வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-26

wild-west-clipart-rodeo-31விந்தியமலைகளைக் கடந்து வணிகர் செல்லும் பாதையை விட்டு விலகி சதாரவனத்தை அடைந்து அங்கிருந்து தன்னந்தனியாகச் சென்று சுகசாரி மலையை வியாசர் அடைந்தபோது தலைக்குமேல் பறந்துசென்ற கிளி ஒன்று வேதச்சொல் கூவிச்சென்றது. உட்கடந்து செல்லுந்தோறும் மேலும் மேலும் கிளிகள் வேதம்பாடி மரங்களில் எழுந்தும் அமர்ந்தும் காற்றில் சிறகசைத்துச் சுழன்றும் சூழ்ந்திருந்தன. அவற்றைக் கண்டதுமே அவர் உள்ளம் மலர்ந்து முகம் புன்னகை கொண்டது. அண்ணாந்து அவற்றை நோக்கியபடி நடந்தார்.

தன் மைந்தனை காண்பதற்குள்ளாகவே அவன் உள்ளத்தை காணக்கிடைத்தது என எண்ணினார். இங்கே இக்கிளிகள் தலைமுறைகளென தொடுத்துக்கொண்டு என்றுமிருக்கும். வேதம் அனலென பற்றிக்கொள்ளும் இயல்புடையது. தன் அகத்தை காடென்று நிறைத்துப் பரப்பியவன். என் காவியத்தை மானுடர் நவிலவேண்டும். இவன் சொல்லை கிளிகள் நிலைகொள்ளச் செய்யும். ஒவ்வொரு அடிவைப்பிலும் மைந்தனைக் காணும் விழைவு மூத்து அவர் நடக்கமுடியாமலானார். மூச்சிரைத்தும் கால்தடுமாறி நின்று மீண்டும் விரைவுகொண்டும் நடந்தார்.

வேதமுரைக்கும் கிளியின் குரலில் எந்நிலையிலும் மானுடர் ஓதுகையில் எழும் மாசு இல்லை என்பதை அவர் உணர்ந்தார். ஒன்றன்மேல் ஒன்றென விழைவின், வேட்டலின், பொருளுணர்தலின், புலனறிதலின், தன்னிலையின் ஐந்து மாசுக்கள் வேதியரில் அமைகின்றன. வேதம் உட்சுருங்கி ஓங்காரமென்றாகி அனலென்றாகி ஓதுவோன் உள்ளத்தை எரித்தழித்த பின்னரே அம்மாசு அகல்கிறது. ஆனால் வேதச்சொல் திகழ்ந்த செவ்வலகு கொண்ட கிளி வேதச்சொல்லாகவே மாறிவிட்டிருந்தது. பச்சை இலைமுனையில் செந்தளிர் என எழுந்த அதன் நா. பொருள்திகழ் வேதச்சொல்லில் எழுந்த வேதமுதல் ஒலி.

சுகவனத்திற்குள் அவர் நுழைந்தபோது தன்னிலையை முற்றாக இழந்து “மைந்தா! மைந்தா!” என்று கூவிக்கொண்டிருந்தார். மைந்தன் மறுமொழி சொல்பவனல்ல என்று அவர் அறிந்திருந்தார். “கிள்ளைகளே, என் மைந்தன் எங்கே?” என்று கூவினார். “என் மைந்தனிடம் சொல்லுங்கள், அவன் தந்தை நூறாண்டுகள் காத்த விழிகளுடன் வந்துள்ளேன் என்று.” மரநிழல்களில், மலையிடுக்குகளில், அருவிக்கரைகளில், குகைகளில் அவனை தேடித்தேடி அலைந்தார். எக்கணமும் அவனை கண்டுவிடுவோம் எனும் இனிய பரபரப்பாக இருந்தது அத்தேடல். அவன் இருக்க வாய்ப்புள்ள அனைத்திடங்களிலும் அவன் உருவெளி கண்டு உவகைகொண்டு தணிந்தது. அவன் இல்லாத இடங்கள் என அவை தங்களை காட்டத் தொடங்கியதும் எங்கே என்னும் பதைப்பாக ஆகியது. அங்கில்லையோ என்னும் அச்சமாக வடிவெடுத்தது. இறுதியில் அங்கில்லை என்னும் உள்ளுணர்வாக ஆகியது.

உடைந்து அமர்வதற்குரிய எல்லையை அடைந்ததும் பதறியபடி ஒரு மரத்தடியில் கால் இற்று வீழ்ந்தார். “தெய்வங்களே, என் மைந்தன் எங்கே?” என்று கூவினார். “விண்ணாளும் பறவைகளே, மண்ணில் நிறைந்த விலங்குகளே…” என்று அழைத்து கலுழ்ந்தார். பின்னர் சீற்றம் கொண்டு “சொல்லரசி, எழுக இங்கே! என் மைந்தன் எங்கே?” என்று சினந்தார். கண்ணீர் வழிய பற்கள் கிட்டிக்க கை அசைத்து “எழுக! எழுக!” என கூச்சலிட்டுக்கொண்டிருந்த அவர் முன் சிறுகிளி ஒன்று வந்தமர்ந்தது. மணிவிழிகளை சுழற்றியபடி “பீவரி! பீவரி” என அது மிழற்றியது. “யார்? எவரைப்பற்றி சொல்கிறாய்?” என்று வியாசர் கேட்டார். “பீவரி! பீவரி!” என்றது கிளி.

அது ஒரு பெண்ணின் பெயர் என உணர்ந்த வியாசர் “யார் அவள்?” என்றார். சிறகடித்தெழுந்து அகன்றபடி “பீவரி!” என்றது அக்கிளி. அங்கே அமர்ந்திருந்த நான்கு கிளிகள் “பீவரி! பீவரி!” என்றன. அவன் உள்ளத்தில் இருந்தே சொல்பெறுகிறீர்கள். இப்பெயர் அவனுள் எப்படி எழுந்தது, அவன் நாவில் ஏன் ஒலித்தது என்று வியாசர் வியந்தார். அவ்வினாவுடன் அங்கிருந்து கிளம்பி சுகவனத்தைக் கடந்து விந்தியமலையை அடைந்தார். அங்கே சந்தித்த முனிவர்களிடமும் சூதர்களிடமும் அப்பெயருள்ள எவரையேனும் அறிவார்களா என கேட்டார்.

இறுதியில் கூர்மவனத்தில் அவர் சந்தித்த ஒரு முதுசூதர் புலககுலத்தைச் சேர்ந்த சப்தம சகிஷ்ணு முனிவரின் மகளின் பெயர் பீவரி என்றும் அவளை தான் இளமையில் கண்டிருப்பதாகவும் சொன்னார். புலகமுனிவரின் இருப்பிடத்தை கேட்டறிந்து மலைகளைக் கடந்து அளகநந்தையின் கரையில் அமைந்த புலகவனத்தை சென்றடைந்தார் வியாசர். தொல்புலகர் பிரம்மனின் மைந்தராகிய பிரஜாபதி. அவர் தட்சனின் மகள் க்ஷமையை மணந்து கர்தமர், கனகபீதர், உர்வரிவதர் என்னும் மைந்தர்களை பெற்றார். அவர்களின் இளையவள் பீவரி. மூதன்னை பீவரியிலிருந்து எழுந்த கொடிவழியில் நூற்றியெட்டாவது புலகரான சகிஷ்ணு என்னும் முனிவரின் மகளாகப் பிறந்தவள் இளையோளான பீவரி.

புலகர் தன் தென்றிசைப் பயணத்தில் விந்தியனைக் கடந்து சென்றபோது கிளி ஒன்று தூய வேதச்சொல் உரைத்து பறந்துசெல்வதை கண்டார். அவர் அதை பின்தொடர்ந்து சுகசாரி மலைகளைக் கடந்து சுகவனத்தை அடைந்தார். அங்கே உடலில் ஆடையில்லாதவனாக, இருத்தலும் இன்மையும் நிகரென வாழ்ந்த இளமைந்தனை கண்டார். அவன் சொல்முனிவர் வியாசரின் மைந்தன் என அவர் அறிந்திருந்தார். அவன் வடிவழகையும் கண்களில் நிறைந்திருந்த உலக மாசிலா ஒளியையும் கண்டு உவகை கொண்டார்.

வருவிருந்தை வரவேற்ற சுகன் பசித்திருந்த முனிவருக்கு கிளிகள் கொணர்ந்த கதிர்க்குலைகளையும் கனிகளையும் அளித்தான். பசியுடன் அவற்றைப் பெற்று உண்ண கைநீட்டிய புலகர் திடுக்கிட்டு எழுந்து நின்றார். சுகன் “எதை அஞ்சுகிறீர்கள், முனிவரே?” என்றான். “உங்கள் பின்பக்கம் பெருநிழல்” என அவர் சுட்டிக்காட்டினார். அவன் திரும்பி நோக்கியபோது தன் நிழலைத்தான் கண்டான். “உங்கள் நிழலென எழுந்து நின்றிருப்பது ஒரு கருநாகம்” என்றார் புலகர். சுகன் மீண்டும் திரும்பி நோக்க “திரும்பி நோக்கினால் காணமுடியாது அதை, எந்நிலையிலும் உங்களுக்குப் பின்னால்தான் நீண்டிருக்கும். ஈரமான பாறைவழுக்கின் முன் சென்று நின்று நோக்குக!” என்றார் புலகர்.

அருவியருகே சென்று நின்று கரிய மெழுக்கில் தன்னை நோக்கிய சுகன் தனக்குப் பின்னால் ஒளிரும் செவ்விழிகளுடன் கரிய படமெடுத்து நின்ற மாநாகத்தை கண்டான். கையில் ஒரு பிடி நீரெடுத்து “சொல்க, யார் நீ? இக்கணமே சொல்லவில்லை என்றால் தீச்சொல்லிடுவேன்” என்றான். “முனிவரே, என் பெயர் தீர்க்கன். நான் ஆழுலகங்களிலிருந்து எழும் இருளின் தூதன். உங்கள் உயிர் பிரிந்ததும் அழைத்துச்செல்ல வந்தவன். உங்கள் அன்னையின் நெடுமூச்சிலிருந்து உருவானவன்” என்றது நாகம்.

“என் அன்னை இருளுலகிலா இருக்கிறார்?” என்று சுகன் திகைப்புடன் கேட்டான். “ஆம், இளமைத்துறவுகொண்ட நீங்கள் அவளுக்கு அன்னமும் நீரும் அளிக்கவில்லை. மைந்தர் இருக்க தந்தை அளித்த நீர் அங்குவரை எட்டவில்லை. அவள் தன் நல்வினையின் பயனால் மூச்சுலகுக்கு சென்றாள். அங்கே இருந்த வினீதன் என்னும் கந்தர்வன் அவளிடம் அவள் மைந்தன் வேளாத் துறவியென ஆகிவிட்டான் எனவே அவளுக்கு எப்போதும் அன்னமும் நீரும் அளிக்கப்பட வாய்ப்பில்லை என்றான். அத்துயரால் எடைகொண்டு அவள் அழுந்தி நாகங்கள் வாழும் ஆழுலகுக்கு வந்துசேர்ந்தாள். விழிநீருடன் காத்திருக்கிறாள்” என்றான் தீர்க்கன்.

திகைத்து திரும்பி நோக்கிய சுகன் புலகரிடம் “முனிவரே, நான் செய்யவேண்டியதென்ன?” என்றான். “ஈன்றோர்க்கு செய்யவேண்டிய கடன் எஞ்சியிருக்க துறவுபூணுதல் எவருக்கும் நெறியல்ல. உங்கள் தந்தைக்கு மைந்தர் பிறருண்டு. அன்னைக்கு நீங்கள் மட்டுமே. துறவொழிக! முறைப்படி கன்னியை மணந்து மைந்தரைப் பெறுக! உங்கள் அன்னைக்கும் உங்களுக்கும் நீர்க்கடன் பொறுப்பை தலைமுறைகளுக்கும் கையளித்துவிட்டு மனைவியின் ஒப்புதல்கொண்டு துறவு கொள்க!” என்றார் புலகர். சுகன் “ஆம், அதை செய்கிறேன்” என்றான்.

“என் மகள் பீவரியை உங்களுக்கு அளிக்கிறேன். எவ்வகையிலும் உங்களுக்கு இணையானவள். உங்கள் வருகையையும் செல்கையையும் உணரும் ஆற்றல்கொண்டவள்” என்று புலகர் சொல்லளித்தார். சுகன் அவருடன் அளகநந்தையின் கரைக்குச் சென்று துறவறத்தை கைவிட்டு சுகக்குடியை தன்னதென்று ஏற்றான். அறுசுவை உணவுண்டு, மலர்சூடி, நறுமணம்பூசி உலகியலில் நுழைந்து புலகரின் மகள் பீவரியை மணந்தான். அங்கே காட்டில் அரக்கும் கனிகளும் தேடிச்சேர்த்து கொண்டுவந்து விற்று குடிபுரந்தான். அவனுக்கு பீவரியில் நான்கு மைந்தர்கள் பிறந்தார்கள்.

நெடும்பயணம் செய்து அளகநந்தையின் கரையிலமைந்த புலகவனத்திற்கு வியாசர் சென்றுசேர்ந்தார். அங்கே பீவரியின் பெயர்சொல்லிக் கேட்டு அறிந்து அவள் வாழ்ந்த குடிலுக்கு சென்றார். அவர் அங்கு செல்வதற்கு முன்னரே சுகர் பீவரியிடம் ஒப்புதல் பெற்று மீண்டும் துறவுபூண்டு இமயமலையேறி சென்றுவிட்டிருந்தார். பீவரியில் சுகருக்கு கிருஷ்ணன், கௌரப்பிரபன், ஃபூரி, தேவஸ்ருதன் என்னும் மைந்தர்கள் பிறந்து தோள்விரிந்து நின்றிருந்தனர். கரிய உடலும் ஒளிகொண்ட விழிகளுமாக தன் இளமைவடிவென்று நின்ற கிருஷ்ணனை தோள்தழுவி கிருஷ்ண துவைபாயன வியாசர் விழிநீர் வடித்தார். அவர்களிடம் விடைபெற்று மைந்தனைத் தேடி மேலும் மலையேறிச் சென்றார்.

புலகர் இமயமலைமுடியாகிய கின்னர கைலையை சிவ வடிவமாக வழிபட்டவர். புலகரிடம் நுண்சொல் பெற்று கின்னர கைலையை வழிபட்டு மலைமுடிமேல் முகிலென எழுந்த மூவிழியனின் அழைப்பை ஏற்று இமயமலைகளின்மேல் ஏறிச்சென்ற சுகர் நூற்றெட்டு முடிகளைக் கடந்து அத்ரிசிருங்கத்தின் மேலேறி நின்று கைலை முடியை நோக்கி தவம் செய்தார். நூற்றெட்டாம் நாள் அத்ரிசிருங்கம் இரண்டாக வெடித்தது. சுகர் அனலுருவென எழுந்து ஆலமர வடிவில் வளர்ந்து விண்தொட்டு நின்றார். வானில் அவரை வரவேற்கும் பொருட்டு கொம்புகளும் சங்குகளும் முரசுகளும் முழங்கின.

பதினெட்டு நாட்கள் அவர் சுடர்கொண்டு நின்றிருந்தார். விண்ணில் இரு சூரியன்கள் என பகலில் தெரிந்தது. இரவில் புதுக்கதிரோன் கிழக்கெழுவதுபோல் தோன்றியது. பின்னர் அவர் மேகத்தீற்றலாக மாறி வெளியில் கரைந்தபோது பொன்னிறத்தில் மழை பெய்து மலையடுக்குகள் நனைந்தன. பெருமழை என வலுத்து மலைக்குவடுகள் அனைத்திலும் குளிர்ந்த அருவிகள் பொழிந்தன. மழை ஓய்ந்த அமைதியில் அனைத்து இலைகளும் நாவென்றாகி ஓம் ஓம் ஓம் என சொட்டிக்கொண்டிருந்தன.

வியாசர் அத்ரிசிருங்கத்தை சென்றடைந்தபோது அக்கதையை சொன்னபடி முனிவர்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். “வியாசரே, மிகச் சிலரிலேயே சொல்கனிந்து ஓங்காரமென்றாகிறது. சுகமுனிவர் வேதம் தன் முழுமையைக் கண்டடைந்த பீடம். எங்கள் நல்லூழால் அவர் இங்கு வந்தார். எங்களுடன் தங்கினார். கைலைக்குச் செல்லும் வழியேதென்று கேட்டார். கைலையை வணங்குவதற்கு ஆயிரம் இடங்கள், செல்வதற்கு அத்ரிமலை ஒன்றே வழி. அங்கிருந்து விண்ணவர் அழைத்துச்செல்லவேண்டும் என்றோம். கைலையை நோக்கி நூற்றெட்டுநாள் இங்கே தவமிருந்தார். ஒருநாள் அத்ரிமலைக்கு செல்வதாகச் சொல்லி விடைபெற்று கிளம்பினார். அதை நோக்கிக் கிளம்பிய எவரும் சென்றடைந்ததில்லை என்றோம். செல்வதொன்றே என் கடன் என்றபின் வணங்கி விடைபெற்றார்” என்றார் கௌசிக காலகர்.

வசிட்ட உத்புதர் “அவர் சென்றடைந்தார் என்பதை எங்கள் ஆசிரியர் முதலில் உணர்ந்தார். அவர் அங்கே தன்னுள் சொல்லிக்கொண்டிருந்த ஊழ்கநுண்சொல் இரவுகளில் தொலைவிலெழும் இடிமுழக்கமென ஒலித்துக்கொண்டிருந்ததை அவரே முதலில் கேட்டார். பின்னர் மலைகள் அச்சொல்லை முழங்கத் தொடங்கின. அவருடைய தவம் பொலிந்தபோது அத்ரிசிருங்கம் வெண்குடை சூடியது. அதன்மேல் ஏழுவண்ண வில் ஒன்று எப்போதும் வளைந்து நின்றிருந்தது. அவருடைய தவம் மூப்பு கொள்ளும்தோறும் நிலம் அதிரலாயிற்று. நீரில் அலைவளையங்கள் எழுந்தபடியே இருந்தன. பெரும்பாறைகள் நிலைபெயர்ந்து மலைச்சரிவில் உருண்டன. வளைகளின் ஆழத்தில் வாழும் சிற்றுயிர்கள் வெளியே வந்து திகைத்து நோக்கின” என்றார்.

காசியப சூக்தர் “நாங்கள் எங்கள் விழிகளால் கண்டோம், மலைகளுக்குமேல் செவ்வொளியாலான மலை என அவர் நின்றிருப்பதை. எட்டுத் திசைகளிலும் எழுந்த விண்ணின் முரசொலியை ஏற்று மலைமுகடுகளும் முரசுகளாயின. மின்னல்கள் வெட்டி மலைச்சரிவுகள் அதிர்ந்துகொண்டிருந்தன. பதினெட்டு நாட்கள் இங்குள்ள அனைவரும் மலைமுடியை நோக்கியபடி வேதச்சொல் உரைத்தபடி நோன்பிருந்தோம். மலைவிளிம்புகளில் வரையாடுகளும் வெண்சிறுத்தைகளும் விழிதிகைத்து நோக்கி அமைந்திருந்தன. பறவைகள் விண்ணிலெழவில்லை. நீர்ப்பறவைகள் சிறகுதாழ்த்தி தலைபூழ்த்தி அமர்ந்திருந்தன. மலைகளில் ஊழ்கம் நிறைந்திருந்தது” என்றார்.

புலஸ்திய சப்தமர் “பின்னர் மலைமுடிகளில் இருந்து வெண்பனிப்படுகை நாரை சிறகுசரிப்பதுபோல் இறங்கி வந்தது. இங்குள்ள அனைத்து ஆறுகளும் பெருக்கு கொண்டன. நீரில் அனல்மணம் இருந்தது. அந்நீரை எடுத்து லட்சம் சிவக்குறிகளையும் நீர்முழுக்காட்டினோம். முனிவரே, மண்ணில் ஒருவர் விண்ணவன் என்று ஆனாரென்றால் உயிர்க்குலமே அதன் பயனை அடைகிறது” என்றார். வியாசர் அச்சொற்களைக் கேட்டு நடுங்கிக்கொண்டிருந்தார். அவரால் நிற்கமுடியவில்லை. மெய்ப்புகொண்ட உடலுடன் கைகளைக் கூப்பியபடி கண்ணீர்விட்டார்.

முனிவர்கள் கைகூப்பியபடி, மெய்ப்பு கொண்ட உடலுடன், உவகையில் நெளியும் முகங்களுடன் அவரை சூழ்ந்துகொண்டனர். பார்க்கவ சிருங்கர் வியாசரின் முன் கைகூப்பியபடி குனிந்து “முனிவரே, இந்த மலையெங்கும் பல்லாயிரம் முனிவர்கள் தவம் செய்கிறோம். பல்லாயிரம் வைதிகர் அனலோம்புகிறோம். பல்லாயிரம் அறிஞர் சொல்லில் ஆழ்கிறோம். விண்வாயில் திறந்து ஏகும் முழுமை மிகச் சிலருக்கே வாய்க்கிறது. உங்கள் மைந்தர் மானுடருக்கு தெய்வங்கள் அளித்த வாய்ப்பை வென்று தெய்வமென்றாகியவர். தெய்வத்தின் தந்தையென்றானவர் நீங்கள். உங்கள் அடிபணிகிறோம்” என்றார். “ஆம், நீங்கள் பெருந்தந்தை. இவ்வுலகின் ஒவ்வொரு தந்தையாலும் வணங்கப்படவேண்டியவர்” என்று முனிவர்கள் கூவினர்.

வியாசர் அவர்களின் சொற்களை செவிகொள்ளவில்லை. விழிகள் அலைய நான்கு திசைகளையும் நோக்கிக்கொண்டிருந்தார். கைலை முடியை நோக்கியதும் வஞ்சத்துடன் பற்களைக் கடித்து கைவிரல்களை முறுக்கிப் பற்றிக்கொண்டார். உடைந்தெழும் ஓசையில் “மைந்தா…” என நெஞ்சிலறைந்து வீறிட்டார். “என் மைந்தா! என்று இனி உன்னை காண்பேன்…? என் தெய்வமே…” என அழுதபடி கைகளை விரித்து வான்நோக்கி மண்ணில் விழுந்தார். “மைந்தா மைந்தா” என அலறியபடி புழுதியில் புரண்டார். “கைலைத்தலைவனே, நீ கொடியோன், கூற்றுவடிவோன், என் மைந்தனை கவர்ந்தாய்…” என அரற்றினார்.

முனிவர்கள் அவருடைய உணர்வுகளைக் கண்டு திகைத்தனர். “இது வியாசர்தானா? அன்றி வேறேதும் தெய்வம் இவ்வடிவில் வந்ததா?” என்று குழம்பினர். முதியவரான சுதமரின் துணைவி சுபை “அவர் வியாசரேதான். அணிந்த அனைத்தையும் துறந்தவராக துயரை எதிர்கொள்கிறார்” என்றாள். மயங்கிய அவரை அள்ளிக்கொண்டுசென்று படுக்கவைத்தனர். நினைவெழுந்ததும் மீண்டும் கதறியழுதார். முனிவர் சொன்ன ஆறுதல்சொற்கள் எதையும் அவர் செவிகொள்ளவில்லை. ஒவ்வொரு சொல்லும் அவரை அனல் புலியை என சீற்றம்கொள்ளச் செய்தன. “விலகிச்செல்க! உங்கள் பொருளற்ற சொற்களால்தான் என் மைந்தன் மண்நீங்கினான்” என்று சினந்து கூச்சலிட்டார்.

“அவர் முழுமையடைந்தார், முனிவரே. நீங்கள் அறியாதது அல்ல” என்ற சாண்டில்ய உக்ரரிடம் “விலகிச்செல்க! மைந்தனை இழந்த தந்தையின் துயரை நீ அறிவாயா? உன் மைந்தனை நீ அளிப்பாயா? மெய்மைக்கும் முழுமைக்கும் என்றாலும் மைந்தனை பலிகொடுக்கும் தந்தை எவருண்டு?” என்று கூவினார் வியாசர். “என் மைந்தனுக்கு எதுவும் தேவையில்லை. முழுமையும் விண்ணுலகும் அல்ல, அவன் உடலுடன், மகிழ்வுடன் என் கண்ணெதிரே வாழ்வதையே விழைந்தேன். வேறேதும் வேண்டேன்” என்று கதறினார்.

அவரால் அத்துயரிலிருந்து மீள இயலவில்லை. கணந்தோறும் விசைகொண்ட துயருடன் கலுழ்ந்த விழிகளுடன் அவர் மலைகள்தோறும் அலைந்தார். ஒவ்வொரு சிவக்குறியின் முன்பும் சென்று நின்று நெஞ்சிலறைந்து ஓலமிட்டார். துயரில் மெலிந்து சுள்ளிபோன்று மாறிய உடலுடன் குருஷேத்திரத்தின் கரையிலமைந்த வியாசஸ்தலி என்னும் ஆழ்பிலத்தை வந்தடைந்தார். “நுதல்விழியனே, நானறிந்த அனைத்துச் சொற்களாலும் உன்னை அழைத்துவிட்டேன். என் மகனை நீ உன் பாழ்வெளியெனும் வாயால் உண்டாய். அவனில்லா இவ்வுலகில் இனி நான் வாழ்வதில் பொருளில்லை” என்று கூவியபடி அதில் குதிக்கப்போனபோது விண்ணில் “நில்!” என உடலிலிக் குரலெழுந்தது.

அருகே நின்ற மரம் பற்றி எரிய அனலில் சிவச்சொல் ஒலித்தது “வேண்டியது நீர். உம் விழைவுக்கேற்பவே மண்ணில் மானுடருக்கு அளிக்கப்படுவதில் உச்சமென்றான மெய்நிலை உன் மைந்தனுக்கு வாய்த்தது. இனி விண்ணில் அவன் மீன் என துலங்குவான்.” துயரும் சினமும் ஓங்க நெஞ்சில் ஓங்கி அறைந்து வியாசர் கூவினார் “என் அறிவின்மை அது. நாப்பிறழ்ந்த கூற்று. நூல்கற்றோன் நல்ல தந்தை அல்ல. அறிவிலியே பெருந்தந்தை ஆக இயலும்… எவ்விலங்கும் கோருவதையே நான் கேட்டிருக்கவேண்டும். என் மைந்தர் உண்ணட்டும், புணரட்டும், போரிடட்டும், கொள்ளட்டும், கொடுக்கட்டும். அவர்கள் அடைவதனைத்தும் இங்கேயே அமையவேண்டும். அவர்களின் தகுதிக்குரியனவாக அவை இருந்தால் போதும். என் மைந்தர் முழு வடிவில் இவ்வுலகிலேயே வாழவேண்டும். அதுவன்றி பிறிதொன்றும் வேண்டாம்!”

சிமையவன் “இனி நீங்கள் அதை சொல்வதில் பொருளில்லை, வியாசரே. உங்கள் மைந்தன் இங்கே விண்ணில் திகழ்கிறான். அவன் இனி மண்ணுக்குரியவன் அல்ல. அவனுக்கு தந்தையோ மைந்தரோ இல்லை” என்றார். வியாசர் “நான் தீச்சொல்லிடுவேன். மூன்று முதன்மைத் தெய்வமே என்றாலும் சொல்லிட்டு பழிகொள்ளச் செய்வேன். என் மைந்தன் என்னுடன் இருக்கவேண்டும். விழைகையில் நான் அவனை காணவேண்டும்” என்றார்.

சிவன் “அதுவே உங்கள் விழைவென்றால் நான் ஒன்றை கொடையளிப்பேன். விண்ணேகுபவரின் நிழலுரு பிரம்மன் அவர்களுக்கு அளித்த வாழ்நாள் முடியும் வரை மண்ணிலேயே எஞ்சியிருக்கும். இங்கிருக்கும் உங்கள் மைந்தனின் நிழலை உங்கள் நிழலென அளிக்கிறேன். நீங்கள் விழைகையில் திரும்பிநோக்கி அதை காணலாம். நீங்கள் கவிஞரென்பதனால் நிழலில் இருந்து உங்கள் மைந்தனை நெஞ்சுக்குள் மீட்டெடுக்கலாம்” என்றார்.

“ஆம், இனி அது ஒன்றே வழி” என்றார் வியாசர். ஏங்கி விழிநீர் உகுத்து பின் மெல்ல தேறி மீண்டு “அவன் என்னுடன் இருப்பதாக!” என்று வணங்கினார். விழிநீரைத் துடைத்தபடி திரும்பியபோது கையில் பாற்குடம் ஏந்தி தலையில் நிறைகதிர்க் கற்றை சுமந்த இடைச்சி ஒருத்தி அருகே நின்றிருக்கக் கண்டார். “யார் நீ?” என்று கேட்டார். “முனிவரே, உங்கள் பிற மைந்தருக்கும் மானுடவாழ்வின் அனைத்து நிறைவையும் முழுமையையும் கோரவிருக்கிறீர். அதன்பொருட்டு வந்தேன். நான் திருமகள், என் கையிலுள்ளது அமுது” என்றாள்.

“இல்லை! இல்லை! நான் உன்னை அழைக்கவில்லை!” என்று வியாசர் கூவினார். “என் மைந்தர் இங்கே வாழட்டும். விலங்குகள்போல் பெருகட்டும். விலங்குகள்போலவே அழியட்டும்… பிறிதொன்றும் எனக்கு தேவையில்லை.” கூச்சலிட்டபடி அவர் தன் நெஞ்சிலும் வயிற்றிலும் அறைந்தார். “விலகிச்செல்க! விலகுக!” அவள் கையிலிருந்த அமுதகலத்தைப் பிடித்து தள்ளினார். அது கீழே விழுந்து உடைந்து வெண்ணுரையுடன் பரவியது. மண் அதை உறிஞ்சி உண்ண சிறுகுமிழிகளாக மறைந்தது. “விலகிச்செல்… விலகிச்செல்!” என அவர் கைநீட்டி கூச்சலிட்டார்.

“பிதாமகரே, பிதாமகரே” என அவர் தோளை மெல்ல தொட்டு இளைய யாதவர் அழைத்தார். “ஆசிரியரே… பிதாமகரே…” வியாசர் விழித்துக்கொண்டு “இங்கா இருக்கிறேன்?” என்றார். பெருமூச்சுவிட்டு “ஆம்” என்றார். மீண்டு வந்து “நன்று” என்று சொல்லி விழிகளை மூடி இளைப்பாறலானார். “கணம் கோடி மானுடர் இங்கு நீட்டப்பட்ட அமுதை தட்டி வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள், ஆசிரியரே” என்றார் இளைய யாதவர். வியாசர் மெல்ல உடல் விதிர்த்தார். “வீழ்ந்த அமுதனைத்தையும் உண்டு மண்மகள் இறவாமை கொள்கிறாள். அமுது அவளில் அன்னமென முளைத்தெழுந்து உயிர்களை ஊட்டுகிறது” என இளைய யாதவர் சொன்னார். வியாசர் பெருமூச்செறிந்தார்.

முந்தைய கட்டுரைஊட்டியில் ஒருநாள்
அடுத்த கட்டுரைமெல்லிசை- கடிதங்கள்