எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள்

 

எம்.ஏ.சுசீலா நன்றியுரை
எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள்
எம்.ஏ.சுசீலா விழா காணொளி

 

 

அன்புள்ள ஜெ,

சென்னையில் நிகழ்ந்த தங்கள் விழாவுக்கு வரவேண்டுமென பலமுறை நினைத்தும் வரமுடியவில்லை. நான் போதிய முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை. காரணம் முக்கியமாக இது மொழியாக்கத்தைப்பற்றிய விழா என நினைத்துக்கொண்டதுதான். ஆனால் காணொளிகளைப்பார்த்தபோதுதான் விரிவான ஒரு தளத்தில் விழா நடந்தது தெரியவந்தது. பொதுவாக இம்மாதிரி ஆளுமைகளைப்பற்றிய விழாக்களில் ஒருவர் பேச்சை இன்னொருவர் திரும்பப்பேசி சலிப்பூட்டுவார்கள். பெரிதாகப் பேசவும் இருக்காது என்பதும் நிஜம்தான். ஆனால் இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் அற்புதமாகப்பேசினார்கள். சுரேஷ் பிரதீப், ராஜகோபாலன் உரைகள் சிறப்பாகவும் கச்சிதமாகவும் இருந்தன

உங்கள் உரை நீளமானதாக இருந்தது. ஆனால் சலிப்பூட்டாமல் ஒரு பெரிய சித்திரத்தை அளித்தது. மொழிபெயர்ப்புதானே என்று வராமலிருந்த என் மனநிலையை உடைத்துச் சிதறடித்தது. நவீன உரைநடை, நவீன இலக்கியப்போக்குகள். நவீன இலக்கியத்தின் நடை போன்றவை எல்லாமே மொழிபெயர்ப்புகளால்தான் உருவாகிவந்தன என்று மிகவிரிவான வரலாற்றுப்பார்வையுடன் விளக்கினீர்கள். நீங்கள் தொடங்கி மெல்லமெல்ல அந்தப்புள்ளி வரை வந்துசேர்ந்தபோதுதான் மொழியாக்கம் செய்பவர்கள் உண்மையில் எவ்வளவு பெரிய பங்களிப்பை ஆற்றுகிறார்கள் என்பது புரிந்தது.

நான் ஒரு மொழிபெயர்ப்பாளனின் பணி என்பது ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றுவது என்றும் அதற்கு கிரியேட்டிவிட்டி ஏதும் தேவையில்லை என்றும் நினைத்திருந்தேன். அது பதிப்பகத்திடம் ஊதியம்பெற்றுக்கொண்டு செய்யும்வேலை என்று நினைத்திருந்தேன். மொழியாக்கம் செய்பவர்களின் பெயர்களைக் கவனித்ததே இல்லை. நீங்கள் பேசித்திரட்டிக்கொண்டுவந்தபோது அவர்கள் எழுத்தாளர்களை விடவேகூட ஒரு இலக்கியச்சூழலுக்கு பங்களிப்பாற்றுகிறார்கள் என்று தெரிந்தது. நவீனத்துவ இலக்கியத்துக்கு வே ஸ்ரீராம் அவர்களின் பங்களிப்பைப் பற்றிச் சொன்னீர்கள். அவர்கள் உருவாக்கும் இலக்கிய அலைபற்றிச் சொன்னீர்கள். அதுவரை உங்களுக்குத் தெரிந்தவர் என்பதனால்தான் மொழியாக்கம் செய்பவருக்கு அவ்வளவு பெரிய விழா என நினைத்த என் அறியாமையை நினைத்து வருந்தினேன்.

உங்கள் உரைமொழிபெயர்ப்புக்கும் உலக இலக்கியத்தின் உருவாக்கத்திற்கும் உள்ள உறவு, தமிழில் மொழியாக்கம் அளிக்கும் பங்களிப்பு, தஸ்தயேவ்ஸ்கி போன்றவர்களை ஏன் மொழிபெயர்க்கவேண்டும் என்று சென்று அவற்றை சுசீலா அவர்கள் மொழிபெயர்ப்பதன் முக்கியத்துவம், சுசீலாவின் மொழியாக்கத்திறன் என்று முடிந்தது. கச்சிதமான உரை. பல அடுக்குகளாகச் சென்று நீங்கள் நினைத்ததை நிறுவிவிட்டீர்கள். எம்.ஏ.சுசீலா போன்றவர்களை மொழிபெயர்ப்பாளர் என்று சொல்லக்கூடாது இலக்கிய அலையை உருவாக்கியவர்கள் என்று சொல்லவேண்டும் என்று முடித்தீர்கள். உங்கள் உரைகளில் மிகச்சிறந்த உரை. நன்றி

 

எஸ்.முகுந்தராஜ்

அன்புள்ள முகுந்தராஜ்

 

நன்றி.

 

என்  உரையை எப்போதும் அந்தத் தருணத்திலிருந்து எழுந்து ஒரு முழுமையான பார்வையை முன்வைப்பதாக அமைத்துக்கொள்வது வழக்கம். வந்திருப்பவர்கள் எழுந்து செல்கையில் சிந்திக்க, விவாதிக்க ஒரு வலுவான தரப்பை அளிக்கவேண்டும். அதுவே அவர்களுக்கு நாம் அளிக்கும் கௌரவம். அவர்கள் வந்ததற்கான பயன்.

 

இந்த உரைகள் நெடுங்காலம் யூடிபூபில் இருப்பவை. தொடர்ச்சியாக பல ஆண்டு நிலைகொள்ளும் தரப்புகளாகவே என் உரைகள் இருப்பதை நீங்கள் காணலாம். இந்த உரையிலும் அவ்வாறு ஒரு வரலாற்றுச் சித்திரத்தையும், ஒரு இலக்கியக் கோணத்தையும் அளித்துள்ளேன். அது விவாதிக்கப்படவேண்டியது

 

ஜெ

அன்புள்ள ஜெ…

கற்றுக் கொடுக்கும் இனம் தமிழினம் . அதற்கு கற்றுக் கொடுக்க நினைப்பது அறிவீனம் என்று கற்ற வீரப் பரம்பரையினரான என் போன்றோருக்கு உரைநடையை தமிழ் கற்றதே மற்ற மொழிகள் மூலம்தான் என்று நீங்கள் பேசியதைக கேட்டு ஒரு நிமிடம் தலை சுற்றி விட்டது. தமிழ் மட்டுமல்ல இந்திய மொழிகள் அனைத்துமே அப்படித்தான் என்பது ஆறுதல்.

நேரடியாக நவீனத்துவ யுகத்துக்குள் தமிழ் படைப்புலகம் நுழைந்தது வரலாற்றுப் பிழை என்ற கருத்தில் ஒரு சந்தேகம் அந்த கருத்து தமிழுக்கு மட்டுமா அல்லது இநதிய மெ்ாழிகள் அனைத்துக்கும் பொருந்துமா

சுசீலா அம்மாவுக்கு நடத்தப்பட்ட விழா ஒரு வித்தியாசமான நிகழ்வாக கருதுகிறேன். ரஷ்ய மையமும் பங்கேற்று நடந்த இந்த நிகழ்வு இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று நினைக்கிறேன்..

தஸ்தயேவ்ஸ்கி குறித்த அனைவர் உரைகளும் சிறப்பு. தஸ்தயேவ்ஸ்கி நூல்களில் என் மனதுக்கு நெருக்கமானது சூதாடி நாவல். அது குறித்து ஏன் பெரும்பாலும் பேசப்படுவதில்லை  சூதாடி குறித்து உங்கள் பார்வையை தெரிந்து கொள்ள ஆவல்

என்றென்றும் அன்புடன்

பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்

அனைத்துச் சிறப்புகளும் ஒரு மொழிக்கு இருக்கவேண்டியதில்லை அல்லவா? நாம் அனைத்துத்துறைகளிலும் சிலநூற்றாண்டுக்காலம் பின்தங்கியவர்களாகவே இருந்தோம். உரைநடை இலக்கணம் மொழியாக்கம் மட்டுமல்ல, நூல் செம்மைசெய்து பதிப்பித்தல் உள்ளிட்ட பலவற்றை நாம் ஐரோப்பியரிடமிருந்தே கற்றுக்கொண்டோம். ஆனால் பௌத்தம் சமணம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் உரிய பெருங்காவியங்கள் கொண்ட ஒரு மொழி தமிழ். அதுபோல ஏராளமான தனித்தன்மைகளைச் சொல்லலாம்

விழா  ‘தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ் முகம்’ என்னும் தலைப்பு கொண்டது. தஸ்தயேவ்ஸ்கிக்கு தமிழிலுள்ள இடம், அதில் சுசீலாவின் பங்களிப்பு பற்றியது. சுசீலா சூதாடியை மொழியாக்கம் செய்யவில்லை. அந்த தலைப்புக்குள் பேசப்படும் விஷயங்கள் முன்னரே பகிர்ந்துகொள்ளப்பட்டன. எம்.யுவன் வராததனால் ஒருபகுதி குறைவுபட்டது. அது தவிர்க்கமுடியாதது.

ஜெ

***

அன்பு ஜெமோ அண்ணா,

வணக்கம்! தங்களை மீண்டும் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி…. நிகழ்ச்சியில் தாங்கள் ஆற்றிய உரை மிகவும் அருமை…. தமிழ் இலக்கிய உலகில் மொழிபெயா்ப்பின் முக்கியத்துவம் மற்றும் பங்கை இந்த அளவிற்கு விரிவாகவும், தெளிவாகவும் யாரும் சுட்டிக்காட்டியதில்லை. அந்தளவில் தங்களின் நேற்றைய உரை மிகவும் முக்கியத்துவமானதாகிறது. நேற்று சந்தித்த பொழுது நான் எழுதிய கட்டுரையும் மின்னஞ்சலையும் பார்த்து படித்ததாக கூறுனீா்கள் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் தங்கள் பார்வைக்கு முன்பு அனுப்பிய மின்னஞ்சலை மீண்டும் அனுப்பியுள்ளேன். நேற்றைய விழா என்னுள் பல மாற்றங்களை கொண்டு வரும் என்று எண்ணுகிறேன். எத்தகைய பலன்களையும் எதிா்பாராமல் இலக்கிய உலகிற்கு தாங்களும் தங்களின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டமும் செயலாற்றுவது கண்டு மிகவும் மகிழ்ச்சி.  இப்பொழுதுதான் இலக்கிய உலகில் நுழைந்துள்ளேன். இன்னும் நிறைய வாசிக்க வேண்டியுள்ளது. என் அனுபவத்தில் வாசிக்க வாசிக்கதான் எழுத்து வரும் என்று தோன்றுகிறது. ஆக நிறைய எழுத வேண்டும் என்றால் நிறைய வாசிக்க வேண்டும். ஆசானாக, ஒரு வழிகாட்டியாக என்னுள் பல தாக்கத்தை ஏற்படுத்தியவா், ஏற்படுத்த போகிறவா் என்ற நிலையில் தங்களிடம் இனி என் மனவோட்டத்தை பகிரலாம் என்று அவா கொள்கிறேன்.

 

நேற்று முந்தைய தினம்தான் தாங்கள் தமிழ் இசை கச்சேரியில் உரையாற்றிய குறுந்தொகை கானொளியைக் கண்டும், கேட்டும் உள்வாங்கினேன். அதில் தாங்கள் ஐந்து நிலத்திற்குரிய மலரை எப்படி தோ்ந்தெடுத்தனா் நம் முன்னோர் என்று அளித்த விளக்கம் மிகவும் புதுமையானதாக இருந்தது அதுமட்டுமின்றி இந்த கானொளியை கண்டதால் நேற்றைய விழாவின் தங்கள் உரை எனக்கு மிகவும் நெருக்கமாக அமைந்தது.  நம் சங்க காலப்பாடல்களில் அகப்பாடல்களே புறப்பாடல்களை விட அதிகம் ஏனென்றால் அகத்தைப்பற்றி பேச நிறைய புறக்காட்சிகள் தேவைப்படுகின்றன என்று தங்களின் உரை கேட்ட பின்பே புரிந்துக்கொள்ள முடிந்தது.

அதே போன்று நேற்றைய விழாவில் ஒரு ஆக்கம் செவ்வியலாக இருக்க வேண்டுமென்றால் அதற்கான தகுதிகள் என்னென்ன என்று பட்டியலிடும்பொழுது தஸ்தாவெஸ்கியின் நாவல்கள் ஏன் இத்தனை பக்கங்கள் இருக்கிறது என்றால் அவரின் நாவல்கள் அனைத்தும் அகசித்திரங்களை உள்ளடக்கியது அதை வெளிப்படுத்த நிறைய புறக்காட்சிகள் தேவைப்படும் என்று விளக்கியிருந்தீா்கள். ஆக இந்த இடம் ஆகப்பெரும் சங்க இலக்கியங்களும், ருஷ்ய இலக்கியமும் ஒன்றினையும் புள்ளியாக என் மனதில் தோன்றியது. எவ்வளவு வியப்பான செய்தி இது! இரண்டாயிரம் வருடங்கள் முன்பு எழுதப்பட்ட சங்க இலக்கிய அகக்காட்சிகள் விளக்க அதிகளவு புறக்காட்சிகள் தேவைப்பட்டது போலவே, 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவலின் அகக் கதாபாத்திரத்தை சித்தரிப்பதற்கும் அவ்வளவு புறக்காட்சிகள் தேவையென்பதை. இதைத்தான் கனியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிா் என்று கூறினாரோ என்று எண்ண வைக்கிறது!

எந்தளவிற்கு நம் சங்கப்பாடல்கள் செவ்வியல் தன்மை வாய்ந்தது என்பதை ஒருவருக்கு தெரிய வேண்டும் என்றால் தங்களின் குறுந்தொகை மற்றும் எம்.ஏ. சுசீலா அம்மாவின் விழாவில் தாங்கள் உரையாற்றிய கானொளிகளை கண்டாலே தெளிவாக விளங்கிவிடும்.

ஆக விழாவிற்கு முந்தைய நாளில் மிக தற்செயலாக அந்த கானொளியை கண்டது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது, சங்க இலக்கியமும் உலக நவீன இலக்கியமும் ஒரு புள்ளியில் ஒன்றினையும் அந்த புள்ளி எவ்வளவு மகத்துவமானது என்பதை தங்களின் உரை மூலமாக மிக நன்றாக தெரிந்துக்கொண்டேன்.

என் கட்டுரைக்கு தங்களின் பதிலை ஆவலோடு எதிா்பார்த்துக்காத்திருக்கிறேன்.

பாலசுந்தர்

சென்னை

 

அன்புள்ள பாலசுந்தர்

தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ் வருகை என்பது ஒர் ஆசிரியரை தமிழாக்கம் செய்வது அல்ல, ஒர் அழகியலை, சிந்தனைமுறையை தமிழில் கொண்டுவருவது. சுசீலாவின் பங்களிப்பு அங்கேதான். அதையே சொல்லவந்தேன். ஆனால் அதிலிருந்து விரிந்து விரிந்து செல்லமுடியும். செவ்வியல் என்பதை இந்தியச் செவ்வியல் ஐரோப்பியச் செவ்வியல் என பிரிக்கலாம். அதற்குள் பண்டைச் செவ்வியல் நவீனச்செவ்வியல் என இன்னொரு பிரிவினையை செய்யலாம். ஊடாடும் பொதுப்போக்குகளை ஆராயலாம். இத்தகைய உரைகளின் பெறுபயன் வந்து அமர்ந்திருப்பவர்கள் சில கருத்துக்களைக் கேட்டு தங்களுக்குள் விவாதித்தபடிச் செல்லவைப்பதே. நீங்கள் அவ்வாறு சென்றது மகிழ்வூட்டுகிறது

ஜெ.

 

அன்புள்ள ஜெ

இளம் எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் உட்பட அனைவருமே சிறப்பாகப் பேசிய நிகழ்வு. இபா பேசியது விளங்கவில்லை. ஆனால் அவர் வந்திருந்ததும், மூன்றுநாட்களில் குற்றமும் தண்டனையும் நாவலைப் படித்தேன் என்று சொன்னதும் அந்த ஸ்பிரிட்டை காட்டியது. நிகழ்வின் உச்சம் என்பது அதுதான். இபா முதல் சுரேஷ் பிரதீப் வரை மூன்று தலைமுறையினரை மேடையில் கண்டது

உரைகள் சிறப்பு. மொழியாக்கம் பற்றியே பேசிக்கொண்டிருக்காமல் அவையில் வந்திருந்தவர்களை தஸ்த்யேவ்ஸ்கியை வாசிக்கத் தூண்டும்படியும் என்னவகையில் அவர் தமிழிற்கு முக்கியமானவர் என்றும் அவரை மொழியாக்கம் செய்யும் சவாலை எப்படி சுசீலா அவர்கள் வெற்றிகரமாகச் செய்தார் என்றும் உரைகள் காட்டின

நிகழ்ச்சி ஒன்பதுமணிக்கு முடிந்தது. ஏழரை மணிவரைக்கும்கூட பார்வையாளர்கள் கதவைத்திறந்து வந்துகொண்டே இருந்தனர். நீங்கள் பேசும்போது அரங்கு கிட்டத்தட்ட நிறைந்தது. ஆனால் பெரும்பான்மையினர் நன்றியுரைக்கும் அமர்ந்திருந்தனர். நம் நாட்டில் நிகழ்ச்சி தொடங்கியபின் உள்ளே விடக்கூடாது என்ற வழக்கம் இல்லை. அது பெரிய தொந்தரவு என நினைக்கிறேன்.ராஜகோபாலன் சிரித்தமுகத்துடன் மென்மையான குரலில் பேசியதும் சிறப்பாக இருந்தது.

எம். ஏ சுசீலாவின் உரையும் நன்றாக இருந்தது. வழக்கமாக ஒரு சம்பிரதாயமாகவே அத்தகைய உரைகள் அமையும். அவர் மிக ஆத்மார்த்தமாகப் பேசினார். மிகையில்லாமலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார். கூடவே மொழியாக்கம் பற்றிய அனுபவத்தையும் சொன்னார். நிறைவான விழா

மா.செல்வராஜ்

***

அன்புள்ள செல்வராஜ்

நாங்கள் விழாவை குறித்த நேரத்தில் தொடங்குபவர்கள். உண்மையில் அன்று இருபதுநிமிடம் தாமதமாகத் தொடங்கினோம். சென்னையின் போக்குவரத்துச் சிக்கல்களை உணர்ந்தவர்கள் பிந்திவருவதை பெரிய குறையாக நினைக்கமாட்டார்கள். சுரேஷ் பிரதீப் ராஜ கோபாலன் உரைகள் சிறப்பாக அமைந்திருந்தன. பல்வலி காரணமாக யுவன் வரவில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-18
அடுத்த கட்டுரைஇலங்கைத்தமிழ் ஆவணக்காப்பகங்கள்