காவேரிப்போராட்டம்

kaveri

அன்புள்ள ஜெ

காவேரி போராட்டத்தை ஆதரித்து நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தேன். அப்போராட்டத்தின் வன்முறையை நீங்கள் ஏற்கிறீர்களா? அதில் பெரும்பாலும் சினிமாப்பிரபலங்கள்தானே கலந்துகொண்டார்கள்?

செந்தில்குமார்

***

அன்புள்ள செந்தில்குமார்,

காவேரி தமிழ்நாடு முழுமைக்குமான பிரச்சினை அல்ல. டெல்டா மாவட்டங்கள் தவிர எங்கும் அது வாழ்க்கைப்பிரச்சினை அல்ல. பிற நிலமே இங்கு பெரும்பகுதி. அங்கெல்லாம் ஏரிகள் கைவிடப்பட்டு, கால்வாய்கள் ஆக்ரமிக்கப்பட்டு நீர்மேலாண்மை அறவே ஒழிந்துள்ளது. விவசாயம் ஆழ்துளைக் கிணறுகளை நம்பியே உள்ளது. ஒவ்வொருநாளுமென விளைநிலங்கள் கைவிடப்படுகின்றன. ஆகவே பிற மக்கள் காவேரிப்பிரச்சினையில் உணர்வுபூர்வமாக ஈடுபட வாய்ப்பில்லை. அது அரசியல்ரீதியாகவே எழுப்பப் படமுடியும். தேசம் முழுக்க கவனிக்கும்படி காவேரிக்கான குரல் எழுவதற்கு எவர் களமிறங்கினாலும் நன்று. இந்த உணர்வெழுச்சியை தவிர்ப்பதோ சிறுமைசெய்வதோ சரியானது அல்ல.

வன்முறை அதில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு தற்காலிகக் கவனத்தை அளிக்கும். எதன்பொருட்டுப் போராடுகிறார்களோ அதைத் தோற்கடிக்க மட்டுமே உதவும். வன்முறை முந்தையகாலகட்டங்களில் நேரடியாக மக்களால், குறிப்பாக பெண்களால் பார்க்கப்படுவது குறைவு. இன்று ஊடகங்கள் வழியாக நேரடியாகச் சென்றடைகிறது. வன்முறைமேல் தமிழ்ப்பெண்கள் கொண்டுள்ள ஒவ்வாமையை தொடர்ந்து கண்டுவருகிறேன். வன்முறையில் ஈடுபடுபவர்கள் அரசியல்தற்கொலையே செய்கிறார்கள்.

சிலவிஷயங்களில் எச்சரிக்கை தேவை. காவேரிப்பிரச்சினை தமிழக அரசு நீர்நிலைகளைச் சீரழித்த ஐம்பதாண்டுக்கால வரலாற்றை மறைக்ககூடாது. நீராதாரங்களைப் பெருநகர்கள் சுரண்டுவதை அனுமதிக்கும்படிச் செய்யக்கூகூடாது. அனைத்தையும் விட ஒன்று உண்டு. இந்தியாவில் பஞ்சாப் பிரச்சினை உட்பட பல்வேறு பிரிவினைக்கோரிக்கைகள் நதிநீர் பங்கீட்டிலிருந்தே ஆரம்பித்தன. பல்வேறு அந்நிய சக்திகளால் வளர்க்கப்பட்டு அந்த மாநிலங்களுக்குப் பேரழிவை அளித்தன. பொருளியல் அழிவுகளிலிருந்து அவை எழுந்துவர ஒரு தலைமுறைக் காலம் ஆகியது.

போராட்டத்தை ஆதரிக்கையிலேயே அது பொறுப்புள்ள, வெகுஜன ஆதரவுள்ள பெரிய அமைப்புகளின் ஜனநாயக சக்திகளின் கைகளை விட்டுச் செல்லகூடாது, ஒருபோதும் உதிரி அரசியல்வாதிகளால் ஆக்ரமிக்கப்படக்கூடாது என்றும் சொல்லவேண்டியிருக்கிறது. இது பொருளியல் உரிமைக்கான போராட்டம், பொருளியல் அழிவாக ஆகிவிடக்கூடாது.

எளிய குடிமகனாக நின்று நோக்கும்போது எழும் இருபாற்பட்ட உணர்வுகள் இவை. எனவே இவற்றில் பொது உணர்வுகளுடன் இணைவது அன்றி நான் செய்யக்கூடுவது பிறிதில்லை.

ஜெ

***

இனிய ஜெயமோகன்

தாங்களும் காவிரி பற்றி உணர்ச்சிகரமான பதிவிட்டிருப்பது என்னளவில் ஒரு சிறு ஏமாற்றமாய் உள்ளது.

பெரும்பாலான போராட்டங்கள் அன்றளவில் மனவெழுச்சிகளை உண்டாக்கி நம்மை முட்டாளாக்கி பின் சில மாதங்கள், வருடங்களில் “இதற்குத்தானா இவ்வளவும்” என்று தோன்றிவிடும். எ.கா. கடந்த வருட ஜல்லிக்கட்டு, இப்போது ஸ்டெரிலைட். உங்களின் தற்கால அரசியல் பற்றி எதிர்வினை ஆற்றாமல் இருக்கும் பாலிசி மிகச் சிறப்பானது என்பது என் எண்ணம். நீங்கள் காவிரி, ஸ்டெரிலைட் ஆகியவற்றுக்கு உடனடி ஆதரவு சொன்னது ஒரு பிறழ்வாக எனக்கு படுகிறது.

காவிரி நம் உரிமை, வாழ்வாதாரம் என்பதிலோ, பா ஜ க, காங்கிரஸ் இரண்டுமே தமிழகத்திற்கு ஆதரவாக இருக்கப்போவதில்லை என்பதிலோ ஐயமில்லை. வன்முறை போராட்டங்கள் தான் தீர்வா?

நாளை கர்நாடகத்தில் இதை விட பெரிய வன்முறை வெடித்தால் அவர்கள் தரப்புக்கு ஆதரவாய் தீர்ப்பு வரவேண்டுமா? தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை முழு மூச்சோடு எதிர்க்கும் அனைத்தையும் போராட்டங்கள் மூலம் அடைந்துவிடலாமே? தலித் உரிமை மறுத்தல், சாதி வெறி,பார்ப்பன துவேசம், இந்திய இறையாண்மை எதிர்ப்பு, தொழில் முனைவோருக்கு முட்டுக்கட்டைகள்,ஊழல் அரசுகள் அனைத்திற்கும் போராட பெரும் கூட்டம் உள்ளது.

காவிரியை பொறுத்தவரை தற்போது நீதிமன்றம் போகும் பாதை சரியாக உள்ளது. மக்கள் அரசுகளே தங்கள் கடமைகளில் தவறுகின்றன.

போராட்டங்கள் வேண்டும், வன்முறை வீழ்ச்சியையே தரும்.

அன்புடன்

ரமேஷ்

***

அன்புள்ள ரமேஷ்,

நான் உணர்ச்சிவசப்பட்டு கருத்து தெரிவிக்கவில்லை. அரசு செயல்படும் முறையை சிறிய அளவிலேனும் தொடர்ந்து கவனித்துவருபவன் என்றமுறையில் என் எண்ணத்தை எழுதினேன். இங்கே பல்வேறு விசைகள் நடுவே தற்காலிக சமரசமாகவே தீர்வுகள் எட்டப்படுகின்றன. ஆகவே காவேரிக்கான குரல் வலுத்து ஒலிப்பது, ஊடகங்களை நிறைப்பது, தேசமெங்கும் கேட்பது அவசியமானது. அதோடு இதைப்போன்ற ஒற்றைக்குரல் அங்கே முன்னரே எழுந்து ஒலித்தபடி இருக்கிறது என்பதும் இன்னொரு காரணம். இல்லையேல் அனைத்து உரிமைகளும் பறிபோகும் என்பது எவருமறிந்த நிதர்சனம்.

ஆனால் வன்முறையை, கசப்புகள் தூண்டப்படுவதை, வட்டாரவெறியை, பிரிவினைப்போக்கை நான் எவ்வகையிலும் ஆதரிக்கவில்லை. அவற்றிடம் எச்சரிக்கை தேவை என்றே சொல்கிறேன். இது வாழ்வாதாரப் பிரச்சினை. இதை குறுங்குழுக்களுக்கு அளித்துவிடக்கூடாது. அவை இவற்றை உண்டு வளர்ந்தால் அதுதான் பெருங்கேடு.

தமிழகத்தில் இம்மாதிரி பிரச்சினைகளில் கொஞ்சமேனும் நிதானத்துடன் பேசுபவர்களை காண்பதே அரிதாகிவிட்டது. எல்லா தரப்பிலும் மிகையுணர்ச்சிகள், வசைகள். அவரவர் கட்சி சார் அரசியலை மட்டுமே எங்கும் பார்க்கிறார்கள். அன்புள்ள என்று சொல்லி உங்கள் கடிதம் தொடங்கியது எவ்வளவு ஆறுதலை அளித்தது தெரியுமா? என் கருத்தைச் சொல்லிவிட்டேன். இனி இதில் எனக்கு விவாதிக்க ஏதுமில்லை.

ஜெ

***

முந்தைய கட்டுரைமூன்று சிறுகதைகள்
அடுத்த கட்டுரைஎம்.ஏ.சுசீலா விழா :இந்திரா பார்த்தசாரதி உரை