ஆயுதம் -கடிதங்கள்

m777-18-1495100864

ஆயுதம் செய்தல்

அன்புள்ள ஜெ.,

 

அறத்திற்காக வளத்தை தியாகம் செய்வது தனிமனிதனுக்கு சரியாக இருக்கலாம்.. தேசத்திற்கு ?

தனிமனிதனின் செயல் அவனை மட்டுமே பாதிக்கிறது.. அறத்தினால் அவன் பொருளியல் பலன்களை இழந்தாலும், அதன்முலம் கிடைக்கும் அமைதியும், ஆன்மிக மலர்ச்சியும் அதை ஈடு கட்டி விடலாம்..

ஆனால், ஒரு தேசம் இப்படி செயல்பட முடியுமா? ஒரு தலைவரின், ஒரு கட்சியின் அறத்திற்காக, கோடிக்கணக்கான மக்களைப் பட்டினி கிடக்க சொல்லமுடியுமா?

உலகம் முழுவதும் ஆயுத பலத்தின் மூலம் தான் அனைத்து தேசங்களும் முன்னேறி இருக்கிறது… ஆயுத பலம் இல்லாததால் அழிந்த நாகரிகங்கள், தேசங்கள் எத்தனை ஆயிரம்?

நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது – இந்த வாதம் நம் நீதித்துறையை சீரழிப்பது போல், ஆயுத விஷயத்த்தில் அறம் பார்ப்பது சரியா என்று தெரியவில்லை..

நன்றி
ரத்தன்
அன்புள்ள ஜெ

ஆயுதம் செய்வதைப்பற்றிய கடிதமும் பதிலும் வாசித்தேன். ஐடியல்ஸ் நடைமுறைக்கு விரோதமாக இருக்கவேண்டும் என்று காந்தி சொல்லமாட்டார். இந்தியாவெங்கும் வகுப்புவாதம் தலையெடுத்தபோது ராணுவத்தை அனுப்பி சட்டம் ஒழுங்கை கொண்டுவருவதை அவர் எதிர்க்கவில்லை. வலிமையான அரசைத்தான் அவர் சொன்னார். ஆகவே ஆயுதம் இருபதாம்நூற்றாண்டின் மிகப்பெரிய ஒரு சக்தி. அது வலிமையான அரசாங்கங்கள் உருவாக்கும். உண்மையில் ஆப்ரிக்காவுக்கு மிதமான செலவில் நல்ல ஆயுதங்களை அளிப்பது அங்குள்ள அரசாங்கங்கள் வலிமையாக ஆவதற்கே வழி செய்யும். அது அங்கே உள்ள உள்நாட்டுக்கலவரம் தீவிரவாதத்தை அழிக்கும். அந்நாடுகள் நம்முடன் நட்பாக இருக்கவைக்கும். நட்புநாடுகளை ஆய்தபலமே உருவாக்குகிறது

எஸ்.ஆர்.செந்தில்

 

அன்புள்ள ஜெ

ஆயுதம் செய்தால் அதைவிற்க போரைத்தூண்டவேண்டும். அது நாமும் போரில் சிக்கிக்கொள்ளவே செய்யும். ஆயுதம் விற்கும் நாடுகள் எங்காவது ஒரு புள்ளியில் சம்பாதித்த மொத்தத்தையும் போரில் இழந்துவிடும். அமெரிக்காவில் நிகழ்வது இதுதான். நீங்கள் சொன்னது சரிதான்

மாதவன்

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-27
அடுத்த கட்டுரைஇலட்சியக்காதலியின் வருகை