குரங்குத்துணை -கடிதங்கள்

 

pritchett

குரங்குத்துணை

அன்புள்ள ஜெ,

 

உங்கள் தளத்தில் சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்த ‘குரங்குத்துணை’ என்ற மொழியாக்கக்கதை தொடர்பாக சில கேள்விகள்.

 

  1. இந்தக்கதை மொழியாக்கம் என்று அல்லாமல் கதைச்சுருக்கம் என்று அளிக்கப்பட்டுள்ளது. மூலத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் மூலத்தின் உணர்வுகளெல்லாம் சிறப்பாககடத்தப்பட்டுள்ளது என்றாலும் வரிக்கு வரி மொழிபெயர்ப்பாக இல்லை. சில இடங்கள் விடப்பட்டுள்ளது. தமிழ் வாசகனுக்குபல இடங்கள் முக்கியமற்றவை என்றாலும் சில முக்கியமானவையும் கூட (கதைசொல்லி குரங்கை பற்றிச் சொல்லும் போது மூலத்தில் உள்ள ஒரு வரி இது – அதன் பார்வை “a look, relentless and ancient” என்று வருகிறது. காலம்காலமாக மனிதர்களை தொடர்ந்து வரும் பார்வை என்ற அர்த்தம் வருகிறது. மொழியாக்கத்தில் இது வரவில்லை. அதே போல் மூலக்கதையில் ஆசிரியன் ஒரு கட்டம் வரை டிம்பர்லேக்கை பார்த்து பிரமிக்கிறான்.  மெல்ல மெல்ல தான் அவன் ஏமாற்றம் அடைகிறான். மொழியாக்கத்தில் முதலிலிருந்தே ஆசிரியன் கடுப்பாகவே இருக்கிறான்). சில சொற்றோடர்கள் சேர்க்கப்பட்டுள்ளன (‘மாமி பேயறைந்தது போல் ஆகி மன்னிப்புக்கோரினாள்’ – இந்த வரி மூலத்தில் இல்லை). இந்த வேறுபாடுகள் கதை விரிவதை கெடுக்கவில்லை என்றாலும், தமிழ்க்கதை ஆங்கிலக்கதையின் உணர்வுத்தளத்திலிருந்து வழுவவில்லை என்றாலும், தமிழ் வாசகர்களுக்கு அணுக்கமான மொழியில், தமிழில் எழுதப்பட்ட கதையை போலவே வாசிக்கக்கிடைக்கிறது என்றாலும், மற்றோரு மொழிக்கதையை ஆசிரியர் தன் மொழியில் மீள எழுதியது போலவே இந்த கதை உள்ளது. மூல மொழியின் மொழியடையாளங்கள் பெரும்பாலும் இல்லை. என் கேள்வி, இந்த வகை ‘சுருக்கமான’ மொழியாக்கங்களின் இடம் என்ன? இவை மொழியாக்கம் என்று ஆகுமா? உரைநடை மொழிபெயர்ப்பு என்பது எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ மூலத்தை ஒட்டியே, வழுவல்கள் இல்லாமல் செய்யப்படவேண்டும் என்ற கோட்பாடுகளுடன் சேர்த்து இதை எப்படி புரிந்துகொள்வது? புனைவு மொழியாக்கம் புனைவுத்தன்மை குலையாமல் இருக்கவேண்டும், உண்மைதான், ஆனால் அதில் எந்தளவிற்கு மொழிபெயர்ப்பாளன் புனைக்கதையாடியாக, ஆசிரியக்குரலில், ஊடுருவலாம்?

 

  1. ஒரு கதையின் தலைப்பென்பது அந்தக்கதை வாசிப்புக்கான சாவியும் கூட. பல மொழியாக்கக்கதைகளின் தலைப்புக்கள் மூலத்திலிருந்து மாற்றப்பட்டு வாசித்திருக்கிறேன். இந்தக்கதையை முதலில் ஆங்கிலத்தில் வாசித்தபோது பெயரை கவனிக்கவில்லை. குரங்கு படிமமாகவந்தவுடன் ‘The Ape’ என்று பெயர் இருக்கும் என்று நினைத்தேன். ‘The Saint’ என்று பார்த்ததும் ஒரு பிரம்மிப்பு ஏற்பட்டது. அங்கதமாக இடப்பட்ட தலைப்பாக நான் நினைக்கவில்லை. டிம்பர்லேக்கின்இதயத்தை மெல்லமெல்ல தின்றுகொண்டிருக்கிறது குரங்கு. ஆனால் அவன் தன் முகபாவனைகளை, சொற்களை, அங்கஅசைவுகளை சட்டத்தில் வைத்தாற்போல் ஒரு யோகம் போல் கையாள்கிறான். துளிக்கூட இந்த உலகில் தீமை என்று ஒன்றில்லை என்று ஒவ்வொரு கணமும் தன் உடல்வழியாக, அதில் தான் செயலாற்றும் முறைமைகள் வழியாக, தன்னை நம்பவைத்துக்கொண்டிருக்கிறான். அவன் பொன்சுமந்து நிற்கும் கணமாக கதையில் வரும் இடத்தில் ஆசிரியன் ஒரு புனிதனை பார்க்கிறான். அந்த பைத்தியக்கார புனிதனே இக்கதையின் மையம். துணையாக வரும் குரங்கை நாம் மையப்படுத்தினோமென்றால் கதையின் விசை மாறுபடுகிறது. என் கேள்வி, ஒரு கதையில் அதன் தலைப்பின் பங்கு என்ன? மொழிபெயர்ப்பாளருக்கு தலைப்பை மாற்ற சுதந்திரம் உள்ளதா?

 

  1. இது கேள்வி அல்ல, கவனித்தது. இந்தக்கதை உங்கள் ‘போதி’ கதையை நினைவுக்கெழுப்பியது. மொழியும் அருகருகே வைக்க முடிகிறது. இரண்டு கதைகளும் நான் எப்படி அவிசுவாசியானேன் தெரியுமா என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. இளவயதின்தத்துவசார் தடுமாற்றங்கள். கூடவே எப்போதும்வரும் சந்தேகம், ஒரு கட்டத்தில் ஏமாற்றம் என்ற கதை நிகழ்வு. மகாசன்னிதானத்தின் வீங்கியக்கால் ஒரு வகையில் குரங்குக்கு சமானமான படிமம். வீங்கிய காலுடன் அவர் அந்தச் சுவடியறையில் வரலாற்றின் எடையை தலைக்குமேல் தொங்கிக்கொண்டு அமர்ந்திருக்கும் காட்சி டிம்பர்லேக் ஈரத்தை உலரவிடாமல் மகரந்தத்தில் புரண்டு பொன்னிறமாக எழும் காட்சியின் எழுச்சியை கொடுத்தது. இருவரும் tragic/comic அம்சங்கள் கொண்டவர்கள். இரண்டு கதைகளிலும் கதைசொல்லிகளுக்கு நிகழ்வது ஒரு ஏமாற்றம், ஆனால் ஒரு ஞானத்தருணமும். போதி கதை முடிவில் சொற்பமான ஒரு பதவிக்காகத்தான் தன் காலை துண்டிக்காமல் பெறுவலியுடன் வாழ்கிறார் அவர் என்று தெரியும்போது ஒரு நிராசை இருந்தாலும், அந்த வலியை தேர்ந்தெடுத்து அதனூடேயே வாழ்வதும் ஒரு மாசறுத்தல் இல்லையா? அவர் அறியாமலேயே அது நிகழ்கிறதென்றாலும் கூட? இந்தக்கதையும் அந்த சீழ்வடியும் காலை பிரதானப்படுத்தவில்லை. அதில் கண்டடையும் ஞானமான போதி தான் இதன் மையம் என்று வாசித்தேன்.

 

 

  • .

 

நன்றி,

சுசித்ரா

 

 

அன்புள்ள சுசித்ரா

 

சரியாகச் சொன்னால் கதையை அப்படி சுருக்கி, சுதந்திரமாக மொழியாக்கம் செய்யக்கூடாது. அது மொழியாக்கம் அல்ல, கதையைப்பற்றிய சிறு குறிப்பு மட்டுமே. ஓர் ஆசிரியரை, ஒரு படைப்பை அறிமுகம் செய்வதற்காக அப்படி சுருக்கி அளிக்கலாம். அது அறிமுகம் என்பதற்கு அப்பால் எவ்வகையிலும் மதிப்புக்குரியது அல்ல. அதை எக்காரணத்தாலும் ஒரு மொழிபெயர்ப்பாளன் செய்யக்கூடாது. தனக்கென நடையும், விமர்சனப்பார்வையும் கொண்ட எழுத்தாளன் தன் இலக்கியவிவாதத்தின் ஒருபகுதியாகச் செய்யலாம். சென்றகாலங்களில் பல பிரிட்டிஷ் இலக்கியவாதிகள் செய்திருக்கிறார்கள். முறையான மொழியாக்கம் உருவாக்கும் பண்பாட்டுத்தடை, சூழல்மாறுபாட்டின் தடை நிகழாமல் ஒருவரை இன்னொரு சூழலுக்கு கொண்டுசென்று பொதுவாசகர்களுக்கு அறிமுகம் செய்வது மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும்.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு என் முழுக்கோடு ஒய்.எம்.சி.ஏ நூலகம் சென்றிருந்தேன். அம்மாவுக்காக நூல்கள் எடுத்துவந்த நினைவு. கூடவே நான் வாசித்த நூல்கள். அந்நூலகம் இப்போது அழிந்துவிட்டது. அந்த நினைவு அளித்த உத்வேகத்தில் இன்று பேசப்படாத சில எழுத்தாளர்களை அறிமுகம் செய்யலாமே என நினைத்தேன். எல்லாருமே பிரிட்டிஷ் எழுத்தாளர்கள். பழைய ஸ்காட்டிஷ் பாதிரியார்களால் குமரிமாவட்டச்சூழலில் மட்டும் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டவர்கள். அதன்பொருட்டு எழுதிய சில கட்டுரைகளில் ஒன்று அது. ஆனால் பின்னர் அம்முயற்சி நின்றுவிட்டது

 

ஜெ

முந்தைய கட்டுரைகையை தொடாதே!
அடுத்த கட்டுரைபேய்க்கிழக்கு