குற்றவாளிகளின் காவல் தெய்வம்-கடிதங்கள்

Cartoon-justice-scales

 

 

 

குற்றவாளிகளின் காவல்தெய்வம்

அன்புள்ள ஜெ

 

காந்திஜியின் கனவுகளுக்கு நேர் மாறாய் ஆண்கள் கூட பாதுகாப்பாக செல்ல முடியாத அள்விற்கு நமது  ஜனநாயகம் பாழ்பட்டு கிடக்கிறது. இதற்கு புறையோடி போயிருக்கும் லஞ்சம் ஊழல் இவற்றுடன் தாமதிக்கப்படும் நீதியும் ஒரு காரணமாய் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்பொழுதெல்லாம் நீதி மன்றத்திற்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் நீதியை தாமத்ப்படுத்தவே செல்கிறார்கள் என்பதே உண்மை.

 

 

ஒரு வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு இருப்பவரை  ஒப்பந்தத்தின்படி மூன்று மாதம் நோட்டிஸ் கொடுத்து காலி செய்ய சொன்னால், குடியிருப்பவர் நீதி மன்றத்தை உடன் நாடுகிறார். நீதீ மன்றத்தில் அவ்வழக்கு வாய்தாக்களில் இழுக்கடிக்கப்பட்டு மூன்று நான்காண்டுகள் வரை நடக்கக் கூடும். அதுவரை வாடகையை அவர் நீதி மன்றத்தில் செலுத்துவார். உரிமையாளருக்கு குடியிருப்பவரை காலி செய்யவும் முடியாமலும் வாடகையை உரிய காலத்தில் பெறவும் முடியாமல் அல்லாடுவார். இதனால்தான் இப்பொழுதெல்லாம் இது போன்ற நிகழ்வுகளில் நீதி மன்றங்களை புறக்கணித்து மக்கள்அடியாட்களை  நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

 

 

தனி பட்ட நபர்கள் மட்டுமல்ல. அரசு வங்கிகள் கூட கொடுத்த கடனை சட்டப்படி வசூல் செய்ய கால தாமதம் ஏற்படுகிறது என்று எண்ணி தனியார் (அடியாள்) நிறுவனங்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கின்றன. தாமதிக்கப்படும் நீதியால் குற்றங்கள் அதிகரிக்கும் என்பதற்கு இது போன்று எண்ணற்ற உதாரணங்களை சொல்லலாம். ஐந்து க்ரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கும் ஒருவருக்கு ஆறாவது வழக்கிலும் ஜாமின் வழங்கப்படுவது நீதிக்கு முரணான ஒன்று எனவேதான் வழக்கு முதல் நாள் விசாரணைக்கு வரும் பொழுதே தீர்ப்பு தேதியை அறிவிக்கும் நடை முறையை நீதீ மன்றங்கள் கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் விரைவான நீதி கிடைத்து குற்றங்கள் குறையும் வாய்ப்பு ஏற்படும் என்று கருதுகிறேன்

 

கொ.வை.அரங்கநாதன்

 

 

அன்புள்ள ஜெ

 

நான் வழக்கறிஞராகப் பணியாற்றுபவன். ஆகவே பெயரில்லாமல் இதை எழுதுகிறேன்.

 

நம் நீதித்துறை ஊழலில் சீரழிந்துள்ளது என்பது உண்மை. பணம்பெறாமல் அளிக்கப்படும் தீர்ப்புகள் 20 சதவீதத்துக்கும் குறைவு. பணம்பெறுவது தவறென்றும் கொள்ளப்படுவதில்லை. நீதிமன்றவளாகங்களில் எப்போதுமே எவரெவர் எந்தெந்த வழக்குகளுக்காக எவ்வளவெல்லாம் லஞ்சம் பெற்றார் என்பதே பேசப்படுகிறது. இந்திய அளவில் சமீபத்திய மிகப்பெரிய லஞ்சம் எது என்று தெரியாத எவரும் இருக்கமாட்டார்கள். நமக்குச் சாதமானவர் லஞ்சம் கொடுத்து நீதி வாங்கினால் அதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. கல்வித்துறை உட்பட அனைத்தும் ஊழலில் சிக்கி நாறிக்கிடக்கும்போது நீதித்துறை மட்டும் எப்படி இருக்கும்?

 

ஆனால் குற்றவாளிகள் விடுதலை ஆவது முக்கியமான ஒரு காரணத்துக்காக. பப்ளிக் பிராஸிக்யூட்டர்கள் இங்கே அரசால் நியமிக்கப்படுகிறார்கள். எந்தத் தகுதியுமில்லாமல் அரசியல்வாதிகளுக்கு வால்பிடித்து அலைபவர்களே அந்தப்பதவியைப் பெறுகிறார்கள். இன்றைக்கு முழுக்கமுழுக்க அரசியல்பதவி அது பெரும்பாலானவர்களுக்கு மொழியே கூட தெரியாது.சட்டமும் நடைமுறையும் என்னவென்றே தெரியாது. ஆகவே போலீஸ் நினைத்தால்கூட குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பமுடியாது. அரசு சாட்டும் குற்றங்கள் எந்த முறையும் இல்லாமல்தான் முன்வைக்கப்படும். குற்றவாளிசார்பில் நல்ல வக்கீல் வந்து தீவிரமாக வாதாடுவார். பப்ளிக் பிராசிக்யூட்டருக்கு ஆர்வமும் இருக்காது. வழக்கைப்பற்றி எதுவும் தெரிந்தும் இருக்காது. இதுதான் இங்கே குற்றவாளிகள் எளிதாக விடுதலை பெற்று வெளியே செல்வதற்கான காரணம்

 

எஸ்.

 

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-29
அடுத்த கட்டுரைசதிரும் பரதமும்