சவரக்கத்திமுனையில் நடப்பது

razor

ஜெயமோகன் அவர்களுக்கு

நான் தங்களது புதிய வாசகி. நான் முதலில் படித்தது நான் இந்துவா கட்டுரை. பின்னர் தங்களுடைய அனைத்து எழுத்துக்களையும் படித்த கொண்டிருக்கிறேன் முக்கியமாக ஆன்மீகம் சார்ந்தவையை. மிக்க நன்றி என்னுள்ளே இருந்த பல கேள்விகளுக்கான விடை கிடைத்துள்ளது. பல நூல்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. வட இந்தியா வட மொழி மேல் இருந்த அல்லது இப்போதுள்ள ஊடகங்களினால் ஏற்படுத்தப்பட்ட வெறுப்பு நீங்கியுள்ளது.

ஆனால் தங்களின் கருத்துக்களை என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் ஒன்றை கூட பேச முடிய வில்லை. வலதுசாரி என்று எளிதாக புறந்தள்ளப்படுகிறேன். பரவாயில்லை.

சுமாராகத்தான் எழுத வரும். எழுதி விட்டேன். மிக்க நன்றி.

சுபத்ரா

***

அன்புள்ள சுபத்ரா,

உங்கள் நண்பர்களின் நிலைபாடு இயல்பே. எச்சூழலிலும் பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள கருத்துக்குவியங்கள் சார்ந்தே மக்கள் சிந்திப்பார்கள். வலதோ இடதோ. அதையும் கூர்ந்து அறிந்திருக்க மாட்டார்கள். பொத்தாம்பொதுவாகச் செவிகளில் விழும் கருத்துக்களைக் கொண்டே தங்கள் நிலைபாடுகளை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள்.

இலக்கியவாதியை, இலக்கியத்தை அப்படி அணுகமுடியாது. அவர்களின் படைப்புகள் கூட அவர்களின் நிலைபாடுகளை வெளிப்படுத்துவதில்லை. அவை எப்போதுமே ஊடுபாவுகளினாலானவை. அவற்றின் நெசவை அவற்றைக் கூர்ந்து வாசிக்கும் வாசகனே உணரமுடியும். எழுத்தாளனை எழுத்தினூடாகச் சென்றடைவது ஒரு வாசகனின் அந்தரங்கமான பயணம்.

ஆனால் மிகச்சிலரே இங்கு வாசகர். பெரும்பாலானவர்கள் செவிச்செய்தியினூடாக அறிபவர்கள். அவர்கள் எல்லாக் காலகட்டத்திலும் இப்படியே இருந்துள்ளார்கள். எல்லா எழுத்தாளர்களும் இவர்களால் இப்படித்தான் அணுகப்பட்டிருக்கிறார்கள். இதற்கு ஒன்றுமே செய்யமுடியாது.

எழுத்தாளர்களை அரசியல்வாதிகள், கருத்தியல்நிலைபாடுகளில் ஊறியவர்கள் புரிந்துகொள்ள முடியாது. நம்மவனா அல்லவா என்னும் எளிய அளவுகோலே அவர்களுடையது. அவர்கள் எழுத்தாளனை வசைபாடுவார்கள், முத்திரைகுத்துவார்கள், திரிப்பார்கள், மறைக்கமுயல்வார்கள்.

நடைமுறையில் இத்தகைய அரசியலாளர்களிடமிருந்தே பெருவாரியான வாசகர்கள் எழுத்தாளனைப் பற்றி அறிகிறார்கள். அவர்கள் திரித்துச் சுருக்கி அளிக்கும் முத்திரைகளைக் கடந்து சென்று எழுத்தாளனை அறிய முயல்பவர்கள் மிகமிகச்சிலர். அவர்களே இலக்கியவாசகர்கள். பிறரைப்பற்றி இலக்கியவாதி கவலைப்படவே தேவையில்லை. அவர்கள் வாழும் உலகமே வேறு.

என்னுடைய அரசியலை எப்போதும் சொல்லிவந்திருக்கிறேன். அது இங்குள்ள கட்சிசார் அரசியல் அல்ல. அவ்வாறு கட்சிகளைச் சாராமல் ஓர் அரசியல் இருக்கமுடியும்.அதை இலக்கிய வாசகனால் புரிந்துகொள்ள முடியும். பிறருக்குச் புரியவைக்க முடியாது.இலக்கியவாதியின் அரசியல் உள்ளுணர்வின், உணர்ச்சிகளின் அரசியல். தன்னிச்சையானது, கட்டற்றது. தருக்கபூர்வமான முழுமையான விளக்கங்கள் அதற்கு இருக்கவேண்டும் என்பதில்லை. தருணம் சார்ந்த வெளிப்பாடுகளே போதும் அதற்கு.

அவ்வரசியல் நிலைபாடுகள் அற்றது. ஏனென்றால் அது அதிகாரத்தை நாடுவதில்லை. ஒருபோதும் ஒரு அரசியலதிகாரத்துடனும் நான் இணைந்துகொள்ளப் போவதில்லை. ஒரு அரசியலமைப்பிடமிருந்தும் ஒன்றையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. இந்த அரசியலை எழுத்தாளனின் இயல்பான எதிர்வினை எனலாம். பொதுவான அறவுணர்வின் வெளிப்பாடு எனலாம். அரசியல் கோட்பாடுகள் அல்ல பொதுவான அறவுணர்வும் நுண்ணுணர்வுமே எழுத்தாளனின் அரசியலை வகுக்கின்றன. அவன் சொல்வன பிழையாகப் போகலாம். அவன் உள்ளுணர்வு பொய்க்கலாம். ஆனாலும் அவன் குரல் முக்கியமானதே.

இத்தகைய தனிநபர் அரசியல் கொண்டவர்களே உலக அளவில் பெரும்பாலான எழுத்தாளர்கள். அதன்பொருட்டு எல்லா அரசியல்தரப்பினராலும் அவர்கள் ஒரே சமயம் வசைபாடப்படுவார்கள், ஒவ்வொருவரும் தங்கள் எதிரியின் தரப்பில் அவர்களைச் சேர்ப்பார்கள். ஆயினும் அந்தக்குரலும் ஓர் அரசியல்சூழலில் எழுந்தாகவேண்டும். சிலசமயம் அது மக்களின் குரலாக ஒலிக்கும். சிலசமயம் அது மக்களைக் கடந்து நின்றிருக்கும் தனிமனிதனின் குரலாக ஒலிக்கும். வரலாற்றின் பல தருணங்களில் அது மையக்குரலாகவும் ஆகியிருக்கிறது.

இங்கு நிகழ்வனவற்றில் என்னை உலுக்கியவை, எனக்கு ஏதேனும் சொல்வதற்கிருப்பவை சார்ந்து கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் சென்ற சிலநாட்களாக எதையுமே சொல்லவேண்டியதில்லை என்னும் உணர்வை அடைந்திருக்கிறேன். என் புனைவியக்கத்தை பொதுவாகச் சூழலின் காழ்ப்புகள் பாதிப்பதில்லை. ஆனால் இன்று அவ்வெல்லை அழிந்துவிட்டிருக்கிறது.

காஷ்மீர் பாலியல் வன்கொடுமை உட்பட பல நிகழ்வுகள் என்னை அலைக்கழிக்கின்றன. இவற்றில் இந்தியாவின் எளிய பொதுக்குடிமகனின் உணர்வுகளே என்னுடையவையும். பொதுவாக எழுத்தாளர்கள் பொதுவான மக்களின் உணர்வுகளையே தாங்களும் கொண்டிருப்பார்கள். அதையே பிரதிநிதித்துவம் செய்வார்கள். அவ்வுணர்வுகளைச் சொல்லலாம். ஆனால் இன்றிருக்கும் உச்சகட்ட இருமுனைச் சூழலில் எதற்கும் பொருளில்லை.எல்லாமே ஒருவகை எதிர்மறை உணர்ச்சிகளின் கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கின்றன.

தமிழ்ச்சூழலுக்கென சில தனித்தன்மைகள் உண்டு. பொதுவாக எழுத்தாளர்களை வசைபாடுவார்கள். எவ்வகையிலோ எழுத்தாளர்கள் இவர்களைச் சீண்டுகிறார்கள் என்பதே காரணம். வெறுப்பதற்கு உடன்பாடில்லாத அரசியல் ஒரு நிமித்தம்தான். இயல்பான வெறுப்புதான் அரசியலினூடாக வெளிப்படுகிறது. தனக்கு உடன்பாடில்லாத ஓர் அரசியலை, கருத்தை ஓர் எழுத்தாளன் முன்வைத்தான் என்பதனாலெயே அவ்வெழுத்தாளனை ஒருவன் முழுமையாக நிராகரித்து வசைபாடுவான் என்றால் அது அவ்வெழுத்தாளன் மீதான ஒவ்வாமை அல்ல, இலக்கியம் என்னும் அறிவியக்கம் மீதான ஒவ்வாமைதான். தமிழகத்தில் குறைந்தது இருநூறாண்டுகளாக நிறைந்திருக்கும் உளநிலை அது.

இணையவெளியை நோக்கினால் தெரியும், ஒரே சமயம் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் என் மேல் வசை பொழிந்துகொண்டிருப்பதை. இரண்டும் சமம்தான். வலதுசாரிகளின் வெறுப்பு சமீபமாக கொஞ்சம் அதிகம். அது நான் எழுத்தாளனின் அரசியலைக் கொண்டிருப்பதன் சான்று.

என் எழுத்துக்களினூடாக நான் முன்வைப்பது மிகமிக எளிய ஒன்றை. இந்துமரபு, இந்து மெய்யியல் என்பது உலகின் பண்பாட்டுச் செல்வங்களில் ஒன்று. மானுடம் உருவாக்கி எடுத்த சாதனை. அதை வசைபாட, இழிவுசெய்ய, அழிக்க ஒருவகையான பித்தெடுத்த முயற்சிகள் நம்மைச்சூழ்ந்து நிகழ்ந்துவருகின்றன. அதை சற்றும் அறியாதவர்களால் அது திரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு சிறுமைசெய்யப்படுகிறது. அவர்களுடன் நாம் விவாதிக்கவே முடியாது. அறியாமையுடன் வெறுப்பும் ஆணவமும் கலக்குமென்றால் அங்கு வாயில் இல்லை, மூடப்பட்ட சுவரே உள்ளது.

இந்து மரபின்மேல் ஆர்வமுள்ளவர்கள், தத்துவம் கலை மெய்யியல் சார்ந்து அதை அறியவிழைபவர்களுக்காகவே நான் பேசுகிறேன். அவர்களின் ஐயங்களுடன் விவாதிக்கிறேன். சேர்ந்து நானும் கற்றுக்கொள்கிறேன். அதேசமயம் அதை இந்துத்துவ அரசியலுடன் கலக்கலாகாதென்று தெளிவாக இருக்கிறேன். அதன்பொருட்டு சமரசமில்லாமலும் செயல்படுகிறேன்.

ஏனென்றால் அதை இந்துத்துவ அரசியலுடன் இணைத்தால் அவ்வரசியலின் அனைத்துச் சீரழிவுகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் சிக்கல்களுக்கும் இந்துமரபை பொறுப்பாக்கவேண்டியிருக்கும். இந்துத்துவ அரசியல் இன்றிருக்கும் நாளை அழியும். இந்து மெய்யியல் என்றும் இங்கிருக்கும். ஏதோ ஒருவடிவில். மானுடம் தான் பெற்ற மெய்மையை ஒருபோதும் தவறவிடாது. இந்த வேறுபாட்டை மீண்டும் மீண்டும் சொல்லி நிலைநாட்டுகிறேன். ஆகவே இந்துத்துவர்களால் வசைபாடப்படுகிறேன். இந்து மரபை வெறுக்கும், அதன் அழிவின்மேல் வெற்றிகொண்டாட நினைக்கும் இடதுசாரிகளாலும் வசைபாடப்படுகிறேன்

செய்வதென்ன என்று நன்கறிவேன் என்பதனால் எனக்கு சோர்வோ சலிப்போ இல்லை. பயனுற செய்யவேண்டும் என்பதே என் எண்ணம். செய்ய முடிந்தவற்றைச் செய்தோம் என்னும் நிறைவை மட்டுமே சென்றடைய விரும்புகிறேன்

கதா உபநிடதம் சொல்கிறது, மெய்மையின் பாதை சவரக்கத்தியின் கூர்முனைமேல் நடப்பதுபோல என்று. க்ஷுரஸ்ய தாரா என்ற அந்த மந்திரம் அடிக்கடி நினைவிலெழுகிறது.

ஜெ

***

முந்தைய கட்டுரைசுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்
அடுத்த கட்டுரைவெண்முரசு புதுவைக் கூடுகை