சடக்கு – ஒரு மகத்தான முயற்சி
வணக்கம்
சடக்கு பற்றிய அறிமுகக் குறிப்புக்கு நன்றி. சடக்கு ஓர் அருமையான தொடக்கம். பிரிவுகள், வகைகள், ஆண்டு, ஆளுமைகள் எனத் தேடல் வசதிகளை ஆரம்பத்திலேயே உள்வாங்கியிருக்கின்றனர். கையெழுத்துப்பிரதிகள், துண்டுப் பிரசுரங்கள், கடிதங்கள் என ஏனைய ஆவணங்களையும் இணைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வல்லினம் குழுவினர்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல இத்தகைய முயற்சிகள் அரசுசார்பில் செய்யப்பட வேண்டியவை. ஏனெனில் பெரும் பொருட்செலவினைக் கோரிநிற்பவை.
ஈழத்தினைப் பொறுத்தவரை 2005 இலிருந்து நூலக நிறுவனம் (noolahamfoundation.org) இத்தகைய பணிகளைச் செய்து வருகிறது.
இவை பிரதானமாகப் பின்வரும் இரு வலைத்தளங்களாக உள்ளன.
www.noolaham.org – நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரசுரங்கள்
www.aavanaham.org – ஒலிப்பதிவுகள், காணொளிகள், புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள் உள்ளிட்ட சகலவித ஆவணங்களும்.
நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட பணிகள் ஒவ்வொன்றும் ஓரளவிற்கேனும் நூலகத்தால் முன்னெடுக்கப்படுகின்றன.
// சிற்றிதழ்களைச் சேகரித்து ஒளிநகல் எடுத்து ஆவணப்படுத்துதல்//
https://goo.gl/yDBbyA – 10,000 சிற்றிதழ்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
// வெளிவந்த நூல்கள் அனைத்தையும் அட்டவணைப்படுத்தி ஆவணப்படுத்துதல்//
https://goo.gl/V5Ddqx – 6,600 நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
https://goo.gl/8ezyPo – பிரசுரங்கள்
https://goo.gl/YxCAEL – சிறப்பு மலர்கள்
// முதற்பதிப்புகளின் அட்டைகளின் நகல்களை இணையத்தில் ஆவணப்படுத்துதல்//
கிடைத்தவரை முழு நூல்களே ஆவணப்படுத்தப்படுகின்றன.
// தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கைச்சுருக்கங்கள்//
https://goo.gl/yYeiHK – எழுத்தாளர்களும் ஏனைய ஆளுமைகளுமான 2,500 குறிப்புகள்
// கூடுமானவரை அவர்களின் சொற்களில்//
https://goo.gl/khpvwA – எழுத்தாளர்கள் மட்டுமில்லாமல் எல்லாவகையான ஆளுமைகளையும் அவரவர் குரலில் ஆவணப்படுத்தும் வாய்மொழி வரலாற்றுச் செயற்றிட்டம். மிகவும் விரிவாகப் பதிவு செய்கிறோம். எடுத்துக்காட்டாக
எழுத்தாளர் தெணியான் https://goo.gl/bgDJwt
எழுத்தாளர் முருகபூபதி https://goo.gl/Rx2FNH
அண்மையில் தெளிவத்தை ஜோசப் 11 மணிநேர நேர்காணல் தந்துள்ளார். விரைவில் வெளியாகும். 11 மணிநேர உரையாடலை யார் கேட்பார்கள் என்ற கேள்வி எழும். தமிழில் ஒலித்தேடல் சாத்தியமாகும்போது இந்த ஒலிப்பதிவுகளின் பயன்பாடு விளங்கிக் கொள்ளப்படும். ஏனெனில் எமது சமூக, பண்பாட்டு, நுண் வரலாறுகளுக்கான பெருமளவு தகவல்களை இந்த வாய்மொழி வரலாறுகள் கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை காணொளிகளாகவும் உள்ளன. ஆயினும் வலைத்தளம் தாங்காது என்பதால் ஒலிப்பதிவுகளை மட்டும் வெளியிட்டுள்ளோம்.
இவை தவிர
புகைப்படங்கள் https://goo.gl/E1tWXa
கையெழுத்து ஆவணங்கள் https://goo.gl/Dursjg
ஒலிப்பதிவுகள் https://goo.gl/BUqShZ
காணொளிகள் https://goo.gl/UzrW4f
நூற்பட்டியல் https://goo.gl/dJR5ph
இந்தச் சேகரிப்புக்களிலிருந்து
ஆளுமைகள் சேகரங்கள் https://goo.gl/3gPRcH
ஆய்வுப் பொருட் சேகரங்கள் https://goo.gl/JKWFfb
ஆகியவற்றையும் உருவாக்குகிறோம். இவை ஆரம்பநிலையில் உள்ளன என்றாலும் சில நல்ல சேகரங்கள் உருவாகி வருகின்றன. எடுத்துக்காட்டாக சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் : https://goo.gl/G1bk5E
ஓலைச்சுவடிகளைத் தேடிப் படியெடுக்கும் பணியினையும் தொடங்கியுள்ளோம்.
ஆவணகம் வலைத்தளம் ஆய்வாளர்களை மனதிற் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஈழத்தின் முருகன் கோவில்களின் கட்டிட அமைப்பினை ஆராயப்போகும் ஒருவர் ஒளிப்படம்-> முருகன் கோவில்->கோவில் முகப்பு என நகர்ந்து பின்வரும் பக்கத்துக்கு வரலாம்: https://goo.gl/15pjWS
இப்போதுள்ள 3,000 படங்களில் 7 முருகன் கோவில் முகப்புக்கள் உள்ளன. இலட்சக்கணக்கில் படங்கள் சேர்க்கப்பட்ட நிலைவருகையில் இந்தத் தேடல் வசதி பெரும்பயன் தரும் எனபதே எதிர்பார்ப்பு.
இவை தவிர ஈழத்துப் பத்திரிகைகளை ஆவணப்படுத்தும் பெருமுயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது. https://goo.gl/sBts1Y
சுமார் 34,000 பத்திரிகைகள் முழுமையாக எண்ணிமப் பிரதியெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 18,000 பத்திரிகைகள் 1981-2010 காலப்பகுதிக்குரியவை என்பதால் முக்கிய வரலாற்று ஆவணங்களாகின்றன. இவற்றில் புலிசார்பு, புலியெதிர்ப்பு, அரசசார்பு, மாற்றுக்குரல்கள் என எல்லாத்தரப்புக்களும் உள்ளன. அவ்வாறானால் எல்லாத்தரப்பும் நூலக நிறுவனத்துக்கு ஆதரவளிப்பர் என்று எண்ணிவிட வேண்டாம். ஒரு தரப்புக்கும் ஆவணப்படுத்தலில் அக்கறையில்லை.
ஒவ்வொரு 30 நிமிசத்துக்கொரு ஆவணம் இணையத்துக்கு வருகிறது. பன்னாட்டுத் தேசிய நூலகங்கள் பயன்படுத்தும் சீர்தரங்களை முடிந்தவரை பின்பற்றுகிறோம். ஆண்டுக்கு இந்திய ரூபாயில் 20 முதல் 25 இலட்சம் செலவாகிறது. பெரும்பாலும் புலம்பெயர் சமூகமே நிதியுதவுகிறது. 10-15 பேர் முழுநேரமாகப் பணியாற்றுகின்றனர். இன்னும் அதிக உதவிகள் கிடைத்தால் இன்னும் எவ்வளவோ ஆவணப்படுத்த முடியும். ஈழத்தைப் பற்றி எந்த ஒரு சிறுவிடயத்தினைத் தேடினாலும் ஓர் ஆவணமேனும் கிடைக்கக் கூடிய அளவுக்கு விரிவாக்க வேண்டும் என்பதே கனவாக உள்ளது.
இம்மடலை உங்கள் வலைத்தளத்தில் பிரசுரித்தால் ஈழத்து ஆவணப்படுத்தலில் ஆர்வமுள்ள எவரேனும் உதவ முன்வரக்கூடும் என நம்புகிறேன்.
நன்றி
– கோபி
***
அன்புள்ள கோபி,
இவை முக்கியமான தொகுப்புகள் என்பதில் ஐயமில்லை. ஆனால் களம் மிகப்பெரிதாக விரிந்துவிட்டதோ என ஐயம் எழுந்தது. இலக்கியம் என்னும் களத்திற்குள்ளாகவே ஏராளமாக ஆவணப்படுத்தவேண்டியிருக்கிறது. வாழ்க்கையின் அனைத்தையும் ஆவணப்படுத்துவது என்னும்போது அதன் இலக்கும் செயல்வேகமும் மிக மட்டுப்படுகிறது. மேலோட்டமாகவே பார்த்தேன். இலங்கையின் முந்தைய தலைமுறையில் எனக்குப்பிடித்தமான எழுத்தாளர்களைத் தேடிப்பார்த்தேன். அரிய புகைப்படங்கள் மிகக்குறைவு. நிகழ்வுகள், தருணங்கள்தான் வரலாறு. அவை காணப்படவில்லை. ஆனால் மிகப்பெரிய முயற்சி, மிக முன்னோடியான முயற்சி. புலம்பெயர்ந்த காலத்தின் கடந்த கால ஏக்கம் அளித்த ஊக்கத்தால் முதல்தலைமுறை இதைச் செய்திருக்கலாம். அவர்களின் ஊக்கம் இன்று தளர்ந்திருக்கலாம். அடுத்த தலைமுறை இதை முன்னெடுக்கவேண்டும்
ஜெ
***