யாதவர் புன்னகைத்து “ஆம், அதையும்விட ஆழ்ந்த உண்மை ஒன்றுண்டு. நீங்கள் முதல்முறையாக உயிரை அஞ்சியது வாரணவதத்தின் எரிமாளிகையில். உங்கள் இறப்பை கண்முன் எனக் கண்டது அப்போதுதான். அன்று சகுனிமேல் கொண்ட வஞ்சமே நீங்கள் முதலில் அறிந்த பேருணர்வு. யுதிஷ்டிரரே, அதிலிருந்து நீங்கள் இன்றுவரை மீளவில்லை” என்றார்.
யுதிஷ்டிரர் சில கணங்கள் நோக்கி நின்றபின் மெல்ல தளர்ந்து மூச்செறிந்து “ஆமென்றே கொள்வோம். அதிலென்ன பிழை?” என்றார். “அவ்வாறென்றால் போரின் வேர் எங்குள்ளது?” என்றார் இளைய யாதவர். “என்னில், ஆம் என்னில்… நான் மறுக்கவில்லை” என்றார் யுதிஷ்டிரர். “நான் கேட்பது அதைத்தான். அவரில் விழைவை நிறைத்து என்னில் வஞ்சம் விதைத்து மானுடத்தை கொன்றழித்து விளையாடும் அந்தப் பெருநெறியின் இரக்கமின்மை பற்றித்தான்.”
இளைய யாதவர் “அதை அறிய நீங்கள் சகுனியை சந்திக்கலாமே?” என்றார். “அதனால் பயனில்லை” என்று யுதிஷ்டிரர் தலையசைத்தார். “யுதிஷ்டிரரே, உங்கள் வஞ்சத்தை கைவிடுவதற்கான ஒரு வாய்ப்பு. அவர் தன் விழைவையும் கைவிடக்கூடும்” என்றார். “அது நிகழாது… நீ சொன்னதுபோல் பருவுலகு தன் இயல்புவிசைகளின் நெறிப்படியே செயல்படுகிறது. இருவரும் ஆழங்களில் எங்கள் ஊழை பொறித்து வைத்துள்ளோம்.”
இளைய யாதவர் “ஏன் அதை தவிர்க்கிறீர்கள்?” என்றார். யுதிஷ்டிரர் “நீ சொல், நான் அவரை சந்தித்தால் இப்பேரழிவு இல்லாமலாகுமா?” என்றார். இளைய யாதவர் புன்னகைத்து “இது முன்னரே நிகழ்ந்துவிட்டது” என்றார். யுதிஷ்டிரர் திகைக்க “நைமிஷாரண்யத்தின் காலம் வேறு, யுதிஷ்டிரரே” என்றார் இளைய யாதவர். “நீங்கள் அவரை சந்தித்தால் இருவர் சொற்களும் மாறிமாறி பொருள் அளிக்கக் கூடும்.”
“ஆனால் நான் அஸ்தினபுரிக்கு செல்லமுடியாது” என்றார் யுதிஷ்டிரர். “வருக, அவரை சந்திக்க நான் ஆவன செய்கிறேன்” என்றார் இளைய யாதவர். மீண்டும் கற்படியில் அமர்ந்துகொண்டு “அமர்க!” என்றார். யுதிஷ்டிரர் அமர்ந்ததும் முற்றத்து மணலில் ஒரு சிறு அரைவட்டத்தை வரைந்தார். “இதை முழுமைசெய்க!” என்றார். யுதிஷ்டிரர் அவரை ஐயத்துடன் நோக்கிவிட்டு அதை முழுமைசெய்தார். மறுகணம் அவர் அஸ்தினபுரியில் சகுனியின் மாளிகையில் இருந்தார்.