வருகை

21270965_1429640460487143_5342470666157919731_n

இப்படி அரிதாகவே நிகழ்கிறது, எனக்குக் கடந்தகால ஏக்கங்கள் மேல் ஈடுபாடு மிகக்குறைவு. நான் நிகழில் வாழ்பவன். என்னைமீறிய எதிர்காலக் கனவுகள் கொண்டவன். ஆனால் இறந்தகாலம் அழுத்த அழுத்தச் செறிந்து எங்கோ விதையென்று ஒளிந்திருக்கிறது.

நேற்றிரவு புலரியில் ஒரு கனவு. நான் படுத்துக்கொண்டிருக்கிறேன். விடிந்துவிட்டிருந்தது. அலெக்ஸ் மாடியேறி என் படுக்கையறைக்குள் வந்து காலடியில் அமர்ந்தார். “ஜெ, எப்டி இருக்கீங்க?” என்றார்.

“எப்ப வந்தீங்க?” என்று எழுந்துகொண்டேன்.

”இப்பதான். அருண்மொழி காபி போடுறாங்க. அதான் மேலே வந்திட்டேன்” என்றார்

அது முன்பு ஒருமுறை நடந்ததுபோலவே இருக்கிறது என்று ஞாபகம் வந்தது.  “கீழே வரீங்களா? ஃப்ரண்ட் ஒருத்தர் பாக்க வந்திருக்கார்” என்றார் அலெக்ஸ்

நான் எழுந்து கழிப்பறைக்குள் சென்று முகம் கழுவியபடி “உங்க ஃப்ரண்டா?” என்றேன்.

“உங்க ஃப்ரண்டுதான்” என்றார்.

“எப்டி வந்தீங்க? கன்யாகுமரி எக்ஸ்பிரஸா?” என்றேன்

“இல்ல ஜெ, கார்லே வந்தேன்”

“யார் கார்ல?”

“அவர் கார்லதான்”

நான் படிகளில் கீழே வரும்போது அலெக்ஸிடம் “என்னாச்சு புக்?” என்றேன்.

“வந்திரும்.. ரொம்ப பெரிசு. புரூஃப் முடியலை. ஒரு பிராஜக்ட். ரெட்டைமலை சீனிவாசன் அயோத்திதாசர் ரெண்டுபேருக்கும் ஒரு சிலை வைக்கணும்” என்றார்.

“மதுரையிலேயா?”

“இல்ல, இங்க நாகர்கோயிலிலேதான்..”

“இங்க எதுக்கு?”

“இங்கதானே மலை இருக்கு?”

27752095_10212797430983242_2325130647230164713_n

கீழே வந்தால் சோபாவில் குமரகுருபரன் அமர்ந்திருந்தார். “என்ன, சொல்லவே இல்லை?” என்றேன்.

“அலெக்ஸ் வருவதா சொன்னார். சரீன்னு கெளம்பியாச்சு. திருநெல்வேலி போய்ட்டு அப்டியே வந்தேன்” என்றார்.

கையில் ஒரு புத்தகத்தை வைத்திருந்தார். “அதென்ன புக்?” என்றேன்

”உங்க புக்குதான்… நியாயசாஸ்திரம்னு ..சும்மா பாத்தேன்”

அருண்மொழி காபியுடன் வந்து “கொஞ்சநேரம் முன்னாடிதான் வந்தாங்க… இவரு போயி டோராவா பாத்திட்டிருந்தாரு…அலெக்ஸ் மேலே வந்தார். டோரா இவர்கூட செல்லமாயிட்டா ஜெயன்” என்றாள்.

நான் அமர்ந்துகொண்டு “நான் நாளைக்கு மெட்ராஸ் கிளம்பறேன்” என்றேன்.

“ஆமா, நான் கூட அதைப்பத்திப் பேசத்தான் வந்தேன். நாம ஜூன்ல விருது குடுக்கிறோம்ல?” என்றார் குமரகுருபரன்.

அலெக்ஸ் “என்ன விருது” என்றார்.

“குமரகுருபரன் விருது. கவிதைக்கு குடுக்கிறது” என்றேன்

சொன்னதுமே இதென்ன என்று திடுக்கிட்டேன். இருவருமே இறந்துவிட்டார்கள் என்பது நினைவுக்கு வந்தது. அவர்கள் இறந்துவிட்டவர்களாகவே தோன்றினார்கள். ஆனால் கூடத்தில் அமர்ந்திருந்தார்கள்.

விழித்துக்கொண்டேன். தொலைவில் தேவாலயத்திலிருந்து பைபிள் வசனம். மணியோசை

முந்தைய நாள் இரவு எவரோ குமரகுருபரன் விருது பற்றிப் பேசினார்கள். அலெக்ஸ் பற்றி எதையாவது பார்த்தேனா என ஞாபகமில்லை. கனவு நம் விழைவுகளின் வடிவம். இறந்தவர்களை அது தக்கவைக்க முயல்கிறது. நியாயம் பற்றி ஏதாவது நூல் எழுதும் ஆசை உள்ளே கிடக்கிறதா என்ன?

முந்தைய கட்டுரைபழைய யானைக் கடை
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-24