மெல்லிசை- கடிதங்கள்

usha

 

உஷா ராஜ்

அன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம்.

 

‘உஷாராஜ்’ என்கிற தலைப்பில் மேடை மெல்லிசைகள் குறித்த உங்கள் பதிவு எதிர்பாராதது. உண்மைதான். ரெக்கார்டிங் செய்யப்பட்ட குரல்களைவிட நேரடியாக நாம் கேட்கும் குரல்களுக்கு சில வசியங்கள் இருக்கவே செய்கிறது.

 

மேடை நிகழ்ச்சிகளில் கேட்டதன் மூலமே சில பாடல்கள் என் மனதில் இன்றும் தங்கியுள்ளன. அலயமணியின் ஓசையை நான் கேட்டேன், முத்தாரமே உன் ஊடல் என்னவோ, சக்கரகட்டி ராஜாத்தி என் மனச வச்சுக்கோ காப்பாத்தி போன்ற பல பாடல்கள் இன்னமும் மேடைக்கலைஞர்களின் குரல்களிலேயே எனக்கு பதிவாகி உள்ளது.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கேட்கிறீர்களா? சில மென்மையான இளம் குரல்கள் நம்மை ஆனந்தப்படுத்துகின்றன. குறிப்பாக சக்தி, கௌரி, பிரியங்கா, பார்வதி இன்னும் சில குரல்கள்.

 

உங்களைப்போலவே மேடைமெல்லிசை நிகழ்ச்சிகளின் ரசிகன் என்கிற முறையில், என் மதிப்பு வாய்ந்த எழுத்தாளரிடமிருந்தான இந்த பதிவு உண்மையிலேயே எதிர்பாராதது தான். நன்றி.

 

அன்புடன்,

எம்.எஸ்.ராஜேந்திரன்,

திருவண்ணாமலை.

 

 

அன்புள்ள ஜெ

 

மெல்லிசைக்கச்சேரி பற்றி எழுதியிருந்தீர்கள். எனக்கு இசை கேட்பதில் மிகுந்த ஈடுபாடு. முறையாக கர்நாடக சங்கிதம் படித்தவன். ஆனால் சினிமாப் பாட்டுதான் பிடிக்கும். இது ஏன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். சினிமாப்பாட்டுக்கு ஒரு கதைச்சூழல் உண்டு. ஒரு முகம் வருகிறது. ஆகவே அது ஒரு உணர்ச்சிபாவம் கொண்டிருக்கிறது. அதில் உள்ள இந்த நாடக அம்சம்தான் எனக்கு மிகவும்முக்கியமானதாகத் தோன்றுகிறது

 

ஆனால் இத்தனை சினிமாப்பாட்டு கேட்டாலும் எனக்கு லைட்மியூசிக் நிகழ்ச்சிகள் என்றால் பெரியபித்து.நிறையபேருக்கு லைட்மியூசிக் நிகழ்ச்சியின் முக்கியத்துவமே தெரியாது. அது லைவ் ஆக பாட்டை நிகழ்த்திக்காட்டுதல். அதில் உள்ள பிளஸ் அம்சம் என்னவென்றால் அது நிஜப்பாட்டை ஞாபகப்படுத்தும். ஆகவே அந்தப்பாட்டும் இணைந்துகொண்டு இந்தப்பாட்டை ரசிக்கவைக்கும்.

 

ஆனால் மைனஸ் அம்சங்கள் நிறையவே உண்டு. ஒரே ஸ்ட்ரோக்கில் பாடவேண்டும் என்பது முக்கியமானது. டிராக் ரெக்கார்டிங் இல்லை. இன்னொன்று ஸ்டேஜில் பாடுவது. எவ்வளவு நல்ல ஒலி இருந்தாலும் லைவ் பாட்டில் ரெக்கார்டிங் மோசமாகவே இருக்கும். ஆகவே இங்கே மேலும் திறமையானவர்களே பாடமுடியும். பெரிய பின்னணிப்பாடகர்கள் பாடகிகள் மேடையில் சொதப்புவது இதனால்தான்.

 

அதோடுசினிமாவில் இசைக்கருவிகளை தனித்தனியாக வாசித்து ரெக்கார்ட் செய்கிறார்கள் . இங்கே ஒரே மேடையில் சேர்ந்தே வாசிக்கவேண்டும்/ பலசமயம் ஒரு கருவியின் இசையை இன்னொரு கருவி மறைத்துவிடும். சீராக எல்லாம் கேட்பதில்லை. என்னதான் மைக் அரேஜ்ஞ் செய்தாலும் சரியாக வருவதே கிடையாது.

 

இதனால் தெரியாதவர்கள் அதே மாதிரி இது இல்லை, 90 சதவீதம் ஓக்கே என்றெல்லாம் சொல்வார்கள். லைட் மியூசிக் என்பது செவியின்பத்துக்காக மட்டும் அல்ல. அது ஒரு நாடகம். அது கண்ணெதிரே பாடல் உருவாகி வருவதன் அனுபவம். பலவகையான முகபாவங்கள். நல்ல பாட்டு அமைந்து வருவது ஒரு நல்ல நாடகக்காட்சி நிகவதுபோல. லைட் மியூசிக் நிகழ்ச்சிகள் மக்கள் விரும்ப இதுவே காரணம்

 

உலகம் முழுக்க லைவ் மியூசிக்கையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். இங்கே டிவியில் பார்க்கவிரும்புகிறார்கள். நேரில் வருவது கம்மி. இந்தக்கலை அழிந்துகொண்டிருக்கிறது

 

ரமேஷ்குமார்

 

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-26
அடுத்த கட்டுரைஎம்.ஏ.சுசீலா விழா பதிவு