ஒரு கிளி பழம் தின்கிறது. இன்னொன்று அதை பார்த்திருக்கிறது. இது உபநிஷத வரி. மனதின் இரு நிலைகளுக்கு உவமானமாக சொல்லப்படுவது. இதை இந்நாவலுக்கு பொருத்திப் பார்க்கிறேன்.
சோர்பாவும் கதை சொல்லியும்
சோர்பா- நம் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன். தீராப்பயணி. அழகின் காதலன். சாகசக்காரன் .வானின் கீழ் உள்ள அனைத்திலும் பரிச்சயம் உள்ளவன். செயலூக்கத்தின் வடிவம்.
கதை சொல்லி; இயற்கையை அணுஅணுவாக ரசிக்கிறார். காலநிலை மாறுபாடுகள், கடலின் நிறம், வானின் நட்சத்திரங்களின் மாற்றங்கள்,பறவைகளின், மிருகங்களின் செய்கைகள் எதுவும் அவர் கண்ணில் தப்புவதில்லை. மனிதனின் ஆதார வினா, எப்போதைக்குமான தேடல் என விரியும் அவரது மனம் புத்தரின் தத்துவங்களில் விடை காண விழைகிறது,
கதை சொல்லி கிரெட் எனும் ஒரு தீவுக்கு போகும் கடல் பயணத்தில் நாவல் தொடங்குகிறது. தன்னையும் அழைத்து செல்லுமாறு வந்து இணைந்து கொள்கிறான் அவருக்கு முன்பின் அறிமுகமில்லாத சோர்பா.
ஏதோ ஒர் உள்ளுணர்வால் தன் இணை மனம் அவன் என கண்டு கொள்கிறார் கதை சொல்லி. கிரெட் தீவில் உள்ள கிராமத்தில் வாழ தொடங்குகிறார்கள். அங்கு ஒரு சுரங்கம் தொடங்க எடுக்கும் முயற்சிகள் ,கிராம சூழல் என நாவல் விரிகிறது. நோக்கம் நிறைவேறவில்லை. தோல்வியையும் பொருட்படுத்தாத ஒரு நிலையை இருவரும் அடைகின்றனர். அங்குள்ள வாழ்க்கை, இருவருக்கும் நட்பு மலர்வது , ஆழமான புரிதலுடன் அது வாழ்வின் கடைசி தருணம்வரை நீடிக்கும் ஒரு உறவாக மாறுவதை அழகுடன் சித்தரிக்கிறது நாவல்.
”உண்டு உடுத்து மகிழுங்கள். இக உலகமே சாஸ்வதம். அவ்வுலகம் என ஒன்றில்லை. எந்த தெய்வமும் மண்ணையும் விண்ணையும் முழுதாளவில்லை. ஆற்றல் வெல்கிறது. எனவே ஆற்றல் கொள்க என்றுரைப்பதே சார்வாக நெறி.”
சார்வாக நெறி என்பது வேறு வகையான ஆன்மீகம். கடவுள், மத சம்பந்தமான கற்பனைகளோ , பிடிமானங்களோ அற்ற , தத்துவ சிக்கல்கள் இல்லாத ஒரு நெறி. ஒரு வகையில் சார்வாகனை நீட்ஷேயின் இக உலகை ஆளும் அதிமானுடன் [super man] எனும் கருத்துருவாக்கத்துடன் ஒப்பிடலாம்.
சோர்பா இவ்வகையில் ஒரு நவீன சார்வாகன். ரொட்டி, மாமிசம், மது, உழைப்பு, பெண்கள் இவையே அவன் தேவைகள். அவன் தேவைகள் எளிதில் பூர்த்தியாகின்றன. அதில் திளைக்கிறான், நடனமிடுகிறான். அதீத மகிழ்ச்சியில் சந்தூரி இசைக்கிறான்.அவன் விரும்பிய, கனவு கண்ட ஒரு முழு முற்றான வாழ்க்கை. அவன் உலகில் கடவுள் இல்லை, சாத்தான் இல்லை. ஏன் மத போதகர்கள், சடங்குகள் கூட இல்லை . எல்லாமே நகைச்சுவையூட்டும், அபத்தமான விஷயங்கள். கடவுளையும் ஒரு அலுப்பூட்டும் அம்சமாகவே உணர்கிறான்.
ஆனால் அப்போதைய கிரேக்கமும், ஐரோப்பாவும் தீவிரமான மத நம்பிக்கையின் , கிறிஸ்துவ போதகர்களின் பிடியில் இருந்த காலகட்டம். அது மனிதர்களை மந்தையென ஆக்கியது. அதில் தனித்து சுதந்திர ஆடாக தன்னை உணர்கிறான் சோர்பா. மதத்திற்கு, சமூகத்திற்கு எதிரான ஒரு சக்தியாக தன்னை நிறுவுகிறான். அவ்வப்போது துக்கமும் அதிருப்தியும் அவனை சூழ்கின்றன,. அது ஏன்? சார்வாகனுக்கு துக்கமில்லை. இது நாவலின் மையமாக தோன்றுகிறது.
லௌகீக இன்பம், அதன் நிறைவு மட்டுமே ஒரு வாழ்க்கையை நிறைவு செய்யுமா என்ற கேள்வியை மறைமுகமாக இந்நாவல் உணர்த்தியபடியே உள்ளது. வெற்று லௌகீகம் மனிதனை இன்னும் ,இன்னும், மேலே,மேலே என்று பேராசையிலும், கீழ்மையிலும் தள்ளுகிறது. இத்தனை அமைப்பு , மத நெறிமுறைகளை மறுதலிக்கும் சோர்பா தன்னைத்தான் ஒரு மேலான அறத்தை நோக்கிய பயணத்தில் ஈடுபடுத்திக் கொள்கிறான். அவன் செயல்களின் வழியே அதை எட்ட முயற்சிக்கும் போது தன் எழுத்தின் சிந்தனைகளின் வழியே கதை சொல்லியும் அதே விடுதலையை நோக்கி பயணிக்கிறார். விட்டு விடுதலையாதல் என்பதே ஒரு தூய ஆன்மாவின் இலக்காக இருக்க முடியும்.
தீவிரமான மத அதிகாரம் மனிதர்களை முழு நம்பிக்கையுள்ள மந்தையென மாற்றுகிறது. விலகி நின்று சிந்திக்க திராணியற்ற ஒரு மந்தை. இது எக்காலத்துக்கும், எந்த சமூகத்துக்கும் பொருந்தும் ஒரு மாறா விதி. விலகிச் செல்லும் ஒற்றை ஆடு ஒட்டு மொத்த அழுத்தத்தையும் தாங்கும் மனதிடத்துடன் இருந்தால் மட்டுமே விலகுதல் சாத்தியம்.
நாவலின் காலகட்டம் “தனி மனிதன்” எனும் கருதுகோள் உருவான, “தனி மனித இருப்பு” [individual existence] பற்றிய சிந்தனை உருக்கொண்ட காலகட்டம். அதைவைத்து இந்நாவலை புரிந்துகொள்ள முடிகிறது
சோர்பாவின் பரிணாம வளர்ச்சியை இப்படி பார்க்கலாம். கிரேக்கனான அவன்[ மாசிடோனியா] –இள வயதில் பல்கேரியர்களையும் துருக்கியர்களையும் தன் நாட்டின் எதிரி என சிறிய கலவரங்களில் கொல்கிறான். ஒரு பல்கேரிய போதகரை அவர் வீட்டு கொட்டிலில் மறைந்திருந்து கொல்லும் சோர்பா அவர் காதுகளை அறுத்து தன் பையில் வைத்து கொள்கிறான். எல்லா கொலைகளின் போதும் இப்படி செய்கிறான்.
அடுத்த வாரமே அவன் அவ்வூர் வழியே செல்ல நேரும்போது அப்போதகரின் ஐந்து குழந்தைகளும் அனாதைகளாக பிச்சையெடுப்பதை கண்டு கதறி அழுதபடி அக்குழந்தைகளை அணைத்து தன் கையில் உள்ள அவ்வளவு பணத்தையும் அவர்களுக்கு தருகிறான். அதன் பின் அவன் வாளேந்துவதேயில்லை. அவன் தன்னளவில் ஒரு மேலான அறத்தை பயில்கிறான். சொர்க்கம், நரகம் இரண்டுமே அவனுக்கு ஒரு பொருட்டேயில்லை.
ஒருமுறை அவன் சொல்கிறான். முதலில் பல்கேரியன், துருக்கியன் என்றும் ஒரு கட்டத்தில் நல்ல செயல் புரிபவன் என்றும் தீயோன் என்றும் மனிதர்களை பார்த்தேன். இப்போது என் மனதில் பிரிவினையே இல்லை. மனிதன் ஒரு சிறிய உயிர். அவனை அணைத்துகொள்ளவே தோன்றுகிறது. எல்லோரும் புழுவிற்குத்தான் இரையாகபோகிறோம். அவ்வளவு தான்.
சோர்பா கதைசொல்லியிடம் ‘’ ஏன் பாஸ் இவ்வுலகம் இப்படி இருக்கிறது? ஏன் பிறக்கிறோம், ஏன் இறக்கிறோம்? இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? சொல்லுங்கள்”. என்கிறான். கதைசொல்லி ”எனக்கு தெரியவில்லை என்கிறார். “இத்தனை நூல்களை விழுந்து விழுந்து படிக்கிறீர்கள். எதற்காக? டன் டன்னாய் பேப்பரை தின்றதுதான் மிச்சம். போட்டு கொளுத்துங்கள் அவற்றை” என்று உரிமையுடன் கோபிக்கிறான்.
தனித்தனியே பழகும்போது மிக சாதுவான, நகைச்சுவை உணர்வு கொண்ட எளிய விவசாயிகளான அக்கிராம மக்களுள் உறையும் வன்முறையை ஒரு முறை ஸோர்பாவும், கதை சொல்லியும் காண நேர்கிறது. ஊர் பொதுவில் ஒரு தேவாலய வாசலில் வைத்து ஒரு விதவையை கல்லால் அடித்து கழுத்தை அறுத்து கொல்கின்றனர். மேரி மக்தலேனாளை நினைவுறுத்தும் சம்பவம்.
ஒரு வயதான காபரே டான்ஸர்[ சோர்பாவின் தோழி] இறக்கும் தறுவாயில் அதே கிராம மக்கள் அவளது உடைமைகளை போட்டி போட்டு கொள்ளை அடிக்கின்றனர். இச்சம்பவம் இரண்டும் சோர்பாவுக்கு மேலும் துக்கமும் அதிருப்தியும் தருகின்றன. அவனது சுரங்க முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.
நோக்கம் நிறைவேறவில்லையெனினும் கதை சொல்லியும் சோர்பாவும் அதை எளிதாக எடுத்து கொள்கிறார்கள். கதை சொல்லி நாடு திரும்புகிறார். சோர்பாஅவர் நினைவுடன் வேறு நாடுகளுக்கு பயணமாகிறான். அலைந்து திரிந்து ஓரிடத்தில் அமர்கிறான்.
கதைசொல்லியின் பார்வையில் சோர்பா ஒரு இதிகாச நாயகன், களித்தோழன், நடனமாடி பாடலிசைத்து வாழ்க்கையை கொண்டாடும் மாபெரும் சுவைஞன்.பெண்களை வசப்படுத்தும் கலையை அறிந்தவன். அவன் வழியாக வாழ்க்கையை முற்றிலும் வேறு கோணத்தில் அறிகிறார்.எழுத்தையும் வாசிப்பையும் தனது தன்னறமென கொள்ளும் அவர் மனம் மதங்கள், சடங்குகளை ஏற்க மறுக்கிறது. விட்டு விடுதலையாதல், புனித அன்னை, புத்த நிர்வாணம் என அலைக்கழிகிறது.
”இந்த பூமி அநீதியால் கட்டப்பட்டது” எனும் சோர்பா கண்ணீர் விடுவதும் அதன் பொருட்டே. சமூக மத ஒழுக்கங்களை மறுக்கும் அவன் தனக்குத்தானே தேடிக்கொண்டது ஒரு மேலான அறத்தையே.
தேவாலயங்களில் நிகழும் வன்முறைகள் அக்காலகட்டத்தை பிரதிபலிக்கின்றன. பதவி போட்டியில் உயிருடன் சில போதகர்களை உள்ளே வைத்து மடாலயத்தை கொளுத்தும் சம்பவமும் நிகழ்கிறது. கிறிஸ்தவம் இன்னும் சற்று நெகிழ்வான . சுதந்திரத்தை அனுமதிக்கும் ஒரு அமைப்பாக தன்னை மறு பரிசீலனை செய்ய தூண்டும் அளவுக்கு இந்நாவலின் பங்களிப்பு உள்ளது.
சோர்பாவின் நகைச்சுவை உணர்வு அவன் பேசும் ஒவ்வொரு வரியிலும் தொனித்து நம்மை ஆகர்ஷிக்கிறது. மனிதர்கள் அவனைப் பொறுத்தவரை மூன்று வகை. உண்ணும் மாமிசத்தையும் மதுவையும் கழிவாக ஆக்க கூடியவர்கள். அதை உழைப்பாகவும், நடனமாகவும், நகை யுணர்வாகவும் மாற்றுபவர்கள் அவனைப் போல் இரண்டாம் வகை. தத்துவமாகவும், கலையாகவும் மாற்றுபவர்கள் மூன்றாம் வகை கதை சொல்லி போல என்கிறான்.
ஹுசைன் ஆகா என்ற துருக்கிய முதியவர் சொல்லும் வார்த்தைகள் அவன் இள வயதில் நெஞ்சில் பதிகின்றன. ஆகா சொல்கிறார் “ ஒரு ரகசியம் சொல்கிறேன். இந்த வயதில் உனக்கு புரியாது. பெரியவன் ஆனதும் உனக்கு புரியும். இந்த பூலோகத்தின் ஏழடுக்குகளும், சொர்க்கலோகத்தின் ஏழடுக்குகளும் கடவுள் வாசம் செய்ய போதாது. ஆனால் ஒரு மனிதனின் மனம் போதும் கடவுளுக்கு. ஆகவே ஒருபோதும் ஒரு மனித இதயத்தை காயப்படுத்தாதே”
சோர்பாவின் சுதந்திரமும், கதை சொல்லியின் தத்தளிப்பும் கலை ரீதியான ஒழுங்கையும் கட்டமைப்பையும் இந்நாவலுக்கு அளிக்கின்றன. கதை சொல்லியின் ஆன்மீக அலைக்கழிப்புகள் ஒரு கீழை மனதிற்கு உவப்பாக ஆகுமளவு அவர் மனம் இரண்டாக பகுக்கும் மேலை தத்துவத்தை விடுத்து ஒரு முழுமை நோக்கி பயணிக்கிறது.
ஆசிரியர்[ கதை சொல்லி] நிகாஸ் கசந்த்சாகீஸ் பாரீஸில் சார்போன் பல்கலையில் ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக தத்துவம் பயில்கிறார். நீட்ஷேவின் சுதந்திர மனிதன் கருத்தியல் அவரை ஈர்க்கிறது. புத்த தத்துவம் அவரில் நிர்வாணா என்ற விட்டு விடுதலையாதல் என்ற நிலை வரை பாதிப்பு செலுத்துகிறது. கம்யூனிசமும் அவரை ஈர்க்கிறது. ஆனால் ஸ்டாலின் செய்கைகள் அவரை அவநம்பிக்கை கொள்ளச் செய்கின்றன. கலைஞனை எந்த தத்துவமும், சித்தாந்தமும் முழு நம்பிக்கை கொள்ளச் செய்வதில்லை.
அவ நம்பிக்கையும் , அலைக்கழிப்புமே கலைஞனின் உபகரணங்கள்.
அருண்மொழிநங்கை