துகள்

துகள்,நூற்பு துவக்க விழா அழைப்பிதழ்

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

மென்பொருள் துறையில் செய்து கொண்டிருந்த பணியில் இருந்து விலகி கைநெசவு சார்ந்து பயணப்பட வேண்டும் என்ற விருப்பத்திலும் மனபலம் இல்லா நிலையிலும் இருந்து கொண்டிருந்தபொழுது குக்கூ காட்டுப்பள்ளியில் சிவராஜ் அண்ணன் மூலம் கிடைக்கப்பெற்ற இன்றைய காந்தியின் வரிகள் உண்மையிலேயே என்வாழ்விற்கும் கைநெசவு சார்ந்த பயணத்திற்கும் தாய் உரமாக இருந்தது. அது தந்த உத்வேகம்தான் நிறைய இடையூறுகள் இருப்பினும் இன்றும் சாதக பாதகங்களை அறிந்து விருப்பத்துடன் தீர்க்கமாக பயணப்பட வைத்துக் கொண்டிருக்கிறது.

கைநெசவினை கையில் எடுத்த காலத்தில்தான் மகள் பிறந்தாள். இப்பொழுது வளர்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு மெல்லிய நூல் கட்டுரையினை வாசித்து காட்டுகிறேன். அவளுக்கு இப்பொழுது புரிந்துவிடுமா என்று தெரியவில்லை ஆனால் அவளின் மனவெளியில் மெல்லிய நூலில் வரும் அந்த வயதுமுதிர்ந்த கிழவரின் குரலும் மனோதிடமும் கட்டாயம் பதிந்திவிடும் என்று உளமாற நம்புகிறேன். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு விடயம் சோர்வடைய செய்யும்போது இந்த கதைதான் தன் கைதடியால் தட்டிகொடுத்து ஓட வைக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் நடந்த உங்களுடனான அந்த சந்திப்பினை மீண்டும் நினைத்து பார்கின்றேன்.அன்றைய உரையாடலும் அனுபவபகிர்வும் உண்மையில் எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் தொடர்ந்து இயங்குவதற்கான பெரும் உத்வேகத்தையும் அளித்துள்ளதை நான் உணர்கிறேன்.இந்த எட்டு ஒன்பது மாதங்களில் இன்னும் பல சத்தியத்தின் வேர்களை நெருங்கி அவர்களின் அனுபவங்களையும் பெற்று அடுத்த கட்ட பயணத்தினை துவங்கும் இந்த சித்திரை ஒன்றாம் நாளை என் வாழ்வின் மிக முக்கிய நாளாக கருதுகிறேன்.

காந்தியத்தை இன்றைய நிதர்சனங்களுக்கு ஏற்றபடி நான் பின்பற்றி நடப்பதற்கு பெரும் வழித்துணையாக இருக்கும் தங்களின் நண்பர்கள் மருத்துவர் வெ.ஜீவானந்தம் அய்யா மற்றும் தொல்குடி மக்களுக்காக தன் வாழ்நாளினை அர்பணித்துக்கொண்ட தோழர்.வி.பி.குணசேகரன் அய்யா இவர்கள் இருவரின் அனுபவ பகிர்தலோடு இந்த பயணத்தை துவக்கி வைக்கின்றனர். நெடிய பயணத்தில் சிறுதொலைவை கடந்து வந்திருக்கிறேன். கடந்து வந்த பயணத்தில் கிடைத்த அனுபவத்தையும், தொழிலின் அறிவை கற்றுக்கொடுத்த தம்பி பாலகுருநாதனின் பத்தாண்டு கால அனுபவத்தோடும் இணைந்து பேராற்றலின் கருணையோடும் தோழமைகளின் அரவணைப்போடும் கைதறி நெசவு மற்றும் தையலுக்கான சிறு தொழிற்கூடத்தை தொடங்க உள்ளோம்.

எனது தந்தையின் கனவினை அவர் கடந்து வந்த வலியின் வழியே எங்களுக்கான வாழ்வுவிரிகின்றது. எனது அம்மா,மனைவி மற்றும் தங்கை இந்த மூன்று பேரின் பரிபூரண அன்பும், ஆதரவும் கலந்தே இந்த தறிப்பட்டறையும் தையற் கூடமும் உயிர்பெருகின்றது.இந்த தறி சப்தம் கேட்டே என் செல்ல மகள் புவியாழ் வளர்வாள்.இன்னும் கூடுதலாக தங்களின் வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் பெற்றுக்கொள்ள விருப்பப்பட்டே இந்த கடிதத்தினை எழுதுகிறேன்.

துளிர்த்த தாய் மண்ணை மறவாமல் இன்னும் இறுக பற்றி அகநன்றியுடன் அறத்தின் துணையோடு பயணப்படுகிறேன்.

எக்காலத்துக்குமான நன்றியும்… பிராத்தனையும்…

சிவகுருநாதன்

www.nurpu.in | fb: Nurpuhandlooms

முந்தைய கட்டுரைஇரண்டாம் மொழிபெயர்ப்பு
அடுத்த கட்டுரைமொழியாக்கம் பற்றி மீண்டும்…