பழைய யானைக் கடை

isai

இனிய ஜெயம்

சமீபத்தில் வெளியாகி நான் வாசித்த நூல்களில் ஒன்று காலச்சுவடு வெளியீடான கவிஞர் இசையின் பழைய யானைக் கடை  எனும் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல். தொல்காப்பியம் முன்வைக்கும் எண்வகை மெய்ப்பாடுகளில் நகை என்பதே முதல் மெய்ப்பாடு. [அதற்கான உதாரண கவிதை எதுவும் தொல்காப்பியம் சுட்டவில்லை என ஆ இரா வெங்கடாஜலபதி தெரிவிக்கிறார்]. சங்கம் முதல் இன்று வரை தீவிர தமிழ் இலக்கிய கவிதைகள் எனும் வெளிக்குள் தொழில்பட்ட நகை எனும் மெய்ப்பாடு காண ,அது காட்சி கொள்ளும் இடம்  தேடியே  இந்த நூலில் இசை தனது பயணத்தை மேற்கொள்கிறார்.

இசையின் ஆய்வு நோக்கம். சங்க காலம் முதல் இன்றைய உலகமயமாக்கல் காலம் வரை தீவிர தமிழ்க் கவிதைப் பரப்பில் நிகழ்ந்திருக்கும் நகை எனும் மெய்ப்பாடுக்கான வெளிப்பாட்டு சான்றுகள். தான் ”எதை” நகை என்றும் விளையாட்டு என்றும் கருதுகிறாரோ அதை [மிகவும் கறாராக அன்றி ] சற்றே கோடிட்டு காட்டிவிட்டு , அந்த ஆய்வு நோக்கி சென்ற காரணத்தயும் குறிப்பிட்டு விட்டு, அவரே சொன்னது போல ,இந்த சாம்பிள் சர்வே நூலுக்குள் நுழைகிறார் .

அறிமுக வாசகர்களையும் கணக்கில் கொண்டு , அகப்பாடல்கள் ,புறப்பாடல்கள் ,நீதிநூல்கள் ,காப்பியங்கள் ,பக்தி இலக்கியங்கள் ,சிற்றிலக்கியங்கள் ,கம்பராமாயணம் ,தனிப்பாடல்கள் என பாரதி காலம் வரை , அனைத்து வகைமைகளின்  கவிதைகளில் இருந்தும் சிலவற்றை முன் வைத்து ,அவற்றின் பின்புலத்தை அழகியலை அறிமுகம் செய்து விட்டு ,அதன் இறுதியில் தனது ஆய்வு வழியே கண்டடைந்த கவிதைகளை முன்வைக்கிறார் .   பாடலுக்கான உரைகளை  அவரே அவரது பாணியில் எது கோடிட்டு காட்டப் பட வேண்டுமோ அதை மையப்படுத்தி [சம்பிரதாயபடி  பெரியவா எல்லோர் வசமும்  மாப்புகேட்டுவிட்டுத்தான்] எழுதி இருக்கிறார் . உதாரணம்

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் 

கூன்கையர் அல்லா தவர்க்கு .

கயவர்கள் ஈரக்கையைக் கூட உதறமாட்டார்கள் .யாருக்கு எனில்  அவரது செவிட்டிலேயேஅடித்து அதை உடைக்கும் வல்லமை இல்லாதவருக்கு .

அதாவது செவிட்டிலேயே நாலு போடு .தானா தருவான் என்கிறார் அய்யன் .

சங்க கவிதைகளில் துவங்கி ,பாரதி ,நா.பிச்சமூர்த்தி ,ஆத்மாநாம் ,சி .மணி ,ஞானக்கூத்தன் ,மௌனி ,சுந்தர ராமசாமி ,தேவதச்சன் , தேவதேவன்,கலாப்ரியா ,சமயவேல் ,சுகுமாரன் ,விக்ரமாதித்தன் ,யுவன் சந்திரசேகர் ,மகுடேஸ்வரன் ,கரிகாலன் ,மனுஷ்ய புத்ரன் ,ஷங்கர் ராமசுப்ரமண்யன் ,பெருந்தேவி ,லீனா மணிமேகலை ,முகுந்த் நாகராஜன் ,இளங்கோ கிருஷ்ணன் ,வெய்யில் ,கண்டராதித்தன் ,செல்மா ப்ரியதர்ஷன் ,நரன் ,லிபி ஆரண்யா ,போகன் ஷங்கர் ,சபரிநாதன் ,பேயோன் ,கதிர்பாரதி , [இந்த கறார் ஆய்வாளரின் சுயமதிப்பீட்டின் படி  கவிஞர்  இசை] என இந்த கவிஞர்களின் குறிப்பிட்ட கவிதைகளில் ,அதன் நகை வழியே அக் கவிதையின் பேசுபொருள் கொள்ளும் தீவிரம் குறித்து பேசி இருக்கிறார் .

இவை எது ஆக சிறந்த கவிதைகள் எனும் வரிசை அல்ல .கவிதையில் விளையாட்டு தொழில்படும்போது அக் கவிதையின் பேசுபொருள் கொள்ளும் தீவிரம் சார்ந்தே இந்த ஆய்வு என இசை தெளிவாகவே சொல்லி விடுகிறார் . விளையாட்டு எனும் கருதுகோளுக்கு வரையறை அளித்து விட்டு ,அந்த வரையறை கொண்டு பலவற்றை கேள்வி கேட்கிறார் .உதாரணமாக தேவதச்சனின் ஹையா ஜாலி கவிதையை ,   இந்தக் கவிதைக்குள் வார்த்தைகளாக மட்டுமே இருக்கிறது இந்த ஹையா ஜாலி . வாசகனுக்கு எங்கே ஐயா கிடைக்கிறது அந்த ஜாலி என வினவுகிறார் . [எனது சொற்களில் எழுதி இருக்கிறேன் இசையின் சொற்கள் வேறு ] . சங்க கவிதைகள் முதல் பாரதி வரை ,”அன்று” நகை என முன்வைக்கப்பட்ட பல ”இன்று ” காலாவதி ஆகிவிட்ட நிலையை சுட்டுகிறார் .

இந்த நூல் பேசும் பொருள் சார்ந்து ஒரு கவிதை வாசகன் இதுவரை தவறவிட்ட பல்வேறு அவதானங்களை மீட்டுக்கொள்ள இயலும் .உதாரணமாக இந்த நூலில் வாணிஸ்ரீ நீ வரவேண்டாம் ,மற்றும் பேன் புராணம் என்ற மனுஷ்ய புத்திரனின் இரண்டு கவிதைகள் குறித்து பேசப்படுகிறது .மனுஷ்யபுத்திரன் கவிதைகள் அதன் பேசு பொருள் சார்ந்து ,பெரும்பாலும் ஒரே உணர்வை மீள மீள வெவ்வேறு தருணங்களில்   நுண்மையாக சொல்வதன் வழியே தனது ”வித்தியாசங்களை ”[வேரியேஷன்] தக்கவைத்துக் கொள்கிறது .

இந்த நிலையில் மேற் சொன்ன இரண்டு கவிதைகளும் அதற்குள் தொழிற்படும் நகை எனும் மெய்ப்பாடு காரணமாகவே , தன்னியல்பாக தனக்கேயான வெவ்வேறு களங்களையும் , தருணங்களையும் ,ஆழத்தையும் ஈட்டிக் கொள்கிறது  என்பதை இசையின் இந்த நூல் வழியே ஒருவர் அவதானிக்க இயலும் .கவிதைக்குள் இசை வரையறை செய்யும் விளையாட்டு தொழில்படுகையில் அது  புதிய சாத்தியங்களை நோக்கி பாயும் இந்த நிலை மீதே இந்த நூலில் இசை கவனம் குவிக்கிறார் .

இந்த நூலில் தனது ஆய்வுக்களத்தின் குறுகல், அதன் காரணமான விடுபடல்கள் ,  நகை , விளையாட்டு இவை குறித்த தனது  வரையறைகள் பிறருக்கு ஏற்பு அற்றதாக இருக்கலாம்  என்பன போன்ற எல்லைகளை சுட்டிக்காட்டிவிட்டே இசை  இந்த ஆய்வுக்குள் நகர்ந்தாலும்  இவற்றைக் கடந்து  இந்த நூல் ஒரு  விமர்சன உரையாடலை துவக்க தேவையான ”ஒன்றை” தன்னுள் கறாராக அன்றி ஒரு கோடி காட்டலாக மட்டுமே தனக்குள் கொண்டிருக்கிறது .உதாரணமாக

வெள்ளிவீதியில் இருந்து அம்மை வழியே பெருந்தேவியைத் தொட்டு முறியும் ஒரு பொன்மின்னலைப் பார்ப்பதில் கவிதை வாசகனாக நான் களிப்பேருவகை அடைகிறேன் .கபிலரையும் ,காளமேகத்தயும்,கலாப்ரியாவையும் ,காலத்தச்சனையும் ஒன்றாக சுற்றிக்கட்டியதில் இந்த கயிற்றுக்கு மிக்க மகிழ்ச்சி 

என தனது முன்னுரையில் இசை தெரிவிக்கிறார் .

எனில்  இசை  கவிதைகளில் ”விளையாட்டு” என தான் முன் வைக்கும் கருதுகோளை திட்டவட்டமாக கறாராக முன் வைத்திருக்க வேண்டும் . அப்போதுதான்  அந்த கருதுகோளில் எந்த அலகு கபிலன் முதல் கலாப்ரியா வரை ஒன்றாக கட்டிவைக்கும் இழையாக செயல்படுகிறது என ஒரு வாசகன் ஆராய இயலும் .

பாரதி காலம் வரை கவிதைகள் பொதுவில் வைத்து நடிக்கவும் பாடவும் செய்யப்பட்டன அதற்கான யாப்பு முறை கணக்குகள் அதற்க்கு உண்டு . பாரத்திக்குப் பிறகு நவீன கவிதைகள் இந்த மரபின் தளைக் கூறுகளை உதறி ,மௌனம் கூடிய அந்தரங்க வாசிப்புக்குள் நகர்ந்தது . இந்த  தாவலில்  இந்த நகை எனும் மெய்ப்பாடு  கடந்து வந்தது என்ன  எனும் வினாவை ,இசை தனது வரையறையை கறாராக முன் வைத்திருந்தால் மட்டுமே அதைக் கொண்டு ஆராய இயலும் .

அடுத்து சங்ககாலம் முதல் இன்றைய உலகமய சூழல் வரை தமிழ் நிலத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்கள் தத்துவ வளர்ச்சிகள் , இவற்றின் வழியே தமிழ் கவிதை மரபில் இந்த நகை எனும் மெய்ப்பாடு,அதன் வெளிப்பாடு இதில் நிகழ்ந்த நுண்ணிய மாற்றம் என்ன ? இதையும் தெளிவான கருதுகோள் கொண்டே ஆராய இயலும் .

அனைத்துக்கும் மேல் இந்த ”விளையாட்டு ”ஒரு தனித்த நிலைப்பாடாக நின்று ,அது தொழிற்படும் ஒவ்வொரு களங்களிலும் ,உணர்வு நிலைகளிலும்  வழியே அந்த கவிதைக்கு அது சேர்க்கும் செழுமை . உதாரணமாக இந்த நூலில்

கட்டிப்பிடித்து முத்தமிடவா முடியும்

வா ஒரு கப் காஃபி சாப்பிடலாம்

தேவதேவன் .

இப்போதுதான் கிடைத்தது

ஜன்னலோர சீட்

அதற்குள் இறங்க சொல்லுகிறாள் அம்மா

வீடு இங்கேதான் இருக்கிறதாம்

இதெல்லாம் ஒரு காரணமா

முகுந்த் நாகராஜன் .

என இரு கவிதைகள் விவாதிக்கப் படுகிறது . முன்னதில் சமூகத் தடை ,அதன் அடுக்குகள் ,பின்னதில் பால்யம் எனும் நிலை மீது பெரியவர்களின் ஆதிக்கம் அதன் நிலைகள்  இவை பேசப்படுகிறது .   எனில் இந்த விளையாட்டு ஒரு பால்யத்தின் பார்வையில் நின்று ,காதலன் ,மத்திம வயது லௌகீகன் ,புரட்சியாளன் என ஒவ்வொரு பார்வையில் நின்று அது எவ்வாறு அக் கவிதையின் அடுக்குகளுக்கு வளம் சேர்க்கிறது, சுந்தர ராமசாமி கட்டுரைகளில் துள்ளும் பகடியும் நகையும் ஏன் கவிதைகளில் அதே வீரியத்துடன் வெளியாக வில்லை   என்பதைஎல்லாம் வாசகர் இந்த நூலைக் கொண்டு வினா எழுப்பி அணுகி அறிய  எத்தனை எளிய ஆய்வு நூல் ஆகிலும் அதில்    கறார் வரையறை இருந்தால் மட்டுமே சாத்தியம் .

நகை ,மீறல் ,துடுக்கு ,விளையாட்டு  என நான் சொல்வது உங்களுக்கு ஏற்பு அற்ற ஒன்றாக இருக்கலாம்  என இசை   நழுவலாக  சொல்லி நகர்கிறார் .மாறாக இது எனது வரையறை ,இந்த வரையறையில் நின்று இப்படி ஒரு கோணத்திலும்  நமது கவிதைகளை அணுக இயலும் என திட்டவட்டமாக சொல்லி இருக்க வேண்டும் .

மற்றபடி தலைப்பு துவங்கி சான்றாதாரங்கள் பட்டியல் வரை சுவாரஸ்யமாக இந்த நூலை வாசிக்க வைப்பது இசை எனும் மீறலும் குறும்பும் கொண்ட ஆளுமையின் மொழி நடை .அவருக்கு என்றும் என் அன்பு .

கடலூர் சீனு

—-

முந்தைய கட்டுரைஒரு சந்திப்பு -கார்த்திக் குமார்
அடுத்த கட்டுரைவருகை