டு லெட்

download (2)

இனிய ஜெயம்

செழியன் அவர்களின் டு லெட் திரைப்படம் தேசிய விருது வென்றமைக்கு எனக்கு தெரிந்து பொதுவில்  வாழ்த்து தெரிவித்த ஒரே ஆளுமை நீங்கள் . இதில் இரண்டு தளங்கள் உள்ளது .ஒன்று  பொதுவில், இது தமிழ் நிலத்துக்கு கிடைத்த பெருமிதம் அதை ஒரு எழுத்தாளராக  நினைவூட்டும் வகையில்  . தனியே திரை உலகின் ஒரு பகுதியை சேர்ந்தவர் நீங்கள் என்பது மற்றொன்று, அதன் பகுதி நீங்கள்  எனும் நிலையில் இது முக்கியமாகிறது  .

நான் இறுதியாக பார்த்த சினிமா அஜிதன் என்னை அழைத்து சென்ற காற்று வெளியிடை .அதன் பின் முற்றிலும் வாசிப்பும் பயணமும் என்னை தொலைக்காட்சி சினிமா இவற்றிலிருந்து விலக்கி வைத்து விட்டது. எந்த அளவு என்றால்  சமீபத்தில் ஒரு சினிமா போஸ்டரை அஜிதன் வசம் காட்டி ”யார் இது பாக்க விஜயகாந்த் பையன் ஒருத்தர் இருப்பாரே ,அவர மாதரியே   இருக்கு ”என்று கேட்டேன் .அஜிதன் கண்ணீர் வர சிரித்து விட்டு சொன்னான் .”அது விஜயகாந்த் பையன்தான் ”. இந்த அளவு .

இருப்பினும் ஒரு செய்தியாக அவ்வப்போது திரை துறை சார்ந்து செய்திகளை தெரிந்து கொண்டிருந்தேன் . ஆச்சர்யம் அளித்தது .இப்போதுவரை நீண்ட நாட்களாக   நடை பெற்றுக்கொண்டிருக்கும், இந்த வெள்ளிக்கிழமை முதல் பலவீனம் அடையத் துவங்கி இருக்கும் ,  தமிழ் திரை உலகினரின் வேலை நிறுத்தம் .

இந்த வேலை நிறுத்தத்தின் பாற்ப்பட்ட கோரிக்கைகளின் ,அது எழுப்பப்படுவது ,அவை நிறைவேற்றம் கொள்வதன் பின்னுள்ள சிக்கல்கள் என்ன என்ன என நான் அறியேன் .ஆனால் நான் முக்கியமாக நினைப்பது போராட்ட தலைமை விஷால் திரை அரங்கம் மற்றும் விநியோகம் இவற்றில் நிகழும் வணிக  குளறுபடிகளை நோக்கி எழுப்பும் கேள்வி .

கடலூர் போன்ற கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத மையங்களை நம்பியே இன்று தமிழ் சினிமாவின் வணிகம் நிற்கிறது . இத்தகைய நகரங்களில் பொதுவாக மூன்று முதல் நான்கு திரை அரங்குகள் இருக்கும் .அவற்றை  ஏதேனும் அரசியல்வாதின் பினாமி லீசுக்கு எடுத்து நடத்திக்கொண்டு இருக்கும் . அதே அரசியல்வாதியின் மற்றொரு பினாமி இத்தகு மாவட்டங்களில் விநியோகஸ்தராக விளங்கும் .  எனில்  விநியோகம் திரை இடல் இரண்டுமே கருப்பை வெள்ளை ஆக்கும் வியாபாரத்துடன் சம்பந்தப் பட்டதே அன்றி ,திரை துறை உடன் சம்பந்த பட்டது அல்ல என்பது வெளிப்படை .

கடல் படத்தை எடுத்துக் கொள்வோம் .அதன் தயாரிப்பு செலவு என்ன ? விநியோகஸ்தர் தூக்கி போட்டு விளையாடி கை மாறி கை மாறி அது அடைந்த மதிப்பு என்ன? இத்தனைக்கும் அலைபயுதேதான் மணிரத்தனம் அளித்த கடைசி வெற்றிப் படம் என்பது அவர்களின் தெய்வ வாக்கு .அதன் பிறகும் நடந்த வணிகம் இது . முப்பது கோடிக்கு எடுத்த படம் ,விநியோகம் வழியே நாப்பத்தி ஐந்து கோடிக்கு திரை அரங்கை அடைகிறது .  இங்கே கடலூர் போன்ற பத்து லட்சம் கூட மொத்த ஜனத்தொகை தாண்டாத ஒரு ஊரில்,அஜித் விஜய் தவிர வேறு எதையும் அறியாத ரசிகர்கள் திகழும் ஊரில்  ,ஒரு திரை அரங்க முதலாளி நாப்பது லட்சம் கொடுத்து போட்ட படம் கடல் என்பார் . மூன்றே நாள் . தமிழ் ராக்கர் பிழைப்பை கெடுத்து விட்டத்து [ அது ஏன் சன் தொலைகாட்சிக்கு உரிமை விற்க படும் படங்கள் பதினைந்து நாள் கழித்தே தமிழ் ராக்கரில் கிடைக்கிறது என்றெல்லாம் கேள்வி கேட்க கூடாது]  என விநியோகமும் திரை அரங்கமும்  தயாரிப்பு தரப்பை கழுத்தை பிடிக்கும் . இந்த கள்ள விளையாட்டை,[எங்கே ஆதாரத்தை காட்டு நான் இந்த தொழிலை விட்டே போகிறேன்]  யாவரும் அறிந்த சாட்சியம் ஆற்ற உண்மையை ,  எதிர்த்தே இன்று திரை உலகம் ஒன்று நிற்கிறது .   விநியோகமும் திரை அரங்கமும் வெள்ளை விளையாட்டுக்கு தயார் இல்லை என்பதை தொடர்ந்து காட்டி வருகிறார்கள் .இப்போது வரை .

பொதுவாக கணக்குகளை நேராக வைத்திருக்கும்  மால் கலாச்சாரம்  தமிழ் சினிமாவை கண்டு கொள்ளாமல் அதன் போராட்டத்துக்கு துணை நிற்காமல்  இந்திய சினமா வுக்கான  களம் என தன்னை முழுமையாக முன் வைத்து இதிலிருந்து விலகி விட்டது .  இது இந்த போராட்டம் கண்ட முதலும் ,தாண்ட முடியாததும் ஆன பலவீனம் .

அடுத்த பலவீனம் இந்த போராட்டம் பொது மனதுக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது . அது அப்படிதான் என்பது ஒரு யதார்த்தம் .  எந்த நியாயம் ஆனாலும் என்ன ,சாலையில் நின்று போராடும் அரசு ஆசிரியர் யாரேனும் பொது மனதின் நியாத்தை தன் பக்கம் ஈர்க்க முடியுமா என்ன ? போன வாரம்    பாமாகா போராட்டத்துக்கு அழைப்பு விட்டு , கடலூரில் அடைக்காத ஒரு துணி கடையில் ரகளை செய்தனர் .இவர்கள் திறந்து இருந்த ஒரு மீன் மார்க்கட்டை கூட கிட்டே கூட அணுக வில்லை .  இது ஒரு நிலை .

விவசாயி மீனவன் பிரச்னைக்கு நிற்ப்பதில்லை .மீனவனுக்கு அவனை தவிர எந்த எந்த பிரச்னை மீதும் கவனம் இல்லை .  இங்கே கல்லெறிந்த தமிழனடா பலருக்கு காவிரி  என்பது சீமான் படத்தில் அல்லது அமீர் படத்தில் வரும் ஈரோயினி போல என்பது மேல் ஒரு ஞானமும் கிடையாது .

பற்றி எரியும் போராட்டங்களே இந்த லட்சணம் எனும் நிலையில் யாருக்கு சினிமா போராட்டம் ஒரு பொருட்டு ?

அன்று விஜயகாந்த் தலைமையில் இதே காவிரி போராட்டம் சார்ந்து நடிகர்கள் நெய்வேலியை முற்றுகை இட்டனர் .இன்றும் நடிகர்கள் இதே காவிரி சார்ந்து ஒன்று நிற்கிறார்கள் . ஒரு பதில் உபசாரமாகவேனும் திரை உலக போராட்டத்தில் பிறர் இணைந்து குரல் எழுப்புவதுதானே முறை .  ஜல்லிக்கட்டு தமிழனின் வாழ்வாதாரம் அதை போராடி மீட்டான் . அதன் அளவு கூட பெறுமதி அற்றதா தமிழ் சினிமா ? நமக்கு களிக்க,கிழிக்க , மீம்ச ,அங்கிருந்து வந்து ஆள, உறங்க ,கற்பழிக்க ,கழிந்து வைக்க எல்லாவற்றுக்கும் தமிழ் சினிமா வேண்டும் .ஆனால் அவர்களுக்கு ஒன்று என்றால் கண்டு கொள்ளாமல் கடந்து போவோம் . என்ன நியாயம் இது ?

எனது யூகம் சரி என்றால் அனேகமாக டு லெட் திரைப்படம் செழியனின் சொந்த தயாரிப்பாகவே இருக்கும் .தமிழ் நிலத்தில் ஆயிரம் இதை அரங்குகள் இருக்கக் கூடும் .ஒரு அரங்கத்தில் ஒரு காட்சி .குறைந்த பட்ச வருவாய் ஆன இருபதாயிரம்  இதை இலக்கு வைத்தால் சும்மா ரெண்டு கோடி . நிச்சயம் செழியனின் அந்த படம் ஒன்று அல்லது ஒன்றரை கோடிக்குள் மட்டுமே எடுக்கப்பட்டு இருக்கும் . எளிய இந்த நிலைக்கு இன்று விநியோகமும் ,திரை அரங்கமும் தயாராக இருக்கிறதா ?   கிடையாது .  ஏன்? இந்த கேள்விகளின் ஆணி வேரை நோக்கியே இன்று திரை துறை போராடிக்கொண்டு இருக்கிறது .

வாழ்த்துக்களை விட வெற்றி ஒரு சினிமா இயக்குனருக்கு மிக முக்கியம் .  செழியன் வெல்ல எனது வாழ்த்துக்கள்

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைபிறந்தநாள்
அடுத்த கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்