காவேரி மீதான தமிழகத்தின் உரிமைக்காக எழும் குரல்களுடன் முழுமையாகவே இணைந்துகொள்வது அன்றி இத்தருணத்தில் வேறெதையும் எண்ண இயலாது. ஒரு மக்கள் போராட்டம் அதற்கான கொந்தளிப்புகளுடன், கட்டின்மைகளுடன் மட்டுமே நிகழமுடியும் — அதை கட்டுப்படுத்தி சீரானபெருக்காக முன்னெடுக்க காந்தி போன்ற ஆளுமை இல்லாதவரை
ஆழ்ந்த சிக்கல்கள் பல இதற்குள் உள்ளன. உள்ளூர் நீராதாரங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு சூறையாடப்பட்டிருக்கின்றன. என் வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் மூன்று ஏரிகள் சென்ற ஐம்பதாண்டுகளாக கைவிடப்பட்டு, ஆக்ரமிக்கப்பட்டு கிடக்கின்றன. நீர்மேலாண்மை என்பதே தமிழகத்தில் இல்லை. அந்த பிழையை காவேரி சார்ந்த போராட்டங்களால் மறைத்துவிடக்கூடாது
காவேரியின் உரிமை சார்ந்த விஷயங்களில் தமிழக அரசுகள் முறையான சட்டநடவடிக்கைகள், கண்காணிப்புகளில் ஈடுபட்டதில்லை. ஒவ்வொரு கோடையிலும் காவேரிக்காக ஒரு பொதுநாடகம் நடத்தி ஜூன்மாத மழையில் அதை கைவிட்டுவிடுவதே நம் வழக்கமாக உள்ளது.
பெருநகர்களுக்காக விவசாய நீரை எடுத்துக்கொள்வது வீராணம் முதல் எங்கும் நிகழ்வது. இந்தியாவின் பொது உளவியல் அதையே ஆதரிக்கிறது. நீதிமன்றமும் அதையே சுட்டிக்காட்டுகிறது
ஆனால் அவற்றைப் பேசுவதற்கான தருணம் அல்ல இது. இந்தியச்சூழலில் ஒருங்கிணைந்த வலுவான குரலே உரிமைகளை பெற்றுத்தரும் என்பதே மெய்யான நிலைமை. அது அமைதியான வழியாக இருந்தால் புறக்கணிக்கப்படும் என்பதும் உண்மை.மத்திய அரசும் நீதிமன்றமும் நெறிகளின் அடிப்படையில் செயல்படுவதில்லை. பூசல்களில் மத்தியஸ்தம் வகிப்பவர்களின் மனநிலையே அவர்களிடம் உள்ளது. காவேரி நீர் விஷயத்தில் மட்டுமல்ல பக்ராநங்கல் நீர் விவகாரம் முதல் அனைத்திலுமே இந்த சுரணையற்றதன்மையே வெளிப்படுகிறது
ஆகவே முடிந்தவரை, அனைத்து வகைகளிலும் உரக்கக்கோருவதே இன்று இருக்கும் வழி. நீருக்கான இந்தியப்போராட்டங்கள் அனைத்தும் இவ்வகையிலேயே நிகழ்ந்துள்ளன.
ஆகவே இன்று நிகழும் இந்த உரத்த குரலுடன் நானும் இணையவே விழைகிறேன். இதில் பொது ஒழுங்கு சட்டம் என்றெல்லாம் பேசுவதில் எப்பொருளும் இல்லை. போராட்டம் வெல்க..