எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள் 2

karnan

கர்ணன் விக்கிபக்கம்

கர்ணன் அறிவிப்பு

 

எம்.ஏ,.சுசீலா விழாவில் திரு ராஜகோபாலன் அவர்களின் உரை சிறப்பாக அமைந்திருந்தது. அவ்வுரையில் அவர் ஒரு இடதுசாரித்தையற்காரரைப் பற்றிச் சொல்லியிருந்தார். அவர் போன்றவர்கள் தென்னகத்தில் அன்றைக்கு கம்யூனிஸ்டுக் கட்சியின் தூண்கள். தையற்காரர்கள், சலூன்கடைக்காரர்கள் இடதுசாரிகளாகவோ திராவிடமுன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பார்கள். [சமீபத்தில்கூட சலூன்கடையை நூலகமாக நடத்தும் ஒருவரைப்பற்றிய செய்தி வந்தது ] அப்படி தன்னலம் கருதாமல் இலக்கியத்தையும் கொள்கை அரசியலையும் வளர்த்த பலர் இன்றைக்குக் காணமலாகிவிட்டார்கள்.

 

அவர்களில் ஒருவர் கர்ணன். எழுத்தாளராகிய கர்ணன் சிறிய தையல்கடை வைத்திருந்தார். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். நா.பார்த்தசாரதியை ஆதர்சமாகக்கொண்டு எழுத ஆரம்பித்தவர். நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களுடன் நட்பு கொண்டிருந்தார். உலக இலக்கிய ஆர்வலர். அவர் இன்றைக்குப் பொருளியல்ரீதியாக கடினமான சூழலில் உள்ளார். உங்கள் தளம் வழியாக வாசகர்கள் அவரைப்பற்றி அறிந்துகொள்ளமுடிந்தால் நல்லது. தமிழ் இலக்கிய உலகம் அவருக்கு உதவும்பொறுப்பு கொண்டிருக்கிறது

திரு. கர்ணன்

37,  சுயராஜ்யபுரம் 4 வது தெரு

செல்லூர். மதுரை – 2

தொலைபேசி.  9487950844

 

மகேந்திரன்

 

 

ஜெ

 

எம்.ஏ.சுசீலா விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. வாழ்த்துக்கள். வழக்கமாக இந்தவகையான பாராட்டுவிழாக்கள் ஒரு ‘அரைமனது’ உடன் தான் நடக்கும். வேறுவிழாக்களுடன் சேர்த்து நடத்துவார்கள். வேறு சிலரும் பாராட்டு பெறுவார்கள். ஒன்றும் நடத்தப்படாதபோது பாராட்டுவது நல்ல விஷயம்தான் என்றாலும் வயதுமுதிர்ந்தவர்களுக்கு அவர்களுக்கேயான ஒருநாளாக அந்த விழா இருக்கவேண்டும் என்பது முக்கியமானதாக இருக்கும். அந்தவகையில் இந்த விழா எம்.ஏ.சுசீலா அவர்களுக்காகவே நிகழ்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எழுத்தாளர்களுக்கான பாராட்டுவிழாக்கள் இனிமேல் எப்படி நிகழவேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டுதல்போலவே இருந்தது. பலநாட்களாக அவருடைய நூல்களைப்பற்றிய கட்டுரைகள் வெளிவந்தன. அவர் நூல்கள் விற்கப்பட்டன. அவரை முன்னிறுத்தி கூட்டம் நிகழ்ந்தது

 

இதேபோல கௌரவிக்கப்படவேண்டிய பலர் இங்கே உண்டு. நான் குறையாகச் சொல்லவில்லை. மொழியாக்கம் செய்பவர்கள் முக்கியம்தான். ஆனால் புனைவெழுத்தாளர்களிலேயே எவ்வளவோ பேர் கவனிக்கப்படாமலேயே உள்ளனர். மொழியாக்கம் செய்பவர்களின் முக்கியத்துவத்தையும் அவர்கள் எப்படி பண்பாட்டையே மாற்றுகிரார்கள் என்றும் நீங்கள் விரிவாகப்பேசினீர்கள். ஆனாலும் மூலப்படைப்பாளிகள் இதேபோல முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கொண்டாடப்படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்

 

ராஜன்

எம்.ஏ.சுசீலா நன்றியுரை

ம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள்

எம்.ஏ.சுசீலா விழா காணொளி

எம் ஏ சுசீலா விழா கடிதங்கள்

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-20
அடுத்த கட்டுரைகுற்றவாளிகளின் காவல்தெய்வம்