ஊட்டியில் ஒருநாள்

IMG_1386

ஏப்ரல் 14 விஷு. கேரளத்தின் கணிகாணும் திருநாள். தமிழ்ப்புத்தாண்டு. தொன்மையான தமிழ் ஆண்டுப்பிறப்பு இதுதான்.  வெவ்வேறு வகையில் தென்னிலம் முழுக்கவே இந்நாள் கொண்டாடப்படுகிறது, நாம் இன்று ஊகிக்கவே முடியாத தொல்பழங்காலத்தில் பொதுவாக இளவேனிலை ஒட்டி ஆண்டைத் தொடங்கி நாட்களைக் கணக்கிட்டிருக்கிறார்கள். அன்றெல்லாம் கொன்றை பூப்பதுதான் இளவேனிற் காலத்தின் அடையாளம். கொன்றைக்கொடி ஏந்தி இளவேனில்மகள் எழுந்தாள் என்பது மலையாளக் கவிதை.

கொன்றை என்றால் சரக்கொன்றை மட்டும்தான். இன்றுள்ள பெரும்பாலான கொன்றைகள் சீமைக்கொன்றை வகை. 1700 களில் இந்தியாவுக்கு போர்ச்சுக்கீசியர்களாலும் பிற ஐரோப்பியராலும் கொண்டுவரப்பட்ட நிழல்மரங்கள் அவை. கொன்றை தமிழ்ப்பண்பாட்டில் எந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது என சங்கப்பாடல்கள் காட்டுகின்றன.கொன்றை மங்கலத்தின் அடையாளம். பொன், தீ ஆகியவற்றின் அழகுருவாகவே கொன்றை பாடப்பட்டிருக்கிறது. அனலுருக்கொண்டவனாகிய சிவனுக்குரியது கொன்றை. புறநாநூறு இறைவாழ்த்துப்பாடlல்  சிவனின் மாலையாகிய கொன்றையை  ‘கண்ணி கார் நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை’ என்கிறது.

IMG_1397

உண்மையில் தமிழகத்தின் நிலம் கோடையில் கொன்றையின் பொன்னிறம் கொண்டுவிடுகிறது. கொன்றை மலர்வது வரவிருக்கும் கோடையின் அறிவிப்பு. அனல் மலரெனப் பூப்பது அது. பழந்தமிழர் தமிழ் விரிநிலத்தின் கோடையை மகிழ்ந்து போற்றியிருக்கிறார்கள் எனத் தோன்றுகிறது.சங்கப்பாடல்களில் கொன்றை பொன்னுக்குரிய குறிப்புச்சொல்லாகக்கூட கையாளப்பட்டிருக்கிறது. கொன்றை சூரியனுக்குரிய மலராக கருதப்பட்டிருக்கலாம். சௌர மதத்தில் அதற்கு முதன்மையான இடம் இருந்திருக்கிறது

இத்தனை ஆண்டுகளுக்குப்பின்னரும் கொன்றையை முதலில் பார்ப்பது பரவசமூட்டும் அனுபவமாகவே இருக்கிறது. இளமையின் உளப்பதிவுகள்தான் காரணம். அன்றெல்லாம் முதற்கொன்றை எங்கே பூக்கிறது என்று தேடிக்கொண்டிருப்போம். முதல் பொன்மலர் கண்ணில் பட்டதுமே ஆலயத்திற்கு சொல்வோம். எங்களூட் மகாதேவர் ஆலயத்தில் அன்றே தெய்வத்திற்குரிய புத்தாண்டு தொடங்கிவிடும். நெய்யரிசிப் பாயசம், கதலிப்பழம் படைத்து பூசைநிகழும்.

muni
முனி நாராயணப்பிரசாத்

விஷு சூரியனுkகுரிய நாள். விஷு என்றாலே சமம் என்றுதான் பொருள். இந்நாளில் சூரியன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். முற்றிலும் சமமான நாள் இது என்பது தொன்மையான வானியல் கணிப்பு. மலையாள ஆண்டுக்கணக்கு கிபி 825ல் குலசேகரப்பெருமாள் ஆட்சிக்காலத்தில் இன்றுள்ள முறைக்கு மாற்றப்பட்டது. இது கொல்லவருடம் எனப்படுகிறது. [இது கொல்லவருடம் 1193 ] இதன்படி ஆவணி மாதம் [மலையாளத்தில் சிங்ஙம்]  தான் மலையாள ஆண்டுப்பிறப்பு வருகிறது. ஆனாலும் விஷு கேரளத்தின் முக்கியமான திருவிழாவாக நீடிக்கிறது. வைணவத்திற்குள் அதற்கு ஒரு முதன்மையான இடம் உள்ளது. சௌரம் கேரளத்தில் வைணவத்துடன்தான் இணைந்தது

விஷு போன்ற பண்டிகைகளை எங்கள் வீட்டில் கொண்டாடுவதில்லை. ஓணம் கூட கொண்டாடுவதில்லை.  எங்கள் வீட்டில் கேரளப்பண்பாடு இல்லை. நான் பெரும்பாலும் ஓணத்தன்று ஏதாவது வெளியூரில் இருப்பேன். கேரளம் என்றால் அங்கே ஓணம் கொண்டாடுவேன். பிள்ளைகள் இருந்தபோது தீபாவளி கொண்டாட்டம் இருந்தது. இப்போது அதுவும் இல்லை. அந்தக் கவனம் இருப்பதில்லை என்பதுதான் உண்மை.

IMG_1405

இந்த ஆண்டு விஷு வை ஊட்டியில் கொண்டாடினேன். தற்செயலாக அமைந்ததுதான். ஆண்டுதோறும் ஊட்டி நாராயணகுருகுலத்தில் குருநித்யாவின் குருபூஜை விழா ஏப்ரலில் நிகழும். ஆங்கில கணக்குப்படி ஏப்ரல் 19. குரு சமாதி அடைந்த நாள். நட்சத்திரக் கணக்குப்படி ஏப்ரல் 15 அன்று இம்முறை அமைந்தது.  நான் இம்முறை முனி நாராயணபிரசாத் அவர்கள் அழைப்பின் பேரில் அவ்விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன்.

ஊட்டியிலிருந்து நண்பர்கள் இரண்டு கார்களிலாக ஊட்டி சென்றோம். ஊட்டி பயணம் எனக்கு எப்போதுமே ஒரு சவால். கழுத்துப்பிரச்சினை இருப்பதனால் தலைசுற்றும். ஆகவே அரைமயக்கநிலையில் தூங்கியபடித்தான் செல்வேன். பொதுவாக ஊட்டியில் ஒரு முழுநாள் இரவு தூங்கியபின்னரே ஒருமாதிரி நிலைகொள்வேன்

நண்பர்களுடன் ஊட்டியில் இருப்பது ஓர் உற்சாகமான அனுபவம். ஊட்டியில் நாங்கள் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மழை பெய்திருந்தது.நாங்கள் இருந்த நாட்களில் அழகான வெயில். குருகுல விழா ஒரு வகையான குடும்ப சந்திப்பு. நித்யாவுடன் தொடர்புகொண்டிருந்தவர்கள், அவர்களின் குடும்பங்கள் பங்குகொள்வது. பொதுவாக அவர்கள் பலவகையிலும் உலகம் முழுக்கச் சிதறிப்பரந்துவிட்டனர். மிகக்குறைவானவர்களே இன்று வருகின்றனர். விழாவுக்கு வந்திருந்தவர்களில் சிலரையே என்னால் அடையாளம்காணமுடிந்தது

b

இன்றிருக்கும் குருகுலத்தலைவர் முனி நாராயணப்பிரசாத் அவர்கள் கேரளத்தில் வற்கலையில்தான் பெரும்பாலும் இருக்கிறார். அங்குதான் அவருடைய மாணவர்கள் உள்ளனர். வற்கலாவில் நடராஜ குருவின் குருபூஜையும், நாராயணகுருபூஜையும் விரிவாக நிகழ்கின்றன. அவரைச் சந்திக்கவேண்டும் என்பது நான் ஊட்டி செல்வதற்கு முக்கியமான காரணம்.

முனி நாராயணப்பிரசாத் அவர்கள் நடராஜகுருவின் நேரடி மாணவர். 1938 ல் திருவனந்தபுரம் அருகே பிறந்தார். பொறியியல் படித்து முடித்து 1960 ல் நாராயணகுருகுலத்தில் சேர்ந்தார். தத்துவத்தில் அதன்பின் பட்டம் பெற்றார். வெவ்வேறு பல்கலைகளில் தத்துவ ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். 1985ல் நித்ய சைதன்ய யதியிடமிருந்து துறவு பெற்றார்/.90 நூல்கள் வெளிவந்துள்ளன. 1999ல் நித்ய சைதன்ய யதி மறைவுக்குப்பின் நாராயணகுருகுலத்தின் தலைமைப்பொறுப்பில் இருக்கிறார்.

22

நடராஜகுரு இறுதியாக எழுதிய நூல் சௌந்தரிய லகரி உரை. ஆதிசங்கரரின் நூலாக கருதப்படும் இப்படைப்பை அவர் இயற்றியிருக்க வாய்ப்பில்லை என்றே ஆய்வாளர் பலர் கருதுகிறார்கள். இது ஓர் கவிதைநூல் – மறைஞானநூலும்கூட. தாந்த்ரீகக்குறியீடுகள் கொண்டது. சாக்த மரபைச் சேர்ந்தது. ஆதிசங்கரர் ஆறுமத இணைப்பைச் செய்தவர். பின்னாளில் எல்லா சைவம் வைணவம் சாக்தம் உட்பட முக்கியமான மதங்களைச் சார்ந்து அவர்பெயரில் நூல்கள் உருவாயின, பஜகோவிந்தம், மனீஷாபஞ்சகம் போன்ற நூல்கள் பிறகு சங்கரரின் வழிவந்தவர்களால் இயற்றப்பட்டிருக்கலாம். அவர்களும் சங்கரர் என்றே அழைக்கப்பட்டனர். ஆகவேதான் முதல்சங்கரர் ஆதிசங்கரர் எனப்படுகிறார்.

ஆனால் நடராஜ குரு சௌந்தர்ய லஹரி ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது என்றே நினைக்கிறார். அதற்கான விளக்கங்களையும் அளிக்கிறார். அவருடைய கோணத்தில் அத்வைதத்தின் கறாரான தத்துவநோக்கை சமன்செய்யும் அழகியல் சார்ந்த தளம் சௌந்தரிய லஹரி. ஆதிசங்கரர் எழுதிய விவேகசூடாமணி போன்ற வேதாந்த நூலின்  மறுபக்கம். தத்துவத்தின் அழகியல் இது.

IMG_1484

அத்வைத தரிசனத்தின்படி பிரம்மம் ஒன்றே மெய், இவ்வுலகு மாயை. இதன் அழகுகளும் கடமைகளும் எல்லாமே  உளமயக்குகள். ஆனால் அதனால் அத்வைதம் இந்த உலகின் அழகுகளையும் கடமைகளையும் நிராகரிப்பதில்லை. அவற்றை மேலும் திறம்படச்செய்யவே அது வழிகாட்டுகிறது. அதை நடராஜகுரு சௌந்தரிய லஹரி உரையில் விளக்குகிறார்

இந்தியாவின் மறுமலர்ச்சி  பற்றிய உரை ஒன்றில்  யூ.ஆர்.அனந்தமூர்த்தி சொன்னார். நவஇந்தியாவின் சிற்பிகளான தத்துவசிந்தனையாளர்கள், ஆன்மஞானிகள் பெரும்பாலும் வேதாந்திகள். விவேகானந்தர், நாராயண குரு போல. நவீன இந்திய எழுத்தாளர்களில் முன்னோடிகள் பெரும்பாலும் வேதாந்திகள். பாரதி, குமாரன் ஆசான், தாகூர் என … ஆனால் வேதாந்தம் இவ்வுலகை மாயை என்கிறது. இதை புரிந்துகொள்வதற்கு நவீன அரசியல், அழகியல் கொள்கைகள் உதவாது என்றார் அனந்தமூர்த்தி

அதைத்தான் நடராஜகுரு இந்நூலில் விளக்குகிறார். வேதாந்திக்கு இவ்வுலகு மாயைதான். மெய்மை என்பது பிரம்ம அனுபவமே. பிரம்மத்தை, முதல்முழுமையை,உணரும் ஆனந்த அனுபவத்தையே அழகனுபவமாக அவன் கொள்கிறான். அவன் உணரும் இயற்கை அழகு என்பது பிரம்மத்தின் ஒரு வடிவமே.

kon

நடராஜகுருவின் சௌந்தரியலஹரி உரை மிகக் கடினமானது. அவருடைய ஐரோப்பிய தத்துவமாணவர்களை மனம்கொண்டு எழுதப்பட்டது. ஐரோப்பிய தத்துவக் கலைச்சொற்கள் மிகுந்தது. அதை எளிமையாக மலையாளத்தில் சுதந்திரமொழியாக்கம் செய்திருக்கிறார் முனிநாராயணப்பிரசாத்.கேரள அரசின் பிரசுரத்துறை சார்பாக சென்ற ஆண்டு வெளியான அந்நூல் சிறந்த மறுஆக்க நூலுக்கான கேரள சாகித்ய அக்காதமிவிருதுபெற்றது.

அதன் இரண்டாம்பதிப்பு ஊட்டியில் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. அதை வெளியிட்டு நான் 15 நிமிடம் பேசினேன். ”ஏன் சுருக்கமாகப் பேசினாய்?” என்று குரு கேட்டார். “அதிகப்பிரசங்கம் ஆகிவிடக்கூடாதே” என்றேன்.

IMG_1591
நித்யா சமாதி

விஷு அன்று ஆசிரியர், தந்தை ஆகியோரிடமிருந்து ஒரு நாணயத்தைப் பெற்றுக்கொள்வது கேரள வழக்கம். இதை ‘கைநீட்டம்’ என்கிறார்கள். அந்தச்செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. குரு நாராயணப்பிரசாத் அவர்களிடமிருந்து ஒரு வெள்ளிநாணயத்தையும் ஒரு துளி தேனையும் விஷு கைநீட்டமாகப் பெற்றுக்கொண்டேன்.

இந்த ஆண்டு கொன்றையில் தொடங்கியிருக்கிறது என நினைத்துக்கொண்டேன். கோவைக்குத் திரும்பி வரும் வழியில் நல்ல மழை. வானில் கருமுகில்கள் திரண்டிருக்க இரண்டு பெரிய தூண்களாக மழை நின்றிருப்பதைப் பார்த்தபடியே வந்தோம். திரையைக் கிழித்து நுழைவதுபோல் மழைக்குள் சென்றோம்

முந்தைய கட்டுரைகொல்லிப்பாவை, கைதி
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-26