மொழியாக்கம் ஒரு கடிதம்

susila

 

மொழியாக்கம் பற்றி மீண்டும்…
எம்.ஏ.சுசீலா நன்றியுரை
இந்திரா பார்த்தசாரதி உரை
இரண்டாம் மொழிபெயர்ப்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் செந்தில்நாதன். எம்.ஏ.சுசீலா அவர்களுக்கு விஷ்ணுபுரம வாசகர் வட்டமும் ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து நடத்திய பாராட்டு விழாவிற்கு வந்திருந்தேன்.  ”மூல மொழி தெரியாமல் மொழிபெயர்க்கக் கூடாது” என்று குற்றம் சாட்டி வந்திருந்த கடிதம் அவருக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது என்று எழுதியிருந்தார். அதன் விளைவாகவே இந்தக் கடிதம்.

சுசீலா அவர்கள் செய்துள்ளது எத்தனை பெரிய காரியம் என்று இங்கு யாருக்கும் புரியவில்லையோ என்று தோன்றுகிறது. உரைநடை மொழிபெயர்ப்பு முழு உழைப்பை வாங்கும் வேலை. அதுவும் தஸ்தயெவ்ஸ்கிநாவல்கள் மொழிபெயர்ப்பது மிகப்பெரிய சவால். எட்டு மாதங்களில் குற்றமும் தண்டனையும் நாவலை  மொழிபெயர்த்தது அவரே கூறியது போல் தாஸ்தயேவ்ஸ்கி அவரை ஆட்கொண்டதால் தான்.

மொழிபெயர்ப்பின் மிகப் பெரிய தடங்கல் சரியான சொல் அமைவது தான். அது அமையும் வரை அடுத்த வரிக்குப் போக முடியாது. சொல் சொல்லாகப் பார்த்து மொழிபெயர்க்க வேண்டும். அதே சமயம் புதினத்தின் நடையும் தடைப் படக் கூடாது. சுசீலா அவர்கள் எடுத்துக் காட்டியது போல் Porter என்ற சொல்லுக்கு “சுமைக் கூலி” அல்லது “கூலிக்காரன்” என்று மொழிபெயர்த்திருக்கலாம். ஆனால் அவர் அந்த நாவலின் போக்கில் அது அந்தக் கட்டடத்திம் காவலாளியைக் குறிக்கிறது என்றுணர்ந்து காவலாளி என்று மொழிபெயர்த்துள்ளார். இதெல்லாம் ஒரு விஷயமா என்று தோன்றும். ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தெரியும் – இப்படி செய்யும் ஒவ்வொரு சரியான் தேர்வும் இறுதிப் படைப்பை செப்பனிடும்;  தவறாக இருந்தால் நீர்த்துப் போகச் செய்யும்.

 

Contance Garnett
Contance Garnett

தமிழ் மொழிபெயர்ப்புகள் ஏறத்தாழ அனைத்தும் ஆங்கில வழியே மொழிபெயர்ப்பது தான். லத்தீன் அமெரிக்க நாவல்கள் முதல் மண்டோ படைப்புகள் வரை இங்கு அனைத்துமே ஆங்கில வழி மொழிபெயர்ப்புகளே. இன்று கூகிள் வசதி வந்து விட்டதால் ஏதேனும் சந்தேகம் வந்தால் மூல மொழியைத் தேடி கண்டுபிடிக்க முடிகிறது. இருந்தாலும் ஆங்கில வழியே ஆரம்பம். செவ்வியல் ஆக்கங்களுக்கு ஆங்கிலத்திலேயே பல மொழிபெயர்ப்புகள் வந்து விட்டன.

தமிழில் மொழிபெயர்ப்பவர் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவுக்கு வர முடியும். அதைத் தான் சுசீலா அவர்களும் செய்திருப்பதாகச் சொன்னார். கான்ஸ்டன்ஸ் கார்னெட் (Contance Garnett) மொழிபெயர்ப்பை அடித் தளமாக வைத்துக் கொண்டு மற்ற ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு மொழிபெயர்த்திருக்கிறார்.

தற்போது ரஷ்ய நாவல்களை மீண்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருபவர்களில் முக்கியமானவர்கள் கணவன் மனைவி அணியான Richard Pevear & Larissa Volokhonsky (https://en.wikipedia.org/wiki/Richard_Pevear_and_Larissa_Volokhonsky). இவர்களில் கணவர் ரிச்சர்ட் அமெரிக்கர், மனைவி லாரிஸ்ஸா ரஷ்யாவில் பிறந்தவர். ஒரு பேட்டியில் அவர்களது மொழிபெயர்ப்பு முறையை விவரித்துள்ளார்கள். முதலில் லாரிஸ்ஸா ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மூலப் பிரதியை ஒட்டி மொழி பெயர்ப்பார். பின்னர் ரிச்சர்ட் அதை மீண்டும் ஆங்கிலத்தில் செப்பனிட்டு மொழிபெயர்ப்பார். ஒரு நாவல் மொழிபெயர்ப்புக்கு இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் ஆகின்றன.

இத்தகைய support systems எதுவும் இல்லாமல் தனியாளாக நான்கு தஸ்தயெவ்ஸ்கி நாவல்களை மொழிபெயர்த்துள்ளவரைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, குற்றம் கண்டுபிடிக்காமல் இருக்கலாம்.

புனைவு மொழிபெயர்ப்பு என்பது மொழிபெயர்ப்பாளர் விரும்பிச் செய்வது. அதனால் அவருக்குக் கிடைக்கப் போவது ஒன்றுமில்லை, தன் மொழிக்குப் பிறமொழி வளங்களைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டோம் என்பதைத் தவிர.

தமிழ் எழுத்தாளனாய் இருப்பது தற்கொலைக்குச் சமானம் என்று சொல்லுவார்கள். தமிழ் மொழிபெயர்ப்பாளராய் இருப்பது அதனினும் கொடிது :-)

செந்தில்நாதன்

www.oldtamilpoetry.com

 

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-25
அடுத்த கட்டுரைகொல்லிப்பாவை, கைதி