அன்பின் ஜெயமோகனுக்கு.
நீங்கள் கொல்லிப்பாவையில் கைதி என்ற தலைப்பில் எழுதிய உங்கள் முதல் கவிதையை அண்மையில் வாசித்திருந்தேன். இதன் பிறகு தங்களுடைய மலையாள மொழிபெயர்ப்புக் கவிதை நூலையும் வாசித்துள்ளேன். தாங்கள் கவிதைகளை ஆரம்பத்தில் எழுதுவதில் அதிக பிரயத்தனம் காட்டியதற்கான சான்றாக கைதி என்ற கவிதையைக் கருதுகிறேன். இதன் பிற்பாடு நாவல், சிறுகதை, அல்புனைவுகளில் மூழ்கிய ஜெயமோகன்தான் தமிழுலகில் பெருமளவில் அறியப்பட்டவராக இருக்கிறார். ஒருவேளை கவிதைத்துறையில் சென்ற ஜெயமோகன் தேடல்கள் குறைந்தவராக மாறியிருப்பாரா. இதை அறிந்தேதான் தவிர்த்தீர்களா. அத்துடன் உங்களுடைய “படுகை” என்ற கதையில் இருக்கும் கவித்துவம் கைதி கவிதையிலும் அதிகம் காணமுடிகிறது.
சுயாந்தன்
தங்களுடைய கவிதை:
கைதி
என் அறை சிறியது
நிறைய ஜன்னல்கள்.
என் புத்தகங்கள் கலைந்து கிடக்கின்றன
மேஜைக்குக் கீழ் காகிதக் குப்பை
கறை படிந்த காபி கோப்பை
அறுந்து துடிக்கும் கவிதை வரிகள்.
கோடையில் சூடான தென்றல்
உள்ளே வருகிறது
இரவில் நிலவும்
தூரத்து சங்கீதமும்
கனவும்.
எனக்கு அலுத்துவிட்டது
என் ஜன்னல் பார்வைகளுக்கெல்லாம் ஒரே கோணம்
வெளியே போக விரும்புகிறேன்
உடைமாற்றிச் செருப்பணிந்து
தேடினால்
வாசல் இல்லை.
நாற்புறமும் சுவர்கள்
ஜன்னல்கள்
வெளிக்காற்று உள்ளே வருகிறது
இதற்குள் என் உடல் சூடு புழுங்குகிறது.
இந்த ஜன்னல் வழியாக
நான் வீரிட்டு அலறினால்
எத்தனை பேருக்குக் கேட்கும்?
ஒரு துண்டு வெள்ளைத் தாளில்
என் துயரை ஏற்றி
தெருவுக்கு விட்டெறிகிறேன்
இதயத்துடிப்புடன் காத்திருக்கிறேன்.
அவற்றின் மேல் மனித காலடிகள்
இரக்கமின்றி நடந்து போகக் கூடும்
அன்புள்ள சுயாந்தன்,
1986ல் நான் ராஜமார்த்தாண்டனைச் சந்தித்தேன். சுந்தர ராமசாமியின் இல்லத்தின் முகப்பிலிருந்த கொட்டகையில். அவருடன் அவர் நண்பர் கட்டைக்காடு ராஜகோபாலனும் வந்திருந்தார். மது அருந்திருந்தமையால் இருவரும் வீட்டுக்குள் நுழையவில்லை.மாலை வந்து இரவு வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பிச்சென்றனர். செல்லும்போது ராஜமார்த்தாண்டன் எனக்கு கொல்லிப்பாவை இதழை அளித்து நான் எழுதிய ஏதேனும் படைப்புக்கள் இருக்குமென்றால் அதற்குக் கொடுக்கும்படிக் கேட்டார்
கொல்லிப்பாவை என்னும் மும்மாத இதழ் அப்போது அவர்கள் இருவராலும் நடத்தப்பட்டுவந்தது. முன்னர் உமாபதி அதை நடத்தி நிறுத்திவிட்டிருந்தார். ராஜகோபாலன் அதை வெளியிட ராஜமார்த்தாண்டன் ஆசிரியராக இருந்தார். 200 பிரதிகள். நாகர்கோயில் பாரதி அச்சகத்தில் அது அச்சாகியது. அட்டையிலேயே எழுத்துக்கள் தொடங்கிவிடும். ஒரு படைப்புத்தொகுப்புதானே ஒழிய இதழ் என்னும் சொல்லுடன் நினைவு வரும் எந்த அம்சமும் அதில் கிடையாது. நான் அப்போது பிரபல இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். சிற்றிதழ் உலகம் அந்த ஆண்டுதான் எனக்கு அறிமுகம். கொல்லிப்பாவையை அப்போதுதான் பார்த்தேன். அந்த இதழில் சுந்தர ராமசாமியின் 13 கவிதைகள் அச்சாகியிருந்தன.
நான் அன்று கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். காசர்கோடு சென்றபின் அங்கிருந்து என் 4 கவிதைகளை அளித்தேன். அதில் கைதி மட்டும் ராஜமார்த்தாண்டனால் பிரசுரிக்கப்பட்டது. தீவிர இலக்கியத்தளத்தில் பிரசுரமான என் முதல் படைப்பு அது. பல இடங்களில் அதுவே என் தொடக்கம் என குறிப்பிட்டிருப்பேன். சில மாதங்களில் ‘நதி’ என்னும் சிறுகதை கணையாழி இதழில் வெளியாகியது. சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகுக்குள் நுழைந்தேன். அன்று எனக்கு 24 வயது. அடுத்த சில ஆண்டுகளுக்குள் படுகை, போதி, மாடன் மோட்சம் என தொடர்ச்சியாக கவனிக்கப்பட்ட கதைகளை எழுதிவிட்டேன். 1990ல் என் முதல் நாவல் ரப்பர் எழுதினேன். என் முதல் நூலும் அதுதான்.
அன்று கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். காலச்சுவடிலும் கவிதைகள் வெளிவந்துள்ளன. ஆனால் விரைவிலேயே கவிதை எனக்கான இடமல்ல என்று கண்டுகொண்டேன். கவிதையின் வடிவம் அளிக்கும் கட்டுப்பாடு, ஒருதருணத்தில் ஒரு மொழிவெளிப்பாட்டில் மின்னிமறையும் அதன் இயல்பு, என் வாழ்க்கைநோக்குக்கும் தேடலுக்கும் உகந்தது அல்ல. நான் சிறுகதை அங்கிருந்து நாவல் என நகர்ந்தேன். ஆனால் கவிதை என்றும் என்னுடன் இருக்கிறது. நவீன எழுத்தில் கவிதை ஒரு பிரிக்கமுடியாத அம்சம்.குறிப்பாக நாவல் என்பதே கவிதையின் விரிவான வடிவம்தான். எல்லா வகையான கவிதைவெளிப்பாடுகளுக்கும் நாவலில் இடம் உண்டு.
ஜெ