இந்த ஊழல் ஜனநாயகம் போதுமா?

r

 

அன்புள்ள ஜெ,

நீங்களே சொல்லிக்கொண்டபடி மாவோயிசம் பற்றிய உங்கள் கட்டுரை சோர்வில் ஆழ்த்தியது. அது முழுக்கமுழுக்க யதார்த்தம் என மனம் சொல்கிறது. இன்னொரு மனம் நம்ப மறுக்கிறது. இலட்சியவாதங்கள் முழுக்க காலாவதியாகிவிட்டன என்று சொல்வதுபோல உள்ளது அந்தக்கட்டுரை. பெரிய கனவுகளுக்கு இடமே இல்லை என்று சொல்கிறது. அதை ஏற்றால் பிறகு எதைப்பற்றி நம்பிக்கையுடன் இருப்பது என்று தோன்றுகிறது.

உங்கள் கட்டுரையின் தொனி ஒன்று உள்ளது, இன்றைய அரசாங்க அமைப்பை ஊழல் இல்லாமல் நடத்தவே முடியாது என்று நீங்கள் சொல்கிறீர்களா? ஊழலை இயல்பாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்கிறீர்களா? ஊழலுக்கு எதிராக போராடுவதெல்லாம் வீண் என்கிறீர்களா? சரியாகப்புரியாமல் கேட்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்

சரவணன், நெல்லை

*

 

 

“என் புரிதலில் முதலாளித்துவமும் ஊழலும் வேறு வேறாக இருக்க முடியாது.”

சார், மாவோயிசம் பற்றிய கட்டுரையில் நீங்கள் எழுதிய இவ்வொரு வரி மூலம் எனது அடிப்படை நம்பிக்கைகளை அசைத்து விட்டீர்கள். எனக்கு உங்கள் அளவுக்கு வாசிப்போ அனுபவமோ சிந்தனையோ கிடையாது – ஆனால் ‘முதல்த்துவம்’ மீதும், அதன் மூலம் சமூகங்கள் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை மீதும் ஒரு பற்று இருந்து வந்திருக்கிறது. (அதனால்தான் முதலாளித்துவம் என்ற வார்த்தையே தவறு எனத் தோன்றும்). உங்களது இந்தப் ‘புரிதலுக்கான’ அடிப்படைக் காரணங்களும் அனுபவங்களும் பற்றி எங்கேனும் எழுதியுள்ளீர்களா ?

அன்புடன்
மதுசூதனன் சம்பத்

*

அன்புள்ள ஜெ

இந்தியாவின் பொருளியல் முன்னேற்றம் பற்றிய உங்கள் நம்பிக்கை கொஞ்சம் மிகையானது அல்லவா? உண்மையிலேயே இங்கே வளர்ச்சி நிகழ்ந்திருக்கிறதா என்ன? இங்கே பொருளாதார திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா? வளர்ச்சி நிகழ்கிறதா? இந்த வளர்ச்சி நமக்கு போதுமா? எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது

குமார் பொன்னம்பலம்

சென்னை

*

மூன்று கடிதங்களுக்குமாக ஒரே பதிலை எழுதுகிறேன். மீண்டும் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். தெளிவாகக் கண்டறிந்த கடைசி உண்மையைச் சொல்லும் திடமான குரலில் நான் பேசவில்லை. இந்தக் காலகட்டத்தை நேர்மையுடனும் யதார்த்த உணர்ச்சியுடனும் அவதானிக்கும் ஒருவனின் தத்தளிப்புடனும் குழப்பத்துடனும்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

முதலில் வளர்ச்சி பற்றி. இந்தியா பெரிதாக வளர்ந்துகொண்டிருக்கிறது என்றோ இந்தியப்பொருளியல் பாய்ச்சலில் இருக்கிறதென்றோ நான் நினைக்கவில்லை. இருபதாண்டுகளில் இந்தியா வல்லரசாகும் என்பது போன்ற நம்பிக்கைகளும் எனக்கில்லை.

நான் சொல்வது ஓர் ஒப்பீட்டை மட்டுமே. இருபதாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் பல பகுதிகளில் நேரடியான பட்டினியும் தேக்கநிலையும் இருந்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன். அந்தப் பட்டினியும் தேக்க நிலையும் விலகியிருப்பதை இப்போது காண்கிறேன். அதை இப்போதிருக்கும் ஊழல்மிக்க முதலாளித்துவ ஜனநாயகமே சாதித்திருக்கிறது என்பது நம் முன் உள்ள யதார்த்தம் என்பது மட்டுமே என் தரப்பு.

இந்த ஜனநாயகத்துக்குப் பதிலாக எங்கெல்லாம் வன்முறைப் போக்கு உள்ளதோ அங்குதான் இன்று நாட்டின் மோசமான வறுமையும் தேக்கநிலையும் நிலவுகிறது. வடகிழக்கு மாநிலங்களும் வங்கமும் உதாரணம். வன்முறை அரசியல் இருந்தபோது இருண்டு தேங்கிக்கிடந்த நிலப்பகுதிகள் அந்த வன்முறையில் இருந்து மீண்டு இந்த ஊழல்மிக்க ஜனநாயகத்துக்கு வந்தபோதே பெரும் வளர்ச்சியைக் கண்டன என்பதும் யதார்த்தம்.

ஆகவே வன்முறை அரசியல் என்பது வறுமைக்கும் தேக்கநிலைக்கும் தீர்வல்ல. அந்த பிரச்சினைகளை அது மேலும் விரைவுபடுத்தவே செய்யும். அந்த மக்களை வன்முறையாளர்களின் அடிமைகளாக்கி வைக்கும். அவர்களின் அரசியல் ஆசைகளும் பொருளியல் இலக்குகளும் கருகிப்போகும்.

காரணம் வன்முறை அரசியல் அந்தமக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து தொடங்கினாலும்கூட அந்த வன்முறைக்கு நிதியளித்து வளர்க்கும் புறச் சக்திகளின் இச்சைப்படியே இயங்கும். அவர்களுக்கு இந்த மக்களைப்பற்றி உண்மையான அக்கறை ஏதும் இருப்பதில்லை. அவர்களின் நோக்கு உலக ஆதிக்கத்தில் முதன்மைபெறுவது. அதற்காக இந்தியாவைப் பின்னுக்கிழுப்பது

இந்த சர்வதேச சதுரங்கத்தில் வறுமைப்பட்ட மக்களை காய்களாக்குவது அநீதி. இந்திய அரசு என்ற பெரும்பான்மையினரின் அமைப்புக்கு எதிராக அந்த மக்களை நிறுத்துகிறார்கள். அது அம்மக்களை முழுமையாக அழிக்கவே வழி வகுக்கும். இவ்வளவே நான் சொன்னது.

இந்த வளர்ச்சி அரசுகளின் திட்டங்கள் மூலம் உருவானதல்ல. பெரும்பாலும் முதலாளித்துவமனநிலை மக்களில் செயல்பட்டமையின் மூலம் உருவாகிக்கொண்டிருப்பது. இந்த வளர்ச்சி போதுமானது என்று நான் சொல்லவில்லை. இது கட்டற்றது. சரிசமம் அற்றது. இயற்கையை அழிப்பது. பண்பாட்டைச் சிதைப்பது. பெரும்பாலும் தார்மீகம் அற்றது. ஆனாலும் பசியை இல்லாமலாக்குவது. இதையே நான் சொல்கிறேன்.

இன்னும் சீரான, இன்னமும் நீதியான வளர்ச்சி நமக்குத் தேவை. சூழலை அழிக்காத, பண்பாட்டைச் சிதைக்காத வளர்ச்சி. ஆனால் அதற்கு நாம் அரசையோ அல்லது அரசியல் வாதிகளையோ குறைசொல்வதில் பொருளில்லை. அந்த வளர்ச்சியை நாம் கோருகிறோமா, அதற்காக ஒருங்கிணைந்து போராடுகிறோமா, அதற்காக ஜனநாயகத்தைப் பயன்படுத்திக்கொள்கிறோமா என்பதே முதல் கேள்வி. அப்படி நாம் முயன்றும் அது சாதிக்கவில்லை என்றால் மட்டுமே அது அமைப்பின் சிக்கலாகும்.

நாம் அப்படி எதையும் முயல்வதில்லை. நாம் இன்னும் நிலப்பிரபுத்துவ மனநிலைகளையே ஜனநாயகத்தில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். சாதி மத நோக்கிலேயெ வாக்களிக்கிறோம். பொருளியல் வளர்ச்சியைவிட பிற விஷயங்களுக்கே தேர்தலில் முன்னுரிமை கொடுக்கிறோம். உண்மையில் கடந்த பத்தாண்டுகளாக மட்டுமே இந்திய அரசியலில் வளர்ச்சி என்பது ஒரு தேர்தல் விஷயமாக ஆகியிருக்கிறது.

இந்தியாவில் ஜனநாயகம் இன்னமும் வலிமை பெறுமென்றால், இன்னும் அதிகமாக அடித்தள மக்கள் அரசியலுக்கு வரும்போது, இன்னும் அதிகமான பொருளியல் கோரிக்கைகள் எழும். அவற்றை நோக்கி நம் அரசு நகர்ந்தாகவேண்டிய கட்டாயம் எழும். நம் அரசுகள் அவற்றை நோக்கிச் செலுத்தப்படும் என்றே நான் நினைக்கிறேன். ஆம், வளர்ச்சி என்பது மக்களிடமே உள்ளது.

இந்த தளத்திலேயே நான் ஊழல் பற்றிய சிக்கலை காண்கிறேன். முதலாளித்துவ அமைப்பு ஊழலற்றிருக்காது என ஏன் சொல்கிறேன்? முதல் யதார்த்தம் மானுட சரித்திரத்தில் அப்படி ஓர் அரசு எங்கும் இருந்ததை, இருப்பதை நான் அறிந்ததில்லை. அன்றாடச்செயல்களில், வளர்ச்சிப்பணிகளில் ஊழலை கட்டுப்படுத்திக்கொண்ட நாடுகளையே ஊழல் குறைந்த நாடுகள் என நாம் சொல்கிறோம்

ஏனென்றால் முதலாளித்துவம் என்பதே உழைப்பின் உபரியை எல்லா வழிகளிலும் சுரண்டி மையம் நோக்கிக் கொண்டு செல்வதுதான். அம்மையத்தின் சமநிலைப்புள்ளிதான் அரசு. அரசை நோக்கி வரும் செல்வத்தை அதை நடத்துபவர்கள் எல்லா வழிகளிலும் பகிர்ந்துகொள்வார்கள். முதலாளித்துவ ஜனநாயகத்தில் முக்கியமான ஒரு தரப்பு மக்கள். அந்த மக்களின் கோணத்தில்தான் அந்தப் பகிர்தல் என்பது ஊழல் என்று சொல்லப்படுகிறது.

முதலாளித்துவத்தின் வல்லமை என்பது பெருமுதலீட்டை அதனால் உருவாக்க முடியும் என்பது. பெருமுதலீடு பெரும் திட்டங்களாக ஆகும். தொழில்நுட்பத்தைப் பெருக்கும். அதன்மூலம் ஒட்டுமொத்தமாகச் செல்வத்தை பெருக்கி வறுமையை ஒழிக்கும். இது உலகில் சாத்தியமாகியுள்ளது.

இன்றுவரை உலகில் நிகழ்ந்த எல்லா அரசுகளும் பொருளியல் நோக்கில் முதலாளித்துவ அரசுகளே. ருஷ்யாவை அரசுமுதலாளித்துவம் எனலாம். சீனாவை அரசால் கட்டுப்படுத்தப்படும் முதலாளித்துவம் எனலாம். உபரி, அரசுமையம் நோக்கிச் சென்றால் அங்கே அது அரசை நடத்தும் முதலாளிகளாலும் அரசியல்சமூகத்தாலும் பகிர்ந்துகொள்ளப்படும். இந்தியாவானாலும் சரி சீனாவானாலும் சரி. அதுதான் மக்கள் நோக்கில் ஊழல் என்பது.

ஊழலுக்கு எதிராக போராட வேண்டாம் என நான் சொல்லவில்லை. அதை தவிர்க்க முடியாதென்றும் சொல்லவில்லை. மாறாக ஊழலுக்கு எதிரான விழிப்புணர்ச்சியும் சலிக்காத போராட்டமும்தான் மக்களிடமிருந்து திரட்டப்பட்டு மையத்துக்குச் செல்லும் உபரி நிதியில் பெரும்பகுதியை மக்களுக்கு நலத்திட்டங்களாகத் திருப்பிக்கொண்டு வர உதவும் என்றே நினைக்கிறேன். ஊழலை மக்கள் சக்தி கட்டுப்படுத்த முடியும். கட்டுப்படுத்துவதே ஜனநாயகத்தின் நோக்கம்.

ஆனால் ஊழலை ஆட்சியாளர்களின் ஒழுக்கக்கேடு என்ற அளவில் மட்டுமே பார்க்கும் பார்வை குறுகியது, பயனற்றது என்பதே என் எண்ணம். ஊழல் ஒரு முதலாளித்துவ அமைப்பில் எங்கும் உள்ளது. பஞ்சாயத்துபோர்டு முதல் மத்திய அரசு வரை. மக்களில் ஏதேனும் ஒருவகையில் அதிகாரத்துடன் தொடபுடையவர்கள் அனைவருமே ஊழலை செய்பவர்கள் அல்லது ஒத்துழைப்பவர்கள். குறைந்தபட்சம் கண்களை மூடிக்கொண்டவர்கள்.

நம் நாட்டில் ஏன் ஊழல் பெருகுகிறது? ஏனென்றால் ஊழலை மக்கள் அங்கீகரிக்கிறார்கள். ஊழலின் பொருட்டு எந்த அரசியல்வாதியும் அரசியலை இழப்பதில்லை. பெரும்பாலும் எல்லா ஊழல் அரசியல்வாதிகளும் பெரும் மக்கள் செல்வாக்குடன் பதவிக்கு வந்திருக்கிறார்கள். நம் மக்கள் ஊழலைப் பொறுக்கவே மாட்டோம் என்று ஒரு உறுதி கொண்டார்கள் என்றால் ஊழல் இங்கே ஒடுங்கும். ஒரு தொடர்கொலைக்காரன் இங்கே அரசியலில் இருக்க முடியுமா? அதற்கிணையாக நம் மக்கள் ஊழலை நினைத்தால் ஊழல் எங்கிருக்கும்?

ஆக முதலாளித்துவம் ஊழல் மிக்கது. ஜனநாயகம் அதற்கு எதிரானது. முதலாளித்துவ ஜனநாயகம் என்பது ஒரு மாபெரும் சமநிலை. முதலாளித்துவத்தை ஜனநாயகம் கட்டுப்படுத்துவதுதான் அது. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதன் மூலம் முதலாளித்துவத்தின் எல்லா எதிர்மறைக்கூறுகளையும் தாண்டிச்செல்ல முடியும். அதற்கு உலகமெங்கும் முன்னுதாரணங்கள் உள்ளன.

ஆகவே இந்த முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் உள்ள போதாமைகள் முழுக்க முழுக்க இங்குள்ள மக்களின் போதாமைகளில் இருந்து உருவானவையே. மக்கள் தங்களை அரசியல் ரீதியாக, பண்பாட்டுரீதியாக, ஆன்மீகரீதியாக மேம்படுத்திக்கொள்ளும்தோறும் இன்னும் இன்னும் மேலான அமைப்பை அடையமுடியும். இன்னும் சிறந்த வளர்ச்சியையும் காணமுடியும்.

அதற்காக மக்களுக்கு அரசியல் கற்பிப்பதும் , ஜனநாயகத்தின் வாய்ப்புகளைக் காட்டுவதும், போராட்ட உணர்வை ஊட்டுவதும் இன்றைய தேவை. இந்த அமைப்புக்குள் நிகழும் எல்லா வகையான போராட்டங்களையும் இதன் பொருட்டே முற்போக்கானவை என நான் நினைக்கிறேன்.

ஒருமுறை நாகர்கோயில் கலக்டர் அலுவலகம் முன்பு நரிக்குறவர்களின் ஒரு தர்ணா போராட்டத்தைக் கண்டு நான் கிட்டத்தட்ட புல்லரித்துப் போனேன். வரலாற்றில் முதல்முறையாக அந்த மக்களுக்கு தாங்களும் சமூகத்தின் உறுப்புகள், அரசு தங்களுடையதும்கூட, தங்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன என்ற உணர்வு வந்திருக்கிறது. அதற்காகப் போராடவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அந்த உணர்வே ஜனநாயகத்தின் அடிப்படை.

கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் இந்திய அரசியல்சூழலில் நூற்றாண்டுகளாக மௌன இருளில் கிடந்த எத்தனையோ சமூகங்கள் கிளம்பி வந்து தங்கள் உரிமைகளை கணக்குச் சொல்லி கேட்டுப்பெற ஆரம்பித்திருக்கின்றன. அந்த முயற்சிகளில் சில சமயம் முரட்டுத்தனம் இருக்கலாம். சிலசமயம் சில கோரிக்கைகள் அத்துமீறலாக இருக்கலாம். அவர்கள் தங்கள் மேல் கவனத்தைக்கோர வன்முறையில் ஈடுபடலாம். ஒருவருக்கொருவர் வன்முறைகளில் ஈடுபடலாம். ஆயினும்கூட அவையெல்லாம் ஜனநாயகத்தின் வளர்ச்சிப்போக்குகள் என்றுதான் நான் சொல்வேன்.

அந்த வகையான எழுச்சியை சமூகத்தில் உருவாக்கும் எல்லா அரசியல் முயற்சிகளையும் அவற்றின் எல்லா குறைகளுடனும் பயன்மிக்கவை என்றே நினைக்கிறேன். ஓர் ஊழலை வெளிக்கொணர்வதற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் இதழாளர், முறைகேடுகளுக்கெதிராக போராடும் அதிகாரி, அரசை அஞ்சாமல் நீதியை ஏவும் நீதிபதி என அனைவருமே ஜனநாயகத்துக்கான போராளிகள்தான். அவர்களின் முயற்சியினால் மக்கள் ஜனநாயகத்தை புரிந்துகொள்ளும்தோறும் ஜனநாயகம் பண்படும். பயன்மிக்கதாகும்

அந்த வகையில் நம்முடைய ஜனநாயகம் இன்னும் முன்னே செல்லும் என்றுதான் எனக்குப் படுகிறது. கடந்த ஐம்பதாண்டுக்காலமாகவே நமக்கு ஜனநாயகம் பழக்கம். 1952ல் ஓட்டு என்றால் என்ன என்று சொல்லி மக்களை ஓட்டுபோட வைத்தனர் நம் ஜனநாயக முன்னோடிகள். அரைநூற்றாண்டாக சாதியும் மதமும் பெரும்பாலும் நம் தேர்தலை தீர்மானித்தன. அந்நிலை மாறி வருகிறது. மக்கள் வளர்ச்சியைக் கேட்டு வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆங்கில நாளிதழ் வாசிப்பதற்கு உபரியாக ஏதேனும் ஒரு வகையில் மக்கள்தொடர்புள்ள அரசியலை, சேவையை, ஏன் வணிகத்தை செய்தால் ஒன்று புரியும். ஒரு பொதுநல நோக்குக்காக மக்களை திரட்டுவதும், அவர்கள் பேதங்களை மறந்து ஒன்றாக நிற்கச் செய்வதும், அமைப்பாக ஆக்கி அவ்விதிகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படச்செய்வதும் எத்தனை சிரமமான காரியம் என்று. நாம் எதையும் மிகைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை. நம் கிராம மக்கள் சாதி என்ற பல நூற்றாண்டுப்பழைய அமைப்புக்குள் மட்டுமே கொஞ்சமேனும் ஒன்றுபடுவார்கள். அங்கும் உள்பேதங்களால் மோதிக்கொள்வார்கள்.

மேலோட்டமான உபசரிப்புகளைத் தாண்டி உள்ளே சென்றால் நமது கிராம மக்களின் அப்பட்டமான சுயநலத்தையும், மதிப்பீடுகளை பொருட்படுத்தாத தன்மையையும், சோம்பலையும் கண்டு நாம் திகைத்து நிற்க நேரும். எந்த பொதுப்பணியாளனும் இதை அந்தரங்கமாக பேசும்போது சொல்லத்தான் செய்வான். இந்த மக்கள் நவீன ஜனநாயகத்திற்கு இன்னும் வந்து சேரவில்லை. பொதுச்சமூகமாக திரண்டு ஒற்றை குரலாக ஆவதன் மூலமே ஜனநாயகத்தில் மக்களின் ஆற்றல் செயல்பட முடிகிறது. அந்த வல்லமை இன்னும் நம் குடிமைச்சமூகத்துக்கு கைவரவில்லை. ஆகவேதான் நம் ஜனநாயகம் ஊனமுற்றிருக்கிறது.

இங்கே சுயசாதி என்பதற்காக உள்ளூர் கட்டைப்பஞ்சாயத்து ஆளைத் தலைவராக்குகிறார்கள். ஒரு கேடி நாலைந்து கேடிகளைத் திரட்டிக்கொண்டால் மொத்த சமூகமே அவனை அஞ்சிப் பணிகிறது. அதன் ஒழுக்கமோ தார்மீகமோ அவர்களுக்கு எதிராகத் திரள்வதில்லை. ஒருபோதும் அம்மக்கள் ஒன்று திரண்டு அவர்களை ஒடுக்குவதில்லை. இன்றும் நேர்மையான அரசியல்வாதிக்குப் பதிலாக கேடிக்கு வாக்களிப்பவர்களே நம்மில் அதிகம்.

இந்த மக்களுக்கு ஜனநாயகத்தை சொல்லிக்கொடுப்பதன்மூலம் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். அந்த மாற்றம் உடனடியாக நிகழ்வது அல்ல. மெல்லமெல்ல பல்வேறு தளங்களில் ஒரு சமூக இயக்கமாக நிகழ்வது. தொழிற்சங்கங்கள், பல்வேறு உழைப்பாளர் குழுக்கள், மனித உரிமை அமைப்புகள், இதழ்கள், சினிமாக்கள் , ஏன் சாதிச்சங்கங்கள் கூட இந்த ஜனநாயகத்தின் செயல்முறைகளாகவே படுகிறது. நம் ஜனநாயகம் இன்னும்பயன்படுத்தப்படாத ஒன்றுதான்.

ஆனால் நம் சமூகத்தின் சிக்கல்களை எல்லாம் ஜனநாயகத்தின் மேல் ஏற்றி அதை முற்றாக நிராகரித்து வன்முறை அரசியலை முன்வைப்பவர்கள் ஒரு பேரழிவைத்தான் நம் முன் சுமத்துகிறார்கள். வன்முறை மூலம் அராஜகமும் அழிவும் அன்றி வேறெதுவும் நிகழாதென மீண்டும் மீண்டும் சமகால உலகம் காட்டிக்கொண்டிருக்கிறது. இவர்கள் நம் நாட்டை காங்கோ ஆக மாற்ற முயல்கிறார்கள் என்பதே உண்மை. அதற்கு அவர்களுக்கு அன்னிய சக்திகளின் தூண்டுதல் உள்ளது.

ஆகவே இந்தச் சாதாரணமாக ஒன்றுபட்டுக் குரலெழுப்பினாலே சாதிக்கக்கூடிய விஷயங்களைச் சாதிக்கமுடியாத எளிய மக்கள் ஒட்டுமொத்த அமைப்புக்கும் எதிராக ஆயுதம் எடுக்கவேண்டும் என்று சொல்வதன் அபத்தத்தை மட்டுமே நான் சுட்டிக்காட்டினேன். ஒரு ஜனநாயக அமைப்புக்குள் வருவதற்கான திரள்தன்மையும் ஒற்றுமையும் இல்லாத மக்கள் ராணுவமாக ஆகிவிட்டார்கள் , அவர்களுக்கு வேறு வழியில்லை என்று நம்மை நம்பவைப்பவர்களின் உள்நோக்கத்தைச் சுட்டிக்காட்டினேன்.

உண்மையில் நான்தான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். எத்தனையோ நாடுகள் சர்வாதிகாரிகளிடம் சிக்கி பலகோடி மக்களைப் பலிகொடுத்துப் போராடிப்பெற்ற ஜனநாயகம் நமக்கு நம் முன்னோர்களின் விவேகத்தால் சாதாரணமாகக் கிடைத்தது. நம்மை அதற்காகத் தயாரித்துக்கொள்வதற்குப் பதிலாக நம்பிக்கை இழந்து பத்தொன்பதாம்நூற்றாண்டின் காலாவதியாகிப்போன அரசியல் கோஷங்களையும் சர்வாதிகாரத்தையும் மீண்டும் தழுவ நினைப்பவர்களே நம்பிக்கை இழந்தவர்கள்.

இன்று ஊழலில் சிக்கி செயலற்றிருந்தாலும் நம் ஜனநாயகம் முன்னகர்கிறது என்றே நான் நினைக்கிறேன். நம் மக்கள் தங்களை இன்னும் மேலான ஜனநாயகத்தை அடையும் தகுதிகொண்டவர்களாக ஆக்க்கிக் கொள்வார்கள் . இது நம்பிக்கைதான். தர்க்கப் பூர்வமாக சொல்லப் படுவதல்ல. ஆனால் ஆத்மார்த்தமானது.

ஜெ

 

 

 மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Dec 20, 2010

முந்தைய கட்டுரைஉப்பு
அடுத்த கட்டுரைபுதியவர்களின் சந்திப்பு ஈரோடு